பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை 

–ராணி கணேஷ்

ஒரு வெள்ளாட்டைப் பற்றி ஒரு முழு புத்தகமாய் என்ன எழுதியிருக்க முடியும் என்ற ஆர்வத்தோடேயே ஆரம்பித்தேன். பல வேலைகளுக்கு நடுவே ஒரே நாளில் வாசித்து முடித்து விட்டேன் 143 பக்கங்களை என்பதை விட, பூனாச்சியை படித்து விட்டேன் என்றும் கூறலாம். ஆம் வாசித்தபின்னும் நினைவெங்கும் பூனாச்சியின் குரலும் பாட்டிலில் பால்குடிக்கும் பச்சிளங்குட்டிகளும் சுற்றியலைந்தன.  சிறிய சம்பவத்தைக் கூட பிறர் உணரும் வகையில் எழுதுவது என்பதொரு கலை. வீட்டில் ஆடுகள் இருந்த காலத்தில் பால் போதாமையாலோ தாயால் நிராகரிக்கப்படும் போதோ, குட்டிகளுக்கு பாலூட்ட வேண்டியிருக்கும். சமயங்களில் அதன் தாயிடம் கறந்த பாலையே பாட்டிலில் இட்டு உறிஞ்சி ரப்பரால் அடைத்து குட்டிகளுக்கு புகட்ட வேண்டும். கடைவாயில் நுரைபொங்க முட்டிக் குடிக்கும் குட்டியின் அழகை நாளெல்லாம் கண்டுகொண்டிருக்கலாம். தாயைப் போல நெருக்கமாய் நம்மை உணருமோ என்னவோ பின்னாடி துள்ளி துள்ளி ஓடி வரும் குட்டிகள் எல்லா பொழுதுகளையும் அழகாக்கும். சில நேரம் ஆட்டைப் பிடித்துக் கொண்டு புகட்ட வேண்டும். பச்சிளங்குட்டிகளுக்கு வாயில் பிடிக்க தெரியாமல் தடுமாறும். அதற்கு பாலை வாயில் பீச்சி ருசி பழக்க வேண்டும். காம்பை பிடித்து சுவைக்கத் தெரிந்த பின் எப்போ எப்போ என்று காத்திருக்கும் குட்டிகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும், பிடித்திழுத்தாலும் விடாமல் உறிந்து கொண்டலையும். சமயத்தில் பிற ஆடுகளிடம் பால் குடிக்க விடுவதும் உண்டு. இவை எல்லாமே பதிவாகியிருக்கின்றது இந்தக் கதையில். ஆட்டுக்குட்டிகளோடும் சினேகமாகவும், அவை வளர்வதை கண்டு களித்ததாலும் விருப்பமாய் வாசிக்க ஏதுவாகியது, வெள்ளாட்டின் கதை.

கிழவியும் கிழவனும் பின் பூனாச்சியும். அந்த சிறிய வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள் சித்திரமாய் விரிகிறது. அந்த நோஞ்சான் ஆட்டின் மீதான அவர்கள் பிரியமும், அதன் காதலும், பிரிவும் என நெஞ்சை தொட்டு செல்கிறது கதை. ஆட்டின் பெயர்கள் அத்தனை அழகு. ஆட்டின் மனதை அது பேசி அறிய தந்திருக்கின்றார் ஆசிரியர். பூனாச்சிக்காக முதலில் பேசுபவர், பின் பூனாச்சியையே பேச வைக்கின்றார்.  பெரிதாக கூட்டமில்லை. கிழவனும், கிழவியும், ஒரு சில பட்டி ஆடுகளும் பின் பூனாச்சியும் தான். ஓரிரு அத்தியாயங்கள் கிழவியின் மகளும் அவள் ஆடுகளும் வருகின்றார்கள். ஆடுகளின் பெயர் மட்டுமே தெரிகிறது. மனிதர்களின் பெயர்கள் எங்குமே உரைக்கப்படவில்லை. கிழவன், கிழவி, பகாசுரன் அரசாங்கம் இப்படியாக தான் போகிறது. அசுரயுகமென அழைக்கப்படும் காலத்தில் பகாசுரன் வரக்கூடும் தானே. வெள்ளாட்டின் மூலமாக நுண்ணறசியலை பேசும் ஆசிரியர் எளிய மக்களின் வாழ்க்கைத் தரம், கஷ்டநஷ்டம்,பிழைப்பின் சங்கடங்கள் என விளக்கிச் செல்கிறார். ஆசிரியரின் கருப்பு ரயில் சிறுகதை வாசித்த போது சொல்ல வரும் கருத்தை வேறு ஒரு விஷயத்தை விளக்கி எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது இன்னுமே விளங்கியது. நேரிடையாகவே எழுதலாமே என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்தக் கதையில் ஒரு உயிர் எத்தனை முறை தப்பி பிழைத்து இயல்பு வாழ்க்கையை பெரும்பாடு பட்டு வாழ்கிறது. பூனாச்சிக்கு மட்டுமல்ல சில பெண்களின் வாழ்க்கையும் அப்படியே தான். அந்த காலத்தில் வருடத்திற்கு ஒரு பிள்ளையாக பெற்றாலும் வீட்டு வேலைகளையும் குறைவில்லாமல் செய்து மற்ற பிள்ளைகள் குடும்பமானவர்கள் எல்லோரையும் கவனித்து மூச்சுவிட நேரமின்றி பாடுபடும் பெண்கள் நினைவில் வந்து சென்றார்கள். பெண்களின் பயன் முடிவடையும் நேரம் அவர்களும் போயிருப்பார்கள். வளர்த்த கிடா மாரில் பாயும் என்று ஒரு சொலவடை சொல்லப்படுவது உண்டு, நிஜத்தில் வளர்த்த ஆட்டை பலி கொடுப்பது கூட தமிழர் தம் வாழ்வு நிலை அல்லது பழக்கம் என அறிகிறோம். கோவிலுக்கு நேர்ந்து கிடாய்கள் வளர்க்கப்படுவதும், தன் பிள்ளைகளுக்கு பிழைப்புக்கோ ஆசைக்கோ ஆடு, கோழி என் அன்பளிப்பு கொடுப்பதும் இயல்பாய் தான் இருந்தது. இப்படியான கதைகள் மூலம் மேய்ப்பர்களின் வாழ்க்கை பதிவு செய்யப்படுகிறது. வட்டார வழக்குச் சொற்களும் மறைந்து போகாமல் வாசிக்கக் கிடைக்கிறது. வெள்ளாட்டின் கதை கறந்த வெள்ளாட்டு பாலின் சுவையும் வெதுவெதுப்புமாய் நுரைபொங்கி வழிகிறது. இந்த கதையின் தாக்கமே மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி வாசிக்க வைத்தது.  வாழ்த்துகள் ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்களுக்கு.

00

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து பின் பப்புவா நியுகினியாவில் பதினாறு வருடங்கள் இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.  பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். தன்னார்வ பணிகளில் விருப்பம் மிகுந்த இவர் பப்புவா நியுகினி இந்திய சங்கத்தில் பல ஆண்டுகள் பெரும்பங்காற்றியுள்ளார். தமிழ்வெளி இலக்கிய இதழின் இணை ஆசிரியரும் ஆவார். ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்றுக் கொடுப்பதுடன் தன்னார்வ பணிகளிலும் ஈடுபடுகிறார்.

தமிழ் இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரை மற்றும் நூல் விமர்சனங்கள் என தொடர்ந்து இலக்கிய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் வாழ்வியலையும், தொலைந்துவிட்ட பால்யத்தின் நினைவுகளையும் மீட்டுருவாக்கம் செய்பவை. இவரது திம்மராஜபுரத்துக் கதைகள் சிறுகதை தொகுப்பு தமிழ்வெளி வெளியீடாக வந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *