செவ்வகத்திலிருந்து உருளைக்கு மாற்றினோம்
ஓரிரவு தான் வேறிடத்தில்
கலங்கிய குட்டையாகக் காலையில்
“மருந்துக்கும் மனுஷனுக்கும் எக்ஸ்பையரி தேதி மாதிரிதான் இதுங்களுக்கும்”
மனைவியின் வார்த்தைகள் எங்கிருந்தோ ஒலித்தது
நட்டுக்குத்தி நின்ற விழிகளைத்தான்
நடுக்கமின்றி
பார்க்க முடியவில்லை என்னால்
00
,
“மூக்கப் பிச்சிக் காக்காவுக்குப் போடு”
அம்மாவைத் தொடர்ந்து
தனயனும் தனது
அம்மையின் மூக்கைப் பிய்த்துப்
போட்டான் ஜன்னல் வழியாக
தன்னிச்சையாக
தடவிக் கொண்டேன்
எனது மூக்கை
000
,
கையசைத்ததும் உடனே தானும் அசைத்தார்
என்னுடைய வாவென்ற சைகைக்கு சற்றே குழம்பினார்
டீ வாங்கி குடிப்பதைப் பார்த்து
ஜூஸ் வேண்டும் என அடம்பிடித்தார்
நானிறங்கும் போது
கையைசைத்து வழியனுப்பி இருக்கலாம்
தகப்பன் மடியிலிருந்த
கிண்டர்கார்டன் கடவுள்
+++++
,
“அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு
ஏதோவொரு ரயிலேறி
எங்கேனும் சென்றிடலாமா?” என்றான் ஒருவன்
“ஒரு வாரம் விடுமுறை தந்தால்
மிச்சமிருக்கும் தொகுப்பை முடித்து விடலாம்” சொன்னான் கவிஞன்
“ஒரு நான்கு வாரங்கள் போதும்
நாவலை முடித்து விடலாம்” என்றான் எழுத்தாளன்
“ஏற்கனவே வண்டி தாமதம், பத்தரைக்கு மீட்டிங், ஆட்டோ கெடைக்காது, சீக்கிரம் ஓடு”
அவசரப் படுத்தினான் மற்றொருவன்
“வித்துத் தொலச்சிட்டு டவுனுபக்கம் போயிறனும்”
திட்டிய அடுத்த நாள்
அரைஉழவு மழைக்கே விதைக்க
ஓடும் கரிசக்காட்டு சம்சாரியாக
எப்போதும் ஜெயிக்கிறான்
ஆட்டோ பிடிக்க ஓடும்
என்னுள்ளிருக்கும் அந்த
மாதச் சம்பளக்காரன்
000

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

