1. குட்டித் தமிழரசி
ஆயிரங்கால்கள்
ஒன்றன்பின் ஒன்றாக
நகர்த்தும்
புனித அட்டைப்பூச்சியைத்
தொடுகிறாள் குட்டித் தமிழரசி
சுருண்டு படுத்துக்கொள்ளும்
ஒரு சங்குசக்கரமாய்
,
போதாதெனக்
குச்சி வழி குடைந்து
மேல் தூக்கி சிரிக்கிறாள்
தன் சுதர்சனசக்கரமென
,
சட்டென்று
அரக்கு ஜாங்கிரியை
மொறுமொறு என்று
சுவைக்கவும் பார்க்கிறாள்
,
எல்லாமுமாக பரிணமிக்கும்
வேளைகளுக்கிடையில்
அது
உயிர்ப்பித்துக் கொண்டது
மெல்ல ஊர்ந்து
,
2. தமிழரசி
நகங்கடித்தவாறே
துப்பி எறிகிறாள் தமிழரசி
ஏன் எழுதுகிறாய்?
இறந்தபின்னும்
வாழ்வதற்கு என்கிறேன்
சரி
இப்போது என்னசெய்கிறாய் ?
எழுதி
கொஞ்சம் கொஞ்சமாய் சாகிறேன்
சிறிது எச்சிலை
உமிழ்ந்து சிரிக்கிறாள்
நான் கவிஞன்
ஆகிக்கொண்டிருந்தேன்.
,
3. ஆலடியான்
ஊருக்கு நடுவில்
ஆலமரத்து அடியில்
கருங்கல் நட்டுவைத்து
அதுக்கோர் வேலும் கொடுத்து
நாட்டுத்தெய்வம்
அது காக்கும் தெய்வமென்றும்
இன்னல் நேரத்தில்
கூப்பிட்ட குரலுக்கு
வெள்ளக் குதிரையேறி
வருமென்றும் சொன்னார்கள்
,
மலையாட்டம் நம்பி
கற்பூரம் ஏத்தி
உனையன்றி யாரைய்யா சாமின்னு
கும்பிட்டு வைத்த வேண்டுதல்களே
விழுதுகளாய்
ஆலடியானைத் தாங்கிக் கொண்டிருந்தன.
,
4. நான் கடவுள்
ஏற்றத் தாழ்வுக்கு எதிரான
கம்யூனிஸ்ட் என்பதால்
பின்நாளில்
கடவுளாக்கப்படுவேன்
அப்போது
முன்னாள் கடவுளே
உன் கைகளைக் கட்டி
உப்புக்கற்கள்
கொட்டப்பட தரையில்
முழந்தாளிடச் செய்து
தரதரவென இழுத்து வருவேன்
இரத்தம்
பாரின் மேல்
சொட்டுச் சொட்டாய்ச் சிந்தும்
,
எல்லாம் வல்ல இறைவ!
அடியேன் நான்
கடவுளாவதற்கு முன்
என்னைச் சரணடைவாயாக.

என் பெயர் கார்த்திக். புனைவுப் பெயர் சீவகன். திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கில முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். என்னுடைய முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்ததுள்ளது.