ரா.சண்முகவள்ளி

“சாந்தி ஏய் எந்திரி இன்னும் எம்புட்டு நேரம் இப்படியே கிடக்கப்போறவ?” என்றபடியே அவளின் தலையை வாஞ்சையோடு தடவிக்கொடுத்தான் அவளின் கணவன் அருண்.

​”மாமா நான் பலமாலாம் அடிக்கல மாமா. மெதுவாதான் அடிச்சேன்” எனக் கூறியபடியே அவனின் மடியில் தலையை வைத்து மீண்டும் அழத்தொடங்கினாள்.

​”எனக்குத் தெரியும் மா நீ அதையே சொல்ல வேண்டாம் நான் உன்னை நம்புறேன் டி தயவுசெய்து அழாதடி எனக்கு பயமாக இருக்கு. நேத்தைல இருந்து இதையே சொல்லிட்டு இருக்க. எந்திரிடி நடந்தது நடந்து போச்சு இனி அழுதா மட்டும் எதும் மாறுமா என்ன.”

​”இல்லை மாமா என்னை எல்லாரும் கொலைகார மாதிரி பார்க்கிறதைத் தாங்க முடியல மாமா.”

​”ஏய் அவனுங்க சொன்னா நீ கொலைகாரியாகிடுவியா விடுடி பார்த்துக்கலாம். நான் இருக்கேன் டி அழாத” என்று சாந்தியை அருண் சமாதானம் செய்துகொண்டிருந்தான்.

​சாந்திக்கும் அருணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் திருமணம் முடிந்திருந்தது. சாந்தியின் அப்பா சதாசிவம் ஓய்வுபெற்ற ஆசிரியர். நல்லாசிரியர் விருதுபெற்ற சதாசிவத்திற்கு ஊருக்குள் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு.

​அவரிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று அரசுப் பதவி, வெளிநாட்டு வேலை என நல்ல நிலையில் உள்ளனர். பள்ளியில் பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சதாசிவம் மாலை நேரம் தன்னுடைய வீட்டில் இலவசமாக டியூசனும் எடுப்பார். கண்டிப்பும் கனிவும் பல மாணவர்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. சாந்திக்கு இளம் வயது முதலே தானும் ஒரு ஆசிரியை ஆகவேண்டும் என்ற ஆசை எழுந்தது. முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியர் பணிக்காகப் படித்து பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியிலும் சேர்ந்தாள். அதுவும் தொடக்க நிலை பள்ளி தான் வேண்டும் என்று கேட்டு வாங்கினாள்.

​இரண்டாம் வகுப்பு பி பிரிவு அவளின் வகுப்பாக ஒதுக்கப்பட்டது. நண்டு சிண்டாக மொத்தம் முப்பத்தி ஐந்து மாணாக்கர்கள் அவளின் வகுப்பறையில் இருந்தனர். மேல்நிலை வகுப்பில் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது சவாலான ஒன்று என்றால், இதுபோன்ற தொடக்கநிலை வகுப்புகளுக்கு அழுகைகள் தழும்ப பள்ளிக்கு வரும் குழந்தைகளை சமாளித்து அவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பது என்பதே மாபெரும் சவாலாகும். ஆனால் சாந்தி அதை மனம் உவந்து செய்துவந்தாள்.

​தொடக்க நிலை வகுப்பறை என்பது அத்தனை சௌகரியங்கள் நிறைந்ததாக இருக்காது. குழந்தைகள் அமரும் அந்த உயரம் குறைந்த நாற்காலிதான் அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும். உணவருந்தும் போதும் எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மட்டும்தான் அந்த நாற்காலியில் அமர முடியும். மற்ற நேரங்களில் ஆசிரியைகள் நிற்கத்தான் வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் என தனித்தனியாக ஆயாம்மா இருப்பார்கள். இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டுமெனில் ஆயாம்மாவின் பொறுப்பில் வகுப்பில் உள்ள குழந்தைகளை ஒப்படைத்துவிட்டுத்தான் செல்ல முடியும்.

​அவள் பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவளைப்போல குழந்தைகளிடம் அன்பாகப் பழகக்கூடியவர் யாரும் கிடையாது என்ற அளவுக்கு நற்பெயரைக் சேர்த்துவைத்திருந்தாள். ஆனால் அவளின் போதாத நேரம் அன்று அப்படி நடந்திருக்கக் கூடாது. என்ன செய்வது நடந்துவிட்டது அந்தப் பெரும் துயர்.

