–எஸ்.உதயபாலா

மேடைகள் இப்போது நவீனமயமாகிவிட்டன.

மரப் பலகைகளும்,

கீற்றுத் தடுப்புகளும்

வழக்கொழிந்து போய்விட்டன..!

,

கம்புகளில் ஊன்றிக் கட்டிய

டியூப் லைட்டுகள்

இப்போது அந்தரத்தில் பறக்கின்றன!

ராட்சதக் கம்பங்களால் மேடைகள்

செயற்கையாய் ரம்மியமூட்ட,

வானைக் குடைந்து வண்ணத்தை உமிழும்

அவசர விளக்குகள்

அசர வைக்கின்றன.

,

யானைகளாய் நிறுத்தி வைக்கப்பட்ட

ஸ்பீக்கர்களின் அதீத டெசிபல்,

நிலம் அதிரும்

பின்னணி இசையுடன்,

பழமை தொய்ந்த எல்.ஆர். ஈஸ்வரியின் குத்துப் பாட்டை

இளமை பொங்கும்

கும்மாளத்தோடு

அடுத்த கிரகத்திற்குக் கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தது.

,

குழுமியிருந்த கண்களில்

மிகுதியாகக் காமம் கலந்தும்,

மிதமாக ரசனை ததும்பியும்

மேடையை ஆக்கிரமித்திருந்தது!

,

ஆட்டத்தை ஏற்பாடு செய்யும் விழாக் கமிட்டியினர்,

மிட்டா மிராசுகளாக,

தம் மிடுக்கான ஆடைகளோடு

ஜொலித்தனர்.

,

மைக்செட் ஆட்கள்

லைட்டுகளை எரியவிட்டும்,

அணையவிட்டும்

ரிகல்சல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

,

விழா மைதானத்தில்

ஆடல் பாடலை வேடிக்கை காண

பெண்களுக்கென்றும்

தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால்,

ஆண்களின் கால் பங்கிற்குக்கூட

பெண்களைக் காணோம்!

,

ஒருவேளை அந்த ஊரில்

பாலின சதவிகிதம் குறைவோ!

இல்லை,

இந்த நிகழ்ச்சி

ஆண்களுக்கானதா?

என்றுதான் தெரியவில்லை!

,

எப்படியும் ஒரு நள்ளிரவில்

நம்ம வாழ்க்கை

நடிகையாய் மாறிவிடும் என்றுதான்

இந்தத் தொழிலையே தேர்வு செய்தாள் புஷ்பா.

பிறகு,

இதைவிட்டால்

வேறு வழியில்லை

என்றே மாறிப்போனது!

,

அன்று அவளுக்கு

மாதவிடாயின் முதல்நாள்

இருந்தாலும்,

நிகழ்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை!

அட்வான்ஸ் வாங்கியபோது

கணிக்கப்படாத நாள்களின் கணக்கு

இப்படி

பலமுறை தவறியிருக்கிறது!

,

முதல் பாடலில்

அம்மன் வேடம்.

சிகப்பு சேலையில்,

முக ஜோடனையில்,

கைக் கண்ணாடியில் பார்த்தபோது

அவளுக்கே அவளை

ரசிக்கத் தோன்றியது!

,

அந்த நொடிகளில்

வாழ்வின் நினைவுகள்

வெயிலில் பட்ட

நீர்த்துளிபோல்

மாயமாகின!

அவளுள்

ஒரு நடிகை

அவதானிக்கத் தொடங்கினாள்.

துணி மாற்றும் அறை

துணிகளால் மறைக்கப்பட்டிருந்தது.

,

மேக்கப் ஆட்களில்

பெரும்பாலும்

ஆண்களே அதிகம் என்பதை

சிகரெட் வாடையுடன் கலந்த

செண்டு வாடை அரங்கம் முழுக்க

கரைந்திருந்தது.

,

ஆண்களுக்கு

அதீத கலை ஆர்வம்

என்றாலும், ‘ஆண் புத்தி’ என்பது

எப்படிப்பட்டது  என புஷ்பாவிற்கு

நன்றாகவே தெரியும்!

,

பொதுவாக,

பெண்கள் மீதான ஆண்களின் பார்வை

உடனே கொத்திவிடத்தான் நினைக்கும்.

அந்த ஆண் தன் இருப்பை

உணரும்போது

அது பாதுகாப்பாக மாறுகிறது.

உணராதபோது

மீண்டும் மீண்டும் கொத்தி

காயப்படுத்தப்படுகிறாள்!

மேலும்,

ஆண்களைப் பொறுத்தவரையில்

எல்லோருமே ஒரே மாதிரித்தான்

என்பது புஷ்பாவின் எண்ணம்.

,

“அவர்கள் தங்களை

வெளிப்படுத்திக்கொள்வதில்தான்

வேறு வேறாகக்

காட்சிப்படுத்திக்கொள்கிறார்கள்”

என்பாள்.

,

புஷ்பாவிடம்

பழகிப் பார்த்தால்தான் தெரியும்;

அவள் ஒரு படித்த பெண்;

அவள் ஒரு லட்சியவாதி;

அவள் ஒரு பெண்ணியப் போராளி;

அவள் ஒரு தேவதை.

ஆனால்,

வாழ்க்கையின்

தேர்வில் தேர்வாகாத

தோல்விகளின் சிநேகிதி!

,

ஆரவாரத்தோடு

கூட்டம் அலைமோதியது.

“ஓம் சக்தி சூலம் சூலம்..!”

என்ற பாடல்

ஒலிக்கத் துவங்கியது.

,

நாக்கைத் துருத்திய ஆங்காரத்தோடு,

அட்டையில் செய்த வேல் கம்போடு

மிடுக்காக மேடையேறினாள்.

அதுவரை

அடிவயிற்றில் ஓங்கியறைந்த வலியை

பாதத்தின் வலியாக

நிலத்தில் இறக்கி,

ஆடத் துவங்கினாள்!

,

அதே நடனம்;

அதே வளைவுகள்;

அதே வலி.

என்றபோதும்,

சில பாடல்களுக்கு ஆடும்போது

தன்னை கௌரவமாகக் கொள்வாள்..!

அதுவும்

கடவுள் அவதாரம் என்றால்,

தீமைகளைப் பொசுக்கும் பிடாரியைப் போல்

ஆங்காரம் காட்டுவாள்!

இப்போதும்

பார்ப்பதற்கு

அப்படித்தான் இருந்தாள்!

தீட்டுகளைத்

தவிடுபொடியாக்கினாள்.

மேடையில்

அவள் மீது

காளி இறங்கியதாய் கூட்டம் நம்பியது.

,

மாதவிடாய் வலி

மெல்ல இளக,

ஆடை தாண்டிய

யோனியின் ரத்தம்

மேடையெங்கும்

சொட்டித் தெறித்தன!

,

காமத்தில்

மலம் உணவாகும்போது,

ரத்தம் நீராகத்தானே வேண்டும்!

சில பெண்களுக்கு

அது தீர்த்தம் எனப்பட்டது!

,

வியர்வை ஊற்றெடுக்க,

வலியைப் பொறுத்துக்கொண்டவளால்

உடலில் இருந்து

சிதையுண்ட ரத்த வீச்சைப்

பொறுத்துக்கொள்ள முடியவில்லை..!

,

“ஒரு பாடலை

ஒரு காவியம் போல

எப்பத்தான் முடியும்?”

என மனக்கண்ணில்

அழுது வடித்தவள்,

முக்கால்வாசிப் பாடலில்

துணி மாற்றும் அறைக்குள்

நுழைந்தாள்!

கோரஸ் ஆடும் ஆட்கள்

கூட்டத்தின் ஆரவாரத்தை

அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள்.

,

நான்ஸ்டாப் கலை இரவு!

பாடலின் வேகத்திற்கு ஏற்ப

ஆட்டத்தின் வேகத்தைக் கூட்ட வேண்டும்!

நிசியின் கறுமை போர்த்தப் போர்த்த,

ஆடைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்க வேண்டும்!

,

இடை, தொடை என

விஸ்தாரம் காட்டணும்.

மாராப்பு இல்லாத

உடலைக் கொண்டு

பேஷன் ஷோ நடத்தணும்!

இதுக்குத்தான்

ஊர் அம்மன் திருவிழாக்களில்

ஆடல் பாடல் நிகழ்ச்சி!

,

ஆனால்,

புஷ்பாக்களுக்கு

வாழ்க்கை அப்படியல்ல!

கோரஸ் ஆடும் ஆண்களும்கூட

ஏதோ ஒருவிதத்தில்

‘ஆண் புஷ்பாக்கள்’

என்றாலும் தகும்!

,

வேடிக்கை காண வரும் ரசிகர்களைப்

புஷ்பா ஒருபோதும்

குறை சொன்னதே இல்லை!

“ஏனென்றால்,

அவர்களால்தான்

இந்த வயிறு நிறைகிறது!”

என்பாள்.

,

துணி மாற்றும் அறையை

மோப்பம் பிடிக்கும்

காம வெறிநாய்களையும்,

“ஆடக் கூப்பிட்டுவிட்டு

ஆட்டக்காரி என்றாலே

கால்களை விரிப்பாள்”

என அலையும்

ஈனப் பிறவிகளையும்தான்

சொல்லி அழுவாள்!

,

திட்டித் தீர்ப்பாள்!

தீராத மனக் குமுறலோடு

என்ன செய்வதெனத் தெரியாமல்,

தன்னைத் தானே

தேற்றிக்கொள்வாள்…

,

உடனடியாகத் தன்னைத்

தயார் செய்துகொண்ட

புஷ்பா,

தன் வேலையில்

வலியை மறப்பாள்..!

,

உடன் ஆடும் ஆண்களில்

பாதிக்கும் மேல்

புதியவர்களாக இருந்தார்கள்..!

அதிலும்,

கிளாமர் பாடல்களில்

புதிதாக ஜோடியானவன்,

காதல் ஏக்கத்தோடு

புஷ்பாவின் நெஞ்சில்

இடம் பிடிக்க,

லாவகமாக அவளை

வில்லாக வளைத்தான்;

அம்பாக எய்தான்.

,

கன்னிகழியாதவன் என்பதை

அவன் புலன் அடக்கமின்மையில்

உணர்ந்தாள்..!

“கட்டிக்கோ கட்டிக்கோ,

என்னைக் கட்டிக்கோ!”

என்ற பாடலில்

அவனது ஆண்மை

அவளை அவஸ்தைப்படுத்த,

வேண்டா வெறுப்பாய்

எப்படியோ முழு பாடலை நிறைவு செய்தாள்!

,

ஆண்களின் சுதந்திரம்

அவனை அறிவாளியாகவே வைத்தது;

அவனை நல்லவனாகவே காட்டியது.

ஒருவேளை பிழை என்றாலும்,

அது ஆண்தன்மை எனப்பட்டது.

பெண்களின் சுதந்திரம்

வாய்காரி என்றது;

ரம்பாடி என்றது;

தெள்ளவாரி என்றது!

ஊர் மேய்கிறாள் என்றது!

எது எப்படியோ,

இந்த இரவு

கூட்டத்திற்கு

நல்ல விருந்துதான்..!

,

இப்படித்தான் ஓர் இரவில்,

‘காதலர் தினம்’ திரைப்படத்தில்

குணாலின் சிகை அலங்காரத்தோடு,

அதே முகச் சாயலில்,

“ரோஜா… ரோஜா…”

பாடலில் அறிமுகமானான் அரவிந்த்.

,

இந்த இணையின் பயணம்

“பள்ளிக்கூடம் போகலாமா”

பாடல்வரை சென்றது.

அரவிந்தும் புஷ்பாவும்

நம்பர் ஒன் ஜோடியானார்கள்.

கூடவே,

காதலர்களாகவும் பரிணமித்தார்கள்!

திருமணமும் செய்துகொண்டார்கள்!

,

குடும்பம் ஒதுக்கியவளை

அரவிந்தன் ஏற்றுக்கொண்டான்.

நடிகையாக முடியாதவள்

அம்மா ஆனாள்!

,

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த

ஓர் இரவில்,

பிரசவ வலியோடு

புஷ்பாவை ஆஸ்பத்திரியில்

சேர்த்தார்கள்..!

,

ஆண் குழந்தை பிறந்த

அந்தப் புலராத காலையில்,

மழலை முகம் காண

ஆசையாய் கலை இரவை

முடித்து வந்த அரவிந்தன்,

பெருத்த விபத்தில் சிக்கி,

ஆம்புலன்சில்

அதே அரசு ஆஸ்பத்திரியை

அடைந்தான்.

ஆனால்,

அவனது உயிர்

பிரிந்திருந்தது.

அன்றிலிருந்து புஷ்பாவின் வாழ்வில்

இருள் நிரந்தரமானது!

,

புதிய ஜோடியாக வந்தவன்

காதல் ஏக்கத்தோடு

வரும் பாடல்களிலெல்லாம்

புஷ்பாவை உஷார் பண்ணவே நினைத்தான்.

,

அவன் தொடுதலில்,

அவன் அணைப்பில்,

அவன் வாசனையில்,

அவளின் நினைப்பில்

அரவிந்தன் சூழ்ந்த பிறகு,

அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

,

நிலவு போன்ற

பள்ளிச்சென்ற அவள் வண்ணம்

ஒளி இழந்தது;

இளமையின் தூக்கல்

சோகம் படர்ந்தது!

பார்வையாளர்களுக்கு,

அந்தப் புதியவன்

புஷ்பாவை வதைப்பது போல இருந்தது!

,

ஒரே இரவில்,

ஒரே பாடலில்,

கடவுளானாள்,

காதலியானாள்,

மனைவியானாள்,

உடலை விற்கும் விபச்சாரி ஆனாள்!

இறுதியாக,

“மார்கழித் திங்கள் அல்லவா…”

பாடலோடு மயங்கி விழுந்தாள்!

,

நள்ளிரவோடு

நான்ஸ்டாப் நிறைவடைந்தது.

கூட்டம் நிம்மதியோடு கலைந்துகொண்டிருந்தது.

,

புதிதாக ஜோடி போட்டவன்

தந்திரம் பலிக்காதவனாய்,

இருண்ட வானத்தைப் பார்த்து

அடுத்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பை எண்ணிக்கொண்டிருந்தான்.

,

ஆட்டக் கூலியை வாங்கியவள்,

ரெண்டு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு,

ஒரு தனியார் ஆஸ்பத்திரியின்

நுழைவு வாயிலில் இறங்கினாள்.

அவள் இறங்க, இறங்கவே,

“யம்மா… பையன் நல்லா இருக்கான்!

பயந்துக்காத!

இரு, வரேன்!”

என்று

மூதாட்டி ஒருத்தி

ஓடிவந்தாள்.

,

அதுவரை வலி பொறுத்துக்கொண்டு வந்த

புஷ்பாவின் இடுப்புக்குக் கீழ்

ரத்தம் சிதிலம் சிதிலமாக நனைந்திருந்தது.

அவள் முகம்

நேற்றுப் பூத்த

ஒரு செவ்வரளியைப் போல

வாடியிருந்தது.

00

எஸ்.உதயபாலா (1992)

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள கீரனூரில் சுப்பிரமணி கண்டியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாய் பிறந்தவர். கணிதவியலில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு தற்போது தென்னக ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்பு பணியாளராக பணிசெய்துவருகிறார்.

பள்ளிக் கல்லூரி காலம் தொட்டே கவிதைகள் எழுதிவரும் இவர் நிலாச்சோறு,  லப் டப், முற்றுப்புள்ளி,  கீரனூர் சீமை, கருத்தீ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

குறும் படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதி வரும் இவர் வெள்ளித் திரையிலும் தனது பயணத்தைத் துவங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *