இசையால்…

இந்த அறையின் மூலையில்

கடவுளர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்

வெறுமே என்னை

வேடிக்கை பார்த்துக் கொண்டு…

ராஜாவின் இசையில்

மெய்மறந்து போயினவா

என்பது குறித்து

ஏதும் அறிய இயலவில்லை

அப்படியே இருந்தாலும்

அது குறித்து

அவை பெரிதாய் அலட்டிக் கொள்வதாய் இல்லை

ஏனெனில்

கடவுள்களுக்கான இசை குறித்து

ராசாவுக்கும் பெரிதாய் ஏதும்

அக்கறை இல்லை என்றும்

அது மானுடம் பற்றியது என்றும்

புலம்பித் தவிக்கின்றன

காதலின் தீபம் ஒன்றை ஏற்றுவதற்கு முன்னதாக

சற்று நேரத்தில் அறை முழுக்க

எழும் மெலிதான ஹம்மிங்

வேடிக்கை பார்த்த

எல்லாக் கடவுளரும்

இசைவெளியில் இருக்க

இடைவெளியில்

கள்ளத்தனமாய்

கடவுளானேன் நான்.

00

ஒரு துளி நெருப்பு

இந்திய இறையாண்மை குறித்த

நம் உரையாடல்களின்

தொடர்ச்சியினூடாக

சில துண்டு பப்பாளிகளும்

எலுமிச்சை ஊறுகாயின் சிறு துண்டும்

இடறியிருந்தன…

,

தேசிய இனங்களின் எழுச்சி

சற்றேறக்குறைய

அரை வேக்காடான முட்டையைப்

போலிருந்தது

,

கருகிய நாற்றமெடுக்கும்

சுண்டல்

ஏறக்குறைய பண்டிட்டின்

அதியற்புத நீர்

அறிவிக்கையை

நகல் செய்தது…

,

திடீரெனக் கிளம்பிய மாணவரின் எழுச்சி

நெகிழிக் குப்பியை மாற்றி

கண்ணாடிக் குடுவையைக்

கொண்டு வந்தது..

,

சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள

உதவி கேட்டதில்

சரக்கினை நீர்மைப் படுத்திக்

கொண்டுள்ளனர்

நீதித்துறையினர்

,

அட போகட்டும் என்று

ஒரு கல்ப்பிற்கு பின்னர்

போராட்டங்களையும் கோரிக்கைகளையும்

சிங்கிள் சிகரெட்டில் நுழைத்து

பற்ற வைக்க முற்படுகையில்…

,

சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இஞ்சூரியஸ்

என்கிறீர்கள்…

,

எனில்,

உங்களுக்கு ஒரு சிகரெட்டின்

நுனி

பரிச்சியமில்லையென்று தானே

அர்த்தம்.

00

பிரேக்கிங் நியூஸ்

அது ஒரு

மழைக்காலத்தின்

பருவம் பிறழ்ந்த

கடுங்கோடையின் பகல்.

,

ஊற்றெடுத்த உப்புநீரால்

உள்ளாடை ஒட்டிய தோலொடு

நெடுந்தூரம் நடந்த விளைவில்

உள் தொடைகளில்

நெருஞ்சிகள் பூத்து

நெருப்பாய் எரிந்தது

,

முழக்கங்களோடு முன்வரிசையில்

சக தோழியரோடு

கை உயர்த்தி முன்நகர்ந்தோம்

,

பெருங்கொடை விழாக்கால

துடியும் கொம்பும்

சேர்ந்திசைக்கும் ஓர் எக்காளம்

எங்கும் நிறைந்திருந்தது

,

கூடுமிடம் சேர்கையில்

எதற்கென்றே தெரியாமல்

சுற்றிவளைத்து

வெயிலிலும் காந்தலாய் தோலில்

பட்டிழுத்தது அதிகாரத்தின்

களிம்பேறிய அடியாள் தண்டுகள்

,

சுற்றிச் சுழன்று புழுதி கண் மறைக்க

கைகள் அந்தரம் தேட

விரல்கள் பற்றுக்கேங்கி விரிய

,

‘நாறத் தேவிடியா முண்ட..’

காதருகில் கழுதைப்புலியொன்றின்

எச்சை ஊளை

கேட்ட மறு நொடியில்

அடிவயிற்றில் இரும்புக்குண்டாய்

வெடித்திறங்கியது

லாடம் தைத்த கனத்த காலடி

,

அலைபாய்ந்த அதிகாரத்தின் கைகளில்

சிக்கியிருந்தது கருப்பு மேலங்கி

கிழிந்து உள்ளாடை வெளித்தெரிய

கைபொத்தி வலியில்

வயிறிறுக்கிக் குறுகிய போது

குருதியின் நிறம் கருப்பாய்

விரிந்து

நீலக் கால்சட்டையின் நிறத்தை

மாற்றி

கறையாய் பரவத் தொடங்கியது

,

இழுத்துச் செல்லப்படுகையில்

சுற்றிலும் கேமராக்கள்…

கூட மனிதர்களும்..!

,

அடுத்த சில மணிகளில்

என் உள்ளாடை

இன்னும் இன்னும் கிழிபட்டபடியேயும்

குருதியின்

வீச்சமும் கறையும்

பெருகியபடியேயும் இருந்ததாக

எனக்கே

செய்திகள் வந்துகொண்டிருந்தன.

00

தொடுதலும் தொடுதல் நிமித்தமும்…

நெடும் பசிய மலைத்தொடர்கள்

சூழ்ந்ததொரு ஊரில் நாம்

சேர்ந்திருந்த காலத்தில்

உரையாடல்கள் பெரிதாய்

உருவாகவில்லை.

,

தொடுதலின் வழியே பேசுவதற்கான

நுட்பத்தை அங்குதான்

கைவரப்பெற்றோம்.

,

தேங்காய் வெட்டின்போது களத்தடியில்

காயெண்ணிப் போடுகையில்

சுரத்து குறைந்து

உரசிக்கொண்ட முழங்கைகளின் வழி

எப்படிப் புரிந்ததோ

பசியறிந்து சோறள்ளி வைப்பாய்

,

ஆநிரைகள் வீடு திரும்பும்

பின் மாலையில் திண்ணையில்

புளி தட்டும் போது

அருகமர்ந்த என் முதுகில்பட்ட

உன் கைகளின் தாகமறிந்து

தண்ணீர் கொண்டு வந்தது

நினைவிருக்கிறதா

,

இளவெயிலில் ஈராங்காய்களை

முற்றத்தில் உலர்த்தும் வேளையில்

குறுக்கு நோவு தீர நிமிர்ந்து

உன் தோளைப் பற்றிய பொழுதில்

புணர்தலுக்கான நிமித்தங்கள்

புரிபடலாயிற்று.

,

குழும்பு தாளித வாசத்தில்

என் பால்யத்தின்

புகை படிந்த மூதாய்களின் அடுப்படிக்கு

எனை நீ அழைத்துச் சென்ற

மாயமும் நிகழ்ந்ததப்போது..!

,

வடக்குத் தோட்டக் கிணற்றடி

தொட்டிக்குக் கிழக்கே

நாம் குழிதோண்டி நட்டு

மண் மேவிய முருங்கைச் செடி

மூன்றடிக்கும் மேலாக

வளர்ந்து விட்டதாக

சுருளியம்மா மதினி நேற்றிப்போதைய

நேரம் அலைபேசினார்

போய்

தொட்டுப் பார்த்து வருவோமா…

,

நகர அடுக்ககத்தின்

ஒரே வீட்டில் வசித்தும்

நாட்களின் தனிமைக் களிம்பேறிய

புலனவழி முகமன்களை

ஒரு Clear Chat கொடுத்துவிட்டு…

000

பெயர் அன்புச்செல்வன். சொந்த ஊர் தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணி நிமித்தமாக வசிப்பது மதுரையில். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் பணி. தந்தையின் வழிகாட்டுதலில் வாசிப்புப் பழக்கம் சிறு வயது தொட்டுத் தொடர்கிறது. பல சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளன. நூல் மதிப்புரைகள் பல இணைய இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. தொகுப்பேதும் இதுகாறும் வெளிவரவில்லை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *