அ.மான்விழி ரஞ்சித்
மழை நிம்மதியாக எங்கோ தூங்கிக் கொண்டிருந்தது. தினமும் இதே தலைவலி தான் வெயிலில் பேருந்துக்கு நின்று நின்று வாழ்நாளின் பாதி நாட்கள் போய்விட்டன …எரிச்சலாக இருந்தது எனக்கு…தினந்தோறும் பிரின்ஸ்பல்அறைக்குச் சென்று அவர்களுடைய கேவலமான பார்வையை சந்தித்து விட்டு தலை குனிவோடு வகுப்பறைக்கு செல்ல வேண்டும்
ஏண்டா இந்த வாத்தியார் வேலைக்கு படிச்சோம்னு இருக்கு பலமுறை என்னை நானே திட்டிக் கொண்டிருக்கிறேன் .படிக்காமல் இருந்திருந்தால் ஏதாவது ஒரு வேலை செய்தாவது பிழைத்திருக்கலாம் படித்து தொலைத்து விட்டோமே….
என் கண்கள் பேருந்து வரும் வழியை நோக்கி அலை பாய்ந்தது .ஒரு மஞ்சள் ஸ்கூல் பஸ்..… அடுத்து லாரி…. கார்…. ம்ஹூம்…எல்லாம் வருகிறது…. எனக்கு எரிச்சலும் வருகிறது…. பேருந்து ஒன்றுதான் வரவில்லை
முகத்தில் துளித்துளியாக வியர்வை அரும்பத் தொடங்கியது. வெயிலை பார்த்து (முறைத்து) விட்டு சற்று கடை பக்கம் நகர்ந்து நிழலில் நின்று கொண்டேன். இப்பொழுது காற்று என் மேல் வீசியதும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது எனக்கு
தூரத்தில் பச்சை வண்டி… பாம் பாம்….அப்பாடா வந்துவிட்டது.
வண்டி நின்ற உடன் பின் கொசவமிட்டு தூக்க முடியாமல் கட்டை பையை தூக்கிக்கொண்டு பேருந்து அருகில் ஒரு பாட்டி சென்றது. என் வேக நடையில் அதை முந்திவிட்டு ஏறினேன் .என் பின்னால் எஸ் கே வி காலேஜ் என்ற குரல் கேட்டது…. ’தம்பி பார்த்து ஏறுப்பா…’தொடர்ந்து கிழவியின் குரல்.
”சீக்கிரம் இறங்குமா…. ஆடி அசஞ்சு இறங்குற? இறங்குறவங்களுக்கு வழி விடுங்க அப்புறம் ஏறிக்கலாம்…”என்று பின்னால் இருந்த பயணிகளை விரட்டிக்கொண்டிருந்தார் வழுக்கைத் தலை கண்டக்டர்…வெயில் பட்டு அவருடைய வழுக்கை நன்கு மின்னியது.
”சார், முதல்ல…. ஏறுறவங்களுக்கு நீங்க வழி விடுங்க…” என்று கூறிய என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு லேசாக உடலை நகர்த்தியது…வழுக்கை.
”மாமா…ஆளுங்க ஏறிட்டாங்கன்னா டோரை மூடு…நீ பாட்டுக்கு தொறந்து விட்டுக்கிட்டே வர….. ஆபீஸருங்க கண்ணுல மாட்டி அவனுங்க புடிச்சானுங்கன்னு வச்சுக்கோ பொண்டாட்டி கிட்ட காட்ட முடியாத கோவத்தை எல்லாம் நம்ம கிட்ட தான் காட்டு வானுவோ…”என்று டிரைவரை நோக்கி சப்தமிட்டார்…
ஏறியவுடன் என் கண்கள் ஜன்னலோர சீட்டினைதேடின.
”சீட்டில ஒரு ஒருத்தர் உட்கார்ந்துக்காதீங்க ….எல்லாம் நவுந்து நிக்கிறவங்களுக்கு இடம் வுடுங்க…”
எனக்கு பின்னால் காதில் கடுக்கன் அணிந்து அழுக்கு சட்டையுடன் பார்ப்பதற்கு ஒரு காட்டான் போல ஒருவன் உட்கார்ந்திருந்தான்.
“வளையோசை கலகலகலவென கவிதைகள் படித்திட காற்றும் வீசுது” அவசர அவசரமாக பையில இருந்து போனை எடுத்து ஒரு வேலை முதல்வராக இருப்பாரோ என்ற பயத்தில் வேகமாக எடுத்தேன். ஊரில் இருந்து மலர் அத்தை.
வம்புகளின் நாயகி. இந்த அவசரத்தில் பேச வேண்டாம் .எங்கள் சொந்தத்தில் யாரோ ஒருவரை பற்றி கண்டிப்பாக ஒரு செய்தி கிடைக்கும்…நன்றாகத்தான் இருக்கும் ஆனால் நேரம் இது இல்லை…என்று நினைத்துக் கொண்டேன். ’அத்தை இன்னைக்கு பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கல அப்புறம் பேசுறேன்’ என்று கூறி போனை வைத்தேன்
”மா நீ ஊர் கதையெல்லாம் அப்புறம் பேசலாம் முதல்ல டிக்கெட் வாங்கு….அப்புறமா பேசு….”
”ஹலோ…. என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க போன் பேசுறதும் பேசாததும் என் இஷ்டம். எனக்கு பக்கத்துல இருக்கவங்களுக்கு டிக்கெட் வாங்கிட்டீங்களா ஒரு நொடியில் நான் வாங்க போறேன்” என்று நறுக்கு தெரிந்தால் போல பேசிவிட்டு சில்லறையை கொடுத்தேன்.
வீட்ல இருக்குற பிக்கல் புடுங்கல் தாங்காம இங்க வந்து கத்துதுங்க என்றார் கண்டக்டர்.
சுர்ரெண கோவம் ஏறியது எனக்கு.. ’தேவை இல்லாம பேசுற வேல வெச்சிக்காதீங்க …’.
கண்டக்டர் திரும்பி பார்த்து, ’நான் அமைதியாகவே இருக்கேன் அம்மா அமைதியாவே இருக்கேன். இந்த வேலையில் வந்து சேர்ந்தேன் பாருங்க அமைதியா தான் இருக்கணும். நான் இறங்குறவங்களையாவது ஏறுங்க இறங்குங்கன்னு சொல்லலாமா? இல்ல அதுக்கும் மேடத்து கிட்ட பர்மிஷன் வாங்கணுமா’? என்றார்
”சார் தேவை இல்லாம நீங்க பேசுறீங்க என்ன பத்தி பேசாதீங்க என்று தான் சொன்னேன் நீங்க பேசவே வேணாம்னு சொல்ல….”
என்ன நினைத்தாரோ அமைதியாக சென்றுவிட்டார். எனக்கு முன்னால் நின்றிருந்த பையன் சற்று பின்னால் வந்த சார் எஸ்கே வி ஒரு டிக்கெட் கொடுங்க, என்றார்
அவன் பார்ப்பதற்கு நல்ல கொழு கொழு என்று வெள்ளையாக இருந்தான். தலைமுடியை கூடை போல வெட்டி இருந்தான். இன்றைய பசங்கள் இப்படித்தான் இருக்கிறது.. எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை
தலைமுடியை ஒழுங்காக வெட்ட வேண்டும் என்கிற உணர்வே இருப்பதில்லை. சுத்தமாக தலையில் எண்ணெய் வைப்பதே இல்லை. நாளைக்கு இவனுங்களுக்கு எல்லாம் முடி கொட்டி சொட்டையான தான் தெரியும்…மனதில் அவனை திட்டிக் கொண்டிருந்தேன்
பின்னாடி ஒரு தறு தல உட்கார்ந்து இருக்கே அது இந்த மாதிரி பள்ளிக்கூடம் கூட போய் இருக்காது படிச்சிருந்தா தானே நல்ல புத்தி இருக்கும்…
பார்வையும் ஆளும்…. மீண்டும் பின்னால் இருப்பவனை திட்டினேன் மனதிற்குள் தான்.
ஏதோ உணர்வு உள்ள உந்த அவனை திரும்பிப் பார்த்தேன் அவன் மீண்டும் எதையோ மென்றபடி வேடிக்கை பார்த்தான்… இம்முறை அவன் தாடியில் உணவு பண்டங்கள் ஒட்டி இருந்தன
’சீ…பப்ளிக்ல எப்படி பிஹேவ் பண்றதுன்னு கூட தெரியல சாப்பிடறது எல்லாம் மேல ஒட்டிக்கிட்டு அருவருப்பா இருக்குது..’
அவன் பக்கம் பார்த்துவிட்டு முகத்தை சுளித்தபடி திருப்பிக் கொண்டேன்.
ஒரு பெருமூச்சு என்னிடமிருந்து வெளிப்பட்டது. டிரைவர் பாட்டினை போட்டார். ”செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே “..சுகமாக இருந்தது….நன்கு சாய்ந்து அமர்ந்தேன்.
முதல் நான்கு வரிகள் எனக்கு தெரியும் அதனால் அந்த பாடலை சற்று சத்தமாகவே பாடினேன். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த டிப்டாப் ஆன ஆசாமி என்னை லேசாக திரும்பி பார்த்து புன்னகைத்தார். எனக்கு உள்ளூரப் பெருமிதமாக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை. .நான் பதிலுக்கு புன்னகைக்காமல் பாட்டை பாடுவதில் கவனம் இருப்பதாக காட்டிக் கொண்டேன். இப்பொழுது கண்ணை இன்னும் மூடிக்கொண்டேன்… முழுக்க முழுக்க பாடலில் நான் தோய்ந்து வைத்த தருணம்…
யாராவது பார்த்தால் பெரிய இசை கலைஞர் பாடல் மூழ்கி இருப்பது போல நினைப்பார்கள் என்று நினைத்தபடியே பாடலின் வரிகளில் என் கவனத்தை செலுத்தினேன். லேசாக கண்ணை திறந்து பார்க்கும் போது டிப் டாப் ஆசாமி என்னை பார்த்து விட்டு கண்ணை மூடிக்கொண்டார். யோவ்…போயா..
உள்ளூர எனக்கு சிரிப்பு என்றாலும் காட்டிக் கொள்ளாமல் நானும் கண்ணை மூடி கொண்டேன்.
திடீரென ”டேய் ஏன்டா காலையிலே உசுர வாங்குறீங்க இது எஸ் கே வி நிக்கறுதுக்கு என்ன டவுன் பஸ்சா? அது ஸ்டாப்பிங் இல்ல…”.
என் ரசிக மனம் கொந்தளித்தது சே.. ஒரு நல்ல பாட்ட கேக்க விடறாங்களா பாரு.. வீட்லதான் நேரம் இல்ல இடுப்போடிய வேலை…. பஸ்ல வர்ற நேரத்துலயாவது பாட்ட கேக்கலாம்னு கேக்க உடறானுங்களா பாரு…
வாயாடி வழுக்கை…. வாயத் தொறந்தா மூடறதே இல்லை. கண்டக்டருங்க எல்லாத்துக்கும் எங்க இருந்து தான் இவ்வளவு வாய் வருமோ தெரியல …. எப்ப பாரு யாரையாவது எதையாவது சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியது.
இப்பொழுது டிப் டாப்பை பார்த்து இவற்றை நானே சொல்கிறேன்.
”ஆமா மேடம் தேவை இல்லாம கத்திட்டு இருப்பாங்க…” டிப் டாப் ஆசாமி ஈகோ இல்லாமல் என்னிடம் பேசினார்.
இப்பொழுது எனக்கு புன்னகை அவரே பார்த்து மெல்லியதாக புன்னகைத்தேன்
பதிலுக்கு சிரித்தார்.. ’எங்க மேடம் வொர்க் பண்றீங்க?’
”பக்கத்துல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல சார்..”
”ஓ டெய்லி பஸ்ல தான் போயிட்டு வரீங்களா”
”ஆமா சார்”.
அவர் என்னிடம் உரையாடலை தொடர விரும்பியதை கவனித்தேன்.
உடனே உரையாடலை நிறுத்திவிட்டு அமைதியானேன்.
ஏதோ ஒரு வெற்றி பெற்ற நினைவு எனக்கு.
பின்னாலிருந்து கசமுசவென கூச்சல்கள் வந்தன.
கண்டக்டரின் குரல் தான் .
”ஏம்பா…படிக்கிற பையன் தானே? இந்த பஸ் டவுன் பஸ்சா? கேக்கற இடத்துல எல்லாம் நிறுத்த முடியுமா? சோமாஸ் பாடிக்கு தான் டிக்கெட் தருவேன் காலேஜுக்கு எல்லாம் தர முடியாது”
”சார் நான் ஏறும்போதே கேட்டுட்டு தான் ஏறினேன் நீங்க ஏன் எனக்கு பதில் சொல்லல? அதுக்கு பதில் சொல்லுங்க…”. இது கொழு கொழு….
”நான் நான் உன்னை எஸ் கே வி க்கு ஏறி வா என்று சொல்லவே இல்லையே…”
”நான் ஏறினேன் கேட்காமல் ஏறி இருந்தா நீங்க சொல்ற மாதிரி சோமாஸ் பாடியில இறங்கிக்கலாம் நான் கேட்ட கேள்விக்கு நீங்க ஏன் பதில் சொல்லல?”
ஓர கண்ணால் டிப் டாப் ஆசாமியை பார்த்தேன். என் மீது லேசான வெறுப்பு பார்வையை வீசி விட்டு அந்த பையனையும் கண்டக்டரையும் கவனிக்க ஆரம்பித்தார்.
நானும் சுவாரசியமாக கண்டக்டரை பார்த்தேன்…
”டேய் தம்பி சோமாஸ் பாடிக்கு டிக்கெட் 20 ரூபா குடு…”
”சார் நான் கேட்டேன் நீங்க தான் பதில் சொல்லல…”
”ஏறும்போது கேட்டேன்ல ஏன் நீங்க சொல்லவே இல்ல”
”உனக்கு பதில் சொல்றது என் வேல இல்ல. எஸ்.கே.வி என்ற வார்த்தையை நான் சொன்னனா…..சொல்லி இருந்தா நீ ஏறி இருக்கலாம்”
”இல்ல சார் நான் கேட்டேன்..”
இப்பொழுது பையனின் பார்வை என் மீது படிந்தது….டிப் டாப் மீதும் … உதவிக்காக தான் இருக்கும்.
நான் பிடித்து வைத்த பிள்ளையார் போல அமைதியாக இருந்தேன் டிப்டாப் சைலன்ட் மோடில் இருந்தார்.
பையனின் பார்வை மீண்டும் கண்டக்டர் மீது படிந்தது.
ஏனெனில் இன்னும் ஐந்து நிமிடங்களில் அவன் இறங்கும் இடம் வந்து விடும். சோமசுபாடியில் இறங்கினால் மீண்டும் கல்லூரிக்கு வருவதற்கு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாகி விடும். அதுவும் இந்த வெயிலில் இந்த கொழு கொழு எப்படி நடந்து வருவான்? நடப்பது என்பது அவன் வாழ்விலேயே கிடையாது போல் இருந்தது அவன் உடல்வாகு.
என்ன தேய்ந்த ரெக்கார்டு போல இதையே சொல்லிக் கொண்டிருக்கிறான்.
பஸ்ஸில் அனைவரின் முகங்களையும் பார்த்தேன். அனைவரும் தங்களின் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கு நடக்கும் பஞ்சாயத்தை கூர்மையாக தொடங்கி கவனிக்க தொடங்கி இருந்தார்கள் என்னைப் போலவே….
கண்டக்டர் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது
”இந்த இடத்துல நிறுத்தினால் ஆபீஸருக்கு யார் பதில் சொல்றது?”
”சார் நான் கேட்டுட்டு தான் ஏறினேன்..” இப்பொழுது பையனின் குரலில் வேகம் கூடியிருந்தது.
கண்டக்டரின் குரல் அவனை விட கூடி ஒலித்தது…. ’சார் அடுத்த டிக்கெட் குடுங்க’ அவனை ஓரங்கட்டும் விதமாக அடுத்த பயணிக்கு தாவினார் கண்டக்டர்.
பேருந்து முழுக்க சண்டை என்ன ஆகும் என்று கவனிப்பதில் ஆர்வம் ஆனது.
கிராமத்து வேட்டி சட்டை அணிந்த பெரிசு…’இந்த கண்டக்டர் வயசு புள்ளைகிட்ட ஏன் சண்டை போடுறாரு? அவன் கேக்குறது குடுத்துட்டு லேசா ஸ்லோ பண்ணினா இறங்கிக்க போறான்…’என்று பக்கத்தில் இருப்பவரிடம் தீர்ப்பு சொன்னார்.

பக்கத்து ஆசாமிக்கு அவரிடம் பேச பிடிக்கவில்லை. லேசாக நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு உதட்டோர புன்னகையுடன் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் கண்டக்டரை கவனித்தார்.
இதை ஓர கண்ணால் கவனித்தபடி கண்டக்டரை நானும் உற்று கவனிக்க தொடங்கினேன். ஏதோ மனதில் ஒரு மகிழ்ச்சி…
”தா…கண்டக்டரூ…. நிறுத்த சொல்லுய்யா வண்டிய….
அந்த புள்ள படிக்கிறதுக்கு தானே போறான் அதுக்கு தானே நிறுத்த சொல்றான்… டிரைவர் வண்டிய காலேஜ் கிட்ட நிறுத்துங்க…”
முரட்டுத்தனமாக அனைத்தையும் மீறி சத்தமிட்ட அந்த குரலை நோக்கி பேருந்தின் மொத்த முகமும் திரும்பின.
அந்த கடுக்கன் தான்.
”டேய் தம்பி கண்டக்டர் கிட்ட சாரி கேளு… அதை விட்டுட்டு தேவையில்லாம பேசாத. கொண்டு போயி சோமாஸ் பாடில விட்டுட்டா வரதுக்கு அரை மணி நேரத்துக்கு மேல ஆகும். வெயிலு கொளுத்துகிறது
வாடி வதங்கி போய்டுவ… பேச்சை குறைச்சுட்டு வேலையை பாரு”
தாடியில் ஒட்டி இருந்த உணவு பருக்கைகளை துடைத்தபடியே இருவரிடமும் பேசினார்.
”டிரைவர் அண்ணா!”
”லேசா ஸ்லோ பண்ணு தம்பி …வாய் பேச்ச நிறுத்திட்டு இறங்கு காலேஜ் வந்துருச்சு பாரு”
இப்பொழுது கண்டக்டர் ”இப்படி கேட்டா பரவால்ல அதை விட்டுட்டு நான் கேட்டேன்… நான் கேட்டேன்… நீ கேள்வியவே கேட்டுகிட்டு இருந்தா?
இறங்குப்பா…காலையிலேயே உயிர் எடுக்க வந்துட்ட…” என்றபடியே பையனை இறக்கி விட்டார் அவன் கண்டக்டரை முறைப்படி வேகமாக இறங்கினான்.
இப்பொழுது நான் டிரைவரையும் கடுக்கனையும் மாறி மாறி பார்த்தேன்.
கொழு கொழு மீது கோபம் வந்தது. கடுக்கனுக்கு ஒரு நன்றி சொல்லி இருக்க வேண்டும். டிரைவருக்கு ஒரு நன்றி சொல்லி இருக்க வேண்டும். ஒரு நன்றி… ஒரு சிறு பார்வை…..ஒரு புன்னகை.. எதுவுமே இல்லை…
கடுக்கனை பார்த்து நான் புன்னகைத்தேன்.
கடுக்கன் எவர் மீதும் கவனமோ சலனமோ இல்லாமல் வாயை துடைத்துவிட்டு கடமை முடிந்தது போல் சாய்ந்து கண்ணை மூடி சுகமாக தூங்கத் தொடங்கியது.
00


