-கலைவாணி இராஜேந்திரன்
கனவுகள்; சுவாரஸ்யமானவை. சூழ்ச்சிகள் நிறைந்தவை. கவர்ச்சியானவை ரொம்பவும் கொடுமையானவையும்தான். கனவுகளுக்கும் வடிதட்டு ஒன்று இருந்தால் காபித்தூளை காபி நீரில் இருந்து பிரிப்பது போல கனவுகளையும் நமக்கேற்றபடி பிரித்து எடுத்து கண்டு கொள்ளலாம்.
இந்தக் கனவுகள்; நிம்மதியாக கண்களை மூடி தூங்கிய பின்னர் மட்டும்தான் வருகின்றதா? இல்லையே. தூங்கவிடாத கனவுகளும் உண்டே. கண்களையும் மூட விடாத கனவுளும் உண்டே. தினம் தினம் என் உறக்கத்தை கெடுக்கும் கனவு ஒன்று இருப்பதைப் போல.
கனவா? இல்லையில்லை அது கனவில்லை. நிஜமா? அப்படியும் சொல்வதற்கில்லை. நினைவுகளா? அப்படி சொல்லலாமா என எனக்கு தெரியவில்லை. கனவிற்கும் நிஜத்திற்கும் நினைவிற்கும் இடைபட்ட ஒன்று. இம்மூன்றும் இணைந்த அம்சம். ஆம் அம்சம். அம்சவர்த்தினி. அவள் பெயர் அம்சவர்த்தினி. அதுதான் அவள் பெயர். அம்சவர்த்தினி.
இதுவரையில் எந்த இன்பத்தையும் கண்டிறாத என் கண்களுக்கு உணர்ந்திடாத என் உணர்வுகளுக்கு எப்போதோ யாரோ செய்த புண்ணியத்தின் பலனாக வாய்க்கக் கிடைத்தவள்தான் அம்சவர்த்தினி. கர்ப்பம் தரித்து காத்திருந்து சுமந்து என்னில் இருந்து வராமல் எனக்காக வந்தவள் இவள். அம்சவர்த்தினி என் மகள். நான் சுமக்காத மகள். எனக்கு சுமை கொடுக்காத மகள். என்னைச் சுமக்கும் மகள்.
அர்த்தமற்ற என் உலகில் புது அர்த்தம் கொடுக்க வந்தவள் அவள். அவளுள் என் உதிரம் கொஞ்சமும் இல்லை. ஆனால் என் உதிரத்தில் அவள் வியாபித்திருக்கின்றாள். என் இதயத்தில் அவள்தான் துடிப்பாக இருக்கின்றாள். என் வயிற்றில் அவள்தான் பசியாக இருக்கின்றாள். என் உதடுகளில் அவள்தான் சிரிப்பாக இருக்கின்றாள். என் கைவிரல்களில் அவள்தான் ஸ்பரிசமாக இருக்கின்றாள். என் கால்களில் அவள்தான் பயணமாக இருக்கின்றாள். கண்ணீரை மட்டுமே கொட்டிய என் கண்களுக்கு அவள்தான் கருணையாக வடிகின்றாள். என் காதுகள் அவள் குரலே சங்கீதமாக என்னை காற்றில் மிதக்க வைக்கிறது.
அவள் மாயாஜாலம் தெரிந்தவள். அந்த மாயங்களில் என்னை மயக்கி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறாள். அதுவெல்லாம் நான் பார்க்காத தேசம். ஒருபோதும் நான் முகராத வாசம்.
அம்மா இறந்துவிட்டாள். எனக்காக இருந்த ஒரே உயிர் இவ்வுலகில் அவள்தான். அம்மாவைத் தவிர எனக்கு யாரையும் தெரியாது. என்னைக் கூட எனக்கு அவ்வளவாக தெரியாது. அம்மாவிற்குதான் என்னை அவ்வளவும் தெரியும். அம்மாவே என்னை விட்டு போவார் என யாருக்கு தெரியும்.
யார்யாரோ வந்தார்கள். ஏதேதோ சொன்னார்கள். என்னென்னமோ செய்தார்கள். இந்தச் சின்ன வீட்டில் அம்மாவின் புகைப்படத்திலிருந்து உதிர்ந்து விழுந்த பூக்களின் துளிகளில் தலை வைத்து படுத்திருக்கின்றேன். அது அப்படியே அம்மாவின் மடி போலவே இருக்கின்றது. அம்மா பூக்களைத் தூவி எனக்கு அவளின் தாய்மடியை மீண்டும் கொடுத்திருக்கிறாள்.
சுவரில் ஏதோ சத்தம். ஆம். அது அப்பா அம்மாவின் பழைய புகைப்படம். என்னிடம் இருக்கும் அப்பாவின் ஒரே புகைப்படம். நான் பிறந்த சில ஆண்டுகளிலேயே என்னைவிட்டு போன அப்பாவின் சிரித்த முகம். அம்மா சொல்லுவார் அப்பாவின் சிரிப்பு அவ்வளவு அழகாகவும் அவருக்கு எடுப்பாகவும் இருக்குமாம். என் நினைவு தெரிந்த நாள் முதல் அப்பாவின் புகைப்படத்தில் அந்த மாறாத புன்னகையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உண்மையில் அந்தப் புன்னகை அப்பாவிற்கு அழகாகவும் அவர் முகத்திற்கு எடுப்பாகவும் இருக்கின்றது. இப்போது கேட்ட சத்தம் கூட அப்பாவின் சிரிப்பாகத்தான் இருக்க வேண்டும். அம்மாவின் மடியில் நான் படுக்கும் ஒவ்வொரு முறையும் அப்பா இப்படித்தான் குறும்பாகவும் சிரிப்பார்.
ஏனோ எனக்கு அழ வேண்டும் என தோன்றுகிறது. அதுசரி இப்போது அழுதால் யார் வந்து கண் துடைப்பார். அழுது வடிக்கவும் வாய்ப்பு கிடைக்காத நாந்தான் எவ்வளவு துர்பாக்கியசாலி. என்னை நினைத்து என்னால் கூட அழ முடியாத பெண் நான். பெண்?!. பெண்ணா? நான் பெண்ணா? நானும் ஒரு பெண்ணா? நான் ஏன் பெண்ணாக பிறந்தேன்? தெரியவில்லை எதுவுமே எனக்கு தெரியவில்லை.
அம்மாதான் எப்பவும் சொல்லுவார். அப்பாவிற்கு பெண் குழந்தை என்றாள் விருப்பம் என்று. அதற்கு ஏற்றார் போல நானும் பிறந்திருக்கேன் பெண் குழந்தையாக. வேண்டிய வரம் கிடைத்தவர் என்ன செய்தார்? என்னை அம்மாவிடம் கொடுத்துவிட்டு செத்துப்போனார். ஏன் செத்துப்போனார். பின் ஏன் வரத்தைக் கேட்டார்.
அன்று மாலை, ஜன்னல் வழியாக வீசிய தென்றல் காற்று என் முகத்தை வருடியது. என் கையில் அப்பாவும் அம்மாவும் சிரித்துக்கொண்டிருந்த ஒரு பழைய புகைப்படம். அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்சவர்த்தினி. என் மகள். எங்கிருந்தோ ஓடி வந்து என் மடிமீது ஏறி அமர்ந்து கொண்டாள்
மடியில் அமரந்தவள்; அவளது தாத்தா பாட்டியின் புகைப்படத்தைப் பார்த்து கைத்தட்டி சிரிக்கலானால். படத்திருப்பவர்கள் ஏதோ விளையாட்டு காட்டுகிறார்கள் போல. நானும் அந்த விளையாட்டி கலந்து கொள்ள நினைத்தேன். கைகளைத் தட்டினேன்.
அந்த உலகத்தில் நான் தனியாக இல்லை. ஆமாம், இங்கு யாருமே தனியாக இல்லைதானே. அதெப்படி தனியாக இருக்க முடியும். இந்த உலகில் யார்தான் தனியாக இருக்கின்றார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா. இதோ என் அப்பாவும் அம்மாவும் கைத்தட்டி விளையாட என் மகளும் விளையாடுகிறாள் நானும் விளையாடுகிறேனே. அப்பறம் எப்படி தனியாக இருக்க முடியும்.
இதோ என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, குறும்புச் சிரிப்புடன் அமர்ந்திருன்றாள் அம்சவர்த்தினி.
“அம்மா…” இந்த வீட்டில் என் குரலைத் தவிர இன்னொரு குரலில் அம்மா என்று அழைப்பதைக் கேட்கிறேன். இந்த வார்த்தைதான் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. ஒரு முறை கேட்டதும் என் மனதில் ஏதேதோ தோன்றுகிறது. மனதை இலேசாக்கும் வார்த்தையாய் இது இருக்கின்றது. வெறும் மூன்றெழுத்து வார்த்தைக்குள் இவ்வளவு விசயங்களா? ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது.
அம்மாவை நான் அழைக்கும் போதெல்லாம் அம்மாவும் இப்படித்தான் உணர்ந்திருப்பாரா? அதனால்தான் சில சமயங்களில் அம்மா என்னைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாரோ. அது ஆனந்த கண்ணீரா? இதோ எனக்கும் கண்கள் கலங்குகின்றன. நானும் அழுகிறேனா. இதெல்லாம் வலிக்காமலேயே எந்த வேதனையையும் உணராமலேயே எனக்கு அழுகை வருகின்றதே?. நான் ஏன் அழுகின்றேன். அப்படியெனின் எனக்கும்தான் ஆனந்த கண்ணீர் வருகிறதா.?
அம்மா என்று அம்சவர்த்தினி அழைத்ததும் என்னையறியாமல் நானுமே ஆனந்த கண்ணீர் வடிக்கின்றேனா. இந்த ஓர் அழைப்பில் என் வாழ்நாள் முழுவதுற்குமான பாசம் இருப்பதாய்த் தோன்றுகிறது. அதனால்தான் ஆன்ந்த கண்ணீரோ. அம்மாவும் அதனால்தான் ஆனந்த கண்ணீர் சிந்தினாரோ.
அப்பா இல்லாத பொழுதில் அம்மா எவ்வளவோ இன்னல்களுக்கு பேச்சுக்கும் ஆளானார். நான் வளர வளர அதையெல்லாம் புரிந்து கொண்டேன். ஆனால் அம்மா ஒரு போதும் அது எதையும் ஒரு குறையாக சொன்னதில்லை. அம்மா அப்படித்தான். அப்படித்தான் என்னையும் வளர்த்தார். நானும் அப்படித்தான் அம்சவர்த்தினியை வளர்க்க வேண்டும்.
ஒருநாள் கனவில் தோன்றிய பெயர்தான் அம்சவர்த்தினி. அதைத்தான் அவளுக்கு வைத்திருக்கிறேன்.
அம்மா இறந்து அவருக்கு காரியங்கள் செய்து முடித்த அசதியில் வீட்டின் வரவேற்பறையிலேயே படுத்துவிட்டேன். அழுதபடியே தூங்கிவிட்டேன் போல. கலங்கலாக தோன்றிய காட்சிகள் மெல்ல மெல்ல தெளிவாகத் தெரியத் தொடங்கின.
அம்மாதான் நின்றிருந்தார் எதிரில். வெண்ணிற பட்டுப் புடவையொன்றை கட்டியிருந்தார். தலை நிறைய மல்லிகைப்பூவை வைத்திருந்தார். முகம் முழுக்க பளபளப்பாக மின்னியது. அம்மாவின் தெய்வீக புன்னகை அப்படியே இருந்தது. கருணை கண்கள் என்னைப் பார்க்கின்றன. அம்மா கையை நீட்டி என்னை அழைக்கின்றார். நான் அம்மாவை நோக்கி செல்லுகின்றேன்.
அம்மா என்னை கட்டியணைக்கின்றார். அம்மாவின் ஒளி அம்மாவில் இருந்து மெல்ல மெல்ல பெரிதாகி என்னையும் சூழந்து கொண்டது. அம்மாவின் கையில் ஏதோ ஒரு கூடை இருப்பதை இப்போதுதான் கவனித்தேன். தங்க நிற கூடை அது.
அம்மா அதனை என்னிடம் கொடுக்கின்றார். நானும் எனது கையில் அதனை வாங்குகின்றேன். அதுனுள் ஏதோ அசைகின்றது. கூடை கணமாகிறது. கூடை முகப்பை திறக்க முயல்கிறேன். அம்மா என் கையைப் பிடித்து கொண்டார். நான் அம்மாவைப் பார்க்கிறேன். அம்மா அவரது கருணை கண்களில் என்னைப் பார்க்கின்றார்.
“அம்சவர்த்தினி…. உன் அம்சவர்த்தினி…” என்று அம்மா சொல்லும்போது அவரது புருவம் அழகாய் வளைந்து அசைந்தது. நான் கூடையைத் திறக்கிறேன். உள்ளே நீ இருக்கிறாய் அம்சவர்த்தினி. குட்டி குழந்தையாக நீ இருக்கிறாய். என்னால் இதனை நம்ப முடியவில்லை. நான் நிமிர்ந்து அம்மாவைப் பார்க்கின்றேன். அம்மா அவரது இரு கைகளையும் என் தலை மீது வைத்து என்னை ஆசீர்வதிக்கின்றார். அம்மாவின் கைகள் என் தலையில் பட்டதும் என் உடல் சிலிர்த்தது. தலையில் தோன்றிய மெல்லிய சூடு என் உடல் முழுக்க பரவியது. இரம்மியமான அந்த உணர்வை அதற்கு முன்னும் சரி அதற்கு பின்னும் சரி நான் உணர்ந்தது இல்லை.
சட்டென ஏதோ ஒன்று என்னைத் தூக்கியெறிந்தது போன்ற உணர்வு. கண்விழித்து பார்க்கிறேன். இதே வீடு. நான் படுத்திருந்த அதே இடம். அம்மாவும் இல்லை. அம்மாவைச் சுற்றியிருந்த ஒளியும் இல்லை. ஆனால் மனம் லேசாக இருக்கிறது.
“அம்மா…” என்ற குரல் கேட்கிறது. ஏதோ ஒரு குழந்தையின் அழுகையும் கேட்கிறது. அதோ அங்கு.! அம்மாவின் புகைப்படத்தின் அருகில் கூடை இருக்கிறது. அதிலிருந்துதான் சத்தம் கேட்கிறது.
அம்சவர்ர்த்தினி சொன்னால் நம்பு; நீ அதில்தான் இருந்தாய். அந்தக் கூடையில் இருந்து நான் உன்னை வாரி அணைத்தபடி எழுந்து நின்றேன். உன் முகத்தில் என்னை அம்மாவின் முகத்தில் நான் பார்த்த கருணை மிகுந்த கண்கள் இருக்கின்றன. உன் முகத்தில் என் அப்பாவின் எடுப்பான புன்னகை இருக்கிறது.
நான் அப்படியே உன்னை கட்டியணைத்தேன். என் ஆனந்த கண்ணீர் உன் முதுகை நனைக்கிறது. நீ மீண்டும் “அம்மா…” என்று என்னை அழைக்கின்றாய். நானும் உன்னை; “என் மகளே… அம்சவர்த்தினி…” என அழைக்கின்றேன். அங்கு பார் உன் தாத்தாவும் பாட்டியும் உனக்கு விளையாட்டு காட்டுகிறார்கள். வாயேன் அவர்களிடம் சென்று விளையாடிவிட்டு வருவோம்.
000

கலைவாணி இராஜேந்திரன் (மலேசியா)

