1. தனிமைப்பயணம்
————————————-
ஹோட்டல் கௌரிகிருஷ்ணாவுக்கும்
கே.எப்ஃசிக்கும் இடையே
ஆவியாய் பறக்கின்றன
வாகனங்கள்
,
சிவப்பும்
பச்சையுமாய்
நின்று
நிதானிக்கிறது
சிக்னல்
,
போக்குவரத்துக்காவலரின்
அறைகூவலையும் மீறி
சாலைவிதியை மீறுகிறது
ஒரு ராயல் என்ஃபீல்டு
,
கையேந்தும்
கருப்புக்கண்ணாடிக்காரருக்காக
கொடையுள்ளம் கொள்கின்றன
சில ஹீரோ ஹோண்டாக்கள்
சில ஆக்டிவா – அஸ்ஸஸ்கள்
,
பத்திப்புகையையும்
சூட அனலையும்
அறவேவெறுத்து
,
வெள்ளிக்கும்
செவ்வாய்க்கும்
விதவிதமான
வேண்டுதல்களோடு
விஜயம்புரியும்
பக்த கோடிகளுக்கு அஞ்சி
,
“காளவாசல்….
பொன்மேனி…..
ஆரப்பாளையம் …!”
என இடைவிடாது கூவும்
ஆட்டோக்காரனின்
குரல்கேட்டு
சதா குழுமிநிற்கும்
சனத்திரள் விலக்கி
தனிமைப் பயணத்திற்கு
தயாராகிறார்
பைபாஸ் கருப்பசாமி.
2. கழுதை முகத்தில் விழிப்பவன்
————————————————————–
,
வருசம் முச்சூடும்
பார்த்தபடியே தான் இருக்கிறான்
,
வறுமை தவிர்த்து
வந்தபாடில்லை
எதுவும்
,
என்னைப் பார்
யோகம் வரும்
எனும் புகைப்படத்தை
வீட்டு முகப்பில்
வியாபார தலத்தில்
பெரிதாய் மாட்டுகிற
பிரகஸ்பதிகளைப் பார்த்தால்
கோபம்தான் வருகிறது
அவனுக்கு
3 . மூன்று நாள் கூத்து
——————————————–
மூன்று நாள் கூத்தும்
முடிந்தது
,
தீச்சட்டி
மாவிளக்கு
கரகம்
படையல்
எல்லாம் பார்த்த ஆத்தா
அயர்ந்திருக்கிறாள்
கருவறையில்
,
காப்பு அவிழ்த்த
பூசாரியோ
கவிழ்ந்துகிடக்கிறார்
பிரகாரத்தில்
,
கடைசி நாள்
ராத்திரி
கருத்தமச்சான்
பாட்டுக்கு
ஆடிய
செவத்தக்குட்டியின் நினைவில்.
00
4. விடியல்
———————————————
பேருந்து நிலையத்தின்
மின்விளக்குகள்
அணையாத
அதிகாலையில்
,
கொத்தர்களும்
சித்தாட்களும் குழுமிய
கூட்டத்தில்
,
காலமெல்லாம்
கருமாயப்பட்டு
சாந்துசட்டியோடு
குடும்ப பாரமும் சுமக்கும்
குலமாதவள்
ஏதோ கவலையில்
என்றும் போல்
இன்றும்
வெறிக்கிறாள்
கிழக்கை
,
கதவம் சாத்தப்பட்ட
சிறுதெய்வத்தின்
வாசலில்
மூதாய் ஒருத்தி
ஏற்றிய
வில்லை சூடமென
நம்பிக்கையில்
சுடர்ந்து மேலெழுகிறது
சூரியன்
00
கருத்துக்களை மிக எளிமையாகவும், அதே நேரத்தில் இலக்கியமாகவும் கொடுக்கத்தெரிந்தவர். வாசித்தவர்கள் உணர்வர். ஆரம்பகால கவிஞர்கள் இக்கவிதைகளை முன்னிறுத்தி எழுதப் பயிற்சி மேற்கொள்ளலாம்! அது அவ்வளவு சுலுவாக கைக்கு வராது! முயற்சிப்பதில் தப்பில்லை!
-நடுகல்.

ஸ்ரீதர் பாரதி
கவிதை சிறுகதை என தொடர்ச்சியாக இயங்கி வருபவர். மதுரையில் வசித்து வருகிறார்.
இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்
1.செவ்வந்திகளை அன்பளிப்பவன்
2.கருப்பு வெள்ளை கல்வெட்டு
3.முத்தம் சரணம் கச்சாமி
4.அப்பாவின் குதிரை
சிறுகதைத்தொகுப்பு “ஜெயக்கொடி”

