வீ.வைகை சுரேஷ்
இரும்பு கம்பிகளுக்குள் அடை பட்டுக் கிடந்த முக்கால் வாசி எலிகள் மயங்கி விட்டன. இன்னும் நான்கு எலிகள் மட்டும் மெதுவாக கூண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. ஃபார்மலின் பாட்டிலை எடுத்த சுபத்ரா மெல்ல ஓடிக்கொண்டிருக்கும் எலிகள் மேல் சில துளிகள் படுமாறு பாட்டிலை கவிழ்க்க, ஃபார்மலின் துளிகளை நீரென நினைத்து தலையை தூக்கிய எலிகள் தன் வாயை திறந்தன. கையில் இருந்த கத்தரிக்கோல் கொண்டு நித்யா உடன் கௌரி சார்ட் பேப்பரில் அம்புக்குறி வடிவில் வெட்டியபடி, ‘நித்யா இன்னும் நாலே நாலு ஆர்கன்ஸ்க்கு மட்டும் வெட்டினால் போதும் முடிஞ்சுரும் ‘ என்று கூற , கெளரி எல்லா எலிகளும் மயங்கிடுச்சு, நம்ம ஜூவாலாஸி மேம் வந்ததும் பிராக்டிகல் ஆரம்பிச்சுடலாம்’ என்று கூறியபடி சுபத்ரா கெளரி அருகர்மந்து, கெளரி வெட்டிய அம்புக்குறி வடிவிலான சார்ட் பேப்பர்களில் உணவுக் குழாய், நுரையீரல், இதயம், கல்லீரல், சிறு குடல், பெருங் குடல், சிறுநீரகம் என எழுத துவங்கிட…
‘ ஆமா.. சுபத்ரா இந்த வருசம் இந்த எலிகள் தான் இப்படி துள்ளிக் குதிச்சு ஓடுதுக, போன வருசம் தவளைக எல்லாம் கொஞ்சம் ஃபார்மலின் தெளிச்சதுமே எல்லாம் மயங்கிருச்சு’
‘ ஆமா கெளரி இந்த எலிகளை மயங்க வைக்குறதுக்குள்ள ஃபார்மலின் ஊத்துற வேலைதான் பெருசா போச்சு ‘ என நித்யா நிறுத்த, ‘இதுக்கே இப்படிச் சொல்ற நீ, ஆபரேஷன் தியேட்டர்ல மயக்க ஊசி போடுற டாக்டர் பாடு எப்படி இருக்கும் பாரு, இதுல லோக்கல் அனஸ்தீஷியா, சென்ட்ரல் அனஸ்தீஷியானு இருக்காம். ஆபரேஷன் செய்யும் டாக்டர் கூட ஆபரேஷன் முடிஞ்சதும் தியேட்டர்ல இருந்து கிளம்பிடுவாராம். ஆனால் மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் பேஷன்ட் கண் விழிக்கும் வரை இருப்பாராம். இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே லேப்புக்குள் நுழைந்த விலங்கியல் ஆசிரியை ‘ ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் அவங்கவங்க பிராக்டிகல் திங்ஸ் எடுத்துக்கிட்டு ஆளுக்கொரு எலியை எடுத்து உங்களுடைய பிராக்டிகல்ஸ்ஸை ஸ்டார்ட் பண்ணுங்க’ என்று கூறிட, அனைவரும் கம்பிக் கூண்டுக்குள் மயங்கி கிடந்த எலிகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு பிராக்டிகல் டேபிளுக்கு சென்று தங்களின் வேலையை ஆரம்பித்தனர். சுபத்ராவும் கெளரியும் ஆளுக்கொரு எலியை எடுத்துக் கொண்டு பிராக்டிகல் பலகையில் நான்கு சிறு ஆணிகளையும் எலியின் நான்கு நான்கு காலங்களையும் இழுத்து வைத்து அடித்தனர். கால்களில் ஆணிகளை சுத்தி கொண்டு அடித்த போது மயக்கத்தில் இருந்த எலிகள் மெல்ல உடலை அசைத்து வலியை காட்டின. ஆணியை அடித்து முடித்து கத்தரிக்கோல் கொண்டு எலியின் கீழிருந்து வாய் வரை தோலை கத்தரித்த சுபத்ரா இடையிடையே எலியின் உடலில் தண்ணீரை ஊற்றி கசிந்து வந்த ரத்தத்தை கழுவி விட்டு சார்ட் பேப்பரில் அம்புக்குறி வடிவில் எழுதி வைத்த எலியின் உடல் பாகங்களில் வைத்துக் கொண்டு வர
இதயத்தின் நேரே இதயம் என எழுதப் பட்ட பேப்பரை வைக்கும் போது கூட எலியின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. டீச்சர் வந்து கேட்க எலியின் தலை முதல் குடல் வரை கூறி முடித்து வகுப்புக்குள் வந்தனர் எல்லோரும்.
கெளரிதான் முதலில் ஆரம்பித்தாள் இப்படியாக,’ சுபத்ரா…ஃபார்மலின் ஊற்றி மயங்க வைத்த எலிகளை வெட்டி நாம படிக்கிறோம், மெடிக்கல் காலேஜ்ல என்ன செய்வாங்க ?’. ’ இங்க பாரு கெளரி இது பத்தி நான் கேள்வி பட்டு இருக்கேன், ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து கவனிக்கிறது மட்டுமல்ல சில உடல்களை இந்த பிராக்டிகலுக்காகவே கடாவர்னு மனித உடல்களை வச்சு இருப்பார்களாம்,
‘ஆமா.. ஆமா.. நானும் இந்த கடாவர் பற்றி கேள்விப் பட்டு இருக்கேன்”.
”நீ என்ன சொல்ற சுபத்ரா, கடாவரா? இந்த கடாவர் பற்றி உனக்கு தெரியுமா, யார் இதைப் பற்றி எல்லாம் சொன்னது உனக்கு?”.
”அட… எங்க ராமசாமி தாத்தாதான் சொன்னாரு , ஸ்கூல்ல நாம படிக்க எப்படி தவளை, எலிகளை அறுத்து படிக்கிறோமோ அதே போலத்தான் மெடிக்கல் காலேஜ்ல இந்த கடாவர் உடலை வைத்து படிப்பாங்களாம் அதுக்குனே சிலர் உடலை எழுதிக் கொடுத்துருப்பாங்களாம் கெளரி”.
சுபத்ரா சொல்வதை எல்லாம் விழிகள் விரிய கேட்ட கெளரி .
’எங்க சொந்தம் பந்தம் எல்லாம் உடலை எரித்து சாம்பலா எடுத்துட்டு வருவாங்க ‘ என்று கெளரி கூற,
”உடம்பை எரித்து சாம்பலா எடுத்துட்டு வந்து என்ன செய்வாங்க கெளரி?” ஆச்சரியம் பொங்க கேட்ட சுபத்ராவிடம்,
‘ அட… எரித்த உடல் சாம்பலை கன்யாகுமரியில இருந்து காஷ்மீர் வரை தூவ இவங்க ஜவகர்லால் நேருவா என்ன?, இங்கே வைகை ஆத்துலயோ முல்லை பெரியாறுலயோ போயி கரைச்சு விடுவாங்க கொஞ்சம் பணங்காசு இருக்கவுக ராமேஸ்வரம் போயி கடல்ல கரைப்பாங்க, உங்க ஊர்ல என்ன செய்வாங்க சுபத்ரா?”
என்று கெளரி கேட்டு நிறுத்த…சுபத்ரா கம்மிய குரலில், ‘ நாலு வருசத்துக்கு முன்னாடி என் அப்பா இறந்த போது எங்க ஊருல வைகை ஆத்தங் கரையில் இருக்குற இடுகாட்டுக்கு எடுத்துக்கிட்டு போயி மண்ணுல புதைச்சுட்டு வந்தாங்க... பாதி தூரத்திலயே என்னய எங்கம்மாவனு பொண்ணுங்க எல்லாம் உடம்ப பொதைக்கிற எடத்துக்கு வேண்டாம்னு சொல்லி வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க… வீட்டுக்கு வந்ததும் நான் எங்க ராமசாமி தாத்தாகிட்ட கேட்டேன், ‘ இடு காட்டுல போயி என்ன தாத்தா செய்வீங்கனு ?
ஆறடி ஆழம் நீளத்திற்கு குழி தோண்டி அதுக்குள்ள இறந்தவங்க உடம்பை பொதைச்சுட்டு வந்துருவோம், மனுஷன் உசுரோட இருக்குற வரைக்கும் ஆடு கோழி மாடு இன்னும் பல ஜீவராசிகளை சாப்பிட்டு வளக்குற உடம்ப மண்ணுல பொதச்சு வச்ச நாலஞ்சு நாளுல அந்த உடம்புல இருந்து புழு பூச்சிக உருவாகி இரையாகி போகும் அதனால்தான் பொதைக்கிறோம்னு சொன்னாரு கெளரி”.
‘ உங்க தாத்தா சொல்றதும் நல்ல காரணம்தான் சுபத்ரா, கண்டதையும் திண்கிற நம்ம உடம்புல இருந்து கடைசியில சில புழு பூச்சிகள் உருவாகிட்டு போகட்டும்னு இடுகாட்டுல பொதைக்கிறது சுடு காட்டுல எரிக்கிறத விட நல்லதுதான், கடாவர் பத்தி எல்லாம் சொல்ற உங்க ராமசாமி தாத்தா வேற என்னவெல்லாம் சொல்லுவாரு சுபத்ரா? இடுகாடு சுடுகாடுனு சாம்பலாகி , மண்ணோடு மண்ணாகி போதெல்லாம் சொன்ன தாத்தா கடாவரா மாறுனா கண்ணு கல்லீரல் கிட்னி போன்ற உடல் உறுப்புகளை அவசியமான ஆட்களின் உடலில் வைப்பதால் உயிர் பிரிந்தாலும் கூட உறுப்புகளாக வாழவும் முடியும் வாழ வைக்கவும் முடியும்னு சொல்வாரு, அது மட்டுமல்ல டாக்டர்ஸ் பிராக்டிகல் படிக்க பாடப் புத்தகமாகவும் கடாவர் ஆகலாம்னு சொல்லுவாரு’ என்று சுபத்ரா சொல்லி முடிக்க,
விழிகள் விரிய கேட்ட கெளரி,
”இன்னைக்கி நம்ம பிராக்டிகலுக்கு அறுத்துப் பார்த்த எலிகளை கூட நம்ம ஸ்கூலுக்கு பின்னால போயி பொதச்சுடுவாங்கதானே சுபத்ரா ஆனாலும் பாரு நமக்கு பாடாமாகிட்டு சாகுது இல்ல?’ என்று கெளரி நிறுத்தவும், மாலை ஸ்கூல் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபத்ராவுக்கு வழி முழுவதும் பிராக்டிகல் வகுப்பில் அறுத்த எலியும் வைகை ஆற்றங்கரையில் இருக்கும் இடு காட்டில் புதைக்கப்பட்ட அப்பாவின் நினைவும் மாறி மாறி நிழாடின. வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் தாத்தா ராமசாமியும் வந்தார். ‘ என்ன தாயி இன்னைக்கி ஸ்கூல் எப்படி இருந்துச்சு என்ன செஞ்சீங்க?’ என்றார் தாத்தா ராமசாமி. தன் பேத்தியான நின சுபத்ராவை தாயி என தாத்தா அழைப்பதே அத்தனை அழகு. தினசரி பள்ளிக்கூடம் சென்று வந்ததும் என்ன ஏது என பேசுவது அவருடைய வழக்கம்.
‘ஆமா தாத்தா நீங்க அன்னைக்கி என்கிட்ட சொன்னீங்களே கடாவர் பத்தி, அப்படித்தான் இன்னைக்கி எலிகளை பிராக்டிகல் எங்களுக்கு’ என்று சுபத்ரா நிறுத்தாமல் மொத்தத்தையும் ராமசாமி தாத்தாவிடம் கூறி முடிக்க, புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த ராமசாமி, ‘ சரி தாயி, ஸ்கூல்ல எலிகளை ஆஃபரேஷன் பண்ணி உசுரோட இருந்து கடாவரா மாறுனத படிச்சுட்டு வந்த உங்களுக்கு இன்னைக்கி ஒரு பரிசு தரப் போறேன் இந்த தாத்தா. ‘ என்ன தாத்தா சொல்றீங்க பரிசா என்ன பரிசு தாத்தா, இன்னைக்கி புதுசா என்ன புக் வாங்கிட்டு வந்து இருக்கீங்க , ஏதோ ஒரு புத்தக பரிசுதானே?’ என்று உற்சாகமாக சுபத்ரா கூறி சிரிக்க, ’ஹாஹாஹா சரிதான் தாயி இது கொஞ்சம் வித்தியாசமான புத்தகம்’
’கொஞ்ச காலம் பொறுத்திருந்து நிறுத்தி நிதானமா படிக்க வேண்டிய புத்தகம் அது. உங்களுக்கு படிக்க நான் கொடுத்த புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜானகிராமன், வால்காவில் இருந்து கங்கை வரை, பெண் ஏன் அடிமை ஆனாள்? போல புத்தகங்கள்னு கொடுத்து வாசிக்க கொடுத்த நானு இன்னைக்கி நீங்க படிக்க ஒரு பத்திரம் கொடுக்கப் போறேன், படிச்சு முடிச்சிட்டு அத பத்திரமா நீங்க வச்சுக்கனும், ஒரு அசல் பிராக்டிகல் செய்யனும் நீங்க’ என்று ராமசாமி தாத்தா சொல்லி முடிக்க, ’நீங்க என்ன சொல்றீங்க தாத்தா ஒன்னும் புரியல எனக்கு ’என்று சுபத்ரா கூற, ’அட உங்களுக்கு புரியும்படி சொல்றேன் தாயி , நீங்க போயி அந்த புத்தக பெட்டியில போன வாரம் நானு வாங்கிட்டு வந்த டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும் ‘ புத்தகத்துக்குள்ள வச்சுருக்குற பேப்பரை எல்லாம் எடுத்துட்டு வாங்க ‘ என்று சிரித்தபடி கூறினார்.
போரும் வாழ்வும் புத்தகத்திற்குள் இருந்த பேப்பர்களை எடுத்து வந்த சுபத்ரா மெதுவாக அதில்..
ராமசாமி தாத்தா தேனி மெடிக்கல் காலேஜ்ல டாக்டர்க்கு படிக்கிற எல்லோரும் படிக்க வசதியாக தன் உடலை உடல் தானம் செய்த விபரங்கள் பற்றியு கடாவர் அக்ரிமெண்ட் தான் அது. அந்த அக்ரிமெண்டை விழிகள் விரிய வாசித்த சுபத்ரா ‘எப்ப தாத்தா மெடிக்கல் காலேஜ்க்கு போனீங்க நீங்க?, உடல் தான ஒப்பந்தம்னு இருக்கே தாத்தா…. இது பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே நீங்க’ என ஆச்சரியம் பொங்க சுபத்ரா கேட்க,
‘அட முன்னாடி சொல்லனு கோவிச்சுக்காத தாயி… இன்னைக்கி எலிய அறுத்து பாடமா படிச்சுட்டு வந்த நீங்க நாளாக்கி நல்லா படிச்சு மெடிக்கல் காலேஜ்ல டாக்டர்க்கு படிக்கிற வாய்ப்பு வந்தா இந்த தாத்தா உடம்பைக் கூட ஒரு பாடமாக படிக்கலாம்… வயசாகிப் போன நானு இன்னைக்கோ என்னைக்கோ செத்துப் போனாக்கா நம்ம சொந்த பந்தம் எல்லாம் கூடி அழுதுட்டு ஆத்தங் கரையில இருக்குற இடுகாட்டுல போயி மண்ணுல போட்டு பொதைக்காம கண்ணு கல்லீரல் கிட்னினு தேவைப் படுற யாருக்கோ கொடுத்து வாழ்ந்துட்டு இருப்பேன் நானு, அப்படியே டாக்டருக்கு படிக்கிறவங்களுக்கு நானும் படிக்க ஒரு புத்தகமா இருந்துட்டு போறேன்
தாயி, இதுதான் உங்களுக்கு இன்னைக்கி நான் தரும் புத்தக பரிசு,
அதுக்கு நீங்க செய்ய வேண்டியது எனக்கு ஏதாவது ஆனா கூட்டத்தோட சேர்த்து அழுதுகிட்டே இருக்காம இந்த பேப்பர்ல இருக்குறபடி நீ தகவல் கொடுத்தால் போதும் நாலஞ்சு மணி நேரத்துல வந்து உடம்பை எடுத்துக்கிட்டு போயிடுவாங்க , அத மட்டும் சரியா செய்யனும் நீங்க, சரியா தாயி ‘ என கனிவோடு கேட்டபடி சுபத்ரா வின் கைகளை பிடித்துக் கொண்டார் ராமசாமி. ‘ தாத்தா ஏன் தாத்தா என்கிட்ட கேட்கிறீங்க, எத்னையோ புத்தகம் வாசிக்க கொடுத்த நீங்க உங்க ஒடம்பையே ஒரு புத்தகமா கொடுக்கச் சொல்றீங்க, கண்டிப்பா நாஞ் செய்வேன் தாத்தா, உங்கள் உடலில் இருந்து உயிர் போனாலும் நல்லா படிச்சு நானும் மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்து நான் நினைக்கும் போதெல்லாம் உங்களை பார்த்துகிடுவேன் கடாவர் புத்தகமா , தேங்ஸ் தாத்தா’ என்று கண்களில் கண்ணீர் திரையிட தெளிவாக தீர்க்கமாக பேசிய பேத்தி சுபத்ராவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார் ராமசாமி.
“இதுக்கெல்லாம் கண் கலங்கி புது கண்ணீரை செலவழிக்க கூடாது தாயி, இந்த தாத்தா உடலையும் பாட புத்தகமா படிக்கனும்னு புரிஞ்சதே போதும் தாயி எனக்கு’ என்று கூறி பேத்தி சுபத்ராவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார் ராமசாமி.
000

வீ.வைகை சுரேஷ்,
மேக மலையில் பிறந்து தேனி மாவட்ட மண்ணில் வைகை நதி பாயும் வயலும் வயல் சார்ந்த நிலமான மருத நிலம் நிறைந்த வைகை ஆற்றின் கரையில் உள்ள பள்ளபட்டி எனும் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வீ.வைகை சுரேஷ்
தற்போது கோவையில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்து வரும் சுரேஷ் ஆனந்த விகடன், குமுதம், நடுகல், இந்து தமிழ் திசை என கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவை துணுக்குகள் என எழுதி வருகிறார்.

