1..தாய் மரம்
வீட்டுக்கு பின் வாசலில்
காய்ப்பில்லாத
அந்த மாமரத்தில்
ஆயிரம் ஆயிரம்
செந்நெறும்புகள்
துளிர்களின் ரசத்தை
குடித்தபடி
ஓடிக்கொண்டிருந்தது.
சிறு தொடுகையில்
விஷத்தை கொட்டும்
அந்த எறும்பு நதிக்கு
மத்தியில் பாதுகாப்பில்லை
என்று வெட்ட நினைத்த நாளில்
தன் சந்ததி பெருக்க
சிறு சலனமுமின்றி
கூடு கட்டி
முட்டையிட்டு
குஞ்சு பொறித்திருந்தது
சிறு பறவை.
“எது”சொன்னது “அது”
காய்ப்பில்லாத மரமென்று?
2. (இயற்கையின்) ஏற்பாடு
,
காகித மலர்களில் கூட
ஒளிந்திருக்கிறது
அழகெனும் வாசனை
,
நெருஞ்சி பூவின்
துளி தேனெனினும்
கொடுக்கிறது எறும்புக்கு
,
பிளந்த பாறையின்
அலகு சிறுமண்ணிலும்
முளைக்கிறது
ஒரு பெரு விருட்சம்
,
குழந்தை
பொம்மையில்
கூட பூ சூடிக்கொண்டு
நிற்கிறது
யாரோ பிராத்திக்கொண்டு
எடுத்த நேர்த்தி சிகை
,
ஆகையால்
,
தொழுத கையுடன் வருகிறவரே
உங்களுக்கு தரும்
ரணங்கொழித்து மலரும்
மலர்செண்டை
000

மாரி.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும், கடந்த பத்து வருடமாக இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்” சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும், ஊர் பொது கிணறு புணரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார். அப்பா மாரிமுத்து. அம்மா ஜெகநாதம்மாள். மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

