–மா.அன்பரசு
“அக்கா… புதுசா வந்த சேலை பாருங்க… பிடிக்கலன்னா வாங்க வேண்டாம்…”
அந்தக் குரலை அந்த ஊரில் அறியாதவர்கள் இல்லை.
காலை எட்டு மணிக்குள் பழைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டியில் துணி மூட்டைகளை கட்டிக்கொண்டு தெருத்தெருவாகப் புறப்பட்டுவிடுவார் செல்வராஜ். மாலை திரும்பும்போது வண்டியில் துணிகள் குறைந்திருக்கும் ஆனால் தோள்களில் சோர்வு மட்டும் கூடித்தான் இருக்கும்.
அந்தச் சோர்வைக் கமலா மட்டுமே வாசிக்கத் தெரிந்தவள்.
“இன்று எவ்வளவு விற்றீங்க?”
“போதும்… நாளைக்கு மூத்தவளோட செமஸ்டர் பீஸ் கட்டலாம்.”
அந்த ஒரு வாக்கியம்தான், அவர்களுடைய வறுமையைக்கூட சுவையாக மாற்றியது.
கமலா வீட்டிலேயே தையல் வேலை செய்தாள். இரவில் கணவர் கொண்டு வந்த துணிகளை மடிப்பாள். கிழிந்திருந்தால் கண்ணுக்கே தெரியாமல் தைத்துவிடுவாள். பகல் நேரங்களில் பிறர் கொடுத்த பிளவுஸ், சுடிதார், பாவாடைகளைத் தைத்து கிடைத்த பணத்தை ஒரு பழைய தகர டப்பாவில் போடுவாள்.
அந்த டப்பாவில் அவள் ஒரு காகிதத்தை ஒட்டி வைத்திருந்தாள்.
“என் பொண்ணுங்க வாழ்க்கை.”
அந்த டப்பாவில் ஒருபோதும் அவர்கள் கைக்காசு வைக்கவில்லை. பிள்ளைகளின் கட்டணம், புத்தகம், பேருந்துச் செலவு, திருமணச் செலவு. அதற்காக மட்டுமே அது திறக்கப்படும்.
மூன்று மகள்களும் பட்டப்படிப்பு முடித்தார்கள்.
கல்லூரி விழாவில் பட்டம் வாங்கிய நாளில் செல்வராஜ் பெருமையோடு சொன்னார்.
“நான் பெரிய சொத்து எதுவும் சேர்க்கல… உங்களுக்குப் படிப்பு கொடுத்திருக்கேன். அதுதான் நான் விட்டுச் செல்லப் போகும் சொத்து.”
அப்போது “அப்பா…” என்று மூன்று பேரும் அவரை அணைத்துக்கொண்டார்கள்.
காலம் மனிதர்களை மாற்றுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை.
முதல் மகளின் திருமணத்திற்குப் பிறகு வீட்டில் இருந்த சேமிப்பு பூஜ்ஜியமானது.
“மீண்டும் சம்பாதிப்போம்,” என்றார் செல்வராஜ்.
மீண்டும் தெருக்கள். மீண்டும் வியாபாரம்.
மீண்டும் சேமிப்பு.
இரண்டாவது மகளையும் கரை சேர்த்தார்.
மூன்றாவது மகளின் திருமணம் வந்தபோது, விற்க எதுவும் இல்லை.
இறுதியில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்றார்.
வீட்டை ஒப்படைக்கும் முன் கமலா வாசல் படியைத் தொட்டாள்.
அந்த வாசலில் மூன்று மகள்களும் முதல் முறையாக நடந்தது நினைவுக்கு வந்தது.
அந்த வீட்டின் ஒவ்வொரு சுவரும், மூன்று மகள்களின் குழந்தைப் பருவத்தை அமைதியாகச் சுமந்துகொண்டிருந்தது. முதல் நடையிலிருந்து திருமண நாள் வரை. அதை வாங்கியவருக்கு அவை வெறும் சுவர்கள், அறைகள்.
கமலாவுக்கு அது வாழ்க்கை.
“வீடு போகட்டும் கமலா… பிள்ளைகள் நல்லா இருக்கணும்.”
அதுதான் செல்வராஜின் கடைசி ஆறுதல்.
வாடகை வீட்டில் வாழ்க்கை ஆரம்பமானது.
சில மாதங்களிலேயே விபத்து. வண்டி கவிழ்ந்தது. காலில் பலத்த காயம்.
