-ஏ.நஸ்புள்ளாஹ்
மாறிப்போன பெருங்கடலின் காற்று மாலையில் கிராமத்தின் வழமை மாறாத அமைதியைக் குழைத்துக்கொண்டு வீசியது. அந்த ஊரின் பெயரைக் காலம் மாற்றியிருந்தாலும் பெரியவர்களின் நாக்கில் அது தன் ஒலியுடனேதான் வாழ்ந்து கொண்டிருந்தது. தென்னை மரங்களின் மட்டைகள் ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பும் சலசலப்பு, மஃரிப் தொழுகைக்கான பாங்குச் சத்தத்துடன் கலந்து காற்றில் மிதந்தது.
வீட்டின் முன்புறத் திண்ணையில் துருப்பிடிக்கத் தொடங்கிய நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஹமீது. அவருடன் சேர்ந்து முதுமையும் நாற்காலியில் அமர்ந்திருந்தது. அவருடைய கண்கள் மங்கலாகிவிட்டிருந்தன. தொலைவில் வரும் காலடிச் சத்தங்களை அவற்றின் ஒலியை வைத்தே சரியாகக் கணித்துவிடும் விசித்திரமான கூர்மை அவரிடம் இருந்தது.
கேட் திறக்கப்படும் இரும்புச் சத்தம் கேட்டது. கூடவே ஒரு புதிய காலணியின் தடதடப்பு. அது கிராமத்துத் தார்ச் சாலையில் நடக்கும் வழக்கமான செருப்புச் சத்தமல்ல, வழுவழுப்பான டைல்ஸ் தரைகளிலும் விமான நிலையத்தின் சலவை செய்யப்பட்ட பளிங்குத் தளங்களிலும் மட்டுமே நடக்கப் பழக்கப்பட்ட விலை உயர்ந்த காலணியின் சத்தம்.
”ஹபீப்… வருவது ஹாருன்தானே?” என்று திண்ணையிலிருந்து குரல் கொடுத்தார் ஹமீது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பேரன் தலையாட்டினான்.
நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஹாருன் வாசல் படியைத் தாண்டினான். அவன் கைகளில் இருந்த வெளிநாட்டுத் தோல் பெட்டி அந்த எளிய கிராமத்து வீட்டுச் சூழலுக்குச் சற்றே அந்நியமாகப் பளபளத்தது. அவனது உடைகளில் ஒரு புதிய வாசம் இருந்தது. அது கிராமத்து மல்லிகைப் பூக்களின் வாசனையோ மண்ணின் வாசனையோ அல்ல , ஏர் கண்டிஷனர் செய்யப்பட்ட அறைகளின் குளிரும் விமானப் பயணத்தின் களைப்பும் அரபு தேசத்தின் வெம்மையும் கலந்த ஒரு விசித்திரமான மணம்.
”அஸ்ஸலாமு அலைக்கும் உம்மா… அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா…” என்று ஹாருன் தன் குரலை லேசாக உயர்த்திச் சொன்னான். அந்த உச்சரிப்பில் எங்கோ ஒரு மூலையில் அரபு மொழியின் கஃப் எழுத்தின் அழுத்தமும் வெளிநாட்டுத் தொனியும் இழையோடியது.
ஹமீது தன் கைகளைத் துழாவி மகனைத் தொட்டுத் தழுவ முயன்றார். மகனின் மேனியில் பட்ட அந்த மேற்கத்தேய பாணி மேலாடை அவரின் விரல்களுக்குச் சற்று கடினமாகப் பட்டது.
”வாப்பா… எப்படி இருக்கிறீர்கள்? சீஹத், உடல் நலம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே ஹாருன் அவரின் கரங்களைப் பற்றினான்.
ஹமீது சிறிது நேரம் விக்கித்து நின்றார். சீஹத் என்ற வார்த்தை அவருக்குப் பரிச்சயமானதுதான் என்றாலும் தன் சொந்த மகனின் வாயிலிருந்து அது ஒரு அந்நிய மொழிப் பிரயோகம் போல வந்து விழுந்ததை அவர் உடனடியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை.
”எல்லாம் நல்லாதான்பா இருக்கு… வா… உள்ளே வா. உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்றார் அவர், தன் தொண்டையைச் செருமிக்கொண்டே.
அந்தச் சந்திப்பு மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டியதுதான். அந்த வரவேற்பறையில் ஒரு மெல்லிய பனிமூட்டம் போல அமைதி கவிழ்ந்தது. அந்த அமைதி பாசக் குறைவினால் வந்தது அல்ல பல வருடங்களாக வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்துவிட்டுச் சந்திக்கும் இரண்டு மனிதர்களின் ஆன்மாக்களுக்கு இடையே உருவான ஒரு புதிய இடைவெளி.
இரவு உணவு மேசை. அதுவரை அமைதியாக இருந்த வீடு ஹாருனின் வருகையால் திடீரெனச் சுறுசுறுப்படைந்தது போல் இருந்தது. அந்தச் சுறுசுறுப்பில் ஒருவித பதற்றம் கலந்திருந்தது.
உணவுத் தட்டில் பரிமாறப்பட்ட கத்தரிக்காய் கறியையும் மீன் குழம்பையும் பார்த்த ஹாருன் தன் முகத்தை லேசாகச் சுளித்தான். அந்தச் சுளிப்பு மிகச் சிறியதுதான் என்றாலும் ஹமீதின் மங்கலான கண்களின் பார்வையிலிருந்து அது தப்பவில்லை.
”என்ன ஹாருன்… சாப்பாடு பிடிக்கலையா? ஊருல உனக்குப் பிடிச்ச மீன் குழம்பு வச்சிருக்கா உன் பொண்டாட்டி” என்றார் அவர்.
”இல்ல வாப்பா… பரவாயில்லை. ஆனால் அங்கே… அதாவது துபாயில் அல்லது நாங்கள் சாப்பிடும் உணவுகள் கொஞ்சம் வித்தியாசமானவை. அங்கே மசாலாக்கள் அதிகம் இருக்காது. இங்க இருக்கிற இந்த எண்ணெயும் காரமும்… வழக்கமா வயிறுக்குக் கொஞ்சம் கஷ்டம்” என்றான் ஹாருன் தன் கையில் ஸ்பூனை எடுத்துக்கொண்டு.
மேசையிலிருந்த அனைவரும் ஸ்பூன் சத்தத்தைக் கவனித்தனர். அந்த வீட்டில் எப்போதுமே கைகளால்தான் சாப்பிடுவது வழக்கம். ஹாருனும் சிறு வயதில் கைகளால்தான் சாப்பிட்டவன். இப்போது அவனது விரல்கள் ஸ்பூனைப் பிடிப்பதில் காட்டிய நிபுணத்துவம், அவன் கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டதைச் சொன்னது.
”ஸ்பூன் எதுக்கு ஹாரு? சோற்றைப் பிசைஞ்சு சாப்பிடுறதுல இருக்கிற ருசி இதுல வருமா?” என்று கேட்டார் அவர், லேசான புன்னகையுடன். அந்தப் புன்னகையின் பின்னால் ஒரு ஏக்கம் மறைந்திருந்தது.
”இல்ல வாப்பா… அதான்…ஹைக்ஜீன் சுத்தம் முக்கியம் இல்லையா? அங்கே எல்லாரும் அப்படித்தான் பழகிட்டாங்க. அதாவது… அது ஒரு பழக்கம் ஆயிடுச்சு” என்றான் ஹாருன் தன் பேச்சை நியாயப்படுத்த முயன்று.
ஹைக்ஜீன் என்ற வார்த்தை அந்தப் சமையலறையின் மரச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. ஹமீது முதியவர் அந்த வார்த்தையை மனதுக்குள் திருப்பிப் பார்த்தார். காலனித்துவக் காலத்தில் ஆங்கிலம் கிராமங்களுக்குள் நுழைந்தபோது பெரியவர்கள் எப்படிப் பார்த்தார்களோ, அதே போன்றதொரு அந்நியத்தன்மையை இப்போது இந்த அரபுச் சொற்கள் அவரிடம் உருவாக்கின.
ஹமீது தனது இளமைக் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியைப் பார்த்தவர். சுதந்திரத்திற்குப் பின் தேசத்தின் மாற்றங்களைச் பார்த்தவர். தன் சொந்த மண்ணில் உழைத்து, வியர்வை சிந்தி வாழ்ந்தவர். இப்போது தன் மகன் தான் எதற்காகவும் வெளிநாடு அனுப்பவில்லையோ அந்தப் பொருளாதாரத் தேடலுக்காகச் சென்றுவிட்டு அங்கே வேறு ஒரு கலாச்சாரத்தின் சாயலைப் பூசிக்கொண்டு திரும்பியிருப்பதை அவரால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
”உன் பாஷை மாறிப்போச்சு ஹாருன். நம்ம ஊரு பாஷையை நீ மறந்துட்டே போலிருக்கு” என்றார் அவர், மெல்லிய குரலில்.
”அப்படியெல்லாம் இல்ல வாப்பா… ஆனா அங்கே டெய்லி அரபிகளுடன் வேலை செய்யுறதால சில வார்த்தைகள் வாயில வந்துடுது. இட்ஸ் நார்மல் இது சாதாரணமானது” என்றான் ஹாருன் சற்றே தன் குரலை மாற்றி.
அந்த இரவு முழுவதும் அந்த வீட்டில் வார்த்தைகள் இருந்தன. கருத்துக்கள் பரிமாறப்படவில்லை. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத் தவித்த போதிலும் இடையில் ஒரு மொழிபெயர்க்க முடியாத திரை தொங்கிக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை. கிராமத்தின் காற்று வெயிலின் தாக்கத்தால் லேசாகச் சூடேறியிருந்தது. ஹாருன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து தன் மடிக்கணினியைத் திறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வெளிநாட்டு நிறுவனத்தின் ஆன்லைன் வேலைகள் அவனுக்கு இங்கேயும் தொடர்ந்தன.
ஹமீது தன் கைத்தடியைத் ஊன்றியபடி மெல்ல நடந்து வராண்டாவுக்கு வந்தார். மகனின் அருகில் அமர்ந்து, கணினியின் நீல நிற வெளிச்சத்தைப் பார்த்தார். அவருக்கு அந்தத் திரையில் ஓடும் எழுத்துக்களும் கோடுகளும் புரியவில்லை. அது ஒரு மாய உலகத்தின் திரை போல அவருக்குத் தோன்றியது.
”என்ன ஹாருன் இது? எந்நேரமும் அந்தப் பெட்டிக்குள்ளேயே பார்த்துக்கிட்டு இருக்கிறாய்? நம்ம ஊரு தெருக்களை நடந்து பார்த்து மனுஷங்களோடு பேசி எத்தனை நாளாகுது?”
ஹாருன் தன் கணினியிலிருந்து பார்வையை விலக்கி தன் தந்தையைப் பார்த்தான். அவன் முகத்தில் ஒரு சிறிய அலுப்புத் தோன்றியது. அதை உடனே மறைத்துக்கொண்டு சிரித்தான்.
”வாப்பா… இதுதான் இப்போதைய உலகம். நீங்க நினைக்கிற மாதிரி கைல மண்வெட்டியைப் பிடிச்சு வேலை செய்ற காலம் மலையேறிப் போச்சு. இப்போ எல்லாமே டிஜிட்டல் மயம். சிஸ்டம்… நெட்வொர்க்… இல்லாட்டி இங்க நாங்க எப்படிப் பிழைக்கிறது?”
”பிழைப்புன்னா என்ன ஹாருன்? வயித்துப்பாடா? வயிற்றுப்பாட்டைத் தாண்டி மனுஷனுக்குன்னு சில உறவுகள் இருக்குமில்ல? நீ சின்னப் பையனா இருக்கும்போது இந்தத் தெருவுல ஓடி விளையாண்டியது ஞாபகம் இருக்கா? உன்னோட அந்தச் சிரிப்பை நான் இப்போ எங்கேயும் பார்க்க முடியல” என்றார் அவர் தன் மங்கலான கண்களால் மகனின் முகத்தை ஊடுருவப் பார்த்தவாறு.
ஹாருனுக்கு அந்த வார்த்தைகள் ஒரு கணம் சுரீரென்றது. தன் சிறுவயது ஞாபகங்கள் அவனுக்கு நினைவுக்குத்தான் வந்தன. அந்தப் புளியமரத்து நிழல், குளத்துத் தண்ணீர், நண்பர்களுடன் விளையாடிய சில்லு விளையாட்டு… எல்லாமே அவன் மனதில் இன்றும் பசுமையாகத்தான் இருந்தன. அந்த நினைவுகளுக்கும் அவனது இப்போதைய வாழ்க்கைக்கும் இடையில் ஒரு பெரிய கடல் குறுக்கிட்டிருந்தது.
”வாப்பா… உலகம்கிறது ரொம்ப பெருசு. நம்ம ஊர் எல்லைக்குள்ளயே வாழ்ந்தா நம்மால வெளியில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியாது. நான் வெளிநாடு போனது என் குடும்பத்துக்காகத்தானே? உங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டி பிள்ளைகளைப் படிக்க வைக்கிறதுக்குத்தானே?”
”உண்மைதான் ஹாருன்… நீ சம்பாதிச்ச காசுலதான் இந்த வீடு சிமெண்ட் சுவரா மாறிச்சு ஓடு போட்ட வீடு மாடி வீடாச்சு. ஆனா அந்தப் ஓட்டு வீட்டுல நாம பேசிக்கிட்ட சிரிப்பும் சந்தோஷமும் இந்த மாடி வீட்டுல எங்கேயோ தொலைஞ்சுபோச்சுடா…” அவரின் குரல் நடுங்கியது.
அந்தக் கணத்தில் காலனித்துவத்திற்குப் பிந்தைய சமூகங்களின் உளவியல் சிக்கல் அங்கே அப்பட்டமாக வெளிப்பட்டது. ஒரு சமூகம் தன் பொருளாதார மேன்மைக்காக வேறு ஒரு தேசத்தின் பண்பாட்டையும் சூழலையும் சார்ந்து வாழும்போது, அது தன் சொந்த மண்ணின் ஆன்மாவை எப்படி மெல்ல மெல்ல இழக்கிறது என்பதன் நேரடி சாட்சியாக அந்தத் தந்தை மகன் உரையாடல் இருந்தது.
மதிய வேளையில் கிராமத்தின் முதியவர்கள் சிலர் ஹமீதைப் பார்க்க வந்தனர். அவர்கள் ஹாருனைப் பார்த்ததும் உற்சாகமாகக் கை குலுக்கினர்.
”என்ன ஹாருன் துபாய் மாப்பிள்ளை மாதிரி கலர் மாறிட்டே! அங்க என்னதான் விசேஷம்?” என்றார் ஊர்க்காரரான காதர் அக்கா.
”எல்லாம் நல்லாதான் அக்கா… அல்ஹம்துலில்லாஹ். அங்கே பிசினஸ் நல்லா போகுது. ஆனா ‘ஹுனாக்’ அங்கே வேலை ரொம்ப கடினம். ‘தாக்கியத்’ அழுத்தம் ரொம்ப அதிகம்” என்றான் ஹாருன் வழக்கம் போல அரபு வார்த்தைகளைக் கலந்து.
வந்திருந்த முதியவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு அந்த அரபு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தாலும், ஹாருன் வேண்டுமென்றே அவற்றைச் சொல்பவனைப் போல ஒரு தோற்றம் அவர்களுக்கு ஏற்பட்டது. கிராமத்தின் இயல்பான பேச்சு வழக்கைவிட்டு தான் ஏதோ ஒரு உயர்ந்த உலகத்திலிருந்து இறங்கி வந்தவனைப் போல அவன் பேசுவது அவர்களுக்குச் சற்றே உறுத்தலாக இருந்தது.
”தம்பி… வெளிநாடேதான் கிடக்கட்டும். ஆனா நம்ம ஊர் மண் வாசனை மாதிரி வருமா? நம்ம ஊரு தண்ணியைக் குடிச்சாத்தான் உடம்புக்குத் தெம்பு” என்றார் முதியவர்களில் ஒருவர்.
ஹாருன் அதற்குப் புன்னகை மட்டுமே செய்தான். அவனுக்கு அந்த வாதம் காலாவதியாகிவிட்டது போலத் தோன்றியது. அவனுடைய உலகம் இப்போது விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட அறைகள், டாலர் மற்றும் திர்ஹம் மதிப்புகள் கொண்டதாக மாறிவிட்டிருந்தது.
அந்தப் புன்னகையின் பின்னால் ஒரு குற்ற உணர்ச்சியும் இருந்தது. தான் தன் சொந்த மக்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்டோமோ என்ற மெல்லிய பயம் அவன் உள்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள அவன் விரும்பவில்லை. நவீன உலகம் மனிதர்களைத் தற்காத்துக் கொள்ளக் கற்றுக்கொடுத்த கவசங்களை அவன் அணிந்திருந்தான்.
மாலை நேரத்தில் ஹாருன் கிராமத்தின் வீதிகளில் தனியாக நடக்கத் தொடங்கினான். பல ஆண்டுகளுக்கு முன் அவன் ஓடி விளையாடிய அதே மண் பாதைகள் இப்போது தார்ச்சாலையாக மாறியிருந்தன. வீடுகளின் வடிவங்கள் மாறியிருந்தன. அந்த மக்களின் கண்களில் இருந்த அதே ஏக்கமும் வறுமையின் பிடியும் இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதை அவன் கவனித்தான்.
அப்போது அவனது சிறுவயது நண்பன் உமர் எதிரே வந்தான். உமர் வெளிநாடு செல்லவில்லை. இங்கேயே ஒரு சிறிய கடிகாரம் பழுது பார்க்கும் கடையை நடத்திவந்தான்.
”என்ன ஹாருன்… நம்ம ஊரை ஒரு பார்வை பார்க்க வந்தியா?” என்றார் உமர் புன்னகையுடன்.
”ஆமா உமர். ரொம்ப மாறிடுச்சு ஊர். ஆனா நீ இன்னும் அதே கடையிலேயா இருக்கிறாய்? ஏன் வெளிநாடு வர முயற்சி பண்ணல?” என்று கேட்டான் ஹாருன் வழக்கமான தன் மேலாதிக்கத் தொனியில்.
உமர் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் மெலிதாகச் சிரித்தான்.
”நான் இங்கேயே சந்தோஷமா இருக்கேன் ஹாருன். எனக்கு இந்த ஊருக் காற்றுப் போதும். நீ பெரிய இடத்துக்குப் போயிட்ட, நிறைய சம்பாதிக்கிறாய் அது ரொம்ப சந்தோஷம். ஆனா நீ உன்னோட நிம்மதியை எங்கே விட்டுட்டு வந்திருக்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா?”
அந்தக் கேள்வி ஹாருனைத் திடீரென உலுக்கியது. யாரும் எதிர்பாராத நேரத்தில் உமர் கேட்ட அந்த எளிய கேள்வி அவனது மனதின் ஆழத்தில் யாரோ ஊசியால் குத்தியது போன்ற வலியை ஏற்படுத்தியது.
அன்று இரவு முழுவதும் ஹாருனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். நிலவொளி கிராமத்தின் தென்னை மரங்களின் மீது பரவியிருந்தது. தொலைவில் பள்ளிவாசலின் மினாரா அமைதியாக நின்றிருந்தது.
அவன் யோசித்தான். தான் எதற்காக இவ்வளவு தூரம் ஓடினேன்? குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்குவதற்காகத்தான். அதில் வெற்றியும் பெற்றுவிட்டான். தன் தந்தைக்கு நல்ல வீட்டை அமைத்துக் கொடுத்திருக்கிறான். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக்கியிருக்கிறான். ஆனால் இந்த வெற்றியின் விலை என்ன?
தன் தந்தையுடனான உரையாடல்கள் உமரின் கேள்விகள் தான் மறந்துவிட்ட கிராமத்தின் எளிய புன்னகைகள்… இவை எல்லாவற்றையும் அவன் தன் மனக் கணக்கில் கூட்டிக் கழித்துப் பார்த்தான்.
காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தில், தெற்காசிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் செல்லும் புலம்பெயர்தல் பொருளாதார இடப்பெயர்வு மட்டுமல்ல அது ஒரு கலாச்சார அறுபடுதல். மனிதர்கள் தங்கள் உறவுகளைத் தேடி ஓடும் அதே வேளையில் தங்களை அறியாமலேயே அந்த உறவுகளிலிருந்தே அறுபட்டுப் போகிறார்கள். அவர்களின் மொழியும், பழக்கவழக்கங்களும் சிந்தனை முறைகளும் ஒரு புதிய கலப்பினமாக மாறிவிடுகின்றன. அந்த மாற்றத்தை அவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது.
மறுநாள் விடியற்காலை. ஹாருன் எழுந்தபோது வழக்கம் போல் சுற்றியும் ஒரு அமைதி இருந்தது. அவன் வராண்டாவிற்கு வந்தான்.
ஹமீது வழக்கமான நேரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருடைய முகத்தில் எப்போதும் இருக்கும் அந்தத் தளர்வு இன்று சற்று குறைவாகத் தோன்றியது.
ஹாருன் மெல்ல நடந்து சென்று தன் தந்தையின் அருகில் நின்றான். வழக்கம்போல ஆங்கிலத்திலோ அல்லது அரபு கலந்த சொல்லிலோ பேசாமல், அவன் தன் சிறுவயதில் பேசிய அதே கிராமத்துப் பாணியில் பேசத் தொடங்கினான்.
”வாப்பா… நேத்து ராத்திரி எனக்குத் தூக்கமே வரல. உங்ககிட்ட நிறைய பேசணும்னு தோணுச்சு.”
ஹமீது திரும்பி மகனைப் பார்த்தார். அந்த வார்த்தைகளில் இருந்த இயல்புத் தன்மையை அவர் உடனடியாக உணர்ந்தார். அவருடைய மங்கலான கண்களில் ஒரு ஒளி மின்னியது.
”என்னடா ஹாருன்… ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி இருக்கு?” என்றார் அவர், தன் கரங்களால் மகனின் தோளைத் தொட்டுக் கொண்டே.
”ஒன்னுமில்ல வாப்பா… நான் ரொம்ப தூரம் போயிட்டேன்னு நினைச்சேன். ஆனா இப்போதான் புரியுது… நாம் எங்கு சென்றாலும் நம்முடைய உறவுகள் எங்கேயோ இந்த மண்ணில்தான் ஊன்றியிருக்குன்னு.”
ஹமீது மெலிதாகச் சிரித்தார். அந்தப் புன்னகையில் பல வருடங்களின் பாரம் குறைந்திருந்தது.
”அதுதான் மனுஷன் ஹாருன். வெளிநாடு போய் சம்பாதிக்கலாம் பெரிய வீடுகளைக் கட்டலாம் ஆனா மனுஷனோட ஆன்மா அவன் பிறந்த மண்ணைத் தவிர வேற எங்கும் நிம்மதியடைஞ்சதா சரித்திரமே இல்ல.”
அந்த வராண்டாவில் காலை வெயில் மெல்லப் பரவியது. ஹாருன் தன் கைகளில் ஸ்பூனைப் பிடிக்கவில்லை. தன் தந்தையின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். அந்தத் தருணத்தில் அவர்களுக்கு இடையில் எந்தக் மொழிபெயர்ப்பும் தேவையில்லை மௌனமே மிகச்சிறந்த மொழியாக மாறியிருந்தது.
சில வாரங்கள் கழித்து ஹாருன் தன் வெளிநாட்டு வேலைக்காகத் திரும்பச் செல்லும் நாள் வந்தது.
அவனுடைய தோல் பெட்டி வாசலில் தயாராக இருந்தது. இந்த முறை அவனுடைய கண்களில் இருந்த அந்த அந்நியத் திமிர் குறைந்திருந்தது. அதற்குப் பதிலாக ஒரு அமைதியான பக்குவம் அவனிடம் இருந்தது.
”பார்த்துப் பத்திரமா போயிட்டு வா ஹாருன். உன்னோட வேலை முடியறப்போ சீக்கிரமே ஊருக்குத் திரும்பி வந்துடு” என்றார் ஹமீது தன் மகனின் தலையில் கைவைத்தபடி.
”கட்டாயம் வாப்பா… இந்தத் தடவை நான் சீக்கிரமே வந்துடுறேன். நம்ம ஊர் மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு பாருங்க… அடுத்த முறை வரும்போது நான் கைளாலயே சாப்பிடுறேன்” என்றான் ஹாருன் கண்களில் கண்ணீரோடு ஒரு புன்னகையைச் சிந்தியவாறு.
காருடைய இன்ஜின் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஹாருன் காரில் ஏறி அமர்ந்தான். அவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ஹமீது கையை உயர்த்தி அவனுக்கு விடைபெற்றுக் கொண்டிருந்தார்.
ஹாருன் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்
‘சில வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்புத் தேவையில்லை சில உணர்வுகள் இந்த மண்ணின் பிராந்திய மொழியைத் தாண்டி இதயங்களின் ஆழத்தில் மட்டுமே பதிவிற்குக் காத்திருக்கின்றன’.
கார் வேகமாகக் கிராமத்தின் சாலையைக் கடந்து பெருஞ்சாலையை நோக்கிச் சென்றது. பின்னால் அந்தத் தென்னை மரங்களும், ஹமீதின் வடிவும் தூரத்தில் மறையத் தொடங்கின. ஹாருனின் ஆன்மா மட்டும் அந்த மண்ணோடு இன்னும் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்தது.
……
துபாயின் பன்னாட்டு விமான நிலையத்தின் கண்ணாடிச் சுவர்களுக்கப்பால் எரியும் அந்தச் செயற்கையான வெளிச்சம் ஹாருனின் முகத்தில் பட்டுத் தெறித்தது. சுற்றிலும் ஆங்கிலமும் அரபியும் மலையாளமும் தமிழும் கலந்த இரைச்சல். தள்ளாடி நகரும் சாமான்கள், அவசரமான காலடிகள், விமானத்தின் இறக்கைகளில் மோதும் வளைகுடா வெப்பம் எல்லாமே வழக்கம் போலவே இருந்தன. இம்முறை அந்தச் சூழலை ஹாருனால் முன்போல எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
விமான இருக்கையில் அமர்ந்து தன் லேப்டாப்பைத் திறந்தபோதும் அவனது காதுகளில் கிராமத்துக் காற்றின் சலசலப்பும் தன் தந்தை ஹமீதின் நடுங்கும் குரலும்தான் ஒலித்துக்கொண்டிருந்தன.
”நம்ம ஊரு மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு பாருங்க…”
புறப்படும்போது தான் சொன்ன அந்த வார்த்தைகள் அவனுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. அது உணவைப் பற்றிய ஏக்கமல்ல தான் எங்கோ தொலைத்துவிட்டு வந்த தன் சுயத்தின் மீதான மெல்லிய தவிப்பு.
அலுவலகத்தின் குளிரூட்டப்பட்ட அறை. மேசையின் மீது குவிந்து கிடக்கும் ஃபைல்கள். குளிர்ந்த காற்று தோலைத் தீண்டினாலும் அவனுக்குள் ஒருவித வெக்கை வியாபித்திருந்தது. மேலாளர் அவனிடம் ஏதோ ஆங்கிலத்திலும் அரபியிலும் கலந்து பேசினார். வழக்கமாக அவன் உடனடிப் புன்னகையோடு எழுந்து பதில் சொல்வது வழக்கம். இன்று அந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு முன்பு அவனுக்குள் ஒரு விநாடி இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளியில் அவனது கிராமத்துத் திண்ணையும் உமரின் கேள்வியும் வந்து நின்றன.
”நீ உன்னோட நிம்மதியை எங்கே விட்டுட்டு வந்திருக்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா?”
அந்தக் கேள்வி ஒரு கூர்மையான முள் போல அவனது அலுவலக நாற்காலியிலும் குத்திக் கொண்டிருந்தது.
மாதங்கள் நகர்ந்தன. தொலைதூர தேசத்தில் காலத்தின் ஓட்டம் கடிகார முட்களின் வேகத்தை விடவும் துரிதமானது. ஹாருனின் வாழ்க்கையும் அதே வேகத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. டாலர்களும் திர்ஹம்களும் அவனது வங்கிக் கணக்கில் ஏறிக்கொண்டிருந்தன. பெரிய நிறுவனத்தின் உயர் பதவி சக ஊழியர்களின் பாராட்டுக்கள் நவீன வசதிகள் நிறைந்த அடுக்குமாடி அறை எல்லாமே கச்சிதமாக இருந்தன.
அவன் தன் இரவுகளில் தனியாக இருக்கும்போது அந்த அறை அவனுக்கு ஒரு பெரிய வெளிச்சக் கூண்டைப் போலத் தோன்றும்.
ஒரு நாள் நள்ளிரவில் அவனுக்கு ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. போனை எடுத்ததும் எதிர்முனையில் தம்பியின் பதட்டமான குரல் கேட்டது.
”நாநா… வாப்பாவுக்கு உடம்பு திடீர்னு முடியாமப் போயிடுச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம்.”
ஹாருனின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்றுவிட்டது போலிருந்தது. விமான நிலையத்தின் பளிங்குத் தளங்கள், பாஸ்போர்ட் விசா கட்டுப்பாடுகள், நிறுவனத்தின் காலாண்டு இலக்குகள் அனைத்தும் அந்த விநாடியில் அர்த்தமிழந்து போயின.
”நான்… நான் உடனே கிளம்புறேன்டா…” என்று திணறியவாறு போனை வைத்தான் ஹாருன்.
அடுத்த சில மணி நேரங்களில் அவன் விமானத்தில் ஏறிவிட்டான். அந்தப் பயணம் அவனுக்கு இதுவரை செய்த எந்தப் பயணத்தையும் விட மிக நீண்டதாகவும் துயரமானதாகவும் பட்டது. விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொட்டபோது அவனது கண்களில் தூக்கமின்மையும் குற்றவுணர்ச்சியும் தேங்கியிருந்தன.
கிராமத்து வீடு முன்பு எப்போதும் போல அமைதியாக இருந்தது. அந்த அமைதியில் இம்முறை ஒரு விதமான கனத்த சோகம் கவிழ்ந்திருந்தது. ஹாருன் வாசல் படியைத் தாண்டி உள்ளே நுழைந்தபோது அவனது கால்கள் தள்ளாடின.
ஹமீது படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார். அவருடைய மூச்சு வாங்குவது மெலிதாகக் கேட்டது. ஹாருன் விரைந்து சென்று தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டான். அந்தத் தோல் சுருங்கிய கைகள் முன்பு போல அவனுக்கு அந்நியமாகத் தெரியவில்லை. அது அவனது சொந்த உறவின் எச்சம்.
”வாப்பா… நான் வந்துட்டேன் ஹாருன் வந்திருக்கேன்…” என்று அவன் குரல் உடைந்து அழுதான்.
அவர் தன் மங்கலான கண்களை மெல்லத் திறந்தார். மகனின் முகத்தை அடையாளம் கண்டுகொள்ள சில கணங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் அவருடைய வறண்ட உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
”நீ… சீக்கிரமே… வருவேன்னு தெரியும் ஹாருன்…” என்றார் அவர் மிக மெல்லிய குரலில்.
”வாப்பா… உங்களுக்கு ஒண்ணுமில்லை. நான் உங்களை நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்றேன். நாம இன்னும் நிறைய பேசணும்…”
ஹமீது தன் கையைத் தூக்கி மகனின் வாயைத் மெல்லத் தடுத்தார்.
”போதும் ஹாருன்… மனுஷன்… எங்கேயோ போயிடுறான்… ஆனா அவனோட நிழல் எப்பவுமே அவன் பிறந்த மண்ணுலதான் இருக்கும்… என்னோட பயணம் முடிஞ்சிடுச்சு… ஆனா உன்னோட பயணம்… இன்னும் இருக்கு…”
சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் கிராமத்தின் மாலையகப் பொழுதில் அவரின் மூச்சு அமைதியாக அடங்கியது.
நாட்கள் கடந்தன. சடங்குகள் யாவும் முடிந்தபின் அந்த வீடு ஒரு புதிய மௌனத்திற்குள் மூழ்கியது.
ஹாருன் இப்போது அந்தத் திண்ணையில் தன் தந்தையின் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் அணிந்திருந்த வெளிநாட்டு ஆடைகள் இப்போது அந்த மண்ணின் தூசியில் நனைந்திருந்தன. அவனது மடிக்கணினி மூடிக்கிடந்தது. அதில் எந்த மின்னஞ்சலும் அவனுக்கு இப்போது முக்கியமாகத் தெரியவில்லை.
அவன் கைகளில் ஒரு டைரி இருந்தது. அது ஹமீது தன் இளமைக் காலத்தில் எழுதியது. அதன் பக்கங்களை அவன் புரட்டினான். அதில் ஆங்கிலத்திலோ அரபியிலோ அல்ல அந்த எளிய கிராமத்துத் தமிழ் மொழியில்தான் வாழ்வின் உண்மைகள் எழுதப்பட்டிருந்தன.
வெளிநாட்டின் பணமும் வளர்ச்சியும் அவனுக்குத் தேவைகளாயிருக்கலாம். அவனது ஆன்மா அவனது மொழி, அவனது உறவுகள் அனைத்தும் இந்த மண்ணின் ஆழத்தில்தான் புதைந்திருக்கின்றன என்பதை அவன் முழுமையாக உணர்ந்தான்.
தென்னை மரங்களின் மட்டைகள் ஒன்றோடு ஒன்று உரசிச் சலசலத்தன. காற்று மென்மையாக வீசியது. ஹாருன் தன் கண்களை மூடிக்கொண்டு, அந்தச் சத்தத்தை ஆழமாகச் சுவாசித்தான்.
இப்போது அவனுக்கு எந்த மொழிபெயர்ப்பும் தேவையில்லை. மனிதர்களின் மௌனமும் இந்த மண்ணின் வாசனையும், இதயங்களின் துடிப்பும் ஒரே மொழியைத்தான் பேசிக்கொண்டிருந்தன அது என்றும் மாறாத சொந்த மண்ணின் தாய்மொழி.
000

ஏ.நஸ்புள்ளாஹ் 1974
இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பின்நவீனத்துவக் எழுத்தாளர்.
இலங்கை திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவைப் பிறப்பிடமாக கொண்டவர். இவர்,நாவல், கவிதை,சிறுகதை, திறனாய்வு மற்றும் நாவல்த்துறையில் பின்நவீனத்துவச் சிந்தனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். கிண்ணியா மண்ணிற்கு முதல்முறையாக ‘இலங்கை அரச சாகித்திய அகாதமி’ விருதைப் பெற்றுத்தந்த ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’.[2022] எனும் கவிதை நூல் இவரது மிகமுக்கிய படைப்பாகும்.

