–அரவிந்த் வடசேரி

செல் ஃபோன் மணியடிக்கிறது.

‘உங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் உங்களை நாடி  வரும் விருந்தினர். நீங்கள் எவ்வளவு தாமதாக எடுத்துப் பேசுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்த விருந்தினரின் வருகையினை நீங்கள் விரும்பவில்லை எனப் பொருள். இரண்டு முறை மணி ஒலித்து முடியும் முன் எடுத்துப் பேசுவதுதான் நற்பண்பு.”

வேலைக்குத் தேர்வாகி பயிற்சியில் இருந்தபொழுது சொன்னது. 35 ஆண்டுகாலப் பணி முடிந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள்  கடந்தும் நினைவில் இருந்தது ஆனந்தராஜாவுக்கு. திறன்பேசியின் மாயப்பிடியிலிருந்து விலகியிருக்கும் பொருட்டு காலையில் செடிகளுக்கு நீரூற்றும் நேரமும், நடைபயிற்சியின்போதும்  ஃபோனைத் தொடுவதில்லை என சங்கல்பம் செய்துள்ளார் ராஜா. வரும் அழைப்புகளில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடும் வேண்டாத வியாபார விளம்பர அழைப்புகள்தான். அழைக்கும் நேரத்தைக் கொண்டு வேண்டியவர்களாக இருக்குமா, இருந்தால்  யாராக இருக்கும், எதற்காக அழைக்கிறார்கள் என்பதையெல்லாம் ஏறக்குறைய ஊகித்துவிட முடிகிறது பணி நிறைவு அடைந்த பிறகு. பேச்சைவிட இப்பொழுதெல்லாம் மெசேஜ்தான். முடிவற்ற மெசேஜ்கள்.      

“அப்பாக்கு டூட்டி வந்திருச்சம்மா” ஜனனி ஃபோனைக் கொண்டுவந்து கையில் தந்தாள்.

“பாட்டிதானே கூப்பிடறாங்க, எடுக்கறுதுக்கென்ன?” பாட்டியுடன் பேச அவள் விரும்புவதில்லையென அவருக்குத் தெரியும்.

“அம்மாவும் மகனும் ஏதாவது சீக்ரெட் பேசுவீங்க, நான் எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டு.”

பாட்டியின் அன்பில் போதுமான முன்னுரிமை கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அவளுக்கு. கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டை எட்டியும் கூட சிறு வயது ஏக்கம் போகவில்லை. இன்னொரு பேத்திக்கும் பேரனுக்கும் பிறகு,வேறு இரு பேரன்களுக்கு முன்னர் என முக்கியத்துவம் அற்ற ஸ்தானத்தில் பிறக்கும் பெண்ணிற்கு எவ்வளவு தான் மதிப்பிருக்கும்?   

“ஆமா, இருக்கு ரகசியம் அஞ்சாறு. எங்கேயாவது போகணுமாயிருக்கும். வயசானாலும் பழக்கம் விடுமா? ஃபோனை வெய் அங்கேயே. வந்து பேசிக்கிறேன் .”

தான் இப்படிச் சொன்னது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கக் கூடும் என எண்ணினார் ஆனந்தராஜா .

“உன் கிட்டே எவ்வளவு முறை சொல்லியிருக்கேன் இந்த மாதிரி டிரஸ் எல்லாம் பெட் ரூமோட நிறுத்திக்கணும்னு”, அவர் சொன்னது காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை அவள்.

ஹாஸ்டல் வாசம் அவளது உடைத் தேர்வில் ஏற்க முடியாத  மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. மைக்ரோ ஷார்ட்ஸ், கிராப்  டாப்ஸ், மைக்ரோ ஸ்கர்ட் என என்னென்னவோ சொல்கிறாள். ஆரம்பத்தில், இந்த ஊரிலிருக்கும் யாராவது பார்த்து விடுவார்களோ எனக்  கொஞ்சம்  பதற்றமாகக்கூட இருந்தது. காலப்போக்கில் அவர்களுக்கும் பழகி விட்டது. இருந்தாலும் வெளியாட்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம் இன்னமும் போகவில்லை. சின்னப் பெண்ணா அவள்? ஓரிரு வருடங்களில் கல்யாணம் முடிக்க  வேண்டியவள். கண்ணில் படும்பொழுதெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார் ராஜா.

