பல்லபுரம் பிரபாகரன்
திங்கள் கிழமை.
பிபு மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்திருந்தான். முதல் வகுப்பான தமிழ்ப் பாடத்தை ஆசிரியர் நடத்த ஆரம்பித்தார்.
அவன் புத்தகப் பையைத் திறந்து தமிழ்ப் புத்தகத்தைத் தேடி எடுத்தான். ஆசிரியர் சொல்வதை எழுத பென்சிலை எடுக்க பெட்டகத்தைத் திறந்து பார்த்ததும், ஏமாந்து போனான். எப்போதும் இரண்டு பென்சில்கள் இருக்கும் பெட்டகத்தில், பென்சிலைத் தவிர எல்லாப் பொருட்களும் இருந்தன.
“பென்சில், பைக்குள் இருக்கிறதோ!” அவன் நோட்டுப் புத்தகங்களுக்கு இடையே கையை விட்டு தேடினான். பென்சில் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் புரிந்தது. வீட்டில் மேசையில் அமர்ந்து படம் வரைந்ததும், பென்சிலை எடுத்து வராமல் வந்ததும்.
“அச்சச்சோ! பென்சில எடுத்து வரலையே! யாரிடம் கேட்பது?” ஒரு கணம் திடுக்கிட்டான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த கிரண் பெட்டகத்தைத் திறந்ததும், அதனுள் இரண்டு பென்சில்கள் இருப்பதைக் கவனித்தான்.
“கிரண்… நான் பென்சில் எடுத்துவரல. எனக்கு ஒரு பென்சில் கொடுடா…” என்று பிபு கிசுகிசுத்தான்.
கிரண் காதில் விழவில்லை. ஆசிரியர் சொல்வதைக் கேட்பதில் குறியாக இருந்தான்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
ஆசிரியர் வாசித்துக்கொண்டே கரும்பலகையில் எழுதத் தொடங்கினார்.
பிபு கிரணின் கையைத் தொட்டு,
“நான் பென்சில் எடுத்து வரல. கொஞ்சம் கொடு ப்ளீஸ்…” கெஞ்சினான்.
ஒரு கணம் தயங்கிய கிரண். அரை மனதோடு பெட்டகத்தைத் திறந்து பென்சிலை எடுத்துக் கொடுத்தான்.
‘ரொம்ப நன்றிடா’ சொல்லிவிட்டு பிபு வேகமாக எழுத ஆரம்பித்தான்.
“ஒருவர் நமக்குத் தீங்கு செய்தாலும், அதை மன்னித்து மறந்து, அவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். இதுவே தீங்கு செய்தவருக்குக் கிடைக்கும் பெரிய தண்டனை.”
குறளுக்கான விளக்கத்தையும் எழுதி முடித்த ஆசிரியர்,
“இதை எல்லோரும் உங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள்” என்றார்.
பிபு நிறுத்தி நிதானமாக வாசித்துக் கொண்டே எழுதி முடித்தான். அந்தக் குறளும் அதன் விளக்கமும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தன.
அந்த வகுப்பு முடிந்ததற்கான மணியோசை ஒலித்தது.
“நன்றி ஐயா!” மாணவர்கள் ஒன்றாக குரல் எழுப்ப, ஆசிரியர் புன்னகையுடன் வெளியே சென்றார்.
அடுத்துக் கணித வகுப்புப் பாடம். அந்த ஆசிரியர்வர தாமதமானதால், வகுப்பறை முழுவதும் சலசலப்பாக இருந்தது. பிபு எழுந்து வெளியே சென்று, அவனது தண்ணீர்ப் பாட்டிலில் இருந்து தண்ணீர்க் குடித்தான்.
அதை ஜன்னல் வழியாகப் பார்த்த கிரண்,
“டேய் பிபு, என்னோட பாட்டிலையும் எடுத்து வாடா” என்றான்.
பிபு எதுவும் சொல்லவில்லை. கிரணின் தண்ணீர் பாட்டிலை எடுத்துவந்து கொடுத்தான். கிரண் ‘மடமட’ வென்று குடித்துவிட்டு,
“பிபு வெளியிலே கொண்டு வச்சுடுடா…” என்றான்.
அவனும் அதை முன்பிருந்த அதே இடத்திலேயே வைத்துவிட்டு வந்து அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் கிரண் எழுதிக்கொண்டிருந்ததை முடித்தான். அப்போது எதிர்பாராமல் பென்சிலின் முனை உடைந்தது. அவன் பென்சில் செதுக்கியை எடுத்து பென்சிலை அதனுள் விட்டுச் சுழற்றினான். பிறகு பிபுவிடம் நீட்டியபடி,
“இதைக் குப்பைத் தொட்டியில் போட்டு வா” என்றான்.
அதைக் கேட்டதும் அவன் முகம் மாறியது. பிபுவின் மனம் புண்பட்டது.
’இதை நான் ஏன் செய்ய வேண்டும்? அது உன்னுடைய வேலைதானே?’ உள்ளுக்குள் குமுறினான்.
கிரண் தன் சுயரூபத்தைக் காட்டினான். “இல்லாட்டியும் என்னோட பென்சிலைக் கொடு” என்றான்.
“இந்தா உன்னோட பென்சில். நீயே வச்சுக்கோ…” சொல்லிவிட வார்த்தை வாய்வரை வந்தது. அடுத்த வகுப்பிற்கான கணித ஆசிரியர் வந்து கொண்டிருந்ததைக் கண்டான். அவருடைய வகுப்பில் ஏற்கனவே நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு நாள் ஒரு மாணவன் பென்சில் எடுத்துவராததால், அவனை வகுப்பை விட்டு வெளியே நிற்க வைத்திருந்தார்.
“இப்போது பென்சிலைத் திரும்ப வாங்கிக் கொண்டால் எழுத முடியாமல் போய்விடும்; வகுப்பிற்கு வெளியில் நிற்க நேரிடுமே! ”
பிபு தன் மூக்கு உடைந்து போனதுபோல் வருந்தினான். அவன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கிரண் சொன்னபடியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அமைதியாக வந்து அமர்ந்தான். இப்படியே ஒன்று இரண்டு… தொடர்ந்தது.
மாலை பள்ளிக்கூடம் முடிந்தது.
‘நன்றி, கிரண்’ என்று சொல்லி பென்சிலைத் திருப்பிக் கொடுத்தான்.
பிபுவை அழைத்துச் செல்ல அப்பா வாசலில் காத்திருந்தார். தினம் அப்பாவைப் பார்த்ததும், மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஓடிவந்து, மதிய உணவுக் கூடையையும் புத்தகப்பையையும் அப்பாவிடம் கொடுத்து விட்டு,
“அப்பா… ப்ளீஸ், பத்து நிமிடம் விளையாடிட்டு வர்றேன்.” என்று சொல்லி ஓடிடுவான்.
ஆனால், அன்று வழக்கத்துக்கு மாறாகச் சோகமாக நடந்து வந்தான்.
“என்ன ஆச்சு, உனக்கு? உடம்பு சரியில்லையா?” என்று நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்.
அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. எதையோ இழந்ததைப் போலத் தலைகுனிந்து நடந்து சென்றான்.
“ஏதும் பிரச்சனையா?” அவர் மீண்டும் அக்கறையோடு கேட்டார்.
அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை.
‘பிபு, வண்டியில் ஏறு’ என்று அப்பா சொல்லும் முன்பே பின்புறம் ஏறி அமர்ந்தான். வழக்கமாக வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன், அமைதியாகவே இருந்தான்.
அப்பா இடையிடையே, “அங்கே பார் டூரிஸ்ட் பஸ், இங்கே பார், …” பேச்சுக் கொடுத்தார். ஆனால், பிபு வீடு வந்து சேரும்வரை வாயைத் திறக்கவில்லை.
வீட்டிற்கு வந்ததும், திடீரென்று தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தான். காரணங்கள் ஏதும் சொல்லாமல், கண்களைத் தேய்த்துக் கொண்டு அழுதான். எப்போதும் சிரித்து மலர்ந்து விரிந்த முகம், அழுது சுருங்கிப் போயிருந்தது. பள்ளியில் நடந்ததை அப்பாவிடம் சொல்லிப் புலம்பினான்.
“அப்பா…நான் எப்போதும் இரண்டு பென்சில்கள் வைத்து இருப்பேன். யாராவது பென்சில் கேட்டால், முழு மனதோடு கொடுத்து உதவி செய்திருக்கிறேன். ஆனால், அவன் செய்ததுபோல் ஒருபோதும் செய்ததில்லை. கிரண்கூட இருமுறை வாங்கி எழுதியிருக்கிறான்.”
பிபுவின் குரல் தழுதழுத்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் சொன்னான்:
“மற்றவருக்கு உதவி செய்வதை நமது கடமையாக நினைத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய தேவைக்கு மற்றவர்கள் உதவிசெய்ய முன் வருவார்கள்… நீங்கள் சொன்னது உண்மையா? ஏன் எனக்கு அப்படி நடக்கவில்லை?”
பிபுவின் குமுறல்களைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா அவனை அணைத்துக் கொண்டார்.
“பிபு, உதவி செய்வதை வியாபாரமாக நினைக்காதே! ஏதேனும் கைமாறு எதிர்பார்த்து ஒருவர் மற்றவருக்குச் செய்தால் அது உதவியே ஆகாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்பவருக்கு நிச்சயம் அதற்கான வெகுமதியும் சன்மானமும் கிடைக்கும்” என்று ஆறுதல் கூறினார்.
“அப்பா… நீங்க வாழ்ந்த காலமும், நீங்க சொன்ன கதைகளும் இப்போ மாறிப்போச்சு.”
இருவரும் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தனர்.
“பள்ளிக்குப் பென்சில் எடுத்துச் செல்லாமல் மறந்து போனதுதான் தவறு. இல்லையப்பா…”
அவன் தன் தவறை உணர்ந்துகொண்டான்.
“இனிமேல் பள்ளிக்குச் செல்லும்போது எல்லாம் இருக்கிறதா? நல்லா பார்த்துவிட்டுக் கிளம்புவேன்” என்று தீர்மானம் செய்து கண்ணீரைத் துடைத்து அழுகையை நிறுத்தினான்.
அடுத்த நாள் பள்ளி செல்லும்போது, “கிரணிடம் ஒருபோதும் பேச்சு வழக்கு வைத்துக் கொள்ளாதே” என்று அப்பா கண்டித்துச் சொல்லிவிட்டார்.
அப்போதெல்லாம் மௌனமாகவே இருந்தான்.
அன்று பள்ளி முடிந்தது. அப்பா அவனை அழைப்பதற்காகப் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தார். பள்ளி முடிந்ததும் சிறிது நேரம் விளையாடுவதற்கு அனுமதி கேட்டான். ஓடிப் பிடித்து விளையாடச் சென்றான்.
“கிரண், என்னைப்பிடி நான் இங்கே இருக்கிறேன். அவனைப் பார் அங்கே இருக்கிறான்” என்று கத்தினான்.
அதைக் கேட்டதும் அப்பாவுக்குக் கோபம் வந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுகிறேன்’ என்று கெஞ்சிய பிபுவிடம், ‘விளையாடியது போதும் வா போகலாம் வீட்டுக்கு…’ பாதியிலேயே இழுத்து வந்தார்.
“உன்னை அசிங்கப்படுத்திய அவனோடு உனக்கு என்ன விளையாட்டு?” அப்பா கேட்டார்.
“யார் என்னை ஏமாற்றினாலும் இகழ்வாகப் பேசினாலும் நான் அவர்களை அப்படி ஒருபோதும் நினைப்பதில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல்…” அந்தக் குரளையும் விளக்கத்தையும் கூறினான்.
பிறர் செய்த பிழைகளை அன்றே அந்த கணமே மறந்து விடுகின்றனர். இந்தப் பிள்ளை குணம்தான் எல்லோருக்கும் வேண்டும். பிறர் செய்த தவறுகளை மன்னித்து மறந்து நாம் ஒருபோதும் மற்றவர்களுக்குச் செய்யவில்லை என்கிற பிள்ளைகுணம் இருந்தால் எல்லோரும் பாக்கியவான்களே.
அந்தக் கணம் அப்பாவால் எதுவும் பேச முடியவில்லை.
பிள்ளைகள் பல நேரங்களில் கோபப்படுவதுண்டு. அதே வேகத்தில் மறந்து விடுகிறார்கள். பிறர்செய்த தவறுகளை மனதில் சுமந்துகொண்டு வாழாமல், மன்னித்து மறந்துவிடும் இந்தப் பிள்ளை மனம்தான் உலகம் முழுவதும் வளர வேண்டிய பெரிய பண்பு.
00

பல்லபுரம் பிரபாகரன்
பி.டெக். (வேளாண் பொறியியல்)
எண் 140, சாத்தார வீதி,
ஸ்ரீரங்கம்-திருச்சி – 620006