“இனிமேல் அதிகம் நடக்கக் கூடாது,” என்றார் மருத்துவர்.
நடக்க முடியாத மனிதனால் தெருத்தெருவாக வியாபாரம் செய்ய முடியுமா?
வருமானம் நின்றது. மருந்துச் செலவு ஆரம்பமானது. வாடகை பாக்கி ஏறியது.
ஒரு இரவு கமலா மூன்று மகள்களுக்கும் மாறிமாறி அழைத்தாள்.
“ம்மா… எங்களால் தனியா இருக்க முடியல. உங்க வீட்டுல ஒரு மூலை இருந்தா போதும். உங்களுக்கு சுமையா இருக்க மாட்டோம்.”
மூத்த மகள் தூத்துக்குடியில் இருந்தாள்.
“அம்மா… எங்க வீட்டுல இடம் ரொம்ப சின்னது.”
இரண்டாவது மகள், கேரளாவின் காசர்கோட்டில் இருந்தாள்.
“மாமியாரும், மாமனாரும் இருக்காங்க. இங்க எப்படி?”
மூன்றாவது மகள் இராமநாதபுரத்தில்.
“கொஞ்ச நாள் பார்த்துக்கோங்க.”
அந்த “கொஞ்ச நாள்” மீண்டும் வரவில்லை.
சில வாரங்களுக்குப் பிறகு மூவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
சென்னையிலிருந்து தொலைவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலிருந்த ஒரு முதியோர் இல்லத்தில் அவர்களைச் சேர்த்தார்கள்.
“இங்க நல்லா பார்த்துக்குவாங்க.”
அதுதான் அவர்கள் சொன்ன கடைசி வாக்கியம்.
முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி. ஒவ்வொருவருக்கும் உயிருடன் இருக்கும் பிள்ளைகள். ஆனால் உடனில்லாத பிள்ளைகள்.
ஒவ்வொரு மாலையும் கமலா வாசலில் அமர்ந்திருப்பாள். வாசல் திறக்கும் சத்தம் கேட்டாலே எழுந்து நிற்பாள். “நம்ம பொண்ணுங்க வந்திருப்பாங்களோ?”
யாரோ வேறொருவரைப் பார்க்க வந்திருப்பார்கள். அவள் மீண்டும் ஏமாற்றத்துடன் உட்கார்ந்துகொள்வாள்.
தீபாவளி வந்தது.
மற்ற முதியவர்களின் பிள்ளைகள் புதிய வேட்டி, சேலை, இனிப்பு கொண்டு வந்தார்கள்.
கமலா மட்டும் பழைய சேலையை மடித்தபடி சிரித்தாள். “நினைவிருக்கா? நம்ம மூணு பொண்ணுங்க தீபாவளி டிரஸ் போட்டுட்டு வீடு முழுக்க ஓடுவாங்களே…”
செல்வராஜ் சிரிக்க முயன்றார். ஆனால் கண்கள் மட்டும் நனைந்தன.
ஒருநாள் இரவு கமலா மெதுவாகக் கேட்டாள்.
“நம்ம பொண்ணுங்க நம்ம மேல கோபமா இருக்காங்களா?”
செல்வராஜ் அமைதியாக இருந்தார்.
அவளே பதில் சொன்னாள்.
“நம்ம கிட்ட இருந்ததெல்லாம் அவங்களுக்கே கொடுத்துட்டோம். அதனாலதான் இப்ப அவர்களோட பிள்ளைகளுக்கு எதுவும் செய்ய முடியல. அதுக்குத்தான் கோபமோ… என்னவோ …”
முதல் இரு மகள்களின் மனதில் ஒரு குறை மட்டும் வளர்ந்துகொண்டே இருந்தது.
“எங்க பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டினு எதுவும் செய்யல.” அவர்கள் மறந்துவிட்டார்கள்.
ஒருகாலத்தில், தாங்கள் படித்த புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்திலும், அணிந்த ஆடைகளின் ஒவ்வொரு நூலிலும், உண்ட ஒவ்வொரு உணவுத் துளியிலும், அந்த இரு முதியவர்களின் பசியும், உழைப்பும் கலந்திருந்ததை. மூன்றாவது மகளுக்கு வேறு கோபம்.
“எல்லாத்தையும் அக்காக்களுக்கே செலவு பண்ணிட்டாங்க.”
அவளுக்கு புரியவில்லை.
அவளுடைய திருமணத்திற்காகவே வாழ்ந்த வீடு விற்கப்பட்டது.
ஒரு அதிகாலையில் கமலா விழிக்கவில்லை.
கமலா இறந்த செய்தியைச் சொல்ல, நடுங்கும் கைகளால் மூத்த மகளின் எண்ணை அழுத்தினார் செல்வராஜ்.
“ம்மா… உங்க அம்மா… நம்மள விட்டுட்டுப் போயிட்டாம்மா…”
மறுமுனையில் சில நொடிகள் அமைதி.
“அப்பா… உடனே கிளம்பணும்னுதான் நினைக்கிறேன். ஆனா வேலை விசயமா வெளியூர்ல இருக்கேன். இங்கிருந்து வர பத்து மணி நேரத்துக்கு மேல ஆகும். முக்கியமான வேலை. அதனால அம்மாவை நீங்களே பார்த்துக்கோங்க… மன்னிச்சிடுங்க அப்பா.”
அவளது குரலில் குற்றவுணர்வு இருந்தது.
இரண்டாவது மகளுக்கு அழைத்தார்.
“அப்பா… என்னால இப்ப வர முடியாது. பிள்ளைகளுக்கு எக்ஸாம் நடக்குது. செலவுக்கு எவ்வளவு வேணுமோ சொல்லுங்க. உடனே பணம் அனுப்புறேன்.”
அவளது குரலில் பணம் இருந்தது ஆனால் பாசம் இல்லை.
மூன்றாவது மகளின் எண்ணை அழுத்தினார்.
“அப்பா… நான் வந்தா என்ன மாறப்போகுது? அக்காக்கள் இருக்காங்களே… அவங்களே பார்த்துக்கட்டும்.” அவ்வளவுதான்.
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
செல்வராஜ் கைப்பேசியை மெதுவாக மூடிவைத்தார்.
கமலாவின் முகத்தை ஒரு முறை பார்த்தார்.
“நீ வாழ்நாள் முழுக்க காத்திருந்தது… இந்த மூணு குரல்களுக்காகத்தானா, கமலா…”
என்று மெதுவாகக் கேட்டார். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல, அந்த அறையில் கமலா உயிரோடு இல்லை. கமலாவின் உடலருகே சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தார் செல்வராஜ். மகள்கள் யாரும் வருவதாய் இல்லை.
இறுதியில், முதியோர் இல்லத்தில் இருந்தவர்களே கமலாவின் இறுதிப் பயணத்தில் உறவினர்களாக நின்றார்கள்.
அன்று முதல் செல்வராஜ் உயிரோடு இருந்தார் ஆனால் வாழவில்லை.
தினமும் கமலாவின் புகைப்படத்திடம் பேசுவார்.
“இன்னைக்கு வந்திருப்பாங்களா?”
பதில் இல்லை.
உணவு குறைந்தது. உறக்கம் குறைந்தது.
மனம் உடைந்து இறுக்கமானது.
மனிதன் சில நேரங்களில் நோயால் இறப்பதில்லை.
மறக்கமுடியாத நினைவுகளால் இறக்கிறான்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, கமலாவின் புகைப்படத்தை மார்பில் வைத்தபடியே அவர் உயிர் விட்டார். முதியோர் இல்ல நிர்வாகம், மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவித்தது.
மூத்த மகள் மட்டும், “நாளைக்கு வந்துடுறேன்,” என்றாள்.
தூத்துக்குடியிலிருந்து அவள் வந்தாள்.
இரண்டாவது மகள் காசர்கோட்டிலிருந்து, “வர முடியாது. செலவுக்கு ஐயாயிரம் அனுப்புறேன்.”
மூன்றாவது மகள், “அக்கா இருக்காளே… அவளே பார்த்துக்கட்டும்.”
அவ்வளவுதான். இருவரும் வீடியோ அழைப்பில்கூட இணையவில்லை. தகன மேடையில் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது மூத்த மகளின் கைப்பேசி ஒலித்தது.
தங்கையின் குரல்.
“முடிஞ்சுதா?”
“இல்ல.”
“சீக்கிரம் முடிச்சிடு. குளிச்சிட்டு நான் ஆபீஸ் போகணும்.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
நெருப்பு மெதுவாக உடலை முழுவதும் விழுங்கிக்கொண்டிருந்தது.
வாழ்நாள் முழுவதும் மூன்று மகள்களைக் கரை சேர்த்த மனிதன்,
கடைசியில் அந்நியர்களின் தோளில்தான் கரை சேர்ந்தான்.
00


