-கீர்த்திவாசன் 

பனிரெண்டு மணிநேர டூயூட்டியை முடித்துக்கொண்டு, அப்பார்ட்மென்ட்டின் வாயில் கூண்டிலிருந்து கிளம்புகையில், சரியாக பெருமழை பிடித்துக்கொண்டது. மழையில் மறைவிடம் தேடி அல்லாடும், நாயையும் அதன் குட்டிகளைப் பார்க்கையில், ஒழுகும் ஓட்டு வீட்டில் பாத்திரம் தேடும் என் மனைவி மகளின் மனச்சித்திரங்கள். இந்த மழைக்கு எங்கள் பாத்திரங்கள் போதாது. ஓட்டைப் படகில் நீர் இறைப்பது போல, இரவெல்லாம் நானும் அவளும் மாறிமாறி ஊற்றினால் தான், பள்ளி செல்லும் மகள் மட்டுமாவது உறங்க முடியும். மழையை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்து காபி குடிப்பவனை எதேச்சையாகக் கண்டதும், நிறைந்து மேலெழும்பும் சாக்கடை போல, எனக்குள் கசப்புகள் பொங்கின. ச்சே, என்ன வாழ்க்கை இது, ஒரு ஒழுகாத வீட்டிற்காக எத்தனை காலம் உழைப்பது. உண்மை, உழைப்பு, உயர்வு… எல்லாம் சுத்தப் பொய், என் தலைவிதி இவ்வளவு தான். என் முன்னிருந்த சாலை, கரிய ஆறுபோல சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்தது. “உனக்கு ஒன்னுமாகலியே, நீ பத்தரமா பஸ்டேண்டுக்கு வந்துரு, பயப்படாத பாத்துக்கலாம்.” பேசிவிட்டு போனை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துக்கொண்டு, வயதான முத்தண்ணனும் வீட்டுக்கு கிளம்பினார். ஒரு பிளாஸ்டிக் கவரை என் கையில் திணித்தவர், “தலைக்கு போட்டுக்கோ. எங்க ஏரியால இதவிட மழையாம்ப்பா. எங்க துணிமணி, பண்ட பாத்திரமெல்லாம் குடிசையோட அடிச்சிட்டு போயிருச்சு. நல்லவேள அவளுக்கு ஒன்னுமாகல. இன்னும் கொஞ்ச நாளைக்கு பஸ்டேண்டு தான் வீடு. வயாசானவ தனியா தவிச்சிட்டிருப்பா, நா கிளம்பரம்ப்பா.” என்று கொட்டும் மழையில் சாலையில் இறங்கி நடந்தார். திரும்பி பாராமல் அவர் கூறிச் சென்ற வார்த்தைகள் மட்டும் எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன, “என் மழைக்கு, உன் மழை பரவாயில்லைனு தைரியமாப் போ…”.     

00

கீர்த்திவாசன் 

நான் கோவையைச் சேர்ந்தவன். இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது பள்ளிக் காலத்தில் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் தொடங்கியது. ஆனந்த விகடனில் சில கவிதைகளும், சிறுகதைகளும், சொல்வனம் மற்றும் வாசகசாலை இணையதளங்களில் சிறுகதையும் வெளியாகி இருக்கின்றன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *