மழை நின்ற மறுநாளில்
வைரங்கள் பூத்திருக்கும்
பூத்திருக்கும் வைரங்களை
கொத்திச் செல்லும் கதிரவன்
00
,
“பூனக்குட்டி பாரு”
கைபிடித்துக் காண்பித்தான் தகப்பன்
ஒரே ஒரு நொடி தாமதித்து
கைகூப்பி வணங்கியது
குட்டிக் குழந்தை
000
,
உடைந்த பின்னர்
வெட்டப்படாமல்
இன்னும் துருத்திக் கொண்டு இருக்கும்
கைவிரல் நகங்களாய்
உன் நினைவுகள்
000
,
“சோறு வேணாம்
காசாக் கொடுங்க”
மறுதலிக்கும் யாசகனாக
“மாடெல்லாம் வேணாம்,
காசாக் கொடுங்க”
என்கிறார்
முன்னொரு காலத்தில்
கோசாலை இருந்த
கோயிலின் அதிகாரி
000
,
இவ்வளவு அருகில் இப்போது தான் பார்க்கிறேன்
வெள்ளை உடுப்பில்
கையில் டார்ச்சுடன்
கூட்ஸ் வண்டியின்
கடைசி பெட்டியில் நிற்கும் ஒருவர்
அசைக்கும் ஒளியை
புள்ளியாக மறையும் வரை
நின்று பார்த்ததொரு காலம்
000

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

