–தேவவிரதன்

நம்மில் பலர் நம்மை தேடி வரும் துன்பங்களுக்கெல்லாம், மற்றவர்களையோ, மற்றவரின் எதிர்ப்பையோ, நமக்கு எதிராக அவர்கள் செய்த செயல்களையோ, எதுவுமே இல்லாவிட்டால் நம் விதியையோ காரணமாக சொல்வது வழக்கம். மற்றவர்களை பற்றி நான் கூறமுடியாது எனினும், என்னை பொறுத்தவரை இன்று வாழ்க்கையின் அந்தி நேரத்தில் அமைதியாக அமர்ந்து பாரபட்சமின்றி சிந்திக்கும் போது என் மனதிற்கு நியாயமாகப் படுவது ஒன்றே ஒன்றுதான்.

‘நம் துன்பங்களுக்கோ, இன்பங்களுக்கோ நாமேதான் காரணம். வேறு எவருமில்லை. நாமேதான் நம் விதி. அதுதான் நம்மை பல காரியங்களில் செலுத்தி நன்மையையும், தீமையையும் உண்டாகிறது. எனக்கு இன்று இதில் என்னையும், என் செயல்களையும், ஓர் மூன்றாவது மனிதனாக அமர்ந்து ஆராயும் போது தெரிவது அதுதான்.

நாமேதான் நம் விதி.

நான் மிகுந்த சிரமமான சூழ்நிலையில்தான் சிறுவயதில் வளர்ந்தேன். ஆனால், அந்த சூழ்நிலை மாற வெகு காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்தக்காலங்கள் எனக்கு பகுத்தறியும் புத்தியையும், செயல்களையும் தந்திருக்க வேண்டும். மாறாக அது என்னை வேறு எதோ திசைகளில் செலுத்தி இழுத்து சென்றிருக்கிறது. நானும் ஓர் மடையனாக அதன் போக்குக்கெல்லாம் சென்று ஆடி இருக்கிறேன். அதனால், இன்று எனக்கு ஏற்பட்டிருக்கும், துன்பங்களுக்கும், ஏமாற்றங்களும் எவர் பொறுப்பு?

சந்தேகமில்லாமல் நானேதான்.

பணக்கஷ்டத்திலும், பல மனத்துன்பங்களுக்கும் அதனால் ஆளாகி இருக்கிறேன் எனினும், நான் என்னையும், என் குணங்களையும் மாற்றிக்கொள்ள முற்படவில்லை என்பதுதான் பிழை. இரக்கம் (empathy not sympathy) எனும் குணம், பிறரின் துன்பத்தை உணர்ந்து அனுபவிக்கும் குணம் என்னிடம் பிறவியிலேயே இருந்தது. அது ஓர் உயர்ந்த குணம் என்று சொல்லலாம்.

நான் முதன் முதலாக பள்ளியில் சேர்ந்த (நான்காம் வகுப்பு ) மறு வாரமே என் வகுப்பு ஆசிரியர் ஓர் சற்று பார்வை குறைபாடு உள்ள பெண்ணை ஏதோ ஓர் பாடத்தை படிக்கச் சொல்லி அதை அவளால் படிக்க முடியாமல் போனதும் பின் வரிசையில் இருந்த அவளை அந்த ஆசிரியர் இரக்கமின்றி ‘தள்ளியங்கடா.’ என்று சத்தம் போட மற்ற மாணவர்களை அவளை ஆசிரியர் அருகில் அடி வாங்க தள்ளியதை பார்த்து விதிர்த்து போய் வீட்டில் வந்து அதை நினைத்து அந்த சிறு பெண்ணின் துன்பத்தை நினைத்து ‘ஓ’ வென்று அழுதது இன்றும் நினைவில் இருக்கிறது. வேறு எவருமே அதை உணராத போது, நான் அதை நினைத்து வீடு வந்து அழுததுதான் அனுதாப உணர்ச்சி. ஆங்கிலத்தில் அதை ‘எம்பதி’ என்கிறோம். அந்த உணர்வு இன்னும் என்னுடன் முன்னைப்போல் இல்லை என்றாலும் தொடர்ந்து வருகிறது.

ஆனால், எதுவுமே, அதன் எல்லைகளை தாண்டும் போது பிழையாகிறது. அதனாலேயே என் குடும்பத்தை நான்தான் முன்னின்று காப்பாற்ற வேண்டும் என்று ஓர் உறுதி என் மனதில் தோன்றியது. அதற்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருந்தன. அதை பற்றி சிந்திக்க வேண்டியது அனாவசியம். என் நோயுற்ற தாய், வேறு போக்கிடம் சரியாக அமையாத என் பெரியம்மா, வாழ்விழந்த என் சகோதரி, நோயால் தோற்றம் மாறிய என் சகோதரன் இவர்களை காப்பது என் கடமை என்று நான் முடிவு செய்து அதற்காக என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு அவர்கள் மனத்திற்கோ, வாழ்க்கைக்கோ எந்த சிக்கலும் வராமல் பார்த்து கொள்வதுதான் என் கடமை என்ற நோக்கில் செயல் பட தொடங்கினேன். என் தேவைகளை குறைத்து கொண்டேன். எதற்கும் ஆசைப் படுவதை தவிர்த்தேன். படிப்புதான் முக்கியம். அதுதான் என் வாழ்க்கையை மேம்படுத்தி இவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாகாமல் வைத்திருக்கும் என்று பூரணமாக நம்பினேன். அதைத்தான் இறைவனிடமும் வேண்டி கேட்டு கொண்டேன்.

ஆனால், எனக்கு வேலை கிடைப்பதிலும் ஆயிரம் தடங்கங்கல்கள் வந்தன. ஏதோ ஓர் இடத்தில் கடவுளுக்கோ, அல்லது விதிக்கோ இவனை இம்சித்தது போதும் என்று நினைத்து ஓர் வேலையே நிலைப்படுத்தினார்.

நான் வேலைக்கு சேர்ந்தது மாணவர்களுக்கு பரிசோதனை சாலை முறைகளை விளக்கி ரசாயன பரிசோதனைகள் செய்ய கற்றுத்தரவேண்டிய வேலை. நான் அதில் மிக கவனமாக ஈடுபட்டேன். மாணவர்களின் குணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொண்டேன். அதனால் மாணவர்கள் என்னை விரும்பினார்கள். கொண்டாடினார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் கர்வத்தை தந்தது. அவர்கள் சொந்த பிரச்சினைகளை கூட கேட்டு அதற்கு வழிகள் சொன்னேன். ஓர் மாணவன் மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். மிக நன்றாக படித்தான். பலமுறை அவனுக்கு பண உதவி செய்திருக்கிறேன். அவன் என்று இல்லை. பின்னாட்களில் பணக்கஷ்டம் என்று என்னிடம் வந்த எவருக்குமே நான் உதவி செய்ய மறுத்ததில்லை. ஆனால், அதே மாணவர்கள் படித்து முடித்து வேலை செய்து பணம் சம்பாதிக்க தொடங்கிய பின் என்னை மறந்தனர். அதை குற்றமாக நான் வெகுநாட்கள் வரை காணவில்லை. ஆனால், ஒரே ஒருவன் என்னை மிகவும் நெருங்கியவன், மதித்தவன், வெளி நாடு சென்று அந்த நாட்டு பெண்ணை மணமுடித்து அங்கேயே தங்கியவன் ஒரே ஒரு முறை என்னை வந்து பார்த்து விட்டு பின் சுத்தமாக மறந்து போனது மனதில் இன்றும் ஓர் வடுவாக இருக்கிறது. ஆனால், அவனை சொல்வதில் குறை இல்லை. அதுதான் உலகமும், மனிதர்களும். என் குடும்பத்திலேயே கூட அதை காண நேர்ந்தது இன்னும் மோசம்.

எனது இரக்க குணம் என்னை எப்படி சிக்கலில் மாட்டியது என்பது எனக்கே சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. என் வீட்டில் வளர்ந்த என் உறவின் மகள் என்னை விட பத்து வயது இளையவள். அவளுக்கு கணிதம் சொல்லிக்கொடுத்ததிலிருந்து, பத்திரிகைகள் படிக்க ஆர்வம் உண்டாக்கி, நல்ல திரைப்படங்கள் பார்க்க அழைத்து சென்று, பல் வேறு கதைகள், கதாசிரியர்கள் ஆகியோரை அறிமுகம் செய்து, உடைகள் வாங்கித்தந்து என்று பலவிதமாக.. எனக்கு படிக்கும் காலத்தில் கிடைக்காத வாய்ப்புகளை அவளுக்கு உருவாக்கி கொடுத்தேன். ஆனால், நிஜத்தில் அவள் வளர்ந்து பெரியவள் ஆன பின் நடந்தது என்ன? எல்லாவற்றையும் தானும் செய்ய நினைத்து ஒவ்வொன்றிலும் ‘நான் உன்னை விட மேலானவள்’ என்று காட்டும் வகையில் நடந்து கொள்ள தொடங்கினாள். அது ஓர் கிட்டத்தட்ட ஓர் மனப்பிடி போல் ஆகி (obsession) போல் ஆகி அவளை கிட்டத்தட்ட மனநோய்க்கு உள்ளாக்கியது. இது எனக்கு அவசியமா? நான் எதோ ஓர் கட்டத்தில் அவள் இடத்தை காட்டி விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.

என் சகோதரியின் கதையும் அப்படியே. என்னுடன் யார் பேசினாலும் உடனே ‘யார்? எதற்கு? ஏன் பேசவேண்டும்?’ என்று கேள்விகளை எழுப்பி எனக்கு எரிச்சல் உண்டாகி கோபம் கொள்ளும் வரை கொண்டு செல்வாள். அவள் எல்லோருக்குமான சாதாரண வாழ்க்கை கூட கிடைக்க பெறாதவள் என்று நான் காட்டிய கருணை என் மீதே வேறு விதமாக பாய்ந்தது.

கருணை, அன்பு, பாசம் எல்லாமே நல்ல குணங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதையும், எவரிடம், எந்த அளவு காட்டவேண்டும் என்பது அதை விட முக்கியமான விஷயம். தவறினால், நீங்கள் தீட்டிய கத்தியே உங்கள் மீது பாயும். அப்போது வருந்துவதில் பயனில்லை. நிஜத்தில் எல்லா நற்குணங்களும் கூட ஓர் எல்லைக்கோடு இருக்கிறது. அதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு கட்டாயம் ஓர் மனிதனுக்கோ, மனுஷிக்கோ சற்று தொலைநோக்கு பார்வை அவசியம்.

இதுதான் நான் அதீத அக்கறையும், அன்பும் காட்டி புரிந்து கொண்ட ஆழமான உண்மைகள். அன்போ, பாசமோ, இரக்கமோ எல்லாவற்றிற்குமே வரையறைகள் இருக்கின்றன. அவைகளை நாமே புரிந்து வரைந்து கொண்டு அதன்படி நடப்பதே அறிவுடைமை. இல்லாவிடில், அதுவே உங்கள் அறியாமையின் ஓர் பிரதிபலிப்பாகி விடும்.

“அன்பும் இரக்கமும் எல்லையற்றால், அது அறியாமையின் பிரதிபலிப்பு; வரையறையுடன் வாழ்ந்தால், அது அறிவின் ஒளி.”

00

தேவவிரதன்

இராசயன பொறி இயல் துறையில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு சிறுவயது முதலே எழுத்து, இசை, ஓவியம், ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்திலும் வலைத்தளங்களில் எழுதுவதுண்டு. கர்நாடக இசை விமர்சங்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரபல ஆங்கில நாளிதழில் எழுதி வருகிறேன். சமீப காலங்களில் வலைத்தளங்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *