உங்களோடு..
எல்லோருக்கும் வணக்கம், தொடர்ந்து ஒன்றாம் திகதி வெளிவந்துகொண்டிருக்கும் நடுகல் இணைய இதழ் பணிகள் முழுக்கவும் நான் ஒருவனே கவனித்துக்கொள்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எப்போதுமில்லாது இந்த இதழில் படைப்புகள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. புதியவர்களின் கதைகள் தொடர்ந்து நடுகல் இதழில் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. எழுத வந்தவர்கள் திடீரென மாயமாய் மறைந்தும் போய்விடுகிறார்கள். பதிலாக அடுத்தவர் வந்து அவரது இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். இதுவே தொடர்கிறது.
இந்த இதழில் 32 கதைகள் என்பது அளவுக்கும் அதிகம் தான். இதை குறைத்துக்கொள்ள வேண்டும்தான். அப்படி குறைக்கும் பட்சத்தில் தேர்வுகள், வெற்றிபெறும் கதைகள் என்று தனியாக ஒரு டிராக் ஓடவேண்டும். வாசிக்கையில் ஓரளவு சொல்முறை சரியாக இருக்கும் கதைகள் இதழில் இடம்பெறுகின்றன. புள்ளி வைப்பதிலிருந்து பல பணிகளை சில கதைகளுக்கு நானே செய்யவேண்டி வருகிறது. அப்படியான கதைகளை ஒதுக்கிடுங்கள்! என்கிற அறிவுரை எங்கள் குழுவிலிருந்து கிடைக்கிறது.
இதழை இலக்கிய இதழாக கொண்டுவரச்சொல்லியும் சில அறிவுரைகள் வருகின்றன. எல்லா படைப்புகளையும் ஏற்றிவிடுகிறீர்கள் என்றும். அவர்கள் எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகம். அப்படி முழு இலக்கிய இதழாக நடாத்த வேண்டுமெனில் நான் படைப்பாளிகளை நாடிச்செல்ல வேண்டும். இப்போது அந்த தொந்தரவுகள் ஏதுமின்றியே மெயிலில் படைப்புகள் நான் கேட்காமலேயே வந்து குவிகின்றன. அப்படி எல்லாவற்றையும் இதழில் ஏற்றிவிடுகிறேனா? என்றால் அதுவுமில்லை.
இந்த இதழில் தஞ்சாவூர் பித்தன் அவர்களின் 15 ஓவியங்கள் சாட் ஜிபிடி உதவியுடன் கதை மற்றும் கவிதைகளுக்கு பயன்படுத்தியுள்ளேன். அவருக்கு எனது நன்றிகள். கவியோவித்தமிழன் ஓவியங்கள் 2-ம், ஷாராஜின் ஓவியம் ஒன்றும் சாட் ஜிபிடி உதவியில் வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் பார்க்க வர்ணமயமாய் இருக்கப்போவதாய் முன்பாக சில ஓவியங்களை முகநூலில் பதிவிடுகையில் பார்த்துச் சொன்னார்கள். இது தொடருமா? என்றால் சில இதழ்களுக்கு தொடரட்டும்.
தொடர்ந்து எழுதுங்கள்! நடுகல் இதழுக்கு உங்களின் சிறந்த படைப்பை அளித்து உதவுங்கள்!
அன்போடே என்றும்
வா.மு.கோமு


