–ஜீவிதா
இங்கிருந்து பத்து நிமிடம்தான்.. சாலைக்கு அந்த பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் தெரியும். அவ்வளவு பெரிய பள்ளம். அதில் விழுந்தால் கண்டிப்பாக சாவு நிச்சயம் ! இல்லை இல்லை என்றாலும் மண்டை உடைந்து கோமாவுக்காவது போய்விடலாம். இந்த நிலையில் உயிர் வாழ்வதற்கு அது எவ்வளவோ மேல் என்று தோன்றியது குணாவுக்கு. ஆனாலும், ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.
கையிலிருந்த காப்பியின் சூடு ஆறி போயிருந்தது. அதைப் பருகக்கூட தெம்பு இல்லை. நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளியைத் துடைத்துக் கொண்டான். காலையில் பெய்த மழைக்குப் பின்னால் சாலை மீது தேங்கி நின்ற நீரில் தன் முகத்தின் பிம்பம் தெளிவாக தெரிந்தது. பரட்டை முடி, வெளிறிய முகம், முன்பிருந்த எடையைவிட சற்று மெலிந்திருந்த உடல்… ஜிம்முக்கு போய் தேற்றிய உடல் கட்டை இழந்ததுதான் மிச்சம். தன்னுடைய அந்த தோற்றமே புதிதாக தெரிந்தது. தன் பழைய முகமே மறந்து போயிருந்தது.
எதற்காக வாழ்கிறோம், யாருக்காக போராடுகிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்று எதுவுமே புலப்படவில்லை. 18 மார்ச் அன்று ஊரடங்கு உத்தரவு போட்டதிலிருந்து தன் வாழ்க்கையே தலைகீழாக மாறி போயிருந்தது. பினாங்கிலுள்ள மொதோரோலா கம்பனியில் ஒரு மென்பொருள் பொறியியலாரராக பணி புரிந்து வந்தான். இதற்கு முன்பு இரண்டு கம்பனிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளான். ஒருசில அறிவார்ந்த சீனியர்கள் சொன்ன அறிவுரையைப் பின்பற்றியே அவ்வாறு செய்தான்.
“இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வேறு ஒரு கம்பனிக்கு லோம்பாட் பன்னிரு. அதிக சம்பளம் டிமாண்ட் பானு. அப்பத்தான் முன்னேற முடியும். இல்லேனா, ஒரே சம்பளத்துல உட்கார்ந்துகிட்டு இருக்க வேண்டிதான்.”
இப்படி கேட்ட அறிவுரைக்கு தலைசாய்த்து ஆடித்தான் இன்று இந்த நிலைமை என்று தோன்றியது.
டிசம்பர் 2019-ல் சீனா நாட்டிலுள்ள வூஹான் எனும் இடத்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு பின்பு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பல வழிகளில் பரவி, எபோலா, காலரா, ஸ்பானிய காய்ச்சல் போன்ற பெருந்தொற்றை உருவாக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து நாட்டின் அரசாங்கமும் அந்தந்த நாட்டு மக்களுக்கு ஊரடங்கு சட்டம் போட்டிருந்தது. மலேசியா திருநாடும் அதற்கு விதிவிலக்கல்ல. மார்ச் 2020 முதல் மலேசியாவிலும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்று அந்த ஆணை ஒரேயடியாக இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
முன்னணி வீரர்கள் என்று வரிசைப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல் அதிகாரிகள், சுகாதார அமைச்சு ஊழியர்கள் என்று இவர்களைத் தவிர வேறு யாரும் காரணமின்றி வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து உணவகங்கள், கடைகள், விளையாட்டு மையங்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள், அங்காடிகள், வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், கம்பனிகள் என்று எல்லாமே மூடப்பட்டிருந்தன.
குணாவின் கம்பனியில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி வழங்கப்பட்டது. அவன் மனைவிக்கும் உட்பட. மனைவி பினாங்கிலுள்ள தேசியப்பள்ளியில் பணி புரியும் ஓர் ஆசிரியர். அவளுக்கும் அதே வசதி ! அது உண்மையிலேயே வசதி அல்ல ; கொடுமை என்று அப்பொழுது இருவருக்குமே புரியவில்லை.
கொரோனா அல்லது கோவிட் 19 எனப்படுவது பிறருக்கு மிக எளிதில் பரவக்கூடிய ஒரு பெருந்தொற்று என்பதால் வீட்டிற்குள் இருக்கும்பொழுதே அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்குமாறு சுகாதார அமைச்சு அறிக்கை விடுத்திருந்தது. ஒரூ மீட்டர் தூரத்தில் நின்றுதான் இன்னொருவருடன் பேச வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டு இருக்க வேண்டும்.
எல்லாம் சரிதான். ஒரு மீட்டர் தூரத்திலிருந்து 6 மாதங்களே ஆன மகள் கௌரியை எப்படி பார்க்க முடியும் ? எது எப்படியாயினும் ஒரே வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்குள் எந்தவொரு சட்டத்தையும் அமல்படுத்த முடியவில்லை.
குணாவின் வேலை நாள் முழுவதும் கணினியின் முன் அமர்ந்து தன் வேலையைச் சரிவர செய்ய வேண்டும். மனைவி, ரூபா இயங்கலை வழி கால அட்டவணைப்படி மாணவர்களுக்குத் தினமும் பாடம் நடத்த வேண்டும். இதனிடையே இருவருக்கும் மற்ற அலுவல் வேலைகள், சந்திப்பு கூட்டஙகள் என்று எல்லாம் குவிந்தன.
வீட்டில் இருக்கிறோம் என்று தொடக்கத்தில் சந்தோஷப்பட்டாலும், போக போக சண்டைகள் அதிகரித்தன. குழந்தையைப் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலைகள் செய்து, சந்தைக்குச் சென்றுத் தினமும் சமைப்பதற்குத் தேவைப்படும் பொருள்களை வாங்கி வந்து சமைப்பது என்று எல்லாவற்றையும் தனியாக கவனிப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவ்வப்போது குணாவுக்கு அவ்வளவாக வேலை பளு இல்லாத நாள்களில் அவனையும் அழைத்துச் செல்வாள். அதுவும், குழந்தையைச் சந்தைக்குள் கொண்டுச்செல்ல அனுமதியில்லை.
ஒரு நேரத்தில் பத்து நபர் மட்டுமே சந்தைக்குள் இருக்க முடியும். ஆகையால், வரிசை மிகவும் நீளமாக இருக்கும். குணாவும் உடன் வந்தால் கௌரியைக் குணாவுடன் காரில் காத்திருக்கச் சொல்லிவிட்டு ரூபா மட்டும் சந்தைக்குச் சென்று வரிசையில் நின்று தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு வருவாள். குணா உடன் வராத நாள்களில், கௌரியைத் தனியாக காரில் பேபி ச்சேரில் அமரச் செய்துவிட்டு கொஞ்சம் பொருள்களை மட்டும் வாங்கி வருவாள். அது ஆபத்தானதாக இருந்தாலும், அவளுக்கு வேறு வழி தெரிந்ததில்லை அப்பொழுது.
திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல்தான் ஆகியிருந்தது. இந்த நிலையில் இந்த கோவிட் வேறு வந்து இவ்வாறான தொல்லைகளைக் கொடுக்கவே குணா, ரூபா இருவரும் பொறுமை இழந்து தினமும் சண்டை போடத் தொடங்கினர். சின்னஞ்சிறு சண்டைகள் எல்லாம் வெடித்து ஒருநாள் எரிமலை போல் வெடித்திருந்தது.
ஸ்ட்ரெஸ் தலைக்கேறி இருந்ததால் எதையுமே யோசிக்காமல், இருந்த வேலையை ஒரே நொடியில் ராஜினாமா செய்துவிட்டான். மேனஜர் தமிழர்தான். அந்த மனுஷனோ எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஆனால், குணா செவி சாய்த்த பாடில்லை. இதற்கு முன்புதான் ஓரிரு முறைகள் வேலை மாறியிருக்கிறானே, பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.
வீட்டிலிருந்து கௌரியைப் பார்த்துக் கொள்வதற்கு உதவினான். கிடைக்கும் தருணங்களில் நிறைய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் கொடுத்து வந்தான். ஆனால், எந்த வேலையும் கிடைத்த பாடில்லை.
நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகின. ஊரடங்கு சட்டமும் முடிந்து மக்கள் வெளியே வந்து புதியதொரு வாழ்க்கையை வாழ் தொடங்கி விட்டனர். விலைவாசியும் தங்க விலைக்கு நிகராக ஏறிக்கொண்டே போனது.
சேமித்து வைத்த எல்லா பணமும் காலியானது. ரூபாவின் ஆசிரியர் சம்பளத்தில் மட்டுமே குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம் வந்திருந்தது. இதனால்தான், தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணங்களும் குணாவின் மனதுக்குள் புகுந்து அவனை ஒருவழி படுத்தின. சில சமயங்களில் ரூபாவை நினைத்துப் பார்த்தும் மனம் வேதனை படுவான். அவளும் எவ்வளவு தூரம்தான் தனியாக சமாளிப்பாள். தான் செத்து போனாலாவது அவள் நிம்மதியாக இருப்பாளோ என்று கூட தோன்றும். கௌரியிடம் சிரித்து விளையாட கூட மனம் ஒவ்வாது. குழந்தை கொஞ்சம் வளர்ந்து, “அப்பா, நீங்க என்ன வேலை செய்யிறீங்க ?” என்று கேட்டால் என்ன சொல்வது என்று குணாவின் மனம் ஒரு போராட்டத்தையே நடத்தும். வாழ்வில் ஒரு தன்முனைப்பு கூட அவனுக்கில்லை.
அடிவயிற்றிலிருந்து ஒருவிதமான சத்தம் எழுந்தது. முன்பெல்லாம் அந்த சத்தம் வரும்பொழுது, வயிறு அதிகமாக வலிக்கும். இப்பொழுது அந்த சத்தம் பழகிப் போயிருந்தது. வழியும் தெரியவில்லை. இறைவன் கருணையுடன் செவிப்புலன் என்று ஒன்று கொடுத்திருப்பதால், வயிற்றிலிருந்து சத்தம் வருகிறது என்று மட்டும் தெரியும்.
இரவு மணி ஏழு ஆகியிருந்தால், ஆபாங் ராஜாக் அவரின் பர்கர் கடையைத் திறக்க ஆயத்தமானார். சிலுவார் போக்கெட்டினுள் கைவிட்டான். பச்சை நிறத்திலான ஒரே ஒரு ஐந்து வெள்ளி மலேசிய பணம் எட்டிப் பார்த்தது. அதற்கு மேல் ஒரு சில்லறை கூட இல்லை.. ஒரு கோழி பர்கர் ரி.ம. 3.00.. தனக்கு ஒன்று ரூபாவுக்கு ஒன்று என்றாலும், மொத்தம் ரி.ம.6.00 ஆகிவிடும். பணம் பற்றாது. சரி, பேஞ்சோ வெறும் ரி.ம.2.50 வெள்ளிதான். அதை இரண்டு வாங்கிக்கொண்டு போகலாம் என்று முடிவெடுத்து ஆபாங் ராஜாக்விடம் சொன்னான். கடையை அப்பொழுதுதான் திறந்திருப்பதால், சற்று தாமதமாகும் என்று சொன்னார்.
சரி என்று தலையைவிட்டு, காத்திருந்தான். என்னதான் ஸ்ட்ரெஸ் ஆ இருந்தாலும், ரூபாவுக்கு சேர்த்து உணவு வாங்குவது அவனுக்கு வழக்கமாகியிருந்தது. அவளை ஒருபோதும் அவன் விட்டுக் கொடுத்ததும் இல்லை. அவளும்தான்!
“கெனாப்பா பாங்.. நம்பாக் ஸ்ட்ரெஸ் ஜெ…”
குணாவின் முகவாட்டம் ஆபாங் ராஜாக்வின் மனதையும் வருடியது போல.
“ஹ்ம்ம்…. சாயா டுலு கெர்ஜா என்ஜினீயர். வாக்து கோவிட் ஹிலாங் கெர்ஜா. அடா ஆனாக்… பாஞாக் நாக் பாயார்..”
“ஓ…. ஹ்ம்ம்… ஆபாங் தாஹூ தாக்.. சாயா கெர்ஜா பைலட் .. கோவிட் ஹிலாங் கெர்ஜா.. னி .. செகாராங் சாயா ஜுவால் பர்கர் ..”
குணாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. விமான ஓட்டுநராக பணி புரிந்த ஆபாங் ராஜாக்வா இன்று பர்கர் விற்றுக் கொண்டிருக்கிறார் ? கோவிட் 19 உலக மக்களின் பொருளாதாரத்தை நிலைக்குழையாகி செய்ய விட்டதென்று செய்திகளில் அவ்வப்போது சொன்னதைக் கேட்டிருந்தான். ஆனால், கண் முன்னே அப்பொழுதுதான் பார்த்தான்.
சாதாரணமாக, விமான ஓட்டுநரின் சம்பளம் மாதத்திற்கு ஏறக்குறைய ரி.ம.12000 இருக்கும். அவ்வளவு பணத்தைப் பார்த்துப் பழகியிருந்த ஒருவரா இன்று அஞ்சுக்கும் பத்துக்கும் பர்கர் விற்கிறார் ?
குணாவால் நினைத்தே பார்க்க முடியவில்லை. தடுமாறினான். அவர் கஷ்டத்தைவிட தன் கஷ்டம் பரவாயில்லை என்று தோன்றியது. “இனி பர்கர் ஆபாங்.. பர்கர் ஆயாம் டுவா …சாயா பெலாஞ்சா ..தாக்பெ .. ஆபாங் சாபார் பாஞாக்.. ரெஸிகி துஹான் தெதாப் அடா”
“தெரிமா காஸிஹ் பாஞாக், ஆபாங்..”
இடது கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
‘க்ளிங் க்ளிங்’
“ஓ .. அட ஆர்டர் ஃபுட்பாண்டா மாசுக்..”
ஆபெங் ராஜாக் அவ்வாறு சொன்னதும் குணாவுக்கு ஒரு யோசனை தோன்றியது..
இந்த ஃபுட்பாண்டா டெலிவரி வேலை செய்தால் என்ன.. தற்காலிகமாக சரியான வேலை கிடைக்கும் வரையில்.. நண்பன் தீனா கோவிட் 19 உலகை சூழ்ந்த காலத்திலிருந்து அந்த வேலைதான் செய்கிறான். இரவும் பகலும் பாராது ஓடினால் மாதம் ரி.ம.4000 பார்க்கலாம் என்று ஓரிரு முறைகள் சொல்லியிருக்கிறான். அப்படி என்ன அதில் வருமானம் வந்து விடபோகிறது என்று அதைப்பற்றி குணா யோசித்ததில்லை. ரி.ம.4000 சம்பாரிப்பதற்கு வெயில், மழை என்று பார்க்காமல் ஓடணும். திடீரென விபத்துள்ளானால் காப்புறுதி எதுவும் இல்லை. காரில் இந்த வேலையைச் செய்ய முடியாது கண்டிப்பாக. சாலை நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரிடும். மோட்டார் சைக்கிள்தான் பயன்படுத்தனும்..
மோட்டார் சைக்கிளுக்கு அடிக்கடி கருப்பெண்ணெய் மாற்றனும், டயர் தேயும், பெட்ரோல் என்று ஏகப்பட்ட செலவுகள் வரும். அவற்றை ஈடுகட்ட இந்த ஃபுட்பாண்டா சம்பளம் போதுமா என்று யோசித்து வேண்டாம் என்று விட்டுவிட்டான் முன்பு.
ஆனால், இன்று ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு அந்த வேலையாவது கொஞ்சம் பணம் கையில் வைத்துக்கொள்ள உதவும் என்று தோன்றியது.
வீடு திரும்பி ரூபாவிடம் வாங்கி வந்த பர்கரைக் கொடுத்தான். கௌரிக்கு மட்டும் உணவும் பாலும் கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு, வழக்கம் போல சாப்பிடாமல் குணாவுக்காகக் காத்திருந்தாள். அவளின் முகத்தைப் பார்த்ததும் ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டான். பதிலுக்கு அவளும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
குணா வாங்கி வந்த பர்கரையும் ரூபா வீட்டில் சமைத்து வைத்திருந்த சார்டின் கரி மற்றும் சாதத்தையும் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர். தனக்குத் தோன்றிய யோசனையை ரூபாவிடம் சொன்னான். சற்று நேர அமைதிக்குப் பின், ரூபாவும் சம்மதம் தெரிவித்தாள். அன்றிரவு, வெகு நாள்களுக்குப் பிறகு இருவரும் எல்லா பிரச்சனைகளையும் மறந்து தூங்கினார்கள்.
குறிப்பு :
“கெனாப்பா பாங்.. நம்பாக் ஸ்ட்ரெஸ் ஜெ…” – ஏன் ஒருமாதிரியாக இருக்கிறீர்கள் ?
“ஹ்ம்ம்…. சாயா டுலு கெர்ஜா என்ஜினீயர். வாக்து கோவிட் ஹிலாங் கெர்ஜா. அடா ஆனாக்… பாஞாக் நாக் பாயார்..” – நான் முன்பு மென்பொருள் பொறியியலாளர். கோவிட் காலத்த்தில் வேலையை இழந்துவிட்டேன். ஒரு குழந்தை உள்ளது.. நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது..
“ஓ…. ஹ்ம்ம்… ஆபாங் தாஹூ தாக்.. சாயா கெர்ஜா பைலட் .. கோவிட் ஹிலாங் கெர்ஜா.. னி .. செகாராங் சாயா ஜுவால் பர்கர் ..” – உங்களுக்குத் தெரியுமா நான் ஒரு பைலட். எனக்கும் கோவிட் காலத்தில் வேலை போனது. நான் இப்பொழுது பர்கர் கடை போட்டு வியாபாரம் செய்யுறேன்..
“இனி பர்கர் ஆபாங்.. பர்கர் ஆயாம் டுவா …சாயா பெலாஞ்சா ..தாக்பெ .. ஆபாங் சாபார் பாஞாக்.. ரெஸிகி துஹான் தெதாப் அடா“ – இது உங்கள் பர்கர். கோழி பர்கர் இரண்டு. இதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். பொறுமையாகவே இருங்கள். கண்டிப்பாக கடவுள் அருள் கிட்டும்.
“தெரிமா காஸிஹ் பாஞாக், ஆபாங்..” – நன்றி, அண்ணா
ஓ .. அட ஆர்டர் ஃபுட்பாண்டா மாசுக்..” – foodpanda (உணவு அனுப்பும் சேவை) டெலிவரி வந்துள்ளது
00


