1
இரவின் உடல்
இரவு ஒரு பெண்ணாக
என் அறைக்குள் வந்தது.
அவள்
எதையும் அணிந்திருக்கவில்லை—
நட்சத்திரங்களைத் தவிர.
நான்
அவளைத் தொடவில்லை.
அவள் உடலின் மேல்
பிரபஞ்சம்
ஏற்கனவே பல முறை
தன் விரல்களை ஓட்டியிருந்தது.
அவள் அருகில் அமர்ந்தேன்.
சில நேரம்
எங்களுக்கிடையில்
மௌனம் மட்டும்.
பிறகு அவள் கேட்டாள்:
“நீ
எதைத் தேடுகிறாய்?”
நான்
பதிலளிக்கவில்லை.
என் உணர்வுக்குள்
பல ஆண்டுகளாக
திறக்கப்படாத
ஒரு கதவு இருந்தது.
அவள்
அந்தக் கதவைத் திறந்தாள்.
உள்ளே—
ஒரு குழந்தை
இன்னும் பிறக்காமல்
அழுதுகொண்டிருந்தது.
2
உடல் ஒரு சிறிய பிரபஞ்சம்
நேற்றிரா;
என் உடலை திறந்து பார்த்தேன்.
எலும்புகளுக்கிடையில்
சிறிய விண்மீன் கூட்டங்கள்.
நரம்புகளுக்குள்
பழைய ஆறுகள்.
இதயத்தின் அருகில்
ஒரு பெயரற்ற கடல்.
நுரையீரலுக்குள்
இரண்டு கருமையான பறவைகள்—
ஒவ்வொரு மூச்சும்
உலகத்தை
மீண்டும் உருவாக்கின.
என் வயிற்றுக்குள்
ஒரு சிறிய வீடு.
அந்த வீட்டில்
என் தாய்
இன்னும்
சமையல் செய்துகொண்டிருந்தாள்.
நான்
அவளை அழைக்கவில்லை.
சில பிரபஞ்சங்கள்
அழைக்கப்பட்டால்
உடனே சிதைந்துவிடுகின்றன.
3
மௌனத்தின் எலும்பு
நான் பேசாத
சில வார்த்தைகள்
என் நாக்கின் கீழ்
எலும்புகளாகி கிடக்கின்றன.
அவற்றை
வெளியே எடுக்க முயன்றால்
என் முகமே உடைந்துவிடும்.
அதனால்
மௌனத்தை அப்படியே
வாயில் வைத்திருக்கிறேன்.
4
நினைவின் கிணறு
என் குழந்தைப் பருவத்தை
ஒரு கிணற்றில் வைத்திருந்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு
அதில் எட்டிப் பார்த்தேன்;
தண்ணீர் இல்லை.
ஒரு குரல் மட்டும்—
“வா.”
நான்
குனிந்து பார்த்தேன்.
கிணற்றின் அடியில்
என் தாய் இல்லை.
அவள் என்னை அழைத்த
குரல் மட்டும்
இன்னும் ஈரமாக இருந்தது.
5
இரத்தத்திற்குப் பதிலாக
நீ என்னிடம்
ஒரு பரிசைக் கேட்டாய்.
நான்
என் இதயத்தைத் திறந்தேன்.
அதற்குள்
தேனும் இல்லை,
மலர்களும் இல்லை,
தேவதைகளின்
பொற்கதைகளும் இல்லை.
அங்கே
ஒரு சிறிய அறை.
அறைக்குள்
ஒரு மேசை.
மேசையின் மீது
என் தாயின்
பழைய ஊசி.
அதன் கண்ணுக்குள்
நூல் இல்லை—
ஒரு முழு வாழ்க்கை
கட்டுண்டிருந்தது.
நான் அதை
உனக்குத் தரவில்லை.
அதைத் தொட்டால்
நாம் இருவரும்
நம் பிறப்புகளுக்குள்
திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
அதற்குப் பதிலாக
என் உள்ளங்கையைத் திறந்தேன்.
அதில் இன்னும்
சிறிது வெப்பம் இருந்தது.
00

ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.
1980களிலிருந்து கவிதை எழுதிவரும் ஈழக்கவியின் ஏவாளின் புன்னகை, இரவின் மழையில் ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரை குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவர் என நிறுவியுள்ளன. விமர்சகர், ஆய்வாளர் என்ற வகையில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் விரிவாகவும், ஏராளமாகவும். எழுதியுள்ளார். ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு, பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல், அழகியல் மெய்யியல் ஆகிய இவரது நூல்கள் இவ்வகையில் முக்கியமானவைகள்.

