பெருமூச்சின் கடல் ஓய்ந்தபாடில்லை..
இதயத் தமனிகளை
அடைத்துக் கொண்டன சொற்கள்.
கலைக்கப்பட்ட கூட்டிலிருந்து
பருகக் கிடைத்தன ரணத்தின் துளிகள்..
00
அவனுக்கும் குடிக்க தெரிந்திருக்கிறது..
வெதுவெதுப்பான சூட்டில்
துயர மடிப்புகளை
தேய்த்து சமன் செய்ய
சற்றேனும்..
ஆங்காரம் பெருக்கி
பிறர் மன நோகுதல்
கண்டு மகிழ்ந்து..
வீழ்ந்த முதியோரின்
நெஞ்சம் மிதித்து
நர்த்தனம் ஆட.
00
பாவனையற்று இருத்தல்
சாத்தியமில்லை என்கிற போது.
நான் தேர்ந்து கொண்டது அலட்சிய பாவம்..
00
ஒரு மாய வித்தைக்காரனின்
மூடு துணி விலக்கலில்
பளபளப்பான இன்றைய நாள்
எனும் கால சிற்பம்.
மெல்ல கரையத் தொடங்கும்
பனிப்பாறைகள் போல்
செதில்செதிலாய் உதிர்ந்தன
பொழுதின் கணங்கள்..
அற்ப நரகத்தின் கூட்டிசையில்
மெய் மறக்கும் நடனம்.
000
எங்கேயும் வைத்துவிட்டு
நகர முடியாது.
எல்லாவற்றையும் சுமந்தேதான்
ஆக வேண்டும்..
வரித்து கட்டிக் கொண்டு
இடம் பெயரலாம்..
திசைகளில் சுழன்று
மையம் விலகாது பறக்கலாம்..
00
இந்த பகலின் வெளிச்சம் ஒன்றே போதும்.
நான் படுக்கையிலிருந்து எழ..
கைவிலங்கோடோ பூமாலையோடோ என்னை அழைத்துச்செல்ல எவரும் வருவர்..
நிரூபிக்க முடியாத குற்றம்
நிலுவையில் உள்ளது.
தேர்வு செய்வதில் சிக்கல் இல்லை..
வழி நடந்து முடிப்பதில் தான்..
00
உறக்கத்திற்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொள்வதை போல
மரணிக்கவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்..
00
உயிருள்ளவைதான் அவதிப்பட வேண்டியிருக்கிறது..
இதில் என்ன பிறப்பு பெருமை இருக்கிறது..
கசாப்புக்காரன் கையில்
பளபளக்கும் கத்தியின் ஜொலிப்பில்
வாழ்வின் சுதந்திரம் மின்னி மறைகிறது.
00

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