‘நீங்க மட்டும் தானேப்பா இருக்கீங்க’ என்கிறாள் மகள்.

‘வயசுக்கு வந்திட்டா அப்பனும் அண்ணன் தம்பியுமே ஆம்பிளைங்கதான்’ என அவரது பாட்டி அக்காவிடம் சொன்னது போலச்  சொல்லும் நாகரிகமற்றவனில்லையே ராஜா! ஆடையற்று இருப்பதே இயற்கை, அதுவே வசதியானதும்கூட. ஆடை குறைக்க வாய்த்துவிட்டால் பிறகு அந்த சொகுசை விடுவது சிரமம்.                                           

அவரது அம்மா நாலு தெரு தள்ளித்தான் அண்ணனுடன் இருக்கிறாள். அக்காவும் பக்கத்துத் தெருவில்தான்.

‘அதிர்ஷ்டக்காரங்க, தினமும் பாத்துக்கலாமே’ என்பார்கள் சிலர். எங்கே பார்ப்பது, தொலைபேசியில்கூட தேவையிருந்தால் மட்டும்தான் பேச்சு.

‘ஒரு நாத்தனார் கொழுந்தனார் வீட்டுக்கு விருந்துக்கு போய் நாலு நாள் இருக்க முடியுதா. எல்லாரும் பக்கத்துத் தெருக்காரங்க’, ராஜாவின் மனைவியின் குறைகளில் இதுவும் ஒன்று.

குடும்பத்தின் ஒருங்கிணைப்பு விசையாக இருந்தவள் அம்மா. இன்னமும்கூட அப்படித்தான் இருக்கிறார் என நினைத்தார் ராஜா. அந்தக் காலத்தில், எந்த உறவினர் வீட்டில் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக ஆஜராகி விடுவாள். அவள்தான் கடைசியாக  வெளியேறுபவளாகவும் இருப்பாள். விருந்தாளிகள் அனைவரும் கூடத்தில் கேளிக்கையிலிருக்க இவள் மட்டும் அடுக்களையில் வீட்டு மனுஷிகளுக்கு ஒத்தாசையாய் நிற்பாள். அது ராஜாவின் வீட்டினருக்கு அவமானமாக இருக்கும்.

‘நீங்களும் மத்தவங்களைப் போல கெத்தா விருந்தாளி மாதிரி ஹால்லேயே இருக்க வேண்டியது தானே’, என்பார்கள் அவர்கள். அவள் எதுவும் பேசமாட்டாள்.

வாராவாரம் காமாட்சியம்மன் கோயில், வருடத்தில் ஓரிரு முறைகளாவது குலதெய்வம் கோயில், சும்மாவேணும் சில உறவினர்களையும் தோழமைகளையும் பார்த்து வருவது என பயணித்துக் கொண்டிருந்தவர் அம்மா. மூப்பெய்தியதிலிருந்து  வருடத்தில் ஒரு முறை குலதெய்வம் கோவில். எப்போவாவது முடியாமல் இருக்கும் உறவினர்களையோ தோழமைகளையோ பார்க்கப் போவது என தனது பயணங்களைச் சுருக்கிக் கொண்டார்  அவர். வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும்கூட அனைவருடனும் தொடர்பில் இருக்கிறார். வெளியே திரிய வாய்ப்பிருக்கும் ராஜாவிற்கே அவர்தான் செய்திச்சுடர். வெளியே போகவர அம்மாவுக்கு அன்றும் இன்றும்  வழித்துணை ராஜா  தான். கடைக்குட்டி என்பதால் சிறு வயதிலிருந்தே ஒட்டிக்கொண்ட பழக்கம்.  இருந்தாலும் அவ்வளவு எளிதாகவெல்லாம் உடன் செல்ல ஒத்துக் கொள்ள மாட்டார் ராஜா.

தண்ணீர் ஊற்றி முடிந்தும்கூட சிறிது நேரம் அம்மாவை அழைக்கவில்லை அவர். என்ன வேலை வந்திருக்கிறது என்பதை அறிய மனைவியும் மகளும் ஆவலாய் இருப்பார்கள் என்பது ராஜாவுக்கு தெரியும். பொறுக்கமாட்டாமல் பிரேமா கேட்டாள்  

‘அம்மா கூப்பிட்டதை மறந்துட்டீங்களா?“ அப்படி வா வழிக்கு.

“ஓ ஆமால்லே” என ஃபோனை எடுத்தார். 

“கூப்பிட்டீங்களா?“

“ஆமா. சூலூர் வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரலாமா?”

“என்ன விசேஷம்”

“என்கூடப் படிச்ச சுந்தரமூர்த்தியை ஞாபகம் இருக்கில்லே? நம்ம தூரத்துச்  சொந்தமும் கூட.” ராஜாவுக்கு நேற்று பார்த்தவர்களையே இன்று ஞாபகம் இருக்காது.

“என்னவாம் அவருக்கு.”

“அவனுக்கு ரொம்ப முடியலையாம் கனடாவிலிருந்து அவன் மகனெல்லாம் கூட வந்திருக்கானாம்.”

“என்னைக்கு போகணும்?

“இங்கே பக்கம் தானே, ஒரு பத்து மணிப்போல போனா சாப்பாட்டுக்கு திரும்பி வந்துடலாம்.”

“இன்னைக்கேவா! இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லே?”

“அவன் சம்சாரத்தோட சித்தி மக சாந்தி இங்கே இளங்கோ நகர்லே  தானே இருக்கா. அவ நைட்டு தான் கூப்பிட்டு சொன்னா. அவன் பையன் வந்து ரெண்டு மாசம் ஆச்சாமா. நாளைக்கு திரும்பிப் போறானாம். இன்னைக்கு போனா அவுங்களையும் பாக்கலாமே.”

இது தான் அம்மா!

“அவன் வந்து உங்களைப் பாக்கணுமா நீங்க போயி பாக்கணுமா?” என்றார் ராஜா ஆத்திரமாக.  

“அவனை சின்னப் பையனா இருக்கும்போது பாத்தது. அவனுக்கு என்னை ஞாபகம் இருக்கோ என்னமோ!”

ஓய்வு பெறுவதற்கு முன்னர் இது போன்ற சந்தர்ப்பங்களில் தப்பித்துக்கொள்ள வேலை ஒரு நல்ல சாக்காக கை கொடுக்கும். ‘முக்கியமான மீட்டிங் இருக்கு’ என்றால் வேறு எந்தப் பேச்சும் இருக்காது. இப்பொழுது அது அடைபட்டுவிட்டது.

“ஒனக்கு தான் கடவுள் புண்ணியத்தில சொந்தக் கார் இருக்கே, ஒரு நடை சட்டுனு போயிட்டு உடனே திரும்பீடுவோம்.” அவள் இப்படி சொல்லும் பொழுது தனது சௌபாக்கியங்களில் பங்கு கோர அவளுக்கும் உரிமை உண்டு என உணர்த்துகிறாளோ என நினைப்பார் ராஜா.   

“கார் சொந்தம்னா சும்மாவா ஓடும். பெட்ரோல் போட வேண்டாமா? சர்வீஸ் பண்ண வேண்டாமா?”

“உன்கிட்டே அந்தளவுக்கு கூட பணம் இல்லியா என்ன?”

“ஆமாம், எல்லாருக்கும் இது தான் நெனப்பு. எனக்கு கொல்லேல காய்க்குது பணம்.”

