— மணி மீனாட்சிசுந்தரம்.
இணையத்தில் ‘ சரவணன் ‘ எனக் கேட்டால் அதன் தேடுபொறி, தன் நினைவகத்தில் உள்ள அத்தனை சரவணன்களையும் நம்முன் கொண்டுவந்து காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவிடம் கேட்டால்,’ எனக்கு சரவணன்கள் பலரைத் தெரியும். நீங்கள் கேட்பது யாரை? இவரையா? இவரையா? என்று எதிர் கேள்வி கேட்கிறது.
ஆனால், இப்படிப் பொதுவான ஒரு பெயரை மனித மனத்தில் உச்சரித்தால் அது தனக்கு மிக நெருக்கமான ஒருவரை மட்டுமே உடனடியாக இனங்கண்டுகொள்கிறது.
பலர் அதன் நினைவில் இருந்தாலும் ஒருவரின் நினைவே முந்தி எழுகிறது.
இது மனித மனத்தின் பொதுவான குணமென்றாலும் எல்லா மனங்களும் ஒரு சரவணனையா காட்டும், இல்லையே? ‘சரவணன்’ என்றதும் ஒவ்வொரு மனித மனமும் தனக்கு விருப்பமான சரவணனையே முன்னிறுத்தும். மனித மனம் எப்போதும் தன்னைக் குறித்தே மேலெழும் பண்புகொண்டது என்பதே அதற்கான காரணமாகும். இதை எழுதும்போது கவிஞர் வே.கிருஷ்ணவேணி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
/கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிக்குச் சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை. /(1)
தன்னைக் குறித்தே பதற்றங்கொள்ளும் மனித மனத்தின் இயல்பை கூறுகிறது கவிதை. கிராமங்களில் அடுத்தவரின் மரண வீடுகளில் மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாடும் பெண்கள் அதில் தனது சோகங்கண்டே அழுவர். மழை வேண்டி ஊர்ச்சோறெடுத்து முச்சந்தியில் வைத்து அழும் போதும் சுய சோகங்களே கண்ணீரில் கரையும்.
கேட்கும் பெயர்களில் தனக்கு விருப்பமானவரைத் தேடும் மனம், அதுபோலவே பார்க்கும் எதிலும் தன்னையும் பொருத்திப் பார்த்து அக்காட்சியில் நெருக்கமோ, விலக்கமோ, இணக்கமோ கொள்ளத்தான் முனைகிறது. ‘தன்னையும்’ என்பது நினைவுகளும் எண்ணங்களும் இணைந்து ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ‘ தன்னைத்தான்’ குறிக்கிறது.
ஒரு பொதுவான திரைப்படப் பாடல் தனக்கு மட்டுமே நெருக்கமாய் இருப்பதை ஒருவர் உணருவதும் , நாசி உணரும் ஏதாவது ஒரு உணவின் மணம், ஏதாவது ஒரு சூழலை மட்டும் ஒருவருக்குத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவதும், பெண்களின் முன் கழுத்தில் அசையும் இரட்டை மல்லிகைச் சரங்கள் ( ஒன்று உயர்ந்தும் ஒன்று தாழ்ந்தும்) ஒருவருக்குத் திருவிழாக்காட்சியை மனக்கண்ணில் நிறுத்துவதும், இன்னொருவருக்கு மறைந்துபோன தம் மகளின் நினைவே அதில் இருப்பதுவும்…என இப்படியான காட்சிகளும் அதனோடு பிணைக்கப்பட்ட நினைவுகளுமாக, காட்சியோடு தொடர்புடைய பல நினைவுகள் எல்லோருக்கும் உண்டு.
மனிதன் மனத்தால் ஆனவன். மனம் தானெனும் பண்பில் திளைப்பது ; பார்க்கும் இடங்களில் எல்லாம் தன்னுடைய நினைவுகளையும், விருப்பங்களையும், அதனால் விளைந்த எண்ணங்களையும் மீட்டிப் பார்ப்பது. இப்பண்பு எல்லொருக்குமுள்ள பொதுவானதொரு இயல்பேயாகும்.
ஆனால், எல்லா மனங்களுக்குமான இப்பண்பையே கலை மனமும் கொண்டிருக்குமா? கலை மனம் பொது மனத்திலிருந்து வேறுபட்ட ஒன்றல்லவா? ஒரு கவிஞனின் மனமும் கண்ணில் காணும் எது குறித்தும் இப்படித் தன்னை முன்வைத்தே சிந்திக்குமா? என்றால் பொதுவானதே என்பதே பதிலாகும்.
ஆனால், பொது மனத்தின் இவ்வாறான விளைவுகள் தனிப்பட்ட அனுபவங்களாகவே தங்கிப் போய்விடும். ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் விழும் கல்லைப் போல.
ஆனால் கவிமனம் தன்னைக் குறித்துச் சிந்திக்கும் எதுவும் படைப்பில் நிலை கொள்ளும்போது, இந்நிலைக்கு மாறான ஒன்றாக மாறிப் போகிறது. எல்லோரையும் போல கவிஞனுக்கு காட்சிகளோடு தொடர்புடைய விருப்பங்கள், நினைவுகள் உண்டு. ஆனால், அவை அவனது கவிதைகளில் வேறு மாதிரியான இரசவாதத்தையே செய்கின்றன. அதனாலேயே கவிதை சிறந்ததாகிறது.
கவிதையில் வெளிப்படும் கவிஞனின் காட்சி அனுபவம், வாசகனைக் கவிஞனுடைய அனுபவத்தை நோக்கிச் செல்லாமல் தன்னுடைய அனுபவங்களை நோக்கிச் செல்லவும், ஒரு புதிய தளத்தில் கால் வைக்கவும் உதவுகிறது. இதனால் வாசகன் கவிதையை மிக நெருக்கமாக உணர்ந்து ஒரு பரவச நிலைக்கு ஆட்படுகிறான். பொது மனநிலைக்கு மாறுபட்டு ஒரு கவிமனம் அல்லது ஒரு கவிதை செய்யும் இரசவாதம் இதுவெனக் கூறலாம். ஒரு பெரிய குளப்பரப்பில் வீசி எறியப்படும் கல் போல. எண்ணற்ற அலைகளுக்கு அங்கு வாய்ப்பிருக்கிறதே?!
‘ எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் ‘ (2) எனக் கவிஞர் தேவதச்சன் பட்டியலிடு கையில், கவிதையைப் படிக்கும் ஒவ்வொரு வாசக மனமும் படபடவென ஒவ்வொரு பட்டியலை மனசுக்குள் உருவாக்கிக் கொள்கிறது. வாசக மனதில் உருவாகும் பௌர்ணமிகள் தேவதச்சனுடையவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கவிதையைப் படிக்கும் வாசக மனங்களில் உருவாகும் எண்ணற்ற பௌர்ணமிகளுக்கு தேவதச்சன் எறிந்த கல்தானே காரணம்!
/ ஒவ்வொரு முறையும்
திருவண்ணா
மலையிலிருந்து திரும்பிய போதும்
மழை பெய்தது
இன்றும்
திருவண்ணா
மலையிலிருந்து திரும்புகிற போது
மழை பெய்துகொண்டிருக்கிறது.
இனி ஒவ்வொரு முறையும்
மலையிலிருந்து திரும்பும் போதும்
திருவண்ணா மழை பொழியும் / (3)
கவிஞர் ஸ்ரீநேசனின் தனிப்பட்ட அனுபவமான கவிதை வரிகள், வாசகனின் மனதில் உருவாக்கும் ‘ஊர்களும் நிகழ்வுகளும்’ கண்டிப்பாக ஸ்ரீநேசனுடன் தொடர்பற்றவை எனக் கூறமுடியாதல்லவா?
கவிஞனின் ஒரு காட்சியை முன்வைத்து வாசகனை உள்ளிழுக்கும் பண்பு கொண்டவை நவீன கவிதைகள்.
இப்படியாகப் பொதுவான காட்சிகளை முன்வைக்கும் பாவனையில் கவிதைக்குள்ள சிறப்பு, கவிஞனுக்குள்ள நுட்பம் வெளிப்படும் நவீன கவிதைகளில், அன்றாடச் செயல்களில் முக்கியத்துவம் அற்றதென நாம் நினைக்கும் அல்லது அசட்டையாகப் புறந்தள்ளும் ஒரு காட்சியும் அது குறித்த அனுபவங்களாக விரியும் இரு கவிதைகளையும் பற்றியே இங்குப் பேச விழைகிறேன்.
முன் சொன்னதுபோல் அல்லாமல் காட்சியை முன்வைத்து ஒரு மனக்காட்சி இங்கே உருவாக்கப்படுகிறது. காட்சி குறித்த வாசகனின் பழகிய நினைவுகள், எண்ணங்களை மறுத்து, முன்னால் வைக்கப்பட்ட ஒரு உருக்காட்சியைத் தொடர்ந்து கவிஞன் உணர்ந்து சொல்லும் மனக்காட்சியும் இணைந்து, வாசகனின் உணர்வு நிலையை வெறொரு நிலைக்கு எடுத்துச் செல்கின்றன இக்கவிதைகள். ஒரே காட்சி. ஆனால்,வேறுபட்ட நினைவுகளும் எண்ணங்களும் பிணைந்து வெளிப்படும் அழகை இவற்றில் காணலாம்.
கவிதை : 1
——————–
உடைந்த போது – கவிஞர் கல்யாண்ஜி
இடுக்கியால்
இரண்டு பனிக்கட்டிகளை
எடுத்துக் குவளையில் இட்டேன்
தனித்து அருந்துகையில் உண்டாகிற
தத்தளிப்பின் பொன்னிறத்துக்குள்
அமிழத் துவங்கின அவை.
உருகி, வடிவக் கூர்மையிழந்து
மறைந்து கொண்டிருந்தன.
அமிழாமலும் மிதக்காமலும்.
காப்பாற்ற முடியாதபடி
காணாமல் போன அவை
உண்டாக்கிய குற்ற உணர்வின்
புகையிருப்பில் நிரம்பிக்கொண்டிருந்தது
நுரையீரல் காற்றறைகள்
பனிக்கட்டிகள் இடம்பெயர்ந்து உயர்கிற
திரவ மினுமினுப்பின் மீது
கடைசிச் சோடாக் கொப்புளம்
உடைந்தபோது தோன்றியது
இன்று ஒரு மிடறுகூட
இதிலிருந்து எடுத்துக்கொள்ள
இயலாதென்று.(4)
கவிதை -2
——————-
உடைந்த இரு ஐஸ் துண்டுகள் –
கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
———————————————-
உடைந்த
இரு ஐஸ் துண்டுகள்
மெல்லத் திரும்பிவிட்டன
தம் பூர்வீக வெளிகளுக்கு
அறியக்கூடும்
இந்த ஆகாயமோ
இந்தக் காற்றோ
இந்தக் கடலோ
உடைந்த இரு ஐஸ் துண்டுகளின்
ஏகாந்தமான தொடுதல்களை
நாமிருந்தோம்
அவல சாட்சிகளாய்
ஒரு ஐஸ்கட்டியின்
நுண்ணிய முறிவுகளுக்கு
ஒரு கோப்பையில்
அருகருகே மிதக்க வேண்டியிருக்கும்
அதன் நிர்பந்தங்களுக்கு
பாதி மூழ்கி பாதி எழும்
மீள முடியா அதன் விதிகளுக்கு
எப்படி நெருங்கி வந்தாலும்
ஒட்ட இயலாத அதன் உடல்களுக்கு
நம் சில்லிட்ட கைகளோடு.(5)
பனிக்கட்டித் துண்டுகள் நம் வாழ்வில் உண்டு. அவற்றின் குளுமை நமக்கு முக்கியம். ஆனால், அவை குறித்த நினைவுகள் நமக்கு முக்கியமில்லை. நாம் அருந்தும் நீர்மத்தில் மிதக்கும் அவற்றைத் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். அவை குறித்து வேறொன்றும் நாம் நினைத்ததில்லை. அவை நீர்மத்தில் கரைந்து அடங்குவதை நாம் காணாமலில்லை. அவற்றை உயிருள்ளவையாகவோ, நம் மனதுக்கு ஒப்புமையாகவோ நாம் ஒரு போதும் ஒத்து உணர்ந்ததில்லை. கவிஞனுக்கோ இதெல்லாம் தேவையாக இருக்கிறது.
கவிஞன் பொது மனநிலையில் இருந்து விலகி உணரும் தருணம் இது.
முதல் கவிதையில் ஐஸ் துண்டு உயிராகவும், இரண்டாவதில் ஐஸ் துண்டாகவும் மனமாகவும் இருக்கிறது. ஐஸ்கட்டி நீர்மத்தில் கரைவதைக் கண்ணுக்கு முன் நிகழும் மரணமாக எண்ணிப் பதட்டமடைகிறது முதல் கவிதை.அது உயிரிரக்கம் என்ற ஆதாரப் பண்பை ஐஸ்கட்டிகளோடு இணைத்துப் பார்க்கிறது.
இரண்டாவது கவிதை மிதக்கும் ஐஸ் துண்டுகளின் இயல்பைச் சொல்வதாகப் போக்குக் காட்டி, அருகிலிருந்தும் இணைய முடியாத விசித்திரமான உறவை உணர்த்த முற்படுகிறது. அருகிலிருந்தும் பிரிவின் மீள முடியாத விதிகளுக்கு ஆட்பட்டுவிட்ட மனங்களைப் பேசுகிறது. இயல்பான ஒரு காட்சியைக் காட்டி நவீன வாழ்வில், உறவுகளின் தர்மசங்கடத்தை சுட்டிக் காட்டுகிறது.
இரு கவிதைகளும் ஒரு சாதாரண செயலை, வாசகனைக் கையமர்த்தி கவனிக்க வைக்கின்றன. வாசகனின் கையில் ஒரு உருப்பெருக்கியை அளித்துவிடும் செயலல்ல அது. அவனது புறப்பார்வையை உள்முகமாகத் திரும்பிவிடும் நுட்பமான தந்திரம் அது.
மணி மீனாட்சிசுந்தரம்.
துணை நின்றவை :
———————————
1. கட்டுரையின் தலைப்பு – பாரதியின் கவிதை வரி.
2. 75 முத்திரைக் கவிதைகள், விகடன் பிரசுரம், சென்னை – 02
3.எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள்’ – தேவதச்சன் கவிதைகள்,தேசாந்திரி பதிப்பகம்,
சென்னை – 600093
4. கல்யாண்ஜி கவிதைகள், வ.உ.சி நூலகம், சென்னை.
5. இடமும் இருப்பும் – மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை -20.
00


