-பரிவை சே.குமார்.
அந்த மாலை நேரத்தில் விஜயா மருத்துவமனை வாசலில் ஒரு ஓரமாகத் தன் மகளுடன் காத்திருந்தாள் மைதிலி, அவளுடன் உறவுகளும் நெருக்கமானவர்களும் இருந்தார்கள். அவளின் கன்னத்தில் கண்ணீர் இறங்கிய வண்ணமிருந்தது.
அந்தச் செய்தியை சொன்னவர்கள், இந்த மருத்துவமனைக்குத்தான் வருகிறோம் நீங்க அங்க வந்துருங்க என்று சொல்லிப் போனை வைத்த தருணத்தில் கதற ஆரம்பித்தவளின் மனசு ஊமையாகி, சப்தமும் அற்றுப் போன குரலோடும், நடுங்கும் உடம்போடும் நடை பிணமாய் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது காலில் வெட்டுப்பட்டு ரத்தம் வெளியேறாமல் இருக்க சுற்றிய துணியெல்லாம் ரத்த ஈரம் சூழ தூக்கிக் கொண்டு வரப்பட்ட ஒருவரை வாசலில் வைத்துப் பார்த்த மருத்துவமனை பாதுகாவலரில் ஒருவர், ‘ஐயா… அடிபட்ட, வெட்டுப்பட்ட கேசெல்லாம் இங்க பாக்கணுமின்னா போலீஸ் பேப்பர் வேணும். இல்லேன்னா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போகணும்’ என்று சொன்னார்.
‘ஐயா வேல பாக்கும்போது வெட்டுப்பட்டிருச்சு. கவர்மெண்டு ஆசுப்பத்திரிக்கு ரொம்பத் தூரம் போவணும். வெட்டுப் பலமா இருக்கதால நத்தம் வேற அதிகமா வெளியாயிக்கிட்டிருக்கு. மனிதாபிமானத்தோட பாத்தா ஒரு உசுரக் காப்பாத்தலாம்ய்யா… டாக்டருங்க அதுக்குத்தானே படிச்சிருக்காங்க… உள்ளாற போயி கேக்குறோமுய்யா’ என்றார் கூட வந்த ஒரு வயதான, வேலை பார்த்து வலுவான உடம்புடன் இருந்த பெரியவர்.
‘சொல்றது சரிதாய்யா… ஆனா இது அவரா வெட்டிக்கிட்டதா… இல்ல யாரும் பகயில வெட்டுனதா… அப்படிங்கிறது எங்களுக்குத் தெரியாதுல்ல. நாளைக்கி போலீஸ் கேசானா அப்பறம் எங்க டாக்டருல்ல பதில் சொல்லி ஆகணும். அதுனால முதல்ல போலீஸ்ல பேப்பர் வாங்கிட்டு வாங்க’
‘போலீசுக்கிட்டப் பேப்பரா..? இங்கனயிருக்க ஸ்டேசன்ல கேட்டா எந்த ஏரியா… என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு உங்க ஏரியா எங்க சரகத்துல இல்லன்னு சொல்லுவாங்களேய்யா’ வருத்தமாய்ச் சொன்னார் மற்றொருவர்.
‘ம்… சொல்லத்தான் செய்வாங்க. அப்படிச் சொல்ல வேண்டாம்ன்னா ஐநூறுக்குப் பதிலா ஆயிரத்தைக் கொடுங்க… களத்தூர் கலகத்துல வெட்டிக்கிட்டாக்கூட… மாத்தூர் கம்மாயில வேல பாக்கும்போது தவறுதலா வெட்டுப்பட்டிருச்சுன்னு எழுதிக் கொடுத்துருவாங்க… அதே ரெண்டாயிரமாக் கொடுத்தீங்கன்னா உங்க கூட ஒரு போலீஸ்காரர் இங்க வந்து உடனே பாருங்கன்னு சொல்லிட்டுப் போவாரு. எல்லாமே தள்ளுற நோட்டுலதானிருக்கு’
‘இப்பவும் வாங்குறாகளா…? இல்லன்னுல்ல சொன்னாக’ என்றார் ஒருவர்.
‘இல்லன்னுலாம் இல்ல… இணைவி, துணைவின்னு ஜிபே நம்பரு எதுக்கு இருக்கு’ சிரித்தார் மற்றொருவர்.
‘இதுக்கும் லஞ்சமா..? ஒருத்தன் உயிர் போற வலியோட கிடக்கான்ய்யா…’ ஆயாசமாகச் சொன்னார் அந்தப் பெரியவர்.
‘அதுக்கு நான் என்ன செய்யட்டும் பெரியவரே. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனா போலீஸ்ல சொல்லியிருந்தா மட்டுமே இந்த மாரிக் கேஸெல்லாம் பார்ப்பாங்க… ஓரமா போயி நின்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க…’ என்றபடி அந்தப் பாதுகாவலர் நகர்ந்தார்.
‘எல்லாத்துக்கும் லஞ்சம்…!? எத்தனை இந்தியன் வந்தாலும் எவனும் திருந்தமாட்டான்’ என்றான் அங்கு நின்றிருந்த இளைஞன் ஒருவன்.
கூட இருந்தவனோ ‘நாட்டைத் திருத்துறது அப்புறம் முதல்ல உன் வீட்டைத் திருத்துன்னு சொன்ன இந்தியனை தெருத்தெருவா ஓடவிட்டவனுங்க நம்மாளுக…’ எனச் சிரித்தான்.
‘தெருத்தெருவா மட்டுமா தியேட்டரை விட்டே…’ எனச் சிரித்த இளைஞன், ‘அடுத்த வீட்டுல தீப்பிடிச்சா ஆர்வமாப் பார்போம்… அதே நம்ம வீடுன்னா மட்டும் கிடந்து தவிப்போம்’ என்ற அந்த இளைஞன் வெட்டுப்பட்டவரைக் கூட்டி வந்தவர்களிடம் ‘இங்க நிக்கிறது, போலீஸ் ஸ்டேசன் போறதெல்லாம் வேஸ்டுங்க. சிரமத்தைப் பார்க்காம, இந்த ரோட்டு முக்குல ஒரு டாக்டர் இருப்பாரு… அவருக்கிட்ட முதலுதவி பண்ணிக்கிட்டு கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க. கிளம்புங்க.’ என்று சொல்ல, அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
‘ஏம்ப்பா… இங்கதான் வர்றேன்னு சொன்னாங்களா..?’ மைதிலியிடம் கேட்டார் பெரிய மீசை வைத்துப் பேண்ட் சர்ட்டில் இருந்த அந்த உயரமான மனிதர்.
‘ஆ… ஆமா… மா…மா…’ என்ற மைதிலி உலர்ந்த உதடை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு, துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். அருகில் அமர்ந்திருந்த ஐந்து வயது மகளின் முகத்தையும் துடைத்து விட்டாள். அதன் முகத்தில் சோகமும் சோர்வும் ஒருசேர அப்பிக்கிடந்தது.
‘இல்லாதவுக வந்தா இப்படித்தான் அத வாங்கிட்டு வா… இத வாங்கிட்டு வான்னு வெரட்டுவாங்க. இதே பெரியாளுவ, பணக்காரனுவ வந்தா உள்ள விட்டுருவானுங்க… கேட்டா நாங்க எல்லாருக்கிட்டயும் இதெல்லாம் கேட்கத்தான் செய்யுறோமுன்னு சொல்லுவானுங்க’ என ஆஸ்பத்திரியை ஒட்டியிருக்கும் டீக்கடைக்காரர் உள் நோயாளிக்குப் பால் வாங்க வெளியில் வந்திருந்த ஒரு நடுத்தர வயது மனிதரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மனிதரும் அது சரிதான் என்பது போல் தலையை ஆட்டினார்.
தனியார் மருத்துவமனைகளில் இப்போது சாப்பாடு முதல் மாத்திரை வரை எல்லாமே உள்ளயே இருக்கும். எதற்கும் வெளியில் செல்ல வேண்டியதில்லை. டீ, காபிக்கெல்லாம் அவர்கள் வைத்ததுதான் விலை என்பதால் நடுத்தரக் குடும்பத்து மனிதர்கள் அங்குதான் பார்த்தாக வேண்டும் என்ற நிலையில் கடனை வாங்கி, நகைகளை அடகு வைத்து வைத்தியம் பார்க்க வந்திருந்தாலும் காபி, டீ, பாலுக்கு மருத்துவமனைக்கு வெளியில் இருக்கும் கடைகளை நாடி வருவார்கள் என்பதால் அந்த வீதியில் டீக்கடைகளும் சாப்பாட்டுக் கடைகளுமாய்த்தான் இருந்தன.
மைதிலி தனக்கு போன் வந்த நம்பருக்கு அடித்துப் பார்த்தாள். இரண்டு முறை முயற்சித்தும் போன் எடுக்கப்படவில்லை.
‘இங்கேரு… என்னயவே அடிக்க வந்தியல்ல… இந்தா வர்றன்டா… கொக்காலி ஒன்னய வெட்டி செங்கக் காலவாயில வெறகா வக்கிறன்டா’ என எவனையோ திட்டிக் கொண்டு ரோட்டை அளந்து கொண்டு போனார் ஒர் மதுப்பிரியர்.
‘யோவ் இங்க பஸ்ல அடிபட்டுச் செத்தியன்னா ஒண்ணும் கிடைக்காது. ஊர்ல போயி எவனாச்சும் கள்ளச்சாராயம் காச்சுறானான்னு பாரு… அதை வாங்கிக் குடிச்சிட்டு அவன வெட்டப் போ… உனக்குப் பத்து லெட்சமாச்சும் கிடைக்கும்’ எனத் தன் ஸ்கூட்டரில் விழுந்து, தன்னையும் விழ வைக்க இருந்த நொடியில் சுதாரித்து வண்டியை சற்றே ஒதுக்கி நிப்பாட்டிக் கத்திட்டுப் போனான் ஒருவன்.
‘போப்… போப்… போ… இந்த ரோடே எங்களுக்குத்தான். நீ பாத்துப் போ…’ எனக் கத்திவிட்டு அடுத்த வண்டியில் போய் விழுந்தார் அந்த மதுப்பிரியர்.
‘ஆமாய்யா… அவன் சொல்றது சரிதான். இன்னக்கி குடிகளுக்கு முக்கியமிருக்கோ இல்லயோ குடிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அன்னக்கிப் பாக்குறேன் ரெண்டு பக்க ரோட்டுக்கும் இடயில ஒரு சிமெண்டுத் தடுப்பு இருக்குமுல்ல அதுல உக்கார்ந்து பொறுமையாத் தண்ணியடிச்சிக்கிட்டு இருக்கானுங்கய்யா… நாடு எங்க போவுதுன்னு பாத்தியளா…’ தள்ளுவண்டியில் இளநீர் விற்றுக் கொண்டிருக்கும் மனிதர் இளநீரைச் சீவியபடி சொன்னார்.
‘இன்னக்கி நெலமக்கி நாடு போற போக்கு எதுவும் சொல்றமாரி இல்லப்பா’ என்றபடி மல்லிகைப் பூவைக் கட்டிக் கொண்டிருந்தாள். கூடையில் வைத்துப் பூ விற்கும் கிழவி.
ரோட்டோரம் இருக்கும் அம்மன் கோவிலில் ‘ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதையும் தாண்டி ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் இருக்கும் சற்றே பெரிய டீக்கடை ஸ்பீக்கரில் ‘கம்பள போளே பக்கம் பள போளே ரொக்கம் பள போளே’ என அனிருத் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தான்.
மைதிலி எல்லாவற்றிலும் கண்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.
எதிர்புறச் சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்களைப் பார்த்தாள். மாடு பிய்த்தது போக மீதமிருந்த விளம்பரங்கள், திருமண வாழ்த்துகள், அரசியல்வாதியின் வருகைக்கான வரவேற்புகள், வர இருக்கும் படங்கள், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் என வியாபித்திருக்க, சுழன்ற கண்ணை ஒரு போஸ்டரில் நிறுத்தினாள்.
அதில் இன்றைய முன்னணி நாயகன் சிவகாந்த், நாயகியின் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி நின்றான்.
அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை உடைத்துக் கொண்டு வர, தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயற்சித்தும், கண்ணீர் வெளியேறிக் கன்னத்தில் வழிவதை நிறுத்த முடியவில்லை. அருகிலிருந்த மகள் தனது பிஞ்சுக் கைகளால் அவள் கண்ணீரைத் துடைத்தாள்.
மகளை இழுத்து அணைத்துக் கொண்ட நேரம் அவளின் போன் அலறியது.
எடுத்தாள்.
அவள் அலோ எனச் சொல்வதற்குள் ‘என்னம்மா… வந்துட்டாங்களா..? டாக்டர் என்ன சொன்னார்…? நாங்க எல்லாரும் வந்துக்கிட்டு இருக்கோம். நீ பயப்படாதே. இன்னம் அரைமணி நேரத்துக்குள்ள வந்திருவோம்’ என அவளின் அப்பா படபடப்புடன் கேள்விகளை அடுக்கி, விரைவில் வந்து விடுவோமென்ற ஆறுதல் வார்த்தையும் சொல்ல, ‘இன்னும் வரலைப்பா’ என்று மட்டும் சொல்லி போனை அணைத்தாள்.
‘என்ன இது… எப்பத்தான் வருவாங்க..? இவ்வளவு நேரம் ஆக்குறாங்க… இங்க வர நேரமாகும்ன்னா எதாவது பக்கத்து ஆஸ்பத்ரியில பாத்திருக்கலாமே..? நல்லாத்தான்… என்னமோ ஏதோன்னு நாம இங்க தவிச்சிக்கிட்டு இருக்கோம். அவளும் மனசுக்குள்ள வேதனையோட எவ்வளவு நேரந்தான் காத்திருப்பா’ என்ற நடுத்தர வயதுப் பெண்ணிடம், ‘என்ன ஏதுன்னு தெரியல… உடனே வாங்கன்னு சொன்னதும் ஓடியாந்திருக்கோம். அவுகளக் காணோம்.’ என்ற நடுத்தர வயது பெரிய மீசை, ‘ஏம்ப்பா… நம்பரைக் கொடுவே… நான் அடிக்கிறேன்’ என்றார் மைதிலியிடம்.
அவளே அடித்தாள்.
ரிங்க் போய்க் கொண்டிருந்தது.
மைதிலி கிராமத்தில் பிறந்தவள் என்றாலும் பண வசதிமிக்க குடும்பம். இரண்டு ஆண்களுடன் பிறந்த ஒரே பெண் என்பதால் செல்லம், அதுவும் அப்பா செல்வத்தின் செல்லம் அவள். எம்.எஸ்.சி வரை படித்தது கூட அப்பாவின் ஆதரவால்தான். ‘பொட்டப்புள்ளய எதுக்கு அம்புட்டுத்தூரம் கொண்டு போயி படிக்க வைக்கிறே..?’ என ஊரும் உறவுகளும் ஏன் மனைவியும் கூட கேட்டபோது ‘அவ விருப்பம் படிப்பு… படிக்கட்டும்’ எனச் சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் காலேஜில் சேர்த்துப் படிக்க வைத்தார்.
யார் என்ன சொன்னாலும் காது கொடுத்தே கேட்காதவர், மைதிலியின் குரலுக்கு மறு பேச்சுப் பேசமாட்டார். மைதிலியின் மாமாவுக்கும் அவளின் அம்மாவுக்கும் சம்மந்தம் பண்ணிக் கொள்ள ஆசை. இந்த ஆசை அவரின் காதுக்கு வந்தபோது ‘அவன் ரொம்பப் படிக்கவுமில்லை… சினிமாவுல வேற இருக்கான். சினிமாக்காரனுக்கு எம்பொண்ணைக் கட்டமாட்டேன்’ என்பதில் பிடிவாதமாக நின்றார்.
அவளின் அம்மா கூட ‘சினிமாவுல ஜெயிச்சான்னா படிச்சவன் சம்பாரிக்கிறதைவிட கோடிக்கோடியா சம்பாரிப்பான். எங்கண்ணன் மகன், நல்ல குணம், நம்ம பிள்ளைதானே அவன்… நாம எல்லாரும் காஞ்சி காமாட்சி கோயில்ல அவளுக்குக் காது குத்தும்போது பேசுனது ஞாபகமிருக்கா… எங்கண்ணன் மகனுக்குத்தான் கட்டுவோம்ன்னு பேசுனமா இல்லையா’ எனச் சண்டை பிடித்து அவரின் மனதை மெல்ல மாற்ற, ‘படிச்சபுள்ளை அதோட எண்ணம் என்னன்னு கேட்போம்’ என்ற முடிவுக்கு அவர் வந்து மைதிலியிடம் கேட்ட போது, ‘அத்தானைக் கட்டிக்கிறேம்ப்பா’ என்றாள்.
படிக்காதவனைப் படிச்ச பெண் காதலிப்பதாய், கட்டிக் கொள்வதாய் சினிமாக்காரன் காமிப்பது கூட நிஜம்தானோ என நினைத்துக் கொண்டு ‘பின்னாடி நீ வருந்தக் கூடாதும்மா’ என்றவரிடம் ‘அத்தானைப் பிடிச்சித்தான் கட்டிக்கிறேன்னு சொன்னேன்’ என்றாள்.
திருமணம் முடிந்தது.
படிப்பு அதிகமில்லை என்றாலும் பண்பானவனாய், பாசமிக்கவனாய் இருந்தான். அந்தச் சந்தோசத்தின் முத்துத்தான் அவளின் அருகில் சோகமாய் சோர்வுடன் அமர்ந்திருக்கும் அந்த ஐந்து வயதுப் பெண் குழந்தை அஷ்மிதா.
பல வருடமாகப் போராடிக்கிட்டு இருந்தவன், மகள் பிறந்தபோதுதான் போராட்டத்தில் இருந்து சற்றே மேல் நோக்கிப் பயணித்தான். முதன் முதலில் திரையில் அவனது பெயரைப் பார்த்தபோதும், அவன் வந்த இரண்டு மூன்று இடங்களிலும் விசிலடித்துக் கத்தியும் கொண்டாடியிருக்கிறாள் மைதிலி.
அவனிடம் நிறையக் கதைகள் இருந்தன. நடிப்பைவிட இயக்குநராக வேண்டும் என்பதே அவனின் ஆசை. அதற்காகத்தான் பிரபலங்களிடம் இணை இயக்குநராய் பணி செய்தான். அவ்வப்போது அவர்களின் படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தான்.
காரேத்தேயில் கருப்புப் பெல்ட் வாங்கியிருந்தான். சிலம்பம் கற்றிருந்தான்.
தன்னோட முதல் கதையில் சிவகாந்த்தான் நடிக்கணும் என்பதில் முடிவாக இருந்தான். சிலமுறை அது குறித்து கேட்டபோது, ‘பெரிய இயக்குநர்களே காத்திருக்காங்க… நீங்க காமெடி பண்ணாதீங்க’ எனச் சொல்லி கேலி பண்ணியதை மைதிலியிடம் சொல்லி அழுதிருக்கிறான். அப்போதெல்லாம் ‘புதுமுகங்களைப் பாருங்க’ என அவள் சொல்வதுண்டு. ‘இவர் நடிச்சா நமக்குச் சுலபமா தயாரிப்பாளர் கிடைப்பாங்க’ என்று சொல்வான்.
அவனின் காலம் வெல்ல சிவகாந்த் அருள் புரிய வேண்டும். இன்று வரை அது நிகழவில்லை.
அவனின் பார்வைபட்டிருந்தால் இன்று அவள் இங்கே அழுகையோடு நின்றிருக்க வேண்டியது இருந்திருக்காது என நினைத்துக் கொண்டு மீண்டும் அந்தப் போஸ்டரைப் பார்த்தாள். அவனின் சிரிப்பு அவளைக் கேலி செய்வதாய் இருந்தது.
போனை எடுக்குறாங்க இல்லையே என்ற கடுப்புடன் அதை அணைத்து வைத்தாள்.
அவளின் போன் கூப்பிட்டது.
பதட்டமாய் எடுத்து ‘அண்ணே…’ என்றாள் அழுகை வந்தது.
‘இதோ வந்துட்டம்மா… நெடுக ட்ராபிக், இப்ப வந்திருவோம்’
‘என்னண்ணே ஆச்சு…?’ உடைந்தவளின் கேள்வி காற்றில் கரைந்தது. எதிர்முனை அதற்கு மேல் பேசவில்லை.
உடைந்தாள்…
அப்பாவின் கார் வந்து நிற்கவும் அலறிக் கொண்டு ஓடினாள்… அவரும் கதறியபடி இறங்கி மகளைக் கட்டிக் கொண்டார்.
அந்த இடத்தில் அழுகை ஆட்சி செய்தது.
அப்போது அந்த ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தது.
இவர்கள் அடித்துப் பிடித்து உள்ளே ஓடினார்கள்.
அதற்குள் அவனை ஸ்டெச்சரில் ஏற்றி, ஐசியூவுக்குள் கொண்டு சென்றார்கள்.
பார்க்க வேண்டும் எனப் பிதற்றியவளிடம் ‘இப்ப முடியாது… டாக்டர்ஸ் பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு மட்டும் அனுமதி தர்றோம்’ என்றபடி நர்ஸ் ஓடினாள்.
அவளிடம் போனில் பேசியவன் அருகில் வந்து ‘இன்னைக்குத்தான் சூட்டிங்கோட கடைசி நாள்… ஒரு சண்டைக் காட்சி… நடிகர் சிவகாந்த்க்கு டூப் போடுறவரு வரல… எப்படியாச்சும் சூட்டிங் முடிக்கணும்ன்னு எங்க இயக்குநர் புலம்பிக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு இவன்தான் இன்னொரு ஆளை டூப்பா ரெடி பண்ணிக் கூட்டி வந்தான். சிவகாந்த் குளோசப் ஷாட்ல நடிச்சிட்டு கேரவான் பொயிட்டாரு. இவன் காட்சியை விளக்கிட்டு, டூப் போடுறவரை சாரத்துல மேல ஏறச் சொல்லிட்டு கீழ நின்னான். அவரு மேல ஏறினதும் சாரம் மொத்தமாச் சரிஞ்சி… எல்லாரும் ஓடிட்டோம்… இவன் அதுக்குள்ள மாட்டி… டூப்பா நடிக்க வந்தவரு ஸ்பாட்டுல…’ அவன் அதற்கு மேல் பேசவில்லை.
அவள் உடைந்து அழுதாள்… குழந்தையும்.
‘சிவகாந்த் எங்க…? அவரு வரலயா…?’ என்றாள் கண்களைத் துடைத்தபடி.
‘அவரு அமெரிக்கா போறதால இங்க வர நேரமில்லை….’
‘ம்… உங்க இயக்குநர்…?’
‘அவரு ஸ்பாட்டுல அந்த டூப்…. அங்க பாக்க வேண்டியதை….’
‘புரியிது. யாருக்காக உழைச்சாரோ அவங்க யாரும் வரமாட்டாங்க. இனி அவரு எழுந்து நடப்பாரா…? இல்லையான்னே தெரியாது. நாங்க வந்து அவர் முகத்தைப் பாக்குறதுக்கு முன்னால அவர உள்ளே கொண்டு போயிட்டீங்க… இதுல என்ன நாடகம் அரங்கேறுதோ தெரியல… ஏன்னா நீங்க சினிமாக்காரங்க. என்ன கதை வேணுமின்னாலும் எழுதுவீங்க… போதும், நீங்க யாரும் வேண்டாம். போயிருங்க’ கையெடுத்துக் கும்பிட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் நின்றான்.
‘ஏம்ப்பா… அவருக்கு அடி பலம்ன்னு தெரியுது. பொழச்சுக்குவாருல்ல’ கண்ணீரோடு கேட்டார் செல்வம்.
இப்போது அவன் பதில் பேசாமல் கையெடுத்துக் கும்பிட்டான்.
அவனது கண்களில் நிறைந்த கண்ணீர் உண்மைக் கதை என்ன என்பதை அங்கே எழுதிய போது அதுவரை அழாமல் இருந்த அஷ்மிதா ‘அப்பா…’ எனப் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.
00

பரிவை சே.குமார்
இதுவரை எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார், அறுகு, மாதரசி என்ற சிறுகதைத் தொகுப்புகளும்; வேரும் விழுதுகளும், திருவிழா, காளையன், சாக்காடு, மருள், உன்மத்தம், கறுப்பி என்ற நாவல்களும்; உள்ளூர் இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன. எதிர்சேவை சிறுகதைத் தொகுப்புக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் வட்டார வழக்குக்கான பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். விண்மீன் மின்னிதழில் ஆசிரியராகவும் இருக்கிறார்.

