‘செலாஞ்சார் அம்பாட்’ – புனைவிலிருந்து வரலாற்றுக்கு திரும்புதல்

இதுவரை சொல்லப்பட்ட நம்பப்பட்ட வரலாற்றை, எழுத்தாளர்கள் தங்களின் புனைவுலகத்திற்கு கொண்டுவரும்போதுதான் அதன் பல்வேறு திறப்புகள் நமக்கு கிடைக்கின்றன. வெற்றிபெற்றவர்களின் கொண்டாட்டம், தோற்றவர்களை மறக்கடித்துவிடுகிறது. அதோடு; செல்வாக்கும் அதிகாரமும் உள்ளவர்களால் தொடர்ந்து சொல்லப்படும் வரலாறுகள் ஒருவழி பாதையாக நின்றுவிடுகிறது. எதை நாம் நம்பவேண்டும் என அதிகாரம் உள்ளவர்கள் நம்புகிறார்களோ அதைத்தான் வரலாறுகளில் ஏற்றுகிறார்கள்; வரலாறுகளை மாற்றுகிறார்கள்.

            புனைவுகளில் நுழையும் வரலாறுகள் நம்மை பலவிதங்களில் விவாதிக்க வைக்கிறது.

            அதே சமயம் வரலாற்றை சொல்கிறேன் என களம் இறங்கும் படைப்புகள் போதிய தரவுகளோ களப்பணியோ இல்லாமல் நம்மை ஏமாற்றவும் செய்கின்றன. சில சமயங்களில் புதிதாய் அதிகாரத்திற்கு வருகின்றவர்களுக்கு ஏற்றார் போலவும் வரலாற்றில் புரட்டுகள் வந்து சேருகின்றன.

            வரலாற்றில் இல்லாத பக்கங்களை புனைவுகளைக் கொண்டு கண்டறிய முயலும் எழுத்தாளர்களை சிலாகிக்கும் அதே சமயத்தில் வரலாற்றையே தவறான புரிந்து கொண்டு எழுதும் எழுத்தாளர்களையும் கண்டறிய வேண்டியுள்ளது.

            மலேசிய மண்ணில் நடந்த கொத்தடிமைத்தனத்தை நாவல் வழி இன்னும் ஆழமாக அதனுள் செல்லும் படைப்பாக ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலைக் குறித்து சொல்லலாம். மலேசிய மூத்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் கோ.புண்ணியவானின் இரண்டாவது நாவல். ‘நொய்வப்பூக்கள்’ அவரது முதல் நாவல் இன்று அவரது முதல் நாவல் வாசிக்க கிடைப்பதில்லை. அவரின் மூன்றாவது நாவலான ‘கையறு’ நாவல் குறித்து ஏற்கனவே இத்தொடரில் எழுதியுள்ளேன்.

            கோ.புண்ணியவானின்; ’செலாஞ்சார் அம்பாட்’ என்னும் நாவல், 2013-ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரோ வானவில் நாவல் போட்டியில் (மலேசிய தனியார் தொலைக்காட்சி நடத்திய போட்டியில்) இரண்டாவது பரிசை பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2014-ம் ஆண்டின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தில் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு 10 000.00 ரிங்கிட் சன்மானம் வழங்கப்பட்டது.

            மலேசிய இலக்கியச் சூழலில் பலராலும் வாசிக்கப்பட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட நாவல் என்பதும் அதற்கு ஒரு காரணம். இருந்தும் இந்தப் படைப்பு நாவலா குறுநாவலா என்கிற உரையாடலும் நடந்தபடியேதான் உள்ளன.

            இந்நாவலின் உண்மையான வரலாற்று பின்னணி தெரிந்து கொள்ளாமலும் நம்மால் இந்த நாவலை வாசிக்க முடியும். ஒரு ஜனரஞ்சக நாவல் போல பரபரப்பு நிறைந்த மனதை பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள் நாவலில் இருக்கின்றன. அதே சமயம் உண்மையை தன்  புனைவின் வழி நாவலாக எழுத்தாளர் கொடுத்திருக்கிறார் என அந்த வரலாற்றை தேடி அறிந்து கொண்டு இந்த நாவலை வாசிக்கும் போது இந்நாவல் நமது எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் சிக்கலுக்குள்ளாவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆசிரியரின் மூன்றாவது நாவலான ‘கையறு’ எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று ஒருவேளை அதனை வாசித்துவிட்டு அதற்கு முந்தைய நாவலை வாசிக்கும் போது ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலில் நான் அதிகம் எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கலாம்.

            போட்டிக்காக எழுதும் போது இயல்பாகவே ஒரு அவசரமும் போதிய தகவல் கிடைக்காத குறைபாடுகளும் இருப்பதை நாம் கண்டிருப்போம். அதே போல போட்டியை மனதில் வைக்காமல் போதிய கால அவகாசம் எடுத்து எழுதும் படைப்புகள் தனித்துவமாக அமைந்துவிடுகின்றன. செலாஞார் அம்பாட் நாவல் கூடுதல் கவனம் கொடுத்து எழுதப்பட்டிருந்தால் அதன் பக்கங்கள் அதிகரிப்பதோடு அது இன்னொரு தளத்திற்கு சென்றிருக்கும் என தோன்றவும் செய்கிறது.

            நாவலைக் குறித்து பேசும் இந்த நேரத்தை பயனபடுத்தி அந்த வரலாற்று பின்னணியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் இன்னும் முழுமையாக நீங்கள் இதன் பின்னணியை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இப்போது இருக்கிறது.

            1957-ல் மலேசியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இங்கு குடியுரிமை பெறத தகுதி இழந்த இந்தியர்கள் பலர் வாழ்வாதார பிரச்சனையை எதிர்நோக்கினார்கள். உள்ள பிரச்சனைகள் போதாதென்று இரப்பர் விலையின் வீழ்ச்சியும் அப்போதைய அரசியலின் நிலைத்தன்மையின்மையினாலும் வெளிநாட்டு தோட்ட முதலாளிகள் தங்களின் தோட்டங்களை உடனடியாக விற்றுவிட்டு தங்களின் சொந்த நாட்டுக்கே திரும்பும் சூழல் ஏற்பட்டது. பெரிய அளவிளான தோட்டங்களை மொத்தமாக விற்பதில் அவர்கள் சிக்கலை எதிர்கொண்டார்கள். அப்படி மொத்தமாக வாங்குவதற்கும் அங்கு ஆட்கள் இல்லை.

            அதற்காக பெரிய தோட்டங்களை சிறிய தோட்டங்களாகப் பிரித்தார்கள். இதனைத்த தோட்ட துண்டாடல் என்கிறோம். சிறிய தோட்டங்களை அவர்களால் சிக்கலின்றி விற்க முடிந்தது. அந்த வாய்ப்பை அப்போதைய சீனர்கள் பயன்படுத்திகொண்டு அந்தச் சின்ன சின்ன தோட்டங்களை வாங்கினார்கள். தோட்ட துண்டாடல் காரணமாகவும் தோட்டத்தின் புதிய முதலாளிகளின் அடுத்தடுத்த திட்டங்களாலும், அங்கு வேலை செய்தவர்கள் தொடர்ந்து அங்கு இருக்கவும் வேலை செய்யவும் முடியாமல் போனது. அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றலாகி போனார்கள். கிடைத்த வேலையை செய்து அந்தச் சூழலை சமாளிக்க செய்தார்கள்.

            அதேசமயம் மலேசிய குடியுரிமை இல்லாதவர்கள் கூடுதலாய்ப் போக்கிடமற்று சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். குடியுரிமை இல்லாததால் அவர்கள் பயந்தும் பதுங்கியும் பிழைக்க வேண்டியிருந்தது.  அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தினக் கூலிகளாகவும் குறைந்த சம்பளத்தின் குத்தகைப்பணி செய்யவும் தயாரானார்கள். அவ்வாறு குடியுரிமையற்று தவித்த 40 தமிழர்கள் 1983-ம் ஆண்டு குத்தகையாளரால் புதிய நில மேம்பாட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டார்கள். செம்பனை தொட்டம் அமைப்பதற்காக பெரும்காடுகளையும் புதர்களையும் அழித்து செம்பனை கன்றுகளை நட்டு வளர்க்கவும் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

            தென்கிழக்கு பஹாங், ஃபெல்ட்டா நிலக்குடியேற்ற திட்டத்தில் அமைந்துள்ள செலஞ்சார் அம்பாட் மற்றும் தீகா எஸ்டேட்டிற்கும் அவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு சென்ற பெண்கள் பெரியவர்கள் சிறுவர்கள் என 40 பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு சம்பளம் இல்லை சரியான சாப்பாடு இல்லை எந்தவித அடிப்படை வசதியும் கொடுக்கப்படாமல் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற இடத்தில் அனைவருமே தங்க வைக்கப்படுகின்றார்கள். கொத்தடிமைகளாக கொடுமைக்கு ஆளானதோடு அங்கு பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாக தகவல் நான்கு ஆண்டுகளுக்குப்  பின் சரஸ்வதி என்ற பெண்ணின் வழி தெரியவருகிறது. அவர் காசநோய் கண்டு சிகிட்சைக்காக அருகில் இருந்த மருந்தகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குத்தகையாளரின் குண்டர்களிடமிருந்து தப்பித்திருக்கின்றார். அவரின் மூலமாக அங்கு நடந்த கொடுமைகள் வெளியுலகிற்கு தெரிய வருகிறது. அந்தச் செய்தி நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

            இந்தச் சம்பவத்தை தனது நாவலாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். பத்திரிகை செய்தி கொடுக்கும் அதிர்ச்சியையும் கோவத்தையுமே ஒரு புனைவும் கொடுத்தால் அந்த புனைவுக்கு அர்த்தம் என்ன. ஏறக்குறைய இந்த வரலாற்று பின்னணியை அப்படியே தன் நாவலில் ஆசிரியர் கொண்டுவந்திருக்கின்றார். ஆனால் ஒரு நாவலுக்குள் நுழைவதற்கான வாசலை அவர் சரியாக அமைக்கவில்லை என்கிற என்னமே மேலோங்கி இருக்கிறது.

            கொத்தடிமைகளாக 40 உயிர்கள் ஓரிடத்தில் வதைபட்டு கொண்டிருக்கிறது. அதனை புனைவாக கையில் எடுக்கும் போது எப்படியான புனைவை ஆசிரியர் கொடுத்திருக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு நாவல் முழுக்கவே எனக்கு இருந்தது.

            ஆசிரியரின் இதர படைப்புகளை வாசித்திருக்கிறேன் என்பதால் பால் மரக்காடுகளை திறன்பட சொன்னவரால் செம்பனைத் தோட்டத்தை தத்ரூபமாக சொல்ல முடியவில்லையோ என்கிற சந்தேகம் எனக்கு எழுந்தது. குறிப்பாக நாவலில் அதன் நிலம் முழுமையாக சொல்லப்படவில்லை. இருந்தும் வரலாற்றில் இருந்து ஒரு புனைவை அடுத்த தலைமுறைக்கு கொடுத்திருக்கும் எழுத்தாளரைப் பாராட்டத்தான் வேண்டும்.

            இந்த நாவலை வாசித்து முடிக்கும்வரை இந்த உண்மை சம்வம குறித்து ஒரு செய்தியாக அறிந்திருந்தேனே தவிர அதைக் குறித்து மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று இருந்திருக்கிறேன்.

            இந்நாவலை வாசிக்க எடுத்ததும்; ஆசிரியரின் முன்னுரையை வாசித்த பின் உடனேயே இந்த வரலாற்றை முதலில் தெர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இணையத்திலும் நண்பர்களிடத்திலும் கிடைக்கும் தரவுகளையும் செய்திகளையும் தெரிந்து கொண்ட பின்னர்தான் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

            ஒருவேளை அந்த வரலாறு என் வாசிப்பில் நுழையாமல் இருந்து இந்த நாவலை வாசித்திருந்தால் இந்நாவலில் இருக்கும் சில வரலாற்று பிழைகள் எனக்கு தெரிந்திருக்காது. என் எதிர்ப்பார்ப்பும் அதிகம் ஆகியிருக்காது.

            இதனை இப்படி புரிந்து கொள்கிறேன்; இந்த நாவல் அதனை வாசித்தவர்கள் மூலமாக அதன் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது. அதில் நாவலுக்கு ஈடான பல செய்திகளை அந்த வாசகன் கண்டறியவும் இந்நாவல் வாசகனை தயார் செய்து அனுப்புகிறது.

            மீண்டும் அடுத்த மாதம், மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடரில் சந்திக்கலாம்….

000

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *