1. இசை:
திருவிழாவில்
தவில் நாதஸ்வர இசைக்கும்
கிளாரினெட் பேண்ட்
இசைக்கும்தான் போட்டியே
,
‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி’
பாடலை
கிளாரினெட் பேண்ட்
நன்றாக வாசித்தால்
‘மல்லிகையே மல்லிகையே
தூதாக போ’ பாடலை
தவில் நாதஸ்வர வித்தவான்கள் பிசிறின்றி வாசிக்கிறார்கள்
,
மங்கள இசையென்றாலும் சரி
கிளாரினெட் இசையென்றாலும் சரி
வாசிப்பவர்களின் சட்டைகளில்
பணத்தைக் குத்தி
அழகு பார்க்கும் ரசிகமணிகள்
இன்றும் இருக்கிறார்கள்
,
ஈதல் இசைபட வாழ்தல்
இசை என்றால்
ஓசையின் நயம் மட்டுமல்ல
பெயரொடு புகழும் தான்.
,
2. காலம்:
,
கால் என்றால்
காற்று என்று பொருள்
,
கால் என்ற பகுதி
அம் என்னும் விகுதி பெற்று
காலம் ஆனது
,
அம்பாள் அம்மானை ஆடுகிறாள்
,
காலத்தை
பருவம் என்கிறார்
வள்ளுவர்
,
பருவமழைகள் எல்லாம்
கால் காலமான
காற்றின் கணக்கு
,
அப்பாவின் பழைய
எச்.எம்.டி கைக்கடிகாரம்
சாவி கொடுத்தால்தான்
சுற்,றும்
யார் சாவி கொடுத்து
சுற்றுகிறது
கோள்களும்
சூரியனும்?
,
நேரிழையே
காலத்தைப்போல
நேரத்திற்கும்
அம் விகுதிதான்.
,
3. இமை இடையில் கூந்தல் கனவு:
,
மூடி இருந்தாலும்
இமைகள்தான்
கனவுகளுக்கு
சாளரம்
,
கண்களை நீ
சிமிட்டுதல் என்பது
ஒளிக்கு உன் விழிகள்
இமைகளால் வீசும்
சாமரம்.
,
கொடியிடை என்கிறார்கள்
எனக்கோ உன் இடை
பற்றிக்கொள்ளும்
கொழுகொம்பு..
,
தட்டானே!
இல்லை இல்லை
அஞ்சிறைத் தும்பியே!
உன்னை நான்
கல் சுமக்க வைத்ததற்காக
என்னைப் பழிவாங்க
அரிவையின் கூந்தலைவிட
நறிய பூ உண்டென்று
நயவஞ்சகமாக
உரைத்து விடாதே.
,
4. மாமுகில்காள்:
,
ஆண்டாள்
சூடித் தந்த சுடர்கொடி
என்று நாம்தான் சொல்கிறோம்
அவள் தனது
முத்திரை பாடல்களில் எல்லாம்
தன் பெயரை தனது
தந்தை பெயரோடு இணைத்து எழுதி
விட்டுசித்தன் கோதை
பட்டர்பிரான் கோதை என்கிறாள்
,
உக்கம், தட்டொளி எல்லாம்
அவள் தந்த கலைச்சொற்கள்
உக்கம் என்பது கைவிசிறி
தட்டொளி என்பது
பெண்களின் கைப்பையில் இருப்பதைப் போன்ற
கைக்கண்ணாடி
,
திருப்பாவை
மார்கழி திங்களில் தொடங்குகிறது
நாச்சியார் திருமொழி
தையொரு திங்களில்
தொடங்குகிறது
மார்கழியும், தையும்
அடுத்தடுத்த மாதங்கள்
,
ஆண்டாளின் கனவுகளில்
எனக்குப் பிடித்தது
‘வாரணம் ஆயிரம்’
ஒரு யானையே
நம் கண்களுக்கு
காட்சி விருந்து
ஆயிரம் யானைகள் என்பது
ஆகப்பெரிய பிரம்மாண்டம்
,
‘விண்ணீல மேலாப்பு’
என்று தொடங்கும்
ஒரு பதிகம் உண்டு
நாச்சியார் திருமொழியில்
காமக் கடும்புனலால்
கிளர்ந்தெழும் கொங்கைகளுக்கு
மாராப்பு போல
நீலவானிற்கு
மேகங்கள் எல்லாம் மேலாப்பு.
,
5. நித்திலவல்லி:
,
சோழிகளை வீசினேன்
முதல் வீச்சிலே
தாயம் விழுந்துவிட்டது
,
ஏணிகள் மட்டுமே இருக்கும்
நம் பரமபதத்தில்
உனதன்பு என்பது
வைப்பாற்றங்கரையில்
நாம் தோண்டிய மணற்கேணி
,
முத்தாயம்
ஈராறு
ஒரு பன்னிரெண்டு
ஆகமொத்தம் அம்புலிக்கு
இருபத்தேழு விண்மீன்கள்
,
விண்மீன்களுக்குள்
மீன்கள் ஒளிந்திருக்கின்றன
,
நட்சத்திரங்களுக்குள்
சித்திரம் ஒளிந்துள்ளது
,
உன் முறுவலுக்குள்
முத்தம் போல
,
போல, போன்ற,
ஒப்ப, உறழ,
மான, கடுப்ப,
அன்ன, இன்ன,
எல்லாம் உவம உருபுகள்
,
உவமைத்தொகையில்
உவம உருபுகளுக்கு
வேலையில்லை
,
முத்துநகை என்றால்
முத்தைப் போல நகையோ
முத்தன்ன நகையோ அல்ல
,
முத்தே நகை எனும்போது
உவமைக்கும் வேலையில்லை
உருவகத்திற்கும் வேலையில்லை
,
கடல் என்னும் வேலையில்
நித்திலம் என்பது முத்து.
000
இந்தக் கவிஞரிடம் மற்ற கவிஞர்களிடமில்லாத தனித்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமெனில்.. இவரது மற்றைய நடுகல் கவிதைகளை வாசியுங்கள்! மிக நேர்த்தியான படைப்பாளி இவர்! சொல்ல வருவதை பொட்டில் அறைந்தாற்போல் சொல்வதில் இவருக்கு எந்த தயக்கமும் இதுவரை இருந்ததில்லை!
–நடுகல்

மு.ஆறுமுகவிக்னேஷ், Pharm D., (Doctor of pharmacy).
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி சொந்த ஊர். மருந்தியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். காற்றுவெளி, நுட்பம், வாசகசாலை, திறவுகோல், கொலுசு, ஆனந்த விகடன், ஆவநாழி, போன்ற இணைய மற்றும் அச்சு இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. தற்போது சொந்த ஊரில் மருத்துவ துணி (surgical dressings and bandage) உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் இலக்கிய ஆர்வம் மிகுதியாக உண்டு. தொடர்ந்து தமிழ் இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்

