-ஜமீல்
இரவு ஒன்பது மணியைத் தாண்டிவிட்டால் அந்தப் பழைய தேக்குமர சாய்வு நாற்காலியின் உராய்வு சத்தம் வீட்டின் தாழ்வாரத்தில் கேட்கத் தொடங்கிவிடும். அதுதான் வாப்பாவின் நேரம். தொன்னூறுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் அவருடைய உடம்பில் தளர்ந்துபோன தசைகளை விடவும் ஞாபகங்களின் கனமே அதிகமாக உறைந்திருந்தது.
நான் கையில் ஆவி பறக்க சுடச்சுட தேநீரோடு சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்.
வாப்பா… தேநீர் கொண்டு வந்திருக்கேன்.
அவர் சடாரெனத் திரும்பிப் பார்க்கவில்லை. மெதுவாகத் தன் தலையை அசைத்து பார்வை சுவரில் தொங்கும் அந்தப் பழைய கடிகாரத்தின் மீதும் அதற்குப் பக்கத்தில் இருக்கும் மெக்கா மினராவின் கைவினைப் படத்தின் மீதும் நிலைத்திருக்க என்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார்.
ஒவ்வொரு முறையும் நான் அவர் அருகில் சென்று அமரும்போதும் எனக்கு ஒரு பிம்பம் தோன்றும். வாப்பா தன் உடலெனும் நிழலுக்குள் ஒரு ரகசியக் கதவைப் பூட்டி வைத்திருக்கிறார். என் வருகை அந்தப் பூட்டைத் திறக்கும் சாவியாக மாறுகிறது அந்த மூடிய கதவைத் திறந்ததும் அவருக்குள்ளிருந்து பல தசாப்த காலத்து மனிதர்களும் ஊரின் தொலைந்துபோன வீதிகளும்
பிரசித்தி பெற்ற சந்து பொந்துகளும் மாஞ்சுபோன
விழையாட்டுகள் மற்றும்
பூச்சி புழுக்களின் பெயர்களும்
திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட
மரங்களின் நிழல்களும் மறைந்துபோன மனிதர்களின் சிரிப்பொலிகளும் பொங்கி வழியத் தொடங்கும்.
இன்னக்கி என்ன தம்பி தேதியும் மாசமும்? வாப்பா கேட்டார்.
இன்னக்கி ரஜப் மாசம் இருபதாம் தேதி வாப்பா என்றேன்.
அவர் தன் தாடியைக் கைகளால் தடவிக்கொண்டார். அப்போதான் அந்தப் பெரிய வெள்ளம் வந்தது. ஊரே தாண்டு போச்சு. இப்ராஹீம் ஹாஜியாரோட தோப்புல இருந்த தென்னை மரங்கள் எல்லாம் அடிச்சுக்கிட்டுப் போச்சு. அப்போ நான் மத்ரஸால ஓதிக்கிட்டு இருந்தேன். வளியில தண்ணி முழங்கால் அளவுக்கு ஓடுது.
ஆனா உங்க உம்மா
அவர் நிறுத்தினார். அந்தப் பெயரைக் சொல்லும்போது அவருடைய குரலில் ஒரு தனித்துவமான நடுக்கம் வரும்.
வாப்பா சொல்லும் கதைகள் எனக்குப் புதியவை அல்ல. நூறு முறையாவது நான் இதைக் கேட்டிருப்பேன். அதில் பாதி விஷயங்கள் கற்பனையா உண்மையா என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு நீர்த்துப்போனவை.
ஒரே கதையை வேறு வேறு நபர்களின் பெயர்களைச் சொல்லி மாற்றி மாற்றிச் சொல்வார். சில நேரங்களில் கால வரிசைகளே குழம்பிப்போகும். போன வாரம் இறந்துபோன ஒருவரைப் பற்றிப் பேசும்போத அவர் இற்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகச் சொல்வார்.
இன்றைய தலைமுறைக்கு இது வெறுமனே ஒரு முதியவரின் பிதற்றலாகத் தோன்றலாம். வாப்பா நீங்க போன வாரமே இதைச் சொல்லிட்டீங்க என்றோ இப்படி நடக்கவே இல்லை, நீங்க பொய் சொல்றீங்க, என்றோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், அவரின் இளகிய மனசு நொறுங்கிப்போய்விடும்.
நான் ஒரு போதும் அப்படி செய்யவதில்லை. என் முகம் எந்தக் கோணத்திலும் மாறிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன்.
என் பார்வையில் ஒரு சிறு சலிப்புத் தெரிந்தாலும், வாப்பாவுக்குள் இருக்கும் அந்த ரகசியக் கதவு சட்டென அடைபட்டுவிடும். அதனால் முதல்முறையாக ஒரு சுவாரஸ்யமான நாவலைப் படிப்பது போல, கண்கள் விரிய அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
உங்க உம்மா.. அப்போ சின்னப் பிள்ள,வாப்பா தொடர்ந்தார். வீட்டுக்குள்ள தண்ணி வந்துடுச்சுன்னு அவங்க வாப்பா
அதாவது ஒங்கட மூத்தப்பா அவளைத் தூக்கிக்கிட்டு ஓடுறாரு. வழியில அவளோட வெள்ளி மோதிரம் தண்ணிக்குள்ள விழுந்திடுச்சு. அதுக்காக அவ அழுத அழுகை இருக்கே… நான் தான் தண்ணிக்குள்ள கையவிட்டுத் தேடி எடுத்துக் கொடுத்தேன். அதை வாங்கிட்டு அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு…
வாப்பா மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு பதினெட்டு வயது வாலிபனின் வெளிச்சம் தெரிந்தது. இன்றைக்கே பிறந்த ஒரு புதிய பிறவியைப் போல, அந்தப் பழைய ஞாபகத்தின் ஒளியில் அவர் முகம் பிரகாசித்தது.
கதையின் நடுவே, வீட்டின் உட்பகுதியிலிருந்து ஒரு பாத்திரத்தின் சத்தம் கேட்டது. அல்லது, காற்றினால் கதவு அசையும் சத்தம்.
வாப்பா சட்டெனப் பேச்சை நிறுத்தினார். அவர் கண்கள் தாழ்வாரத்தின் இருண்ட மூலைக்குச் சென்றன.
அங்கே யாருமில்லை ஆனால் எனக்குத் தெரியும்… அந்த இடைவெளியில் யார் வந்து நிற்கிறார்கள் என்று.
உம்மா மரணித்து சுமார் ஐந்து வருடங்கள் முடிகின்றன. அந்த வீட்டில் உம்மாவின் புடவைகள், அவர் தலைமாட்டில் எப்போதும் இருக்கும் வெத்தில பாக்கு துவைக்கும் செம்பு இடியுரல் அவர் ஓதிய குர்ஆன் பிரதி எல்லாமே அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் உம்மா இல்லை.
வாப்பாவின் கதைகளுக்குள் இடையே ஒரு மெளனம் வந்து விழும்போதெல்லாம், உம்மாவின் குரல் அங்கே வந்துவிடும். அது சத்தமாகப் பேசுவதில்லை. வீட்டின் மூலையில் எரியும் ஒரு சிறிய மௌன விளக்காக அது சுடர்ந்து கொண்டிருக்கும்.
மகன் உங்க உம்மா சமையல்கட்டுலதான் இருக்காளா? டீக்குச் சீனி குறைச்சி போடச் சொல்லுங்க என்று வாப்பா திடீரெனக் கேட்பார்.
அவர் மறதி நோயின் பிடியில் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்கு அது மறதியாகத் தெரியவில்லை. அது அன்பு. காலத்தைக் கடந்து நிற்க முயலும் ஒரு மனிதனின் கடைசிப் போராட்டம்.
இல்ல வாப்பா உம்மா உள்ள இல்ல என்று நான் உண்மைச் சுமையை அவர் மீது ஏற்றுவதில்லை.
உம்மா தொழுகை பாயில இருக்காங்க வாப்பா என்று மென்மையாகச் சொல்வேன்.
வாப்பா அமைதியாகத் தலையசைப்பார். ஆமா அவ இஷா தொழுதப்புறம் சீக்கிரம் தூங்க மாட்டா. தஸ்பீஹ் உருட்டிக்கிட்டே இருப்பா.
உண்மையில், உம்மா மரணித்த அன்று இந்த வீடு ஒரு அடர் இருளுக்குள் மூழ்கியது. இஸ்லாமிய முறைப்படி உம்மாவை ஜனாஸா எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துவிட்டு வந்த இரவு வாப்பா அழவே இல்லை. வீட்டின் நடுவே அமர்ந்து குர்ஆனின் யாசீன் சூராவை ஓதிக்கொண்டே இருந்தார். எல்லோரும் வாப்பா உடைந்துபோய்விட்டார் என்று நினைத்தார்கள்.
ஆனால் அன்று இரவு தொடங்கியதுதான் இந்த ஞாபகங்களின் பயணம்.
வாப்பாவுக்குள் ஒரு பேரிருள் இருக்கிறது. அது முதுமையின் இருள், தனிமையின் இருள், மௌத்தின் பயம் சூழ்ந்த இருள். ஆனால் அந்த அடர் இருளுக்குள் உம்மா இன்னும் மௌத்தாப்போகவில்லை. அவளது ஞாபகங்கள் ஒரு சுடராக, மாறாத ஒளியாக அவருக்குள் எரிந்துகொண்டே இருக்கின்றன.
வாப்பா மீண்டும் பேசத் தொடங்கினார். இம்முறை அவருடைய கதை தொண்ணூறுகளின் மத்ரஸா காலத்துக்கே சென்றது. நடுநடுவே நபிகளாரின் ஹதீஸ்களையும், பழைய ஊர் நியாயங்களையும் கலந்து பேசினார். அவர் சொல்வதில் பாதி விஷயங்கள் பரஸ்பரம் தொடர்பில்லாதவை. நீர்த்துப்போன கதைகள்தான். ஆனால், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அவருடைய உணர்வு மிகவும் அடர்த்தியானது.
தம்பி…வாப்பா என் கையைப் இறுகப் பற்றிக்கொண்டார். அவருடைய கைகள் நடுநடுங்கின. சில மனிதர்கள் மரணித்துப் போயிடுறாங்கன்னு எல்லாரும் சொல்றாங்க இல்லையா? அது உண்மைதானா?
நான் அவரை உற்றுப் பார்த்தேன்
இஸ்லாத்துல ஷஹீதுகளுக்கு அதாவது தியாகிகளுக்கு மரணமில்லைன்னு சொல்வோம் வாப்பா. ஆனா உண்மையிலேயே அன்பைப் பொழிஞ்ச மனிதர்களும் வபாத்தாகுறதில்லை என்றேன்.
வாப்பா என் வார்த்தைகளைக் கேட்டு லேசாகத் தலையசைத்தார்.
ஆமா தம்பி…அவர் மெல்லிய குரலில் சொன்னார். உங்க உம்மா எங்கேயும் போகல. இந்த ஞாபகத்தோட மறுபக்கத்துல அவ ஒளியா வாழ்ந்துகிட்டுதான் இருக்கா. நான் கண்ணை மூடினா அவ தெரிகிறா. நான் கதைகளைப் பேசும்போது அவ கேட்கிறா. மரணம்ங்கிறது உடம்புக்குத்தானே தவிர, நம்ம நெஞ்சுல எரியுற அந்த ஒளியை அதால அணைக்க முடியாது.
இரவு வெகுநேரமாகியிருந்தது. வீட்டின் தெருவிளக்கு வெளிச்சம் ஜன்னல் வழியாக உள்ளே விழுந்து கொண்டிருந்தது.
வாப்பாவை மெதுவாகப் பிடித்து அழைத்துச் சென்று அவருடைய கட்டிலில் படுக்க வைத்தேன்.
போர்வையைப் போர்த்திவிட்டு,
மின் விசிறியையும் போட்டு விட்டு துஆ ஓதிட்டுத் தூங்குங்க வாப்பா, என்றேன்.
அவர் கண்கள் மூடின. உதடுகள் மெல்ல ஆயத்துல் குர்ஸி ஓதத் தொடங்கின. சில நிமிடங்களிலேயே அவருடைய மூச்சுக்கற்று சீரானது. தூக்கத்திலும் அவருடைய முகத்தில் ஒரு அமைதியான பிரகாசம் இருந்தது.
நான் வீட்டு தாழ்வாரத்திற்குத் திரும்பி வந்தேன். வாப்பா உட்கார்ந்திருந்த அந்தப் பழைய சாய்வு நாற்காலி காலியாகக் கிடந்தது.
சிலர் உண்மையில் இறப்பதே இல்லை. மண்ணுக்குள் மறைந்துபோவது மட்டுமே மரணமாகிவிட முடியாது. அன்பு செலுத்திய மனிதர்களின் ஞாபகங்களின் மறுபக்கத்தில், அவர்கள் ஒருபோதும் அணையாத ஒளியாகத் தொடர்ந்து பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.
வாப்பாவின் இருண்ட உலகத்திற்குள் உம்மா ஒளியாக இருப்பது போல… நாளை வாப்பாவின் ஞாபகங்கள் எனக்குள் ஒரு ஒளியாகத் தொடர்ந்து பிறக்கும்.
வெளியே வீசிய இதமான குளிர்ந்த காற்றில், அந்த வீட்டின் மெளனம் ஒரு தஸ்பீஹ் மணி போல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
00

இயற் பெயர் அப்துல் ஜமீல்
கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட கல்முனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மருதமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஜமீல் என்ற பெயரில் 90 களிலிருந்து கவிதைகள் சிறுகதைகளென எழுதி வருகிறார்.
இதுவரை 11 கவிதைப் பிரதிகளை வெளியிட்டுள்ள இவர் கவிதைக்கான உயரிய விருதுகளான இலங்கை அரசின் சாஹித்ய மண்டல விருது கிழக்கு மாகாண சாஹித்ய விருது கொடகே சாஹித்ய மண்டல விருது அத்தோடு வைரமுத்து அறக்கட்டளையால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் கவிஞர்கள் திருநாள் விருதையும் 2017 ம் ஆண்டு பெற்றுள்ளார்
இவரது படைப்புகளை பல்களைக் கழக மாணவர்கள் தங்களது விசேட கற்கைக்காக ஆய்வுக்குட்படுத்தி பட்டப் படிப்புகளை பூர்த்தியும் செய்துள்ளார்கள் என்பதும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய விசேட அம்சமாகும்
அத்துடன் சிங்களம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிமாற்று செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