​உணவு இடைவெளிக்காக வழங்கப்படும் ஒரு மணி நேரத்தில் முதலில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களின் லஞ்ச் பாக்ஸைத் திறந்து கொடுத்து அவர்கள் உண்ணத் தொடங்கியதும்தான் ஆசிரியை உண்ணத் தொடங்க வேண்டும். விரைவாக உண்டு முடிக்காமல் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டியும் விட வேண்டும் என்பது அங்குள்ள விதி. ஒருவேளை எந்தக் குழந்தையாவது தான் கொண்டுவந்த உணவினை முழுவதுமாக உட்கொள்ளாமல் டிபன் பாக்ஸை வீட்டுக்கு எடுத்துப்போக நேர்ந்தால், அதைப் படம்பிடித்துப் பெற்றோர்கள் உடனே பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிவிடுவார்கள். அதனாலேயே அனைத்துக் குழந்தைகளும் உணவை முழுவதுமாக உட்கொள்ள வைக்க வேண்டிய நிர்பந்தம் ஆசிரியைகளுக்கு உண்டு.

​அன்றும் வழக்கம் போல உணவு இடைவெளியில் டிபன் பாக்ஸைத் திறந்து கொடுத்தாள்.

​”ஆல் ஆஃப் யூ ஸ்டாண்டு” என்றதும் அனைத்து மாணவர்களும் எழுந்து நின்றனர்.

​”ஸ்டார் ப்ரேயர்:

​எனக்கு இன்னைக்கு

இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி

இந்த உணவைச் சமைத்த அம்மாவுக்கு நன்றி

இந்த உணவுக்காகப் பாடுபடும் அப்பாவுக்கு நன்றி

எல்லோர்க்கும் உணவு கிடைக்க வேண்டும் இறைவா”

​”சரி எல்லாரும் உட்காருங்க. சாப்பிட ஆரம்பிக்கலாம்.”

​”டீச்சர் கௌசிக் ஸ்பூனைக் கீழ போட்டுட்டான்.”

“கௌசிக் போய் ஸ்பூனை வாஷ் பண்ணு.”

​”டீச்சர் இன்னைக்கு நீங்க என்ன சாப்பாடு?” என்றாள் முன்வரிசையில் இருந்த பார்கவி.

​”நானா? நான் புளிக்குழம்பு, வாழைக்காய் கூட்டு. நீ என்ன கொண்டு வந்திருக்க?”

​”நான் முட்டை சாதம்” என்றபடியே ஸ்பூனால் சாதத்தை அள்ளித் தன் குட்டி வாயில் அதக்கினாள்.

​அன்று தனது மாதாந்திர உதிரப்போக்கினால் கடும் சிரமத்திற்கு ஆளான சாந்திக்குக் கூடுதல் பரிசாகத் தலைவலியும் ஏற்பட்டிருந்தது. அதனால் உணவை பாதியிலேயே மூடி வைத்துவிட்டாள்.

​”ஏன் டீச்சர் நீங்க சாப்பிடலையா?” என்றபடியே கேட்ட குழந்தையிடம், “எனக்குப் போதும் வயிறு நிறைஞ்சிடுச்சு நீ சாப்பிடு” என்றபடி சாப்பிட வைத்தாள். வழக்கம் போல சாப்பிடாத குழந்தையை அழைத்து ஊட்டத் தொடங்கும்போது, தனது டிபன் பாக்ஸில் ஸ்பூன் வைத்து விளையாடிக்கொண்டிருந்த அபிநவ்வை கண்ட சாந்தி, “அபிநவ் என்ன பண்ணிட்டு இருக்க ஒழுங்கா சாப்பிடு” என்றாள். மீண்டும் மீண்டும் அபிநவ் உண்ணாமல் கிண்டியபடியே இருக்க, கோவத்தில் “ஏய் அபிநவ் உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது உனக்கு இதே வேலையா போச்சு வாடா இங்க” என்று ஒரு அதட்டியதும், அழுதபடியே எழுந்து வந்தவன் சாப்பிட வேண்டாம் என்று அழத்தொடங்கினான்.

​இது அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான். தங்கள் குழந்தையால் எவ்வளவு சாப்பிடும் என்ற அளவே இன்றி தினமும் டிபன் பாக்ஸில் உணவை அமுக்கி அனுப்பி வைப்பது பெற்றோர்களின் வாடிக்கையான செயல். அதிலும் சிலர் ஒரு டிபன் பாக்ஸில் உள்ள உணவையே ஒழுங்காகச் சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு ரெண்டு அடுக்கு டிபன் பாக்ஸை முழுவதுமாக நிரப்பி கொடுத்துவிடுவார்கள். சத்தான உணவைக் கொடுக்கின்றோம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக அவர்கள் கொடுக்கும் விதவிதமான காய்களையும் பழங்களையும் காணும் போதெல்லாம், இந்த அளவு உணவை அவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு ஊட்டுவார்களா என்ற மலைப்புகூட சில சமயம் எழுவது உண்டு.

​”தினமும் உனக்கு இதே வேலையா போச்சு, அதை எடுத்துட்டு வா நான் ஊட்டிவிடுறேன்” என்றதும், அழுதபடியே எடுக்கச்சென்றவன் பதட்டத்தில் கை நழுவி டிபன் பாக்ஸைக் கீழே போட அனைத்து உணவும் தரையில் சிந்தியது.

​அதைக்கண்ட சாந்திக்கு கோபம் சட்டெனக் கூடியது. பிறகு உணவு சிந்தியதற்கும் கூட “உங்களால் தான் என் பிள்ளை சாப்பிடவில்லை” என்று ஆசிரியைகள் மீது புகார்களைப் பள்ளி முதல்வரிடம் வாசிப்பார்கள் நவயுகப் பெற்றோர்கள்.

​தன் தந்தை காலத்தைப் போல ஆசிரியர் வேலை என்பது மதிப்பும் மரியாதையும் நிறைந்த ஒரு வேலையாகத் தற்போது பார்க்கப்படுவதில்லை. அதிலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பவர்கள் பெற்றோரின் ஏவல்களுக்குக் கட்டுப்படும் பொம்மைகள் போல செயல்பட வேண்டும் என்பதை இங்கு வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளாகவே நன்கு உணர்ந்துகொண்டாள் சாந்தி.

​தவறு செய்யும் குழந்தைகளைக் கண்டிக்க முடியாது. பாடங்களைச் சரியாகக் கற்கவில்லை என்றோ, தவறுகள் செய்தாலோ தண்டிக்க முடியாது. அது சிறார்களுக்கான வன்முறையாக உருவகப்படுத்தப்படும்.

​அபிநவ் தவறவிட்ட உணவைக் கண்டு பயத்தில் அழுது கொண்டிருந்தான். அழுகையை நிப்பாட்டும் படி எவ்வளவு கூறியும் அவன் அழுகை மட்டுப்படாததைக் கண்ட சாந்தி, ஒரு கட்டத்தில் அழுகையை நிறுத்த அவனின் கன்னத்தில் லேசாக ஒரு அறை அறைந்தாள். அடுத்த சில நொடிகளில் அபிநவ் மயங்கி விழுந்தான்.

​பதறிப்போனாள் சாந்தி. அவனைத் தூக்கி மடியில் வைத்து கன்னத்தைத் தட்டிக்கொடுத்தாள், முகத்தில் தண்ணீர் தெளித்தாள். எந்த அசைவும் இன்றி அப்படியே இருக்க தூக்கிக்கொண்டு ஆபீஸ் ரூம் வந்தாள்.

​உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான் அபிநவ். அபிநவ்வின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டார்கள். இருவரும் பதறியடித்துக்கொண்டு வர மருத்துவமனை வளாகமே அபிநவ்வின் உறவுகளால் சூழப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான் அபிநவ்.

​”என் புள்ள உனக்கு என்ன பாவம் பண்ணுனான், அந்தப் பிஞ்சுக் குழந்தையை இப்படி அடிச்சு கொல்ற அளவுக்கு உனக்கு என்ன கோபம் அவன் மேல?” என்று அபிநவ்வின் அம்மா ஆவேசமாகப் பேசிட,

​மற்ற உறவுகளும் “புள்ளைக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு உன்னை சும்மா விடமாட்டோம்” என்று அவர்களின் பங்கிற்குச் சலசலப்பை ஏற்படுத்தினர்.

​பள்ளி நிர்வாகமோ தங்களைத் தற்காத்துக்கொள்ள சாந்தியின் மீதுதான் தவறு என்பது போல அவளைக் கடிந்துகொண்டதும் தவித்துப்போனாள் சாந்தி. காவல் நிலையம் வரை தகவல் செல்ல, இரண்டு பெண் கான்ஸ்டபிள்களும் ஒரு எஸ்.ஐ.-யும் வந்திருந்தனர். நேரம் கூட, அபிநவ்வின் உறவினர்கள் வெறிபிடித்தது போல கத்திக்கொண்டிருக்க சிலர் சாந்தியை அடிக்க முற்பட்டனர். பெண் காவலர்கள் தான் சாந்தியைக் காப்பாற்றினர். பணிக்குச் சென்றிருந்த அருண் தகவல் அறிந்ததும் ஓடோடி வந்தான். ஆறுதலாக அவளைத் தோளோடு அணைத்தபடி “ஒன்னும் ஆகாது பயப்படாத” என்று அவளுக்குத் தைரியம் ஊட்டினான்.

​பல மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த செவிலியர், அபிநவ்வின் அப்பாவை, அம்மாவை மருத்துவர் அழைப்பதாகக் கூறினார்.

​”எதுவா இருந்தாலும் டாக்டரை வெளியில வந்து சொல்ல சொல்லுங்க, உள்ள கூட்டிப் போயி அது இதுனு கதவிட்டு அந்த டீச்சர காப்பாத்த பாக்குறீங்களோ” என அபிநவ்வின் தாத்தா கூறிட,

​”அதுதானே, எதுனாலும் எல்லார் முன்னாடியும் சொல்லுங்க” என்றபடி மற்றவர்களும் பிரச்சனை செய்ய,

வேறு வழியின்றி மருத்துவர் அங்கு வந்தார்.

​”இங்க பாருங்க அந்த டீச்சர் அடிச்சதுல ஒன்னும் அந்தப் பையன் மயங்கி விழல” என்றதும் தான் தாமதம்,

​”இப்படி சொல்ல எம்புட்டு பணம் வாங்குனீங்க?” என்று கோவமாய் கேட்டார் அபிநவ் தாத்தா.

​”ஐயா பெரியவரே நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க, பையன் ரொம்ப வீக்கா இருக்கான். காய்ச்சல் வேற இருந்திருக்கு, அதுக்காக அவங்க கொடுத்த மருந்து ஓவர்டோஸ் ஆகிருக்கு. அதோட விளைவுதான் பையன் மயங்குனது. மற்றபடி டீச்சர் அடிச்சதுல பையன் மயங்கல.”

​”யாருகிட்டயா கதவுடுற? அதெப்படி புள்ள சரியா அவ அடிக்கும் போதுதான் மயங்குமா?” என்று உறவினர் ஒருவர் குரலை உயர்த்த,

​”எஸ்.ஐ. சார் நான் ரிப்போர்ட்டுல எல்லாம் தெளிவா எழுதிட்டேன். பையன் ஏற்கனவே சிக்கா இருந்திருக்கான், சரியா தூங்கின மாதிரியும் தெரியல. அவன் எடுத்துக்கிட்ட மருந்தோட பக்கவிளைவாலதான் மயங்கிருக்கான், மற்றபடி டீச்சர் அடிச்சதுல இல்ல. நாங்க ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டோம் பையன் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணைத் திறந்துடுவான். கொஞ்சம் வீக்கா இருக்கறதால ட்ரிப்ஸ் போட்டிருக்கோம். இதுதான் எங்க தரப்பு விளக்கம்” என்றபடி அங்கிருந்து சென்றார்.

​அப்போதுதான் அபிநவ்வின் அம்மாவுக்கும் இரண்டு நாளாகத் தங்களின் மகன் காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவால் அவதிப்பட்டுவந்ததும், நேற்று கூட தான் கொடுத்த சளி மருந்தைக் கக்கியதற்காக இரண்டாவது தடவையும் மருந்து கொடுத்ததும், இரவு வெகுநேரமாகியும் மொபைலைப் பார்த்தபடியே உறங்காமல் இருந்ததும் நினைவுக்கு வந்தவளுக்குக் கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. அதுவரை தன் மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியதாக எண்ணி டீச்சர் மீது இருந்த கோபம் தற்போது அவள் மீதே திரும்பியது. காலையில் கூட பள்ளிக்கு எழுப்புகையில் அவன் எழுந்திரிக்க மறுத்து அழுதான். வழக்கமான ஒன்று எனக் கருதி அவனுக்குக் காலையிலேயும் சளிக்கான சிரப்பைக் கொடுத்துதான் அனுப்பியது கூடுதலாக நினைவுக்கு வந்து அவளைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது.

​அமைதியாக நாற்காலியில் அமர்ந்தவளை,

​”ஏண்டி புள்ளையைக் கூட உன்னால ஒழுங்கப் பார்க்க முடியாதா? உடம்புக்கு முடியாத புள்ளையை அப்படி ஸ்கூலுக்கு அனுப்பாம இருந்தா என்ன? ஃபுல் அட்டெண்டன்ஸ் வாங்கணும்னு சொல்லிச் சொல்லி எம்புள்ளையை எங்க கொண்டுவந்து நிப்பாட்டியிருக்க பாத்தியா” எனத் திட்டத் தொடங்கினான் அவளின் கணவன்.

​”பொழுதன்னைக்கும் நீ போனை நோண்டிட்டிருந்த உனக்கு எப்படிப் புள்ளையைப் பார்க்க நேரமிருக்கும்?” என்று அவளின் மாமியார் தன் பங்கிற்கு வசைபாடுவதைக் கண்ட பெண் காவலரோ, “ஏம்மா உங்களுக்குப் புள்ளை மேல அக்கறையே கிடையாது? இம்புட்டு நேரம் அந்த டீச்சரத் திட்டுனீங்க இப்ப உங்க மருமகளத் திட்டுறீங்க. உங்களுக்கு யாரையாச்சும் திட்டிட்டே இருக்கணுமா? அதான் பையனுக்கு ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாங்களா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று அதட்டினார்.

​அதன் பின்னான நெடிய மௌனத்தைக் கலைப்பது போல அபிநவ் கண் விழித்தான்.

​செவிலியர் வந்து “பையன் கண்ண முழிச்சிட்டான்” என்றதும் அபிநவ்வின் அம்மாவும் அப்பாவும் உள்ளே சென்றனர். வாடிய மலரைப் போல கட்டிலில் படுத்துக்கிடந்தான் அபிநவ். அவனின் தலையைத் தடவியபடி விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

​அபிநவ் நலமாக இருப்பதை உறுதி செய்ததும் உறவுகள் கலையத் தொடங்கினர். சாந்தியும் அருணும் மட்டும் வராண்டாவில் காத்திருந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு அருண்தான் அபிநவ் இருந்த அறையை நோக்கிச் சென்றான். அபிநவ்வின் தந்தையிடம் அபிநவைப் பார்க்க அனுமதி கேட்டு நின்றான்.

​அவரும் சம்மதிக்க சாந்தி அறைக்குள் வந்தாள். அவளைக் கண்டதும் புன்னகை முகமாக அவளை நோக்கி கையை அசைத்தான்.

​மனம் உடைந்து வீடு வந்து சேர்ந்தவளிடம் அக்கம்பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரித்தபடி இருந்தனர். மேலும் அவளுக்கு ஆறுதல் கூறுவது போல அவர்கள் வழங்கிய அறிவுரை அவளைக் குற்றவாளி கூண்டிற்குள் ஏற்றியிருந்தது.

​மறுநாள் காலை அவள் வேலை பார்க்கும் பள்ளியிலிருந்து அழைப்பு வந்திருந்தது. பள்ளியின் முதல்வர்தான் பேசியிருந்தார். “நடந்தது நடந்து போச்சு, நீங்க ஒரு ரெண்டு நாள் லீவு எடுத்துட்டு மண்டே வேலைல ஜாயின் பண்ணிடுங்க” என்றபடி அழைப்பைத் துண்டித்திருந்தார்.

​அந்தச் சூழலில் சாந்தியை அவர் தவறாக எண்ணியது பற்றிய வருத்தம் துளிகூட இல்லாதது போல, பெருந்தன்மையாக இந்த வேலையை அவளுக்கு வழங்குவதுபோல் பேசிமுடித்திருந்தார் அந்த அழைப்பை.

​இரண்டு நாட்கள் கடந்தும் அந்த கனத்த துயரிலிருந்து மீள முடியாது தவிக்கிறாள் சாந்தி.

​பொய்யான ஒரு குற்றச்சாட்டுக்குப் பொங்கி எழுந்த இந்த சமூகம், அவள் குற்றமற்றவள் என்ற உண்மை தெரிந்ததும் துளிகூட அதற்காக அவளிடம் மன்னிப்பு வேண்டாமல், அடுத்த குற்றவாளியாக அபிநவ்வின் அம்மாவை நோக்கித் தங்களின் தீர்ப்பை எழுதத் தொடங்கியது.

00

ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *