(பாகம் 2)
நான்கு நண்பர்கள்
ஒரே கனவை அவர்கள் நால்வரும் பகிர்ந்து கொண்டு உறங்கினர். ஒருவர் கனவிலிருந்து தப்பிக்கும் கதாபாத்திரங்கள் இன்னொருவரின் கனவுக்குள் சிக்கிக் கொள்ளும். மறுநாள் இவரும் விரட்டியடிக்க மூன்றாவது நபரின் கனவுக்குள் நுழைவர். இதுவொரு சுழற்சி போல நிகழும். அவர்கள் நால்வரும் ஆன்ம இணைப்புக் கொண்டவர்களாக மாறினர்.
பள்ளிக் கால நட்பு. ஒரே சோதனையில் தோல்வியடைந்து தொழிற்சாலைக்குச் சென்றவர்கள். நால்வரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். ஒன்றாகவே அமர்ந்து குடிப்பார்கள். குடித்துவிட்டுப் போதையில் ஒரே மாதிரி நடந்து செல்வார்கள்.
முதன்முறையாக அவர்களுள் ஒருவர் இறந்து போனார். மரணம் அவர்களுள் ஐந்தாவது நபராக வந்தமர்ந்தது. அதற்கு முந்தைய இரவு மூவருக்கும் ஒரே கனவு வந்து இறந்தவருக்கு மட்டும் வராதபோது அவர்கள் சந்தேகித்திருக்க வேண்டும். ஐஸ்கிரிம் விற்கும் வண்டிக்காரர் மணியடித்துக் கொண்டே மூவரின் கனவுக்குள்ளும் வந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. இவர்கள் படித்த ஆரம்பப்பள்ளிக்கு அடிக்கடி வருபவர். அந்த வண்டிக்காரரரிடம் ஐஸ்கிரிம் வாங்கும்போதுதான் நால்வரும் நெருங்கிய நண்பர்களாகினர். இதுவரை கனவில் வராத அந்த வண்டிக்காரரின் வருகையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
மூவரும் நான்காவது நண்பரின் மரணத்தில் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்தக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஓலம் நிறைந்த நாள். மறுநாள் மூவரின் கனவிலும் இறந்தவர் கையில் ஐஸ்கிரிமுடன் நடந்து சென்றார்.
கருமக்கிரியை நாள் வந்தது. மூவரும் தங்களால் இயன்ற உணவுகளைச் சமைத்துக் கொண்டு போனார்கள். படையல் முடிந்ததும் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். இனி மூவரும் சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவுடன் விடைபெற்றார்கள். ஐஸ் வண்டிக்காரர் இப்பொழுது யார் வீட்டிற்குச் சென்றிருப்பார் என்பதை அவர்கள் மூவரும் அறிந்து கொள்ளவில்லை. இப்பொழுதும் அவர்கள் நான்கு நண்பர்கள்தான்.
ஹோர்ன்
அந்தச் சாலைக்கு வந்தால் மட்டும் ஹோர்ன் அடிக்கச் சொல்வார்கள். அதுவும் இரவு வேளையாக இருந்தால் கட்டாயம் ஹோர்ன் ஒலியை எழுப்ப வேண்டும். காரை நிறுத்தினாலோ அல்லது ஹோர்ன் அடிக்க மறந்துவிட்டாலோ அந்தச் சாலையிலிருந்து விடுப்படும்முன் ஒரு பெண்ணும் இரத்தம் கசியும் தோற்றத்துடன் ஓர் ஆணும் உள்ளே ஏறிக் கொள்வார்கள் என்றனர். தானாகக் கை ஹோர்ன் தேடிப் போய்விடும். சிறுவயதில் அப்பா ஹோர்ன் அடித்தார். இப்பொழுது காருக்குள் இருக்கும் என் மகன் நான் ஹோர்ன் அடிக்கும்போது எக்கி வெறும் இருளைப் பார்க்கிறான். அவன் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பின்னாளில் அந்தச் சாலைக்குச் சென்றால் ஹோர்ன் இசையை நான் எழுப்பத் தவறிவிட்டாலும் பிள்ளைகள் நினைவூட்டி மகிழ்வார்கள். இன்றுவரை அந்தச் சாலை மொத்த ஹோர்ன் ஒலிகளையும் சேகரித்து வைத்திருக்கிறது.
அன்றிரவு படுக்கச் சென்றதும் திடீரென்று பயங்கரமான ஹோர்ன் சத்தம் என் காதுக்கு அருகில் கேட்கிறது. எழ நினைத்தும் முடியவில்லை. யாரோ மார்பின் மீது அமர்ந்து அழுத்துவது போல வலி. கண்களை மெல்லத் திறந்து பார்க்கிறேன். இப்பொழுது ஹோர்ன் சத்தங்கள் நிரம்பிய சாலையில் படுத்திருந்தேன். மனைவி சாலையில் நின்று போய்வரும் வாகனங்களை நிறுத்த முயல்கிறாள். யாரும் காரை நிறுத்தவில்லை. ஆனால், மறக்காமல் அனைவரும் ஹோர்ன் மட்டும் அடித்துவிட்டுச் செல்கிறார்கள்.
நிம்மதி
மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சொல்லப்போனால் ஏதாவது ஒன்று ஏதாவது ஒன்றை நெருங்கி வரும் நேரம் அது. இருள் அமைதியையும் அமைதி சூன்யத்தையும் சூன்யம் பூச்சிகளின் இரைச்சல்களையும் கவ்வத் துடிக்கும் நேரம். வெகுநேரம் அமர்ந்து அகன்று விரிந்திருக்கும் வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்களைக் கணக்கிட ஆசைதான். ஆனால், இரவு ஒருபோதும் அதை அனுமதித்தது கிடையாது. என் வார்த்தைகளைத் தின்று கொள்கிறது. அடர் இருள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது பல வருடத் தனிமை. யாரிடம் சொன்னாலும் புரியாது. அலாரம் போல இரவு பூச்சிகள் ரிங்காரமிடுகின்றன. இதற்குமேல் வெளியில் திரிய முடியாது. விருட்டென்று என் குழிக்குள் திரும்பினேன்.
00

கே.பாலமுருகன்
மலேசியத் தமிழ் எழுத்தாளர், சிறார் இலக்கியவாதி
சிறுகதைகள், நாவல்கள், சினிமா கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை 29 நூல்கள் இயற்றியுள்ளார். ‘தேவதைகளற்ற வீடுகள்’, ‘மூக்குத் துறவு’ ‘பசித்திருக்கும் பேய்கள்’, நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள், உயாங் மலை, மாயவிடுதி, இறந்தகாலத்தின் ஓசைகள், ‘தேவதைகளின் காகித கப்பல்’, ‘தீர்ந்துபோகாத வென்கட்டிகள்’, ‘மரங்கொத்தியின் இசை’, ‘தலேஜூ’ என இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
பன்முக நவீனப் படைப்பாளியாகக் கருதப்படும் இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக எழுதி வருகிறார். கே.பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், ஏழு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் எனப் படைத்துத் தொடர்ச்சியாக சிறார் இலக்கியத்திலும் இயங்கி வருகிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழக அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே சிறுகதை மலேசியாவின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் இரண்டாம் பருவத்திற்கான பாடமாகச் சேர்க்கப்பட்டிருப்பதும் பெருமைக்குரியதாகும்.
தாம் எழுதுவது மட்டுமல்லாமல் நம் நாட்டிலுள்ள சிறார்களையும் போட்டியின் வழியாக எழுத வைத்து கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கீகரித்து வருவதும் அவருடைய இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதுவரை மலேசியத் தமிழ் சிறார்களுக்கு ஆறு முறை சிறார் இலக்கிய விழாவை நடத்தி கற்பனைவளத்தினையும் எழுத்தாற்றலையும் வளர்த்து வருகிறார்.
2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் பாலமுருகன் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். மேலும், தமது குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்ற கலைஞர் என்றும் அவரை அடையாளப்படுத்தலாம். தமது No Exit என்கிற மௌனக் குறும்டத்தின் வழியாகப் பலரையும் பேச வைத்தவர். அக்குறும்படத்திற்காக இதுவரை இந்தியா, மஹாராஷ்ட்ரா, லண்டன் என பல உலகலாவிய திரைப்பட விழாக்களில் கவனித்தக்க விருதுகளை வென்றுள்ளார். இதுவரை கரிகாற்சோழன் விருது, தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, ஆதி.ராஜகுமாரன் விருது, சிறந்த எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திர விருது, பாஷோ ஹைக்கூ விருது, சோழன் கடார விருது, கற்பனையாற்றல்மிக்க ஆசிரியர் விருது, மலேசியத் தேசிய நூலகத்தின் சிறந்த நூலுக்கான விருது என கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எனப் பல நாடுகளில் சிறுவர் இலக்கியம் தொடர்பான பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் பாலமுருகன் அவர்கள் கடார மண்ணைச் சேர்ந்தவர்.

