-விஜய நாகசெ

பாடல்:

“அட சிங்கார நடையனடா துரியன்

அட செல்வ சீமானடா துரியன்

தனரேகை படைத்தவன்டா துரியன்”

வசனம்:

“தனரேகை படைத்தவன்,

நந்தியாவட்ட மாலை அணிந்த நரதீபன்,

ஆகாயமே வணங்கினாலும்

என்னுடைய சிரம் வணங்கா முடி தரித்தவன்,

என்னுடையப் பெயரோஓஓஓ…

துரை துரியோஓஓதன மகாப்பிரபு!”

நான் அலுவலக நேரம் முடிந்து பார்க்கிங்கில் என்னுடைய வண்டியை எடுக்கும்போது வந்து பேச்சுக் கொடுத்தார் வாட்ச்மேன் வேலாயுதம் அண்ணன். வற்றிப்போன தேகத்தில் வாட்ச்மேன் சீருடை சற்று தொலதொலவெனவெ இருந்தது. எழுபதையும் மீறிய வயதின் தளர்வு உடலில் தெரிந்தது. தினமும் வரும்போது போகும்போது வணக்கம் வைப்பதோடு சரி. நின்று பேசியதில்லை. முந்தின நாள் மாலை தான் முதல்முறை இதேபோல வந்துப் பேசினார் தயக்கத்துடன், “சார், நூறுரூவா குடுக்குறீங்களா சார்… மருந்து வாங்கணும். சம்பளம் போட்டதும் குடுத்துட்றேன்” எடுத்து கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

மீண்டும் அதே போல தயக்கத்துடனே காணப்பட்டார். நான் என்னுடைய பர்சில் பணமில்லாததை நினைத்துக்கொண்டேன். “விஜய் டிவில பாலான்னு ஒருத்தர் இருக்காராமே அவரு எங்க இருப்பாருன்னு தெரியுமா சார் உங்களுக்கு?” என்றார். எந்த பாலா என்ன சம்மந்தமே இல்லாமல் நம்மகிட்ட இப்படி கேட்கிறார் என்ற யோசனையுடன், “தெரியலையேணா யாருன்னு…” சொன்னதும் அவர் முகம் சுருங்கியது. இடுங்கிய கண்கள் சற்று ஒளி இழந்தது.

“நீங்க இந்த நாடகம்லா எடுக்குறீங்கனு சொன்னாங்க அதான் உங்ககிட்ட கேட்டேன்”

நான் வேலை செய்வது ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில். அந்த கட்டடத்தில் இன்னும் பலவிதமான நிறுவனங்கள் இருக்கின்றன. “நாடகம் இல்லணா அது… சரி, என்னாச்சு ஏன் அவர தேடுறீங்க?” பாலாவிடம் சொல்ல வேண்டிய அளவு விவரத்துடன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“இல்ல சார், என் பேத்திக்கு ஃபீஸ் கட்டனும் ஆத்தா அப்பன் இல்லாத பொண்ணு, நானும் என் வீட்டுகாரியும் தான் பாத்துக்குறோம். அவளும் போன வருஷம் முடியலன்னு உட்காந்துட்டா. என் ஒருத்தன் சம்பாத்தியம் தான் இப்போ. காலேஜ் ஃபீஸ் கட்ட முடியல சார். போன மாசம் நேர்ல போய் சொல்லிட்டு தான் வந்தேன். அதுக்குள்ள எக்ஸாம் வந்துடுச்சாம் ஹால் டிக்கெட்டு தர மாட்றாங்கலாம்… கடங்குடுத்து உதவுறதுக்கு யாரும் இல்ல… அதான் அந்த தம்பி இந்த மாதிரி கஷ்டம்னு சொன்னா உதவி பண்ணும்னு சொன்னாங்க… இந்த ஃபோன்லலாம் கூட காட்னாங்க…”

என்று என்னிடமும் காட்டுவதற்கு போனை மேல்சட்டை பாக்கேட்டிலிருந்து தடவி எடுத்தார். அது டிஸ்ப்ளே எல்லாம் தேய்ந்து பின்னால் லேசாக உப்பி இருந்தது. அவர் KPY பாலாவை கேட்டிருக்கிறார் என்று சட்டென நினைவுக்கு வந்தது.  “இல்லனா அவர தெரியாது… நான் வேற யார்ட்டயாவது கேட்டுப் பாக்குறேன். தெரிஞ்சா சொல்றேன்.” ஏமாற்றத்துடன் திரும்பி நடக்க ஆரம்பித்தார். 

அவருக்கு சம்பளம் பத்து முதல் பன்னிரண்டாயிரம் வரை தானிருக்கும் என்று ஓரளவு தெரியும். எப்படி பேத்தியை வளர்த்து படிக்க வைக்கிறார்? எத்தனை வருடங்களாக இப்படி கஷ்டப்படுகிறார்? என எனக்குள் கேள்விகள். அருகில் சென்று மெதுவாகப் பேச்சினூடே கேட்டுவிட்டேன். தம்பி என்று அழைக்குமளவுக்கு சிறிது நேரம் பேசியப் பிறகே கேட்டேன்.

“சொந்த ஊரு விழுப்புரம் பக்கத்துல தம்பி. கூத்துக்கட்டுற கண்ணப்ப வாத்தியார் ஜமாவுல அரவேஷம் கட்டுற ஆளு நான். பொண்ணு வேஷம், தருமன், பீமன், கட்டியக்காரன் மட்டும் இல்ல, முக்கியமான வேஷக்காரங்க யாராச்சும் வரமுடியாம போச்சுனா அந்த வேஷத்தயும் நான் தான் கட்டுவேன். பாரதம், கல்வி காத்தான், விராட பருவம், அரவான் களப்பலி, மதுர வீரன்னு எல்லா பாத்திரமும் எல்லா பாட்டும் தெரியும் தம்பி. எங்க வாத்தியாரே வயசாகிடுச்சுடா வேலு இந்த பாட்டச் சொல்லுன்னு என்கிட்டதான் கேப்பாரு…”

பெருமிதத்தோடுப் பேசினார். உள்ளுக்குள் ஒரு தேர்ந்த நடிகனிருப்பது முக பாவத்தில் தெரிந்தது. திடீரென ஓங்கிய குரலுடன் பாடத் தொடங்கியவர் இரண்டொரு நொடியில் எழுந்து ‘அரவான் களப்பலி’ துரியோதனனாக நின்று கூத்துக் கட்டினார்.

பாடல்:

“அட சிங்கார நடையனடா துரியன்

அட செல்வ சீமானடா துரியன்

தனரேகை படைத்தவன்டா துரியன்”

வசனம்:

“தனரேகை…..

கணீரென்ற சிம்மக் குரலும் விரைத்துக் கொண்ட உடல்மொழியுமாக வயதை மறந்து சுற்றம் மறந்து ஆடினார். பார்க்கிங்கில் நின்றிருந்தவரெல்லாம், சாலையில் போனவரெல்லாம் திரும்பிப் பார்த்தனர். அவர் துரியோதன பெருமை பாடிப் பேசி முடித்ததும் அவரைக் கைப்பிடித்து நிறுத்தி உட்கார வைத்தேன்.

“முப்பது வருஷ கூத்து தம்பி… ஆறு வருசத்துக்கு முன்னாடி குடும்பமா ரோட்ல நடந்து போகும்போது லாரி மோதி எல்லாமே போய்டுச்சு, எம்புள்ள, அவன் பொண்டாட்டி… (தழுதழுத்தக் குரலை சிறு அமைதியில் சரிபடுத்தினார்) எம் பேத்தியும் எம் பொண்டாட்டியும் மட்டுந்தான் அடிபடாம பொழைச்சது… எனக்கு கால்ல ஒரு நரம்பு பிஞ்சிடுச்சு… ஆப்பரேசன் பண்ணிருக்கு.” சொல்லிக்கொண்டே கெண்டை காலைக் காட்டினார். பத்து சென்டிமீட்டர் நீளத்திற்கு முட்டிக்கு பின்னால் மடங்குமிடத்தில் தடம் இருந்தது.

“ண்ணோவ்… இத வச்சிகிட்டா எழுந்து ஆடுன நீ?”, “ஆடுன காலு… (காலைத் தடவிக்கொண்டே அதை பார்த்தபடி சற்று அமைதி) டாக்டருங்க ஆடவே கூடாதுன்னு சொன்னப்பறம் பொழப்பு போச்சு, வருமானம் போச்சு… வீட்டுக்காரியும் நானுமா சேர்ந்து எப்டியோ இந்த பொட்டபுள்ளைய படிக்க வச்சிட்டோம். இன்னும் ஒரு வருஷம் தான் இருக்காம்… படிச்சி முடிச்சுட்டா அது வாழ்க்கைய அது பாத்துக்கும் அதான் யாராவது உதவி பண்ணுவாங்களான்னு பார்க்குறேன்…ம்ம்ம்”

பெருமூச்சு விட்டு அமைதியானார். விடைப்பெற்று கிளம்பினேன் நானும். தரை அதிர நடக்க முடியாத காலும் வயிற்றுக்கு சாப்பிட முடியாத வறுமையும் உள்ள தளர்ந்துபோன செக்கியுரிட்டி வேலாயுதமாக இல்லாமல்,

“சிங்கார நடையனடா துரியன்

செல்வ சீமானடா துரியன்”

என்று பாடி, நொடியில் உருமாறிய துரியனாகவே ஒவ்வொரு காலையும் மாலையும் தெரிந்தார் எனக்கு.

பிறகு மெல்ல கேட்டருகே அவரின் இருப்பையே மறந்துபோனேன். பெதேலஹெம் குடும்ப யூனிட் படம் பார்த்துவிட்டு வந்த ஓர் அலுவலக நாளில் எனக்கான ஆஷ்லியைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைப்பதற்கு யாருமில்லை அங்கு. வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்ததில் தலைவலி உண்டாகியிருந்தது. ஒரு காஃபி கொண்டுவரச் சொல்லியிருந்தேன். சிறிது தாமதத்தோடு காஃபி டேபிளுக்கு வந்தது. வைத்த கப்பிலிருந்து விலகும் கை ஒரு பெண்ணின் கை. வழக்கமாக வரும் ஆள் இல்லை எனத் தெரிந்து நிமிர்ந்து பார்த்தால் மிகச் சிறியப் பெண் போன்ற தோற்றம். “சாரி சார் லேட் ஆனதுக்கு” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

நான் அட்மின் ஆட்களை அழைத்து, “பள்ளிக்கூடம் படிக்கிற பொண்ணுங்கள ஏன் வேலைக்கு எடுக்குறீங்க? இது மேனேஜருக்கு தெரியுமா?” என்று கடிந்துக்கொண்டேன்.

“சார் அந்தப் பொண்ணு காலேஜ் முடிச்சிட்டா அல்மோஸ்ட்.” என்றார்கள். கேட்டதும் சற்று நிதானமானாலும் அதென்ன அல்மோஸ்ட் என்று கேட்டேன். “சார், அது இங்க செக்கியுரிட்டியா வேலைபார்த்த வேலாயுதம் தாத்தாவோட பேத்தி, தாத்தா ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு, பாவம் இந்தப் பொண்ணு அவரு போன சோகத்துலயும் கடைசி செமெஸ்டர் பீஸ் கட்ட முடியாமலும் அடுத்த வருஷம் எழுதிக்கலாம்ன்னு தாத்தா வேல செஞ்ச கம்பெனிக்கே வேலைக்கு வந்துடுச்சு. அவங்க தான் இந்த கம்பெனில தான் உன் தாத்தா வேல செஞ்சாருன்னு இங்க கிளீனிங் வேலைக்கு அனுப்பிவிட்ருக்காங்க”

அவ்வளவு தான் எனது இயல்பு வாழ்க்கை எனும் குளத்தில் யாரோ கல்லெறிந்தது போல நின்றிருந்தேன். அவரது மரணம் இயற்கையானதாக தற்செயலானதாக கூட இருக்கலாம். ஆனால், அன்று அவரது உதவிக்கு நான் சிறு முயற்சியெடுத்திருந்தால் ஒரு பட்டாம்பூச்சி விளைவில் இன்று அவர் இருந்திருப்பாரோ? அவர் பேத்தி கல்லூரி முடித்து நல்ல வேலையில் சேர்ந்திருப்பாளோ என்ற எண்ணங்கள் வட்ட வட்ட வளையங்களாக என்னிலிருந்து உருவாகி கலங்கடித்துக் கொண்டிருந்தன.

அலுவலகம் முடிந்து ஏதோ ஞாபகத்தில் படியிறங்குகையில் அதே குரல்,

“தனரேகை படைத்தவன்,

நந்தியாவட்ட மாலை அணிந்த நரதீபன்,

ஆகாயமே வணங்கினாலும்

என்னுடைய சிரம் வணங்கா முடி தரித்தவன்,

என்னுடையப் பெயரோஓஓஓ…

துரை துரியோஓஓதன மகாப்பிரபு!”

அவரின் குரலே தான், பக்கச் சுவர்களில் பட்டு எதிரொலித்து என் காதுகளை வந்து ரீங்காரமிட்டு குடைந்தன. ஒரு கணம் அவர் பின்னால் இருக்கிறாரோ என்று திரும்பிப் பார்த்துக்கொண்டேன். கீழ் படிக்கட்டு வந்தபோது தெரிந்தது, படிக்கு அடியில் உள்ள குகை போன்ற இடத்தில் சேரில் உட்கார்ந்து தாத்தா வீட்டில் நடத்திக் காட்டிய துரியோதன வேஷ காணொளியைப் பார்த்து மென்மையான சிரிப்போடு அழுதுக் கொண்டிருந்தாள் பேத்தி.

000

எனது பெயர்  விஜயகுமார். புனைப்பெயரான விஜயநாகசெ என்ற பெயரில் சிறுகதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய இரண்டு சிறுகதைகள் “வாசகசாலை” இணைய இதழில் வெளிவந்துள்ளது. நான் திரைத்துறை சார்ந்த பணி செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *