செக்கோஸ்லோவாக்யா கதை

தமிழில்: தம்பி சீனிவாசன்

பல ஆண்டுகளுக்கு முன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் பீட்டர் என்று ஒரு பையன். அவனது பணக்கார அப்பா காலமானபோது மாற்றாந்தாய் எல்லா சொத்துக்கும் அதிபதியாகி, ”உனக்கு ஒனறும் இல்லை போ” என்று பீட்டரை வீட்டைவிட்டுத்துரத்திவிட்டாள்.

”நான் எங்கே போவேன்!” என்று அலறினான் பீட்டர். “எங்கேயாவது தொலை! சாத்தான் கிட்டே போ!” என்று ஏசினாள் சின்னம்மா.

‘சாத்தான்கிட்டே போ’ என்பது ஒரு திட்டு. சாபம் போல.

அப்பாவின் நிலம், வீடு, பணம், பண்டம் எதுவும் இல்லாமல் பீட்டர் வழிநடந்தான். ‘உடலிலே வலு இருக்கிறது. மனத்திலே தைரியம் இருக்கிறது. உழைப்புக்கு அஞ்சவில்லை. எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம்’ என்று எண்ணி வழிநடந்தான்.

அடுத்த ஊருக்குப் போனான். ஒரு பெரிய பண்ணையார் வீட்டு வாசலில் நின்றான். பண்ணை எசமான் எதோ நின்றபடி, இவனைப் பார்த்தார்.

”ஆண்டவன் துணை!” என்று பீட்டர் அவரைக் கும்பிட்டான். ”என்னடா வேண்டும்?” என்று அவர் உறுமியதும், “நான் வேலை தேடி வந்துள்ளேன் ஐயா. எனக்குப் பண்ணை வேலையெல்லாம் தெரியும். ஏதாவது வேலை போட்டுத் தாருங்கள்” என்று பணிவாகக் கேட்டான் பீட்டர்.

”வேலை செய்வானாமே இவன்! இப்படி நன்றாக உடை உடுத்தியிருக்கிறாயே! என்ன வேலை செய்வாய்? போடா போ. சாத்தான்கிட்டே போ!” என்று சீறினார் அந்தப் பண்ணையார்.

பீட்டர் மேலும் நடந்தான். மெல்ல நடந்து அடுத்த ஊர் போனான். அந்த ஊர் மணியக்காரர் வீட்டுக் கதவைத் தட்டினான். மணியக்காரர் மனைவி இளகிய மனம் கொண்டவள். அவள் சொன்னாள் : ”ஐயா, நண்பர்களோடு சீட்டாடுகிறார். நான் போய் உனக்கு வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறேன். இங்கேயே இரு பையா!” என்று உள்ளே போனாள்.

கதவு திறந்தே இருந்ததால் பேச்சுக் குரல் கேட்டது.

உள்ளே எவரிடமோ அந்த வீட்டு அம்மாள் மெல்லப் பேசினாள். வந்த பதில்-கரகரத்த குரலில் உரக்கக் கேட்டது : ”நான் வேலையாக இருக்கும் போது தொந்தரவு செய்யாதே என்று எத்தனை முறை சொல்வது? அந்தத் தடியனை சாத்தானிடம் போகச் சொல்லு!”

மனச் சுமையுடன் பீட்டர் அவ்விடத்தை விட்டு அகன்றான். மணியக்காரர் மனைவி வரும் வரை காத்திருக்கவில்லை.

காட்டு வழியிலே போய் ஒரு மரத் தடியிலிருந்த கல்லின் மேலே உட்கார்ந்தான். கன்னத்திலே கை ஊன்றியபடி யோசித்தான்.

இத்தனை பெரிய உலகத்தில் ஒரு போக்கிடம் இல்லையே! என்று ஏங்கினான்.

அழுகை வந்தது. அவன் என்ன சின்னக் குழந்தையா அழுவதற்கு? அழுகையை அடக்கிக் கொண்டான். எல்லாரும் சாத்தான்கிட்டே போ என்கிறார்களே! சாத்தான் எங்கே இருக்கிறான் என்று தெரிந்தாலாவது அங்கே போகலாம்.

அப்போது வெகு நேர்த்தியாய் உடையணிந்த ஒருவன் அந்த வழியே வந்தான்.

பீட்டர் உடனே தன் தொப்பியை எடுத்து வணக்கம் சொல்லி, “ஆண்டவன் அருள் இருக்கட்டும்!” என்றான்.

“ஏன் பையா சோர்வாக இருக் கிறாய்?” என்று கேட்டான் அவன்.

”ஏனா? நான் வேலை கேட்கிறேன். என்னை எல்லாரும் எள்ளி நகைத்து, சாத்தான்கிட்டே போ என்று சபிக்கிறார்கள். சாத்தான் இருக்கும் இடம் தெரிந்தால் நான் போகத் தயார். சாத்தான் இவர்களை நல்லவராகத்தான் இருப்பார்” என்றான் பீட்டர்.

புதிய மனிதர் புன்சிரிப்புடன், ”என்னது ? சாத்தானிடம் உனக்குப் பயம் இல்லையா? சாத்தானை நேருக்கு நேர் பார்த்தால்கூட பயப்படமாட்டாயா?” என்று கேட்டார்.

“மாட்டேன். சாத்தான் என்ன என் சின்னம்மாவை விட மோசமாவா இருப்பார்? பக்கத்து ஊர் பண்ணையாரைவிட மோசமாவா இருப்பார்? மணியக்காரரை விட மோசமா? அப்படி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்” என்றான் பீட்டர்.

திடீரென்று அந்த மனிதன் முழுவதும் நிறம் மாறி “இப்போ பார் என்னை. நான்தான் சாத்தான்!” என்றார். பீட்டர் சற்றும் கலங்காமல் மேலும் கீழும் பார்த்தபடி, “நீங்கதானா அது?” என்று கேட்டான்.

“ஆமாம். நீ பயம் இல்லாத சிறுவனாக இருக்கிறாய். என்னிடம் வேலைக்கு வா. சுறுசுறுப்பான உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. வேலை ஒன்றும் கடினம் இல்லை. சரியா?”

‘”சரி, நான் உங்களிடம் வேலை செய்கிறேன்.”

“ரொம்ப சரி. உனக்கு ஏழு வருஷம் வேலை தருகிறேன். அதற்கு அப்புறம் உனக்கு விடுதலை. அதோடு நல்ல வெகுமதியும் தருவேன். சரியா?””

”சரி” என்று பீட்டர் சொன்னதும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். வாய்ப் பேச்சு ஒப்பந்தம் உறுதியா யிற்று.

பீட்டரின் தோளிலே சாத்தான் கை வைத்ததும் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நரகத்திற்குள் இருந்தான் பீட்டர்.

அவனுக்கு தோல் அங்கி ஒன்றைக் கொடுத்து, கொதிநீர்த் தொட்டி இருந்த அறைக்கு சாத்தான் அழைத்துப் போனான். அங்கே மூன்று ராட்சத அடுப்புகளில் பெரிய பெரிய அண்டாக்கள் இருந்தன.

“இதுதான் உன் வேலை. இந்த அண்டாக்கள் எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்க வேண்டும். முதல் அடுப்பில் எப்போதும் நான்கு விறகுக் கட்டை இருக்க வேண்டும். இரண்டாவது அடுப்பிலே எட்டுக் கட்டை, மூன்றாவதில் பன்னிரண்டு கட்டை என்று எரிய எரியப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அண்டாக்களின் உள்ளே என்ன இருக்கிறது என்று மட்டும் எட்டிப் பார்த்து விடக் கூடாது. இது மிக மிக முக்கியம். நினைவிருக்குமா?”

“நினைவிருக்கும்” என்று பீட்டர் மகிழ்ச்சியுடன் தன் வேலையைப் பார்க்கலானான்.

நாட்கள் நகர்ந்தன. பீட்டருக்குத் தன் வேலை பிடித்திருந்தது. சுவர்க்கத்திலிருப்பது போல் மகிழ்ச்சியாக இருந்தான். நல்ல சாப்பாடு. எவருமே அதட்டிப் பேசவில்லை. அவன் கீழே வேலை செய்ய குட்டிச்சாத்தான்கள் இருந்தனர். அவையும் நட்போடு இருந்தன. மூன்று உலைகளிலும் சீரான அளவு விறகுக் கட்டைகள் இருக்கும்படி உஷாராக இருந்தான்.

சாத்தானுக்குப் பீட்டரின் மேல் நல்ல நம்பிக்கை ஏற்பட்டது.

எத்தனை நாள் ஆயிற்று என்பது தெரியாமல் பொழுது கழிந்தது. திடீரென்று ஒருநாள் பீட்டருக்கு வீட்டு நினைவு வந்தது. தனது கிராமத்தில் பசும்புல் தரைகளிலும் காட்டு வழியிலும் நடந்து போக வேண்டும் போல ஆசையாக இருந்தது.

“இன்னும் எத்தனை நாள் இருக்கிறது எனது ஏழு வருஷம் முடிய?” என்று சாத்தானைக் கேட்டான் பீட்டர். “நாளையோடு உனது ஒப்பந்தம் முடிவு பெறுகிறது!” என்று உற்சாகமாகச் சொன்னான் சாத்தான்.

அடுத்த நாள் பீட்டர் அடுப்புகளுக்குப் புதிய விறகுகளைத் திணித்துக் கொண்டிருந்த போது சாத்தான் அங்கே வந்தான். “பீட்டர்! உனக்கு விடுதலை! நீ இத்தனை நாள் எனக்கு திருப்தியாக நன்றாக வேலை செய்தாய். உனக்கு வெகுமதி தருகிறேன். பணம் என்று கொடுத்தால்  அது தூக்கிச் செல்ல ஒரு பளுவாக இருக்கும். அதற்குப் பதில் ஒரு மந்திரப் பையைத் தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் நீ அதைத் திறந்து, “பையே பையே பணம் போடு” என்று சொன்னால் போதும். பையிலே தேவையான பணம் சேர்ந்து வரும். போய் வா பீட்டர். உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு விஷயம் நினைவிருக்கட்டும். உன் உலகத்துக்கு நீ போனதும் உனக்கு நல்ல வரவேற்பு இராது. நீதான் சாத்தான் என்று எல்லாரும் உன்னிடம் பயப்படுவார்கள். நீ அப்படி இருக்கிறாய். குளித்து ஏழு வருஷமாகிறது. கை கால் நகத்தையோ தலைமுடியையோ வெட்டிக் கொள்ளவில்லையே நீ?”

“ஆமாம். ஆமாம். நான் இங்கு வந்த பிறகு குளிக்கவே மறந்து விட்டேன். முடிவெட்டிக்கொள்ள வேண்டும்” என்றான் பீட்டர்.

“ஒருமுறை குளித்தால் போதுமா? உன் உடலின் கறுப்பு நிறம் போக தண்ணீர் மட்டும் போதாது. என்ன தேவை என்பதை இப்போது சொல்ல மாட்டேன். நீ பாட்டுக்கு உன் உலகத்துக்குப் போ. யாராவது உன்னைப் பார்த்து, யார் என்று கேட்டால், என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? ‘நான் சாத்தானின் தம்பி’ என்று அடித்துப்பேசு! என் உதவி வேண்டும் என்றால் கூப்பிடு!” என்றான் சாத்தான்.

குட்டிச் சாத்தான்களுக்கெல்லாம் நன்றி சொல்லி விட்டுப் பீட்டர் புறப்பட்டான். ஒரு நொடியில் பயணம் செய்து ஏழு வருடத்திற்கு முன் எந்தக் காட்டில் அவன் முதலில் சாத்தானைச் சந்தித்தானோ அந்த இடத்திலேயே தான் இருக்கக் கண்டான்.

அருகே இருந்த கிராமத்துக்குச் சென்றான்.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் பீட்டரைப் பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்! ”சாத்தான் வருகிறது! சாத்தான் வருகிறது!” என்று கூச்சலிட்டார்கள். வீட்டுப் பெரியவர்கள் எட்டிப் பார்த்து விட்டு அவர்களும் பயந்து போய் உள்ளே திரும்பி வீட்டுக் கதவை அடைத்துக் கொண்டார்கள்.

“என்னடா இது!” என்று பீட்டர் மேலும் மேலும் நடந்தான். ஊர் எல்லையில் ஒரு சர்பத் கடை. அதன் உரிமையாளர் தன் மனைவியுடன் வெளியே நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்த போது, பீட்டர் அவர்கள் அருகே சென் றான்.

உயரமும் பருமனும் கொண்ட பீட்டர் அருகே வந்ததும் அவனது நிறத்தையும் தலைமுடியையும் பார்த்து அவர்கள் பீதி அடைந்து அலறினர். பீட்டருக்குச் சிரிப்பு வந்தது. அவர்களைத் தாண்டி நடந்து, குடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கக் கடைக்கு உள்ளே சென்றான் பீட்டர். “எனக்குக் குடிக்க ஏதாவது தாருங்கள்” என்றான்.

நடுநடுங்கியபடி இருந்த உரிமையாளர் அருகே வந்தார். அவர் மனைவி பயத்துடன் உள்ளே ஒதுங்கினாள். நடுங்கும் கரங்களில் கடைக்காரர் ஒரு பெரிய குவளை சர்பத் எடுத்து வந்தார். ஆனால் அதைத் தானே பீட்டர் முன் கொண்டு வைக்கப் பயம்!

“சின்னப் பையா!” என்று தன் கடைப் பையனை அழைத்து, ”உள்ளே ஒரு புது ஐயா வந்திருக்கிறார். அவரிடம் இந்த சர்பத்தைக் கொடு” என்று கொடுத்தார் கடைக்காரர்.

கடைப் பையன் உள்ளே போனானோ இல்லையோ, பீட்டரைப் பார்த்து பயந்து அலறி விட்டான். கைகள் நடுங்கின.

பீட்டர் அன்புடன் பேசினான் : “தம்பி பயப்படாதே. உனக்கு ஒரு கெடுதியும் செய்ய மாட்டேன். நான் சாத்தான் இல்லை. அவன் தம்பி” என்றான்.

பீட்டர் சர்பத்தைக் குடித்தான். “பேஷ்! ரொம்ப நல்ல சர்பத், நீ யாரப்பா?” என்று விசாரித்தான்.

“நான் ஓர் அனாதை!” என்றான் சின்னப் பையன்.

“நானும்தான். ஆனால் இங்கே உன்னைச் சரியாக நடத்தவில்லை போலிருக்கிறதே?” என்றான் பீட்டர்.

சின்னப் பையன் பிறகு தைரியமாக நிமிர்ந்து பார்த்து, பீட்டருக்குத் தன் கதையைச் சொன்னான். பீட்டருக்கு உருக்கமாக இருந்தது. தன்னைப் போலவே கஷ்டப்படும் சிறுவன் இவன் என்று அனுதாபமாகப் பார்த்தான். தனது மந்திரப் பையைத் திறந்து, நிறையக் காசுகளை வரவழைத்து பையன் தொப்பியை நிரப்பிக் கொடுத்தான்.

காசைக் கண்டதும் கடைக்காரனின் மனம் மாறி விட்டது. தானே வந்து பீட்டரை உபசாரம் செய்தான். பீட்டர் அங்கேயே தங்கினான்.

இரவு தூங்கிக் கொண்டிருந்த போது யாரோ தோளைத் தொட்டு எழுப்ப, விழித்துக் கொண்டான். எதிரே நின்ற சாத்தான், “உடனே போ! மாட்டுக் கொட்டிலில் இந்தக் கடைக்காரன் சின்னப் பையனைச் சாக அடிக்கிறார்.. பணத்துக்காக” என்றான்.

பீட்டர் விரைந்தான். மாட்டுக் கொட்டிலைத் திறந்து பார்த்தால், அங்கே தூங்கிக் கொண்டிருந்த சின்னப் பையனின் பணத்தைத் திருடிக் கொண்டு அவனைக் கத்தியால் குத்த இருந்தான் கடைக்காரன்.

கடைக்காரன் பீட்டரைக் கண்டதும் நடுங்கி விட்டான். பீட்டர் அவனைத் தரதரவென்று இழுத்து வீட்டின் உள்ளே போனான்.

“இந்த வேலைக்காரப் பையனை நல்லபடி நடத்து. உன் சொந்தப் பிள்ளையைப் போல் அன்புடன் கவனித்துக் கொள். அவனுக்கு நல்ல சாப்பாடு போடு. பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வை. அன்போடு இரு.”

“இருப்பேன். இருப்பேன். சத்தியம் சத்தியம்.”

அன்று முதல் அந்த அனாதைச் சிறுவனுக்குப் பள்ளி வாழ்க்கை, நல்ல உணவு, உடை, அன்பு எல்லாம் கிடைத்தன! கடைக்காரன் தனது பேராசைப் பழக்கங்களை விட்டு விட்டு ஒழுங்காக, உண்மையாக உழைத்து உயர்ந்தான்.

நாளடைவில் பீட்டருக்கு கடைக்காரனின் வீட்டு அறையே பிடித்துப் போய் விட்டது. அவனுடைய மந்திரப் பையில் காசு கொட்டுவதைப் பற்றி ஊரில் எல்லாரும் அதிசயமாகப் பேசினார்கள். அரசனுக்கே செய்தி எட்டி யது.

ஒருநாள் அரண்மனைப் பணியாள் வந்தான். “அரசர் தங்களைப் பார்க்க விரும்புகிறார். அரண்மனைக்கு வர வேண்டும்” என்றான்.

பீட்டர் நிதானமாக, **எனக்கு அரசரைப் பார்க்கும் வேலை இல்லை. அவர் என்னைப் பார்க்க வேண்டுமானால் இங்கேயே வரட்டும்!” என்றான். அரசர் வருவதாகத் தகவல் வந்தது.

அப்போது கடைக்காரன்  விளக்கினான். “ஐயா, அரசருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் போதவில்லை. முதல் ராணிக்கு இரண்டு பெண்கள். தண்ணீர்போல படாடோபமாக செலவு செய்கிறார்கள். அரசர் செலவைச் சமாளிக்க முடியாது திணறுகிறார். அரசருக்கு இன்னொரு பெண்ணும் இருக்கிறாள். அவளது குணமும் அழகும் பார்த்தால் தேவதைதான். அவளுக்கு ஏஞ்சல் என்றே பெயர். இவள் இரண்டாம் ராணியின் பெண்” என்று தகவல் சொன்னான்.

அடுத்த நாள் அரசன் பீட்டரைத் தேடி வந்தான். பண உதவி செய்ய வேண் டும் என்றான்.

‘ஆகா. தாராளமாக. ஆனால் ஒன்று. உங்கள் பெண்களில் யாராவது ஒருத்தியை எனக்கு மணம் செய்து தர வேண்டும்” என்றான் பீட்டர்.

அரசன் தன் பெண்களைப் பார்த்து விஷயத்தைச் சொன்னான். நாட்டின் நிதி மோசமாக  இருப்பது பற்றியும், அதைச் சரிக்கட்ட பீட்டரிடம் பணம் வாங்க வேண்டி இருப்பது பற்றியும், அதற்கு அவன் விதித்த நிபந்தனை பற்றியும் சொன்னான்.

“நான் மாட்டேன்! அந்தக் காட்டு மிராண்டியை நான் மணக்க மா டேன்!” என்று அக்காமார் இருவரும் பட்டென்று வெட்டிக் கொண்டனர்.

“அப்படி அவசியம் என்றால் நான் அவரை மணக்கச் சம்மதிக்கிறேன்” என்று அடக்கமாகச் சொன்னாள் ஏஞ்சல்.

அடுத்த நாள் பீட்டர் அரண்மனைக்கு வந்த போது பார்த்த ஏஞ்சல் அவனைப் பார்த்து அஞ்சி நடுங்கினாள்.

“பயப்படாதே பெண்ணே. எப்போதும் இப்படி இருக்க மாட்டேன். திருமணம் ஆனால் நீயே அறிந்து கொள்வாய்!” என்று அன்பு பொங்கக் கூறினான் பீட்டர்.

அரண்மனையிலிருந்து விடை பெற்றுச் சென்ற பீட்டர் சாத்தானை அழைத்தான். “ஏஞ்சல் என்னைப் பார்த்து பயப்படுகிறாள். என் உருவத்தை முன்போல் மாற்றித் தா!” என்று கேட்டான்.

சாத்தான் அவனை அழைத்துக் கொண்டு ஏழுமலைகளைக் கடந்து, ஓர் ஏரியில் குளிக்கும்படிப் பணித்தான். குளித்து எழுந்த போது பீட்டர் மிக அழ கான இளவரசனாக மாறியிருந்தான்! அரசனுக்கு உரிய படை, பணியாள், எல்லாம் தயாராக இருந்தன!

”ஐயையோ! இவ்வளவு அழகான இளவரசனாக இவர் மாறுவான் என்பது தெரிந்திருந்தால் நாங்களே இவரைத் திருமணம் செய்து கொண்டிருப் போமே? இப்படி ஏமாந்து விட் டோமே!” என்று புலம்பினர் அக்காஇளவரசிகள் இருவரும்.

பீட்டரும் ஏஞ்சலும் மகிழ்ச்சியுடன் பிறருக்கு உதவி செய்து நல்வாழ்க்கை நடத்தினர்.

000

நன்றி :- கோகுலம்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *