ப்ரீ வேர்ல்ட்
ஒரு காலத்தில் பள்ளித் தோழர்களுடன் “கல்லா, மண்ணா” விளையாடியது நினைவுக்கு வந்தது. கண்ணாமூச்சி, திருடன்-போலீஸ், கிட்டிப்புல், கோலி என நினைவலைகள் விரிந்தன மணிகண்டனுக்கு.
வெளியிலிருந்து வீட்டுக்குள் ஓடிவந்த மூன்றாவது படிக்கும் மகன், பையிலிருந்த கைபேசியை எடுத்துக்கொண்டு ஜன்னோலோரம் அமர்ந்து வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான்.
“எப்பவும் இதுதானா…. வேற விளையாட்டே இல்லையா….?” வழக்கம்போல் கத்தினான் மணிகண்டன்,
“வெளியே போகக்கூடாதுன்னு சொல்ற… போனாலும் என்ன இருக்கு விளையாடறதுக்கு…?” மகனும் அதே வேகத்தோடு கேட்டான்.
“இதுல ஃப்ரீ கேம்ஸே நிறையா இருக்கு. நீ யூஸ் பண்ணலேன்னா நான் பண்றேன்… உனக்கென்ன…” கைபேசியில் படபடத்துக்கொண்டிருந்த விரல்களை எடுக்காமல் சொன்னான்.
காசு கொடுத்து விளையாடும் காலம் இது. இலவசத்தை பயன்படுத்திக் கொள்வதாக மகன் நியாயம் பேசுகிறான்.
பதிலுக்கு என்ன சொல்வது? மணிகண்டனுக்கு தெரியவில்லை.
அவனும்தான் இலவசங்களை எப்படியெல்லாமோ பயன்படுத்திக் கொள்கிறான். மகனுக்கு தெரியுமா, என்ன?
சகுனம்
பையில் பர்ஸை வைத்திருக்கிறோமோ என்று சரிபார்த்துக்கொண்டு வெங்கடாசலம் வெளியே கிளம்பினார்.
வாசலுக்கு வந்து பார்த்தார். ஒரு பூனை குறுக்கே சென்றது. லேசாக முகத்தைச் சுளித்தவாறு உள்ளே வந்தார். மனைவியிடம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தார். தொண்டையை சரிசெய்து கொண்டார். மீண்டும் வெளியே வந்தார். யார் எதிரே வந்தார்கள் என்று தெரியவில்லை. வந்த வேத்தில் உள்ளே திரும்பினார்.
சாமி படத்துக்கு முன்னாலிருந்த தட்டிலிருந்து திருநீறு எடுத்து பூசிக் கொண்டு, நேரத்தைப் பார்த்துக் கொண்டே மூன்றாவது முறையாக வாசலுக்கு விரைந்தார்.
அடக்கிப் பார்த்தார். முடியவில்லை. பொத்துக்கொண்டு வந்தது பெருந்தும்மல். பக்கத்து வீட்டிலிருந்து குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்ற பெண், இவரை பார்வையால் எரித்துவிட்டுப் போனார்.
“சகுனம் பார்த்தது போதும். கிளம்புங்க… நேரத்துக்கு போனாதானே வேலை நடக்கும்…” உள்ளேயிருந்து மனைவியின் குரல்.
இன்னொரு தும்மல் வருவது போலிருந்தது. லேசான உதறலுடன் தெருவில் இறங்கி நடையைக் கட்டினார்.
போன காரியம் நல்லபடியாகவே நடந்தது. காலையில் நடந்ததை நினைத்து உள்ளூர சிரித்தவாறே வீடு திரும்பினார்.
நுழையும் போதே மனையிடமிருந்து பெருந்தும்மல்.
“எனக்கும் சேர்த்து சுக்குகாபி போடு…” என்று சொல்லிக் கொண்டே கால் கழுவப் போனார்.
ஆய்வு
பிற்பகலில் ஆய்வு மாணவியை வரச்சொல்லியிருந்தார் பேராசிரியர்.
எல்லோரும் போய்விடுவார்கள். நிதானமாக, பார்த்துப் பார்த்துப் பேசலாம். முடிந்தால் அதற்கு மேலும் முயற்சி செய்யலாம். பேராசிரியருக்கு நினைத்தாலே இனித்தது. அந்த ஆய்வு மாணவி மீது நெடுங்காலமாக அவருக்கு ஒன்றல்ல, இரண்டு கண்ணும்.
மாணவி வந்தாள். இவருக்குள் இனம்புரியாத அதிர்வுகள். நேருக்குநேர் பார்த்து இவரால் பேச முடியவில்லை. மாணவி கொடுத்த ஆய்வுத் தாள்களைப் புரட்டியவாறே, சில கேள்விகளை எழுப்பினார். அவரும் உரிய பதில்களை அளித்தார்.
மெல்ல நிமிர்ந்து மாணவியைப் பார்த்தார்.
லேசாகப் புன்னகைத்தவாறே “சொல்லுங்க, சார்?” என்றாள் மாணவி.
“எப்படிச் சொல்றதுன்னு தெரியல…. நீ வந்துட்டு போனீன்னா எனக்கு வேற வேலையே செய்ய முடியல….” பேராசிரியர் வார்த்தைகளை இழுத்து, இழுத்துப் பேசினார்.
“எனது ஆய்வுப் பரப்பை விரிவு படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கிடாதீங்க, சார்” – அழுத்தமான குரலில் சொன்னாள்.
அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. மிரட்சியுடன் தலைகுனிந்தார் பேராசிரியர்.
மாணவி தொடர்ந்தாள்: “இதனால் ஆய்வை முடிக்கவிடாமல் இழுத்தடித்து, அலைக்கழிக்க நினைச்சீங்கன்னா… நம்ம ஆய்வில் வரும் – பழந்தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமான – உறைகிணற்றை நேரில் சென்று பார்க்க இருவரும் போக வேண்டியதிருக்கும்…”
சொல்லிவிட்டு, நிதானமாக வெளியேறினாள்.
இயக்கம் நின்று போனது போல அசைவற்றிருந்த பேராசிரியர், சில நிமிடங்களுக்குப் பிறகு நினைவு திரும்பினார். சுய ஆய்வில் இறங்கினார்.
கவிதைகள்
1
நல்ல வேளை
அந்த பறவையின்
எச்சம்
வீடு திரும்பும்போது
தோளில் விழுந்ததால்
ஆறுதல் கொண்டான்
எல்லாவற்றையும்
துடைத்துவிடும்
வீடு
அப்படியாக ஒன்று
இருப்பவர்களுக்கு.
2
கணக்கு வாத்தியார்
பிரம்பால் அடித்தது
இன்றும்
நினைவிலிருக்கிறது
ஒவ்வொரு அடியும்
உரம்
இப்போது புரிகிறது
வாத்தியாரை ஏமாற்றி
வாங்காமல் விட்ட
அடிகளுக்காக
ஏங்குகிறான்.
3
மீண்டும் மீண்டும்
முறியும் காதல்
அதாவது
பிரேக் அப் காதல்
சூழ்ந்த
இன்றைய வாழ்க்கையில்
காதலிக்காமலும்
காதலிக்கப்படாமலும்
தற்காத்துக்கொள்ளும்
வழி தெரியாமல்
கிறுகிறுத்து கிடக்கிறது
ஜென்ஸி தலைமுறை.
காதலிக்க வழிகாட்டும்
கைபேசி ஏ.ஐ. செயலிகள்
கட்டி அணைத்து
ஆறுதல் சொல்லுமா?
அதற்கு உணர்வில்லை
ஊட்டப்பட்ட உணர்வில்
உங்களோடு பேசுகிறது
Guys, Get back.
4
வயிற்றுப் பொருமலா…
கவலையே வேண்டாம்
சமூக ஊடகத்தில் ஒருவர்
கஷாய செய்முறை சொல்கிறார்
இவனும் சீரியஸாக
பார்த்துக்கொண்டிருக்கிறான்
உண்மையில்
இவன் பொருமல் வேறு
பக்கத்து வீட்டுக்காரன்
கார் வாங்கிய பிறகு வந்தது
இதற்கும்
சமூக ஊடகத்தில்
ஏதாவது இருக்கும்
சரியாகத் தேட வேண்டும்.
5
சாதாரண
சண்டைக் காட்சிகளுக்கே
முகத்தை மூடிக்கொண்டு
விரலிடுக்கின் வழியாக
படம் பார்த்தது ஒரு காலம்
இப்போது காட்சிகளில்
வன்முறை கொப்பளித்தாலும்
பாப்கார்னை கொறித்தபடி
ஷிட் என்கிறார்கள்
கொடூரம் போதவில்லையாம்
வேறு கிரகத்தில்
வாடகைக்கு
வீடு கிடைக்குமா என்று
தேடத் தூண்டுகிறார்கள்
இங்கே
போட்டது போட்டபடி
ஏற்கெனவே சிலர்
கிளம்பிவிட்டார்கள்.
6
உனக்கும் எனக்கும்
ஆயிரம் இருக்கலாம்
அதற்காக…
மனைவியிடம்
குமுறிக்கொண்டிருந்தார் அவர்
அம்மா வாங்கிய
கடனைக் கழித்துவிட்டால்
நீங்கள்
ஏழாயிரம் தர வேண்டும்
பின்னிருந்து ஒலித்தது
மகன் குரல்
இதைத்தான்
பொருள்முதல்வாதம்
என்கிறோம்.
7
வாகனத்தில் வரும்போது
எங்கேயாவது விழுந்திருக்கலாம்
அவன் காதில் வைத்திருந்த
புளுடூத் கேட்பானில்
ஒன்றைக் காணவில்லை
யாரிடம் கிடைத்திருக்குமோ…
கண்ணில் பட்டதை எடுத்து
காதில் வைத்துப் பார்த்தான்
வீதியோரச் சிறுவன்
நான் அங்கே வந்தால்
என்ன நடக்குமென்று
எனக்கே தெரியாது
யாரிடமோ இவன் கத்தியது
சிறுவன் காதில் ஒலித்தது
பீதியில் காதிலிருந்து எடுத்து
வீசியெறிந்தான் சிறுவன்
கேட்பானின் லைட்
ஓரிரு முறை மின்னி
அடங்கியது
பிறகு
எலக்ட்ரானிக் குப்பையில்
அதுவும் சேர்ந்துவிட்டது.
*****

சுகதேவ் –
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

