‘எட்டி போய்யா யோவ்’
‘நாத்தம் நாசியடைக்குது’
என்றாள்
பேருந்து நிலைய மூலையில்
குச்சிக் கிழங்கு
விற்கும் ஆத்தா
,
அடுத்தொரு சின்னஞ்சிறு சிறுமி
வழித்துக் கொண்டு உட்கார்ந்தவளை
ஒன்றுமே சொல்லவில்லை
‘ஸ்ஸ்ஸ்’ என்ற சத்தம் கேட்டு
பக்கத்தில் நிற்கும் அவளது அம்மாவைப் பார்த்து
புன்னகைக்கிறாள்
,
எனக்கோ சத்தமிடாமல்
கழிக்கவில்லையென
அடித்த நண்பனின்
அக்கா புருசன் நினைவுக்கு வந்தான்
,
அதற்கு அடுத்து
நடுத்தர வயதொத்தவள்
நின்று கொண்டே வழியவிடுகிறாள்
,
வாழ்வின் எல்லா நெருக்கடிகளையும்
வழியவிடுதலை கற்றவள் அவள்
ஆணின் காமத்தையும்
அபிலாசைகளையும்
வழியவிட்டு காத்திருக்கிறாள்
,
வாழைத்தண்டு கால்களின் வழியாக
வடிகிறது நசிந்து போன வாழ்வு
,
நாற்றம் நிறைந்த அனைத்தும்
வடிகிறது
,
பெண் என்பவளே வடிகால்தான்
ஒருநாளேனும்
வழிந்தோடும் வடிகாலாக
இருந்துதான் பார்ப்போமே
,
குச்சி கிழங்கை பேரம்
பேசுபவனைப் பார்த்து
ஆத்தாவின் வியர்வை
எரிச்சலாக வடிந்தோடுகிறது
,
தூரத்தில் கிழிந்து
தொங்குகிறது
கட்டண கழிப்பிடத்தின்
வினையல் விளம்பரபலகை
00

துவாரகா சாமிநாதன்
கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’, சப்த கன்னிகள்- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