“சரி, சரி, பிரேமா கிட்டே பேசீட்டு சொல்லு.” பொண்டாட்டிக்கு பயந்துதான் அவர் ஒத்துக்கொள்வதில்லை என்பது பொழிப்புரை. 

“அவ என்ன வேண்டாம்னா சொல்லப்போறா, இல்லை அவ வேண்டாம்னா நான்தான் விட்டுறுவேனா?”

இப்படிக் கொஞ்சம் நேரம் பொய்க்கடிச் சண்டை போட்டுத்தான் எப்பவும் முடியும் இந்தப் பேச்சு.

“இனி இப்போ அவன் இறந்துட்டாக்கூட போக வேண்டாம். நான் சொல்லீட்டே வந்துடறேன்”

“இனி நீ செத்தா எல்லாம் வரமாட்டேன். தப்பா நெனச்சுக்காதேன்னா சொல்லப் போறீங்க”

“அப்படியா சொல்வாங்க. நீ ரெடியாகி வா. பத்து மணிக்கே வரணும்“

“பத்து மணிக்கா? பாக்கறேன்.”

பிரேமா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்திருப்பாள் போல. 

“சரி, சரி ரெடி ஆகுங்க சீக்கிரம். டாண் னு, ஒம்பதே முக்காலுக்கு ஃபோன் வருமே. இப்பவே ரெடியாத்தான் இருக்காங்களோ என்னமோ?” பேசி முடித்ததும் பிரேமா சொன்னாள். 

பாதி கிண்டல் என்றாலும் அது மறைமுக ஒப்புதல் என்பது ராஜாவுக்கு தெரியும். ‘வயசான காலத்திலே அவுங்க வேற யாரை கேப்பாங்க.’ 

எதிர்பார்த்தது போலவே ஒன்பதே முக்காலுக்கு அழைப்பு வந்தது.

“நான் வந்துகிட்டே இருக்கேன். நீங்க ரெடிதானே? வழி தெரியுமா?”

“புதுவீடு கட்டியிருக்காங்க. நீ வா, சாந்தி  அடையாளம் சொல்லியிருக்கா. ஃபோன்ல கேட்டுக்கலாம்.”  

ராஜாவும்  இந்தப் பயணங்களை சகித்துக் கொள்ளவும் காலப்போக்கில் இரசிக்கவும் பழகியிருந்தார். இரு முதியவர்களின் பேச்சில் சுவாரசியமான ஒரு பாங்கு இருக்கும். ஒருத்தர் ஆவலாதிகளைச் சொன்னால் மற்றவரும் அதற்கு இணையான அல்லது அதை மிஞ்சிய குறைகளை முன்வைப்பார். ஒருவரின் பேச்சில் சிறிது தற்பெருமை எட்டிப்பார்த்ததும் மற்றவரும் ஜாடையாக பீற்றிக்கொள்வார்.

சாந்தி சொன்ன அடையாளத்தை எட்டியதும் அம்மா ஃபோன் விளித்தார். சுந்தரமூர்த்தியின் மனைவிதான் ஃபோன் எடுத்தாள்.

‘நீங்க எந்த ரோட்டில வந்துட்டு இருக்கீங்க? எந்த ஊரைத்தாண்டி வந்தீங்க?’ வழி சொல்லும்முன் இந்தக் கேள்விகளைக் கேட்பவர்கள் சூட்டிகையானவர்களாகத்தான் இருக்கவேண்டும்.        

சுந்தரமூர்த்தியின் வீடு முக்கியச் சாலையிலிருந்து கண்ணெட்டும் தொலைவு தான். புதுக்கருக்கு அழியாத பெரிய வீடு. இரண்டு கார்கள் தாராளமாக நிற்கும் அளவிற்கு பெரிய போர்டிகோ. கார்கள் சுற்றி வந்து வெளியேறும் அளவிற்கு முற்றம். நடுவாந்தரமாக ஒரு அலங்கார சீமைப் பனைமரம், புல்தரை என ஆர்பாட்டமாக  இருந்தது. தொலைபேசியில் அவர்களுக்கு வழி சொன்ன சுந்தரமூர்த்தியின் மனைவி அப்பொழுது தான் குளித்து முடித்தவள் போன்று மலர்ச்சியுடன் இருந்தாள். அவள் முகத்தில் சோகத்தின் சாயல் எதுவுமில்லை. விருந்தாளிகளை வழிநடத்தி சுந்தரமூர்த்தி  படுத்திருந்த அறைக்கே அழைத்துச் சென்றாள். தயாராக சில இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. அவரைப் பார்த்ததும் ராஜாவிற்கு அடையாளம் தெரிந்தது. அம்மா சொன்ன அளவிற்கு அவர் பலவீனமானவராக இருக்கவில்லை. அவரது மிகுமேட்டிமை பாவனை கொஞ்சம் தளர்ந்திருந்தது. நோயை வெல்ல இயலாததன் வருத்தமும் கோபமும் தெரிந்தது.

“தூக்கமே இல்லை. வேற பிரச்சனை ஒண்ணும் இல்லை. உதவிக்கு ஒரு நர்ஸ் இருக்கா. வீட்டு வேலைக்கும் ஆள் இருக்கு“ என்ற அவரின் மனைவியின் பேச்சிலும் நடத்தையிலும் மிகுந்த நிதானம். துயரத்தை மறைக்கிறாரா?  

“பரவாயில்லை உனக்கு ஆரோக்கியம் நல்லா இருக்கே, ரொம்ப சந்தோஷம்” என்றார் சுந்தரமூர்த்தி அம்மாவிடம். ராஜாவுக்கு அது ஏனோ அசிங்கமாகப் பட்டது. 

“என்ன ஆரோக்கியம் மூர்த்தி. எனக்கும் முடியலதான். இன்னும் ஒரு முறை இப்படி வர முடியுமா தெரியல. அதான் சாந்தி சொன்னதும் இன்னைக்கே கிளம்பி வந்துட்டேன்.”

“பேசிகிட்டிருங்க” என அவரின் மனைவி உள்ளே சென்றாள்.   

தொடர்ந்து உறவினர்களில் யார்யார் எவ்வளவு காலம் படுக்கையில் கிடந்தனர், படுக்கையில் விழ ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்யார் என பேச்சு நீண்டு தமது வாரிசுகள் குறித்த மறைமுக தற்பெருமைகளுக்குத் தாவியது. அப்பொழுதுதான் தன் தங்கையுடன்  கடைசி நிமிட வேலைகளுக்காக வெளியே சென்றிருந்த அவரது மகனின் குடும்பம் வீடு திரும்பினர்.

மகளைப் பார்த்ததும்தான் எட்டாம் வகுப்பு விடுமுறையில் அவர்களது வீட்டிற்கு விருந்துக்கு சென்றது ராஜாவிற்கு நினைவு  வந்தது. அப்போது அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு  முடிந்து  சில ஆண்டுகள் கடந்தும்கூட திருமணம் கூடவில்லை. வரும் வரன்கள் யாரையும் அப்பாவிற்கும் மகளுக்கும் பிடிக்கவில்லை. கடைசியில் உறவினர்களின் அழுத்தம்தான்  வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கும் ஒருவனுடன் திருமணம் முடித்து வைக்க காரணமாக இருந்ததாம். பிரசவத்திற்கு வந்தவள் திரும்பிப் போகாமல் தாய் தந்தையருடனே வாசம், மணமுறிவு என அவ்வப்போது அம்மாவிடமிருந்து அப்டேட்கள் வந்ததும் ஞாபகம் வந்தது ராஜாவிற்கு.

“வாம்மா, எப்படி இருக்கே? மக என்ன பண்ணறா?” என்றாள் அம்மா. 

“நல்லா இருக்கேன் அத்தை. கேம்பசில வேலை கெடச்சு பூனாவில இருக்கா. பேசிகிட்டிருங்க, டிரஸ் மாத்தீட்டு வரேன்.“ என அவள் சற்று அவசரமாக வெளியேறியது போல் தெரிந்தது. சில சம்பிரதாயப் பேச்சுக்கு பிறகு மகனும் குடும்பமும் கூட விலகிக் கொண்டது.

வேலையாய் இருந்த அவரது மனைவி மகள் பொறுப்பேற்றதாலோ என்னமோ எங்களுடன் சேர்ந்துக் கொண்டாள் .  

“அவன் எப்படி இருக்கானாமா?” என்றாள் அம்மா திடீரென.

“யாருக்குத் தெரியும். பைத்தியக்காரன். அவன் மகளுக்கே அவனைப்  பிடிக்கல. பேச்சுவார்த்தையே இல்லை அவன் கூட.”

“இங்கே தானே வேலை இருந்தது?”

“அதை எல்லாம் அன்னைக்கே விட்டுட்டு ஊருக்கு போயிட்டான் பைத்தியம். சந்தேகப் பிராணி. வெளி நாட்டுல இருக்கறது என் பொண்ணுக்கு பிடிக்கலை. அதுக்காக அவன் வேலைய விட்டுட்டு வரணுமா, என்ன? பொண்டாட்டி இங்கேயே இருக்கற எவ்வளவு பேரு வருஷத்துக்கு ஒரு தடவ ஊருக்கு வந்துட்டு சந்தோஷமா இருக்காங்க. இங்கே வந்தும் எவ்வளவு கொடுமை, தனியாப் போகணும்னு தகராறு பண்ணி. இங்கே நம்ம வீட்டில எடமா இல்லை.”

அவரின் மனைவியிடம் இப்பொழுதும் அதே நிதானம். தன் மனதை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவள் போல. இல்லை பற்றற்ற விலகலா?

ஏனோ இந்தப் பேச்சிற்குப் பிறகு இறுக்கம் தளரவேயில்லை. ஏதேதோ பெயருக்கு பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்று வெளியேறினார்கள் ராஜாவும் அம்மாவும்.

“எதுக்கு இப்போ அவன் பேச்சை எடுத்தீங்க?”, காரில் திரும்பி வரும்போது அம்மாவைக் கடிந்துகொண்டார் ராஜா.

“இவன் சொல்றதையெல்லாம் நம்பாதே. மாப்பிள்ளை ரொம்ப நல்லவன். நானே பாத்தேனே. இவன் icu விலே இருந்த போது அவன் தான் நாலு நாள் ராத்திரி வராந்தாவில துணியை விரிச்சு படுத்திருந்தான். அந்த ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகறவுங்களுக்கு ரூம் கெடைக்கறதே கஷ்டமாமா. பெத்த பசங்ககூட இப்படி இருப்பாங்களா. பாவம், இப்போ அநாதையா நிக்கறான். அப்பாவுக்கு மகளை விட்டுட்டு இருக்க முடியல. அப்படியென்ன ஊரில இல்லாத பாசம் அப்பாவுக்கும் மகளுக்கும்’, அம்மா பொரிந்தாள்.

இவ்வளவு வயதான பிறகும் அவளுக்கு புரியும் பல விஷயங்கள் இன்னமும் கூட தனக்குத்  தெரிவதில்லை என எண்ணினார் ராஜா. அடுத்த ஆண்டிலிருந்தே ஜனனிக்கு வரன் பார்க்கத் தொடங்க  வேண்டும் என நினைத்துக் கொண்டார்.  

00

அரவிந்த் வடசேரி

1964 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வாழ்ந்து வருகிறார். நெடுங்கால வாசகர் எனினும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத் தான் எழுதுகிறார். சொந்தமாக சிறுகதைகள் எழுதுவதோடு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார்.     

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *