–ஸ்ரீகாந்தன்
அதியமனின் திடீர் மரணம் எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, நேற்றிரவு கடைசியாக அவன் என்னுடன்தான் மது அருந்திவிட்டுச் சென்றான். இரண்டாவது, அவனுக்கு என் வயதுதான் ஆகியிருந்தது! மரணத்திற்கு வயதில்லை என்பதற்காக, 38 வயதில் மரணம் நேர்ந்தால், ‘உயிர் அநித்தியமானது’ என்று தத்துவம் பேசி மனதைத் தேற்றிக்கொள்ள முடியுமா என்ன? பார்க்க, ஆரோக்கியம் ததும்பி வழியும் தோற்றத்தைக் கொண்டவன்!
“ஹாய் புரோ, ஹவ் ஆர் யூ?..” – நான் கேட்கும் போதெல்லாம்,
“ஃபிட் எஸ் அ ஃபிடல்” என்றே உற்சாகம் பொங்க பதில் சொல்வான். என்றுமே ‘ஓகே’ என்றோ, ‘சோ.. சோ..’ என்றோ சுரத்தில்லாமல் சொன்னதேயில்லை.
‘பொசுக்’கென்று, இறந்து போனான்!
ஆமாம்! இப்படி, இந்த விநாடியேகூட உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்றானால் ஆயுளுக்கான நம்பிக்கையை எங்கிருந்துதான் பெறுவது?
நான் மிகுந்த பதற்றத்திற்குள்ளாகிப் போனேன்.
* * *
அதியமனை எனக்குக் கடந்த ஒரு வருடமாகத்தான் தெரியும். உண்மையில், அவனுடைய பெயர் அதியமான்! மலாய்க்காரனான பிறப்புப் பத்திரப் பதிவாளன், அதியமன் என்று எழுதி பாவி, பிறப்பிலேயே எமனிடம் அவனை ஒப்புக் கொடுத்துவிட்டான் போல! நாங்கள் இருவரும் ஒரே காப்புறுதி நிறுவனத்தின் இரு வேறு கிளைகளில் வேலை செய்து வந்த முன்னறிமுகமில்லா அந்நியர்கள். நிறுவனம், மாநில அளவில் கொண்டாடிய 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் ஒரே விருந்து மேசையில் இடம் கிடைத்ததால் அறிமுகமானோம். இருவருமே திருமணம் செய்துக்கொள்ளாதிருந்தது உடனே நட்பிற்கு வழிகோலியது. விருந்துபசரிப்பில், விரும்பி அருந்தும் மதுவாக இருந்த கார்ல்ஸ் பர்க் பியர், அடிக்கடி கோப்பைகளை உரசிக்கொள்ளத் தூண்டியது. இருவருக்கும் இருந்த தீவிர ஆங்கில நாவல் வாசிப்பு, எங்களை மிகவும் நெருக்கமுற வைத்தது.
ஒரு சனிக்கிழமை இரவு, அதியமன்தான் என்னை முதலில் மதுபானக் கடைக்கு அழைத்தான். ஒன்பது மணிக்குச் சந்தித்துக்கொண்டவர்கள், பொழுது போவதே தெரியாமல் நள்ளிரவுவரை குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். இடையில், ஒரு குறுஞ்செய்தியின் தொந்தரவு வராதிருந்தால் அதிகாலை வரையிலும்கூட குடித்துக்கொண்டிருந்திருப்போம். தனியாகக் குடிப்பதில் ஆர்வமில்லாத எங்களுக்கு இந்த நட்பு வரமாக அமைந்தது. போதையில் எங்களின் அந்தரங்கம் அம்பலப்பட்டுக் கொண்டதில் சந்திப்பு மிகவும் சுவராசியமாய் ஆனது.
குடும்பத் தொல்லையே வேண்டாமென்று பிரம்மச்சாரிகளாக வாழ்பவர்கள் நாங்கள். ஆபீசில்தான் பார்க்கிறோமே, சம்சாரிகள் படும் பாட்டை! புலம்பல்தான் அவர்களின் குடும்ப லட்சணம்.
சனிக்கிழமை இரவுகளுக்காக இருவரும் ஆர்வத்துடன் காத்திருக்கத் தொடங்கினோம்.
அதியமன் இருக்கிறானே, போதை ஏறும்வரைதான் நான் பேச வேண்டும். அந்தச் சமயத்தில்தான் படித்த புத்தகங்களைப் பற்றியும் பேசுவான். போதை ஏறிவிட்டாலோ, எனக்கு அவகாசமே இருக்காது! எப்போதும் தனது கட்டில் அனுபவங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசி, படபடப்பான். நானோ, அவனிலும் அதிக ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்திருப்பதை அவன் பார்த்திருக்க வேண்டும்! அது, அவனை மேலும் உற்சாகப்படுத்தியதோ என்னவோ! தனது வாழ்க்கையில் ரகசியம் என்று எதுவுமே கிடையாது என்பதுபோல் எல்லா அந்தரங்கங்களையும் அவிழ்த்துக் கொட்டி, சுய கிளர்ச்சிக்கு ஆளாகித் திளைக்கலானான். ‘சூதுவாது தெரியாத வெகுளியோ?’ என்று என்னை எண்ண வைத்தான்.
அவன், கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பதாகச் சொன்னான். அவனைவிட 5 வயது மூத்தவளாம். யமுனா என்ற பெயரை, ரகசியம் காப்பதற்காக ‘யமி’ என்று வைத்துக்கொண்டதாக சொன்னான். யமுனாவின் கணவன், ஏதோ சமயப் பிரிவொன்றின் தீவிர நம்பிக்கையாளன். உலக வாழ்க்கை நான்கு யுகங்களைக் கொண்டதென்றும், ஒரு யுகம் 1250 மானிட ஆண்டுகள் என்றும் அவர்கள் நம்பினர். இப்போது நடக்கும் கலியுகம் விரைவிலேயே முடிந்து, கிருதயுகம் எனும் உண்மையின் யுகம் பிறக்கவிருக்கிறதாம். அந்த யுகத்தில்தான் மனிதன் கடவுளைக் காணப் போகிறானாம். அதனால், தூய வாழ்க்கையே கடவுள் தரிசனத்திற்கான எளிய வழியென்றும், அதற்கு மனக்கட்டுப்பாடு ஆரம்பப் படி என்பதால், அதன் முதல் எதிரியாக காமத்தை அடையாளம் கண்டனர். இச்சைதான் மனிதனை உலக பந்தங்களில் கட்டிப் போட்டு கடவுளைக் காணவிடாமல் தடுக்கிறதாம். காமாதுர வஸ்துகளை விலக்கி, உடலுறவைத் தவிர்த்தால் ஈசுவரத்துவம் ப்ராப்தம் என்று நம்பினர். கணவன் மனைவிக்கிடையே எழும் ஆதார இச்சையை எப்படித் தடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, கணவனைச் சகோதரனாகவும் மனைவியைச் சகோதரியாகவும் நினைத்து, ஆன்மீகச் சிந்தனைகளில் முழுமையாக ஈடுபட்டுவிட்டால் தெய்வ தரிசனம் சத்தியமாம்!
கணவன், யமுனாவைச் சகோதரியாகப் பாவித்து விலகினான். யமுனாவிற்கு அவனுடைய பிரம்மச்சரியமும் கடவுள் சிந்தனையும் புரியவில்லை! கடவுளைக் காண விரும்புபவனுக்குக் கல்யாணம் எதற்கு என்று குழம்பினாள். இறுதியில், அவளுக்கு ஒன்று புரிந்தது. வீட்டைப் பராமரித்துக்கொண்டு, பொருளாதாரத்தில் உதவி செய்ய அவனுக்கொரு துணை வேண்டும். அவ்வளவுதான்!
அவள் தீர்மானித்துவிட்டாள்! போதும் இந்த அசட்டுத்தனம்; ஆண்டவனை அடையவதற்காக அண்ணன், தங்கையாய் வாழும் அசிங்கம்! இது எதுவுமே இல்லாமல் வெறும் மனிதனாய் ஆண்டவனைக் காண விரும்பினால் தரிசனம் தர மாட்டாரா என்ன? மனிதன், ஆண்டவனின் படைப்பு என்கிறீர்களே? இந்த உடலில் காமத்தை வைத்ததும் அவன்தானே? அதனால், கடவுளின் பிரத்யஷ தரிசனமே கிட்டுமென்றாலும் காமத்தை அடக்கி வைக்கவோ, ஒதுக்கி விலகவோ அவள் தயாராயில்லையாம்!
யமுனா, தனியாக வாழ்ந்து வருகிறாளாம். கணவனைப் பற்றி அதியமன் ஏதும் சொல்லவில்லை! அவளை விட்டுத் தூராமாய் விலகிப் போனானோ என்னவோ! தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று எவ்வளவு கெஞ்சியும் கேளாமல், ‘நல்ல வரம் கிடைப்பது அரிது’ என்று அப்பா வலுக்கட்டாயமாக ‘அந்த மரக்கட்டைக்குத்’ திருமணம் செய்துவைத்து, தன் வாழ்வையே நாசமாக்கிவிட்டதாக அவள் கொந்தளித்தாள்.
அப்பா உயிருடன் இருந்தவரை அந்தப் பருவத்திற்குரிய வாழ்க்கையே யமுனாவிற்குக் கிட்டவில்லை. பெண் என்பதால் அவரின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளே அவளின் வாழ்க்கையாகிப் போனது! அக்கறை என்ற பெயரில் அவர் காட்டியது அன்பல்ல, ஆணாதிக்கம் என்று எண்ணி ஆத்திரமடைந்தாள்! வெளியில், எந்த ஆணுடனும் ஸ்நேகம் கொள்ளவிடாமல் அவர் போட்ட வேலி, பின்னாளில் சமூக உறவையே குழப்பிப் போட்டது. ஆரோக்கியமான உறவு என்றால் என்ன என்பதே புரியாமல் போனது. அப்பாவின் ஆக்கிரமிப்புக் குணமே அவளின் பண்பாகவும் ஆகிப் போனபோது, ஆண்கள் அடக்கி, ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்ற வெறி, அவளைப் பிடித்தாட்டியது. அப்பாவும், கணவனும் சேர்ந்து நாசமாக்கிய வாழ்க்கைக்கு, இரை தேவைப்பட்டது!
அந்த இரை, யாராக இருந்தாலும் பரவாயில்லை, ஆணாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்.
ஆரம்பத்தில், அவளின் இச்சையை பாவமாக உணர்ந்து இவன், மிகவும் சங்கடப்பட்டானாம். தன்னை நினைத்து அவமானத்தில் குறுகிப் போயிருக்கிறான். சமயங்களில் எங்கேயாவது கண்காணாத இடத்திற்கு ஓடிப் போகவும் முயன்றிருக்கிறான். சில நேரங்களில் தற்கொலைச் செய்துக்கொள்ளவும் ஆசை வந்திருக்கிறதாம். ஆனால், நினைப்பில் இருந்த தைரியம் செயலில் இல்லாமல் போனதாம். அதிசயமாக, அவ்வளவு உறுத்தலும் தனிமையில் இருக்கும்போது மட்டுமே வந்தது. அவளின் ஸ்பரிசத்திற்கு ஆளாகிப் போன அடுத்த விநாடியே, அதை அனுபவித்துத் திளைக்கத்தான் உடல் விரும்பியதே தவிர, விடுபட்டு விலக முடிந்ததே இல்லையாம்.
இப்போது, அவளுக்குத் தன்னை முழுசாக ஒப்புக் கொடுத்து, பலியாகிக் கிடக்கிறானாம்!
அதியமன், என்னைப் பற்றிக் கேட்டான். எனக்கு ஏறியிருந்த போதையில், எனது சாகசத்தைச் சொல்லி, நானும் கொஞ்சம் தம்பட்டம் அடித்துக்கொண்டேன்!
அவள், எங்கள் ஆபீசில் ‘டீ லேடியாக’ வேலை செய்து வந்தாள். பரிச்சயமில்லாதத் தொடக்கத்தில் ஒரு நாள்,
“காப்பிக்கு பால் வேண்டுமா?” என்று களங்கமில்லாமல்தான் கேட்டாள்.
“இன்னும் இருக்கா?” – நான்தான் குதர்க்கமாய்க் கேட்டேன். அவள், சீண்டுதலைப் புரிந்துகொண்டு என்னைப் பார்த்தாள். பார்வையில் சலனம் தெரிந்தது. அவள் நெற்றியில், ஏற்கெனவே வேர்வைப்பட்டுச் சிதைந்திருந்த குங்குமம், கோபத்திற்குப் பதில் நாணமே கொள்ளச் செய்தது!
“எனக்கு கால்யாணமாயிரிச்சி. தெரியுந்தானே?” அவள் கண்டிக்கவில்லை!
“நா, என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லலியே?” என்றேன்.
அவள், கண்களில் கபடத்தை வைத்துப் பார்த்தாள்.
எனது ஆசைக்கு மசிய, அவளுக்குச் சில வாரங்கள் பிடித்தன.
“நீ கொடுத்து வெச்சவன் புரோ” என்றான் நண்பன்.
“என்ன இருந்தாலும் உனக்கு கெடச்ச ஆதிர்ஷ்டம் போல வருமா? புருஷன், பிள்ளிங்கன்னு எந்த சிக்கலும் கெடையாது. மாசமாவுற சான்ஸே இல்லன்னு வேற சொல்ற. நீதான் அதிர்ஷ்டகாரன்.” என்று நான் சொன்னேன். அவன், போதையின் கிறக்கத்தில் பச்சையாய் ஒரு சிரிப்பு சிரித்தான்.
* * *
ஒரு நாள், போதையில் அதியமன் சொன்னான்.
“புரோ, என்னோட அனுபவத்துல சொல்றன். உண்மிலியே யோசிச்சி பாத்தாக்கா, வயசு மூத்த பொண்ணும் வயசு கொறஞ்ச ஆணுந்தான் கல்யாணத்துக்கு சரியான ஜோடி.”
நான், அவனுடை கோப்பையை உரசி, ‘சியர்ஸ்’ சொன்னேன்.
அவன் தொடர்ந்து சொன்னான்.
“வயசு ஆவ ஆவதான் பொம்பிள்ளிங்களுக்கு அவுங்க விரும்புறத சொல்ற தைரியம் வருது. அவுங்களுக்குதான் என்னன்ன ஆசயெல்லாம் இருக்குதுங்கற? எத்தினியோ தலைமுறையா தன்னோட ஆசைங்கள மனசுக்குள்ளியே போட்டு அடைச்சு வெச்சாக்கா அவ்வளவும் ஒரு நாளு பொத்துக்கிட்டு வந்துதானே ஆவனும். அப்ப, புருஷன் வயசு கொறஞ்சவனா இருந்தாதான ஆட்டிப்படைக்க வசதியா இருக்கும். விருப்பத்தையே ஒரு உத்தரவா போட்டு அடிம படுத்தலாம். அதனாலதான் சினிமா நடிகைங்க எல்லாம் இப்ப வயசு கொறஞ்ச பையனா பாத்து தேடிக்கிட்டு போறாங்க.” நண்பன் போதையிலிருந்தாலும் ரொம்ப சீரியஸ்சாகவே பேசினான்.
“இந்தி நடிகை பிரியங்கா சோப்ராகூட அவளவிட 10 வயது கொறஞ்ச ஒரு வெள்ளக்காரனதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா புரோ.” – நான் படித்திருந்த செய்தியை அவனிடம் சொன்னேன்.
கோப்பைகளை மீண்டும் நிரப்பிக்கொண்டோம்.
அதியமன், யமுனாவுடனான தனது கள்ள தொடர்பை உணர்ச்சிப் பொங்கச் சொல்லியே பாவி, என்னையும் உள்ளே இழுத்து விட்டான்! அவன் சொன்ன அந்தரங்க அனுபவங்கள் அத்தனையும் பின்னர், எனது கற்பனையில் மீண்டும் ஒரு முறை அரங்கேற்றம் கண்டபோது, நண்பனின் இடத்தில் நான்! நண்பன் சொன்னது நிஜம்தான். காமத்தை அனுபவித்துத் திளைப்பதில் எனது தேர்வுக்கு இடமேயில்லை. அவளுக்கு நான் ஒரு ‘boy toy’. நண்பன் செய்துக் கொடுத்த வசதி!
ஒரு சமயம், யமுனா கட்டிலுக்கென்றே பிறந்த பிறவி என்றான்! அதியமனை நினைக்க எனக்குப் பொறாமையாக இருந்தது. கொடுத்து வைத்தவன்!
இப்போது, ஒவ்வொரு இரவும், எனக்கு ‘யமி’ தேவைப்பட்டாள்!
அவள் எப்படி இருப்பாள்? கருப்பா, சிவப்பா? பருமனா, ஒல்லியா? குட்டையா, நெட்டையா? நண்பன் சொன்னதிலிருந்து நான் தெரிந்துகொண்டதெல்லாம்,
‘அவள் ஒரு காம தேவதை!’
* * *
ஓரிரவு, அதியமன் கழிவறைக்குச் சென்றிருந்த நேரம், கைப்பேசிக்கு அழைப்பொன்று வந்தது. ‘யமி’! பெயரைப் பார்த்ததுமே ஒருவிதப் பதற்றம் என்னைப் பற்றிக்கொண்டது. அவளை அறிமுகம் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று இரவும் ஏங்கித் தவிக்கும் எனக்குப் பழம் நழுவி, பாலில் விழுந்தது போலானது! அவளுடைய குரலைக் கேட்கத் துடித்தேன். தயக்கத்துடன் கைப்பேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனியும் தாங்காது! துடிக்கும் இதயத்துடன் கழிவறைப் பக்கம் பார்த்தேன்.
அதியமன், பரபரப்புடன் ஓடி வந்து கைப்பேசியைஎடுத்துக்கொண்டு விலகிப் போனான்.
வாய்க்குக் கிட்டாத ஏமாற்றத்தில் சலிப்புடன் நண்பனைப் பார்த்தேன். போன வேகத்திலேயே திரும்பி வந்தவன், சொன்னான்.
“சனிக்கிழம ராத்திரி வந்துட்டா போதும். நா எப்ப வருவேன்னே இருப்பா புரோ!”
நான் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
* * *
அதியமனின் மரணச் செய்தி, அவனுடைய கைப்பேசியிலிருந்தே ஒரு குறுஞ்செய்தியாக என் வாட்ஸ் ஆப்பிற்கு வந்து, என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ‘யார் இது?’ என்ற எனது குறுஞ்செய்தி பட்டுவாடா ஆகாமலேயே இருந்தது. நண்பனின் எண்ணிற்கு அழைத்தபோது, கைப்பேசி ‘ஸ்விட்ச் ஆப்’ ஆகியிருந்தது. தகவலை எப்படி உறுதி செய்துக்கொள்வது என்று நான் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு அதை உறுதி செய்தது. அவனது பர்சனல் ஃபைலில் ‘ஆபத்து அவசரத்திற்கு’ என்ற இடத்தில் என்னுடைய எண் இருந்ததென்ற தகவல், என்னை ஆச்சரியப்படுத்தியது.
‘பாவம், அநாதை!’
இமேர்ஜன்சி விடுப்பு எழுதிப் போட்டுவிட்டு, ஆபீசில் கொடுத்த நண்பனின் முகவரிக்கு விரைந்தேன். அவன் ஏற்கெனவே செந்தூல் பக்கம் ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றில் குடியிருப்பதாகச் சொன்னது நினைவில் இருந்தது. பிரேதத்தை அடுக்கு மாடி வீட்டிற்கே கொண்டு போவார்களா அல்லது கீழே, சமூக மண்டபத்தில் வைத்திருப்பார்களா என்று யோசித்தபடியே வாகனத்தைச் செலுத்தினேன்.
அவனோ, யாருமற்ற அநாதையென்று சொல்லியிருந்தான். காரியம் செய்யவாவது யாராவது இருப்பார்களா என்ற பயம் இப்போது என்னைப் பிடித்துக்கொண்டது. நட்பிற்காக, நான் முன்னின்று காரியம் செய்ய வேண்டி வருமோ என்று பதற்றம் கொண்டேன். பேசாமல் திரும்பி விடலாமா என்று யோசித்தேன். ஆபத்து, அவசரத்திற்கு என் பெயரை எழுதி வைத்த நம்பிக்கை என்னைத் தடுத்தது.
‘வேஸ்’ வழிகாட்டி, இரட்டை மாடி வீடுகளாக, பாதுகாவலர்களைக் கொண்ட குடியிருப்பிற்குள் நுழைந்து, வலது பக்கம் திரும்பிய உடனேயே ‘இதுதான் அந்த வீடு!’ என்பதுபோல் நீல நிறத் தர்போலின் போர்த்தப்பட்ட முக்கோண வடிவக் கூடாரம் ஒன்று தெரிந்தது. பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஆங்காங்கே சிலர் உட்கார்ந்திருந்தனர்.
‘அடுக்குமாடி ஃபிளாட்டில் வசிப்பதாகச் சொல்லியிருந்தானே! அசௌகரியம் கருதி, தெரிந்தவர்களின் உதவியை நாடியிருப்பார்களோ! என்னதான் தெரிந்தவர்களாக இருந்தாலும் வீட்டில் இறப்பு காரியங்களைச் செய்ய அனுமதிப்பார்கள்?’
கூடாரத்திற்குள் சென்றேன். அவனுடைய அலுவலகத்தில் கொடுத்த முகவரிதான்! என்னிடம் அடுக்குமாடிக் குடியிருப்பு என்று சொன்னது நன்றாக ஞாபகம் இருக்கிறது! போதையில் உளறித் தொலைத்திருப்பானோ?
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவன் சொன்ன தகவல்கள் யாவுமே முரணாக இருந்தன. ஓர் ஓரமாக உட்கார்ந்து அவனுடைய நினைவுகளில் ஆழ்ந்து போனேன்.
துக்கம் விசாரிக்க வந்துகொண்டிருந்த பெண்களைப் பார்க்கலானேன். யமுனா வருவாளா? – நினைப்பே இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கியது. வந்தவர்களில் யாருமே ‘காம தேவதைகளாய்த்’ தோன்றவில்லை. எல்லோருமே நடுத்தர வயதின் அக்கறையின்மையில் உப்பிக் கிடந்தனர். மலர்மாலையொன்றை வாங்க நினைத்து, மறந்துவிட்டது ஞாபகத்திற்கு வந்தது. அருகிலிருந்த பூக்கடையொன்றைக் கைப்பேசியில் தேடிப் பிடித்து, பெரிய மாலையொன்றுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
ஹாலில், சவப் பெட்டிக்குள் மலர்களுக்கு மத்தியில் நண்பன்! சவப் பெட்டியைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள், சோகத்தில் தலைகள் கவிழ்ந்து கிடந்தனர். அழுது ஆர்ப்பரிக்காதத் துக்கம், கண்ணீராய் கரைந்துகொண்டிருந்தது. தலைமாட்டில், பெண்ணொருத்தி சோகத்தின் உருக்கொண்டு சரிந்து, துவண்டுப் போயிருந்தாள்.
நான், ரோஜாப்பூ மாலையை பிரேதத்திற்குச் சாற்றினேன். நண்பன், நித்திரையில் இருப்பதுபோல் மரணம் படியாத முகத்துடன் பளிச்சென்று இருந்தான். பாதங்களைத் தொட்டு வணங்கினேன். தலைமாட்டில் உட்கார்ந்திருந்த பெண், பார்வையிலேயே நன்றி பாராட்டினாள். என்னை ஏறிட, ஒரு சிமிட்டலுக்குள்ளான அவகாசமே எடுத்துக்கொண்டாள்.
‘யாரிவள்?’
‘யமி? இருக்க முடியாதே! அடுத்தவனுக்குத் தெரியாத அந்தரங்கமல்லவா அவள்!’
சுடுகாட்டிற்கும் போவதென்று தீர்மானித்திருந்ததால் இறுதிச் சடங்குகள் முடியும்வரைக் காத்திருந்தேன். குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியிருந்தனர். யாருமே இல்லாத அநாதை என்று அவன் சொல்லியிருந்தது என்னைச் சங்கடப்படுத்திக்கொண்டே இருந்தது.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த முதியவர், ‘அதியமன உங்களுக்குத் தெரியுமா தம்பி?’ என்று கேட்டார். நான் எனது சிநேகிதத்தைப் பற்றிச் சொன்னேன்.
“ரொம்ப நல்ல தம்பி. அவனோட அப்பா காலத்துலேர்ந்து தெரியும்ப்பா. இந்த சின்ன வயசுல செத்துப் போனத நெனசாதான் ஒரே சங்கடமா இருக்கு. ம்.. என்னா செய்யிறது? பாவம் யமுனா! அப்பா பார்த்து கட்டாயப்படுத்தி கட்டிவெச்ச கல்யாணம். நல்லவன்னு நம்பி நாசம் போனதுதான் மிச்சம். அந்தக் கவலீலியே அவுரும் செத்தாரு. இப்ப, தொணைக்கி இருந்த ஒரே தம்பியும் இல்லாம போயிட்டான். ஒரு நல்லது, கெட்டதுக்குக்கூட யாரும் இல்லாம ஒண்டியா யமுனா, எப்பிடித்தான் வாழப் போறாளோ?.” பெரியவர் மிகுந்த கரிசனையுடன் சொன்னார்.
நான், அதிர்ச்சியுடன் பெரியவரைப் பார்த்தேன். மூளைக்குள் பூகம்பம் ஒன்று வெடித்து நினைவுகள், தீக்குழம்புகளாய் பெருகி வழிந்தன. அனல் தாங்காமல் தத்தளித்தேன். குழப்பத்தில் மூழ்கித் தவித்தேன். திடீரென்று, பாரம் பொறுக்காமல் தலை வலித்தது. இடது கையால் நெற்றியை அழுத்தித் தேய்த்துவிட்டுக்கொண்டேன். நெற்றிப் பொட்டுகளில் நரம்புகள் புடைத்து, ‘விண் விண்’ என தெறித்தன.
அதியமன் போதை ஏறிவிட்டால் மட்டுமே ஓயாமல் படுக்கையறைக் கதைகளைப் பேசுவது இப்போது நினைவுக்கு வந்தது.
‘இவனா வெகுளி?’
எனக்குத் தலையைச் சுற்றியது.
‘Mythomaniac?’
“கவல படாதப்பா. சாவு வர்றதும் வராததும் நம்ம கையிலியா இருக்கு!”
பெரியவர் எனது தோளைத் தடவி, ஆறுதல் சொன்னார்.
அப்போது, சுடுகாட்டில் எந்தச் சாங்கியமும் செய்யப்படாது என்பதால், வாய்க்கரிசி போட நினைப்பவர்கள் இங்கேயே செய்துவிடும்படி கர்மகர்த்தா வந்தவர்களுக்கு ஆலோசனை சொன்னது கேட்டது.
நான், குழப்பத்துடன் எழுந்து, நடைப் பிணமாய் வாய்க்கரிசி போடப் போனேன்.
பிணத்தைப் பார்த்தேன். அடையாளம் தெரியவில்லை!
* * *
ஒரு மாதம் முடிந்திருந்தது.
அது ஒரு சனிக்கிழமை இரவு!
தனியாளாக பாரில் உட்கார்ந்து, நண்பனின் நினைவுகளுடன் குடித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, எனது வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி! அதியமனின் எண்ணிலிருந்து!
‘Yamuna here! Thank you for attending my brother’s funeral’
எனக்குத் ‘திக்கென்றிருந்தது’! இதயம் படபடவென அடித்துக்கொண்டது!
நான், என்னையுமறியாமல் ‘யமி!’ என்று உச்சரித்துக்கொண்டேன்.
00

ஸ்ரீகாந்தன்.
இயற் பெயர் ஸ்ரீராமுலு. ஜெயகாந்தனின் பாதிப்பால் ஸ்ரீகாந்தன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறேன். ஆறு வருட தமிழ்க் கல்வியும், நான்கு வருட ஆங்கிலக் கல்வியுமே கல்வித் தகுதி.
எனது 20 -களில் எழுதத் தொடங்கிய நான், எனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஒரு 50 வருடங்கள் வாசிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, எழுதுவதை முற்றாக நிறுத்திக்கொண்டேன். 2020 பிறகு மீண்டும் தீவிரமாக எழுத தொடங்கியிருக்கிறேன்.
எனது சிறுகதைகள் காலச்சுவடு, சொல்வனம், கலகம், வாசகசாலை, கனலி, வனம் (இலங்கை), ஆகிய இதழ்களில் மலேசியா ஸ்ரீகாந்தன் என்ற பெயரில் வெளிவந்துள்ளன. வல்லினம் (மலேசியா) மற்றும் மலேசிய ஞாயிறு பதிப்புகளில் ஸ்ரீகாந்தன் என்ற பெயரில் வெளியாகியுள்ளன.

