ஒரு கல்

குளத்தங்கரையில், கடைசிப் படிக்கட்டுக்கு முந்தையப் படிக்கட்டில் அமர்ந்திருந்தான்.

மீன்கள் இங்குமங்குமாக துள்ளின. கூடவே தன் முகத்தின் நிழலையும் பார்த்தான்.

சலிப்புடன் பக்கத்தில் கிடந்த சிறிய கல்லை எடுத்து எறிந்தான்.

கல் விழுந்து, நீர் பிறழ்ச்சி வட்டவட்டமாக விரிந்து அடங்கி, மீண்டும் பழைய தோற்றத்துக்குத் திரும்பியது.

அவன் உருவத்துக்குப் பக்கத்தில் அவள் உருவம். தண்ணீரில்.

திரும்பிப் பார்த்தான். அங்கிருந்து தொடங்கியது கதை.

புதினம்

உண்மையிலேயே, அடித்துத் துவைத்த துணியை இறுக்கிப் பிழிவது போல இயன்ற மட்டும் மூளையைக் கசக்கிப் பிழிந்துவிட்டார்.

48 மணி நேரம் கடந்தும் ஒரு சிறுகதை வந்தபாடில்லை அந்த எழுத்தாளருக்கு.

உலர்ந்து காய்ந்துபோன மூளையை மீண்டும் கசக்கி, கசக்கிப் பார்த்தார். பிழிந்தும்கூட. ஈரமிருந்தால்தானே ஏதேனும் சொட்டுவதற்கு.

விரித்துக் காயப் போட்டார்.

அந்த வார இதழில் நாவல் அறிவிப்பு வெளியானது.

தலைப்பு: புது வெள்ளம்.

கணக்கு

“கோழி முழுங்கறது போல முழுங்காத… சவச்சு சுவைச்சு மெல்ல சாப்பிடணும்” –பள்ளியில் படிக்கும் மகன் சுப்புவுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார் அப்பா.

ஊரிலிருந்து வந்திருந்த மாமா, அம்மா வைத்த கடலையைக் கொறித்துக்கொண்டே அப்பாவிடம் அளவளாவினார்.

“கோபாலா… வரிசையா மூணு பிள்ளைகள பெத்துப் போட்டுட்டியே…. ரயிலுக்கு போறதுக்கு முன்னாடி அவசரமா சாப்பிட்டு முடிக்கணுங்கற மாதிரி… ருசிச்சு ரசனையா… வாழணுண்டா…. கடைசி குழந்தைய ஸ்கூல்ல சேத்துட்டியா….”

இறுகிய முகத்துடன் “சேர்க்கணும்” என்பதோடு நிறுத்திக்கொண்டார் அப்பா.

உள்ளறையில் நாற்காலியில் சாய்ந்தவாறே, வயிற்றில் வளரும் குழந்தையின் நினைவில் மூழ்கியிருந்தாள் அம்மா.

அந்தக் குழந்தைய எப்படி ஸ்கூல்ல சேர்க்க முடியும் என்ற சந்தேகம் சுப்புவின் மூளையில் வலுக்க ஆரம்பித்தது.

*****

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *