-பரிவை சே.குமார்
சில நாட்களுக்கு முன் ‘அப்பாவ வந்து ஒரு தடவ பாத்துட்டுப் போடி’ என பெரியக்கா சுந்தரி போனில் சொன்னபோது ‘பாத்து…’ என்ற வார்த்தையை ஒரு வித்தியாசமான இழுவையோடு அவளுக்குப் பதிலாகவோ கேள்வியாகவோ வெளிப்படுத்தினேன்.
‘ஏய் அவரு உன்னத்தான்டி கேக்குறாரு…’ என்று அவள் சொன்னபோது வெறுமையாகச் சிரித்தேன். ‘சிரிக்காதடி… உண்மயாத்தான் சொல்றேன். வேணுமின்னா சிவராமனுக்கிட்ட போன் பண்ணிக் கேளு’ என்றாள் சற்றே கோபமாய்.
‘அட போக்கா… இம்புட்டு வருசத்துல எம்பேர அவரு ஒரு தடவயாச்சும் சொல்லியிருப்பாரா…? எம்பேரக் கேட்டாலே அவருக்குப் புடிக்காது. வீட்டுக்குள்ள என்னைய நீங்கள்லாம் பெரும்பாலும் போதும் பொண்ணுன்னு சொல்லுவீங்க. அம்மா மட்டுந்தான் அவ வச்ச பேரைக் கூப்பிடுவா. அவருக்கு நான் எப்போதும் ‘அவ’தானே. இதுல என்னயக் கேக்குறாருன்னு எதுக்குப் பொய் சொல்றே…? நாஞ் சந்தோசப்படவா… எனக்கு அவரால எந்தச் சந்தோசமும் இதுவர இல்லக்கா… அதை எதிர்பார்க்கிறதை நானும் எப்பவோ விட்டுட்டேங்க்கா’
‘எங்ககிட்டயும் அப்படித்தான் இருந்தாரு. என்ன உங்ககிட்ட ரொம்ப அதிகமா… ஆனாலும் அவரோட மனசுக்குள்ள உம்மேல ஏதோ இருக்குடி. சரி விடு, ஆனா அன்னக்கி அவரப் பாக்கப் போனப்போ உன்னயத்தான் கேட்டாரு, அப்ப அவரு கண் கலங்குனத நாம்பாத்தேன்’ அவள் குரல் உடைந்தது.
நீண்ட உரையாடலுக்குப் பின்னும் எனக்குள் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற பாசமோ ஆசையோ எழவேயில்லை. எனக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல், ‘வரமுடியுதான்னு பாக்குறேங்க்கா’ என்று அன்றைய எங்களின் உரையாடலை முடித்துக் கொண்டேன்.
எங்க வீட்டில் ஐந்தாவதாய் பிறந்தேன். எனக்கு முன் மூன்று பொம்பளப் புள்ளங்க. அம்மா கர்ப்பமானதும் ஆம்பளப் பிள்ளைதான் பிறக்க வேண்டும் என்பதே எல்லாருடைய வேண்டுதலாகவும், முக்கியமாக அப்பாவின் பெரும் கனவும் ஆசையாகவும் இருந்திருக்கிறது. அஞ்சாவதாவதாப் பிறந்ததால பஞ்சுன்னு வைக்கலாம்ன்னு யாரோ சொல்ல, ஆமா இவுகளுக்கு கொஞ்சுன்னு வைக்கிறாவ என எங்கப்பத்தா அந்தப் பேருக்கு மூடுவிழா பண்ணிருச்சாம்.
பெரும்பாலும் சரியான பலன் சொல்லும் வெள்ளிக்கட்டி ஐயர் ஆம்பளப் புள்ளதான் என அடித்துச் சொன்னதை, நான் அழித்துப் பிறந்தேன். விதி என்னவோ அதுதானே நிகழும். பெண் என்றதும் அப்பா பார்க்கவே வரவில்லையாம். அப்பத்தாவிடம் ‘மூதேவி நாலு இருக்கது போதும், இதுல இன்னொரு விடியாமூஞ்சி தேவியும் இங்க வர வேண்டாம்’ன்னு சொல்ல, அப்பத்தாவும் ‘ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா புள்ள பெத்துக்கிறேன்னு பொட்டச்சியளப் பெத்துப் போடுறதுக்கு வெட்டிச் செலவு பண்ண வேண்டியதாயிருக்கு. ஒரு ஆம்பளப்பிள்ள பெத்துத் தருவேன்னு பாத்தா பொட்டப்புள்ளயாப் பெத்து வீட்ட ரொப்பிடுவே போல’ன்னு சொல்லி ‘அந்தச் சனியன அங்கிட்டுத்தானே எதாவது ஆசிரமத்துல கொடுத்துட்டு வா… இல்லன்னா நெல்லும் பாலும் கொடுக்க ராசாத்திய வரச் சொல்லிருவேன். அதத்தான் அவனும் சொல்றான்’னு மனசாட்சியே இல்லாம சொல்லியிருக்கு.
பெத்தவ அப்படியெல்லாம் விட்டுட்டு வருவாளா…? வீட்டுக்குத் தூக்கிட்டுத்தான் வந்திருக்கா. வந்ததோட இல்லாம என்னோட புள்ள எங்கிட்டதான் இருப்பா… அவளைக் கொல்லணும்ன்னு நினைச்சா குடும்பத்தோட வெசம் வச்சிக் கொன்னிருவேன்னு ஒரே போடாப் போட்டிருக்கா. புள்ளயக் கொல்லணுமின்னு நின்னாலும் நம்ம உயிர எடுத்துருவாளோங்கிற பயம் இருக்கத்தானே செய்யும். வேண்டா வெறுப்பாய் அம்மாவைத் திட்டியபடியே எனக்கு அப்பத்தா வச்ச பேரு ‘போதும் பொண்ணு’. அம்மாவோ அதைக் கூப்பிட விரும்பாமல் தேவியின்னு கூப்பிடுவா. அம்மா பள்ளிக் கூடத்தில் சேர்த்தபோதும் தேவின்னுதான் சேர்த்தாள். அந்த வீட்டைப் பொறுத்தவரை அம்மாவுக்கு நான் தேவி, மற்றவர்களுக்கு மூ’தேவி’யில் ஒருத்திதான். உடன்பிறப்புக்களுக்கும் கேலிப் பொருளாய் ஆகிப் போன என்னை ‘போதும்’ன்னு கேலியாய்த்தான் கூப்பிடுவாங்களே ஒழிய, என்னை ஒரு உணர்வுள்ள பெண்ணாய் யாரும் பார்ப்பதில்லை.
‘அடுத்த புள்ள எனக்கு வேண்டாம். மறுபடியும் பொம்பளப் புள்ளயாப் போச்சுன்னா, இருக்கது போதும் இனிமே புள்ளயே வேண்டாம்’ எனப் பிடிவாதம் பிடித்த அம்மாவை வலுக்கட்டாயமா பிள்ளை பெற வைத்திருக்கிறார்கள். நல்லவேளை சிவராமன் பிறந்தான் அம்மா தப்பித்தாள். அப்பாவின் செல்லம் அவன்தான். என்னைத் தூக்க மறுத்த அப்பாவின் கைகள் அவனைத் தரையில் இறக்க மறுத்தன.
நான் அந்த வயதில் ரொம்பவே பாதிக்கப்பட்டு, வருத்தத்திலேயே வாழ்வது பிடிக்காமல் அம்மா என்னைச் சித்தி வீட்டில் விட்டுப் படிக்க வைத்தாள். சித்திக்கு பையன்கள் என்பதால் அப்பாவுக்கு நேர் எதிராய் பொம்பளப்புள்ளங்க மேல அதீத பாசம். என்னை ரொம்ப நன்றாகவே பார்த்துக் கொண்டாள், சித்தப்பாவும் அப்பா பாசத்தை எனக்கு அதிகமாகவே கொடுத்தார்.
ஊருக்குப் போகும் போதெல்லாம் அக்காக்களிடம் பேசும் அப்பா என்னிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. என் படிப்பு குறித்து எதுவும் கேட்பதில்லை. நான் வயதுக்கு வந்த போது கூட சித்தி வீட்டில் வைத்துத்தான் எல்லாம் செய்தார்கள். அதற்குக் கூட அப்பா வரவில்லை. என் திருமணத்திற்கு மட்டும் வந்து நின்றார். அதில் கூட எங்க ஆயாவும் சித்தியும்தான் அதிகம் செலவு செய்தார்கள். என்னை பவானி மகள் என்பதைவிட பார்வதியின் மகள் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். நான் கூட அதையே விரும்ப ஆரம்பித்து விட்டேன்.
சின்ன வயதில் அப்பாவின் அருகில் போனால் கூட என்னைத் தூக்க மாட்டார். என்னைப் பேர் சொல்லி இதுவரை அவர் அழைத்ததில்லை. அவர் எதிரே போனால் அந்தச் சனியனை, இல்லைன்னா நாயை, அதுவும் இல்லைன்னா அவளை அங்கிட்டுப் போகச் சொல்லு என்பார். திருமணத்துக்குப் பின் ஊருக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னிடம் பேசுவதில்லை என்பதைவிட நான் அவரை ஒரு மனிதராய் கூட பார்க்கவில்லை. இது கூட அவர் என் மீது காட்டிய வெறுப்பின் உச்சநிலையில் நானே எனக்குப் போட்டுக் கொண்ட வேலிதான். அதுவே எனக்கு அவரை விட்டு தள்ளி நிற்கப் போதுமானதாக இருந்தது.
அம்மாவின் இறப்பின் போது அக்காள்கள் எல்லாம் அவரைக் கட்டிக் கொண்டு அழுதபோது எனக்கு அவருக்கு அருகில் போய் கட்டி அணைத்து அழ சுத்தமாக மனசு இடம் கொடுக்கவில்லை. அம்மாவின் இறப்புக்குப் பின் நான் என் தம்பி வீட்டுக்குப் போவதைக்கூட குறைத்துக் கொண்டேன். அவனுடன் பேசும் போது கூட அவரைப் பற்றி நான் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை. அவன் கூட சில சமயம் ‘அப்பா எப்படியிருக்காருன்னு கூட கேக்க மாட்டேங்கிறே…?’ எனக் கேட்பதுண்டு. அப்போதெல்லாம் விரக்தியாய் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாய் வைப்பேன்.
அக்காள்களின் மீதெல்லாம் அப்பாவுக்கு ஏதோ பாசம் இருக்கத்தான் செய்தது. கருவில் இருக்கும் போது ஆம்பளப் புள்ளதான் என்ற சாதக நம்பிக்கையை பெரிதும் நம்பி, அதை உடைத்து நான் பிறந்ததால் என் மீது கோபம் என அவர்கள் எல்லாம் ஏதோ சொல்வார்கள். அவர் என் மீது கொண்ட கோபம் இப்போது நான் அவர் மீது கொள்ளும் வெறுப்பாக மாறியிருந்தது.
பெத்தவங்க இருந்தும் சித்தி வீட்டில் நான் வளரக் காரணம் யார்…? அப்படி என்ன குற்றம் செய்தேன் நான்…? என எனக்குள் நான் அடிக்கடி கேட்டுக் கொள்வதில், சிறுவயதில் அப்பாவின் பாசத்துக்கு ஏங்கியவள் இப்போதெல்லாம் அவரைப் பற்றி யோசிக்காதவளாய் மாறிப் போய்விட்டேன்.
என் கணவர் கார்த்தி கூட, ‘நாம போய் பார்த்து விட்டு வரலாம்… கண்ணம்மா’ எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்குப் போதும் பொண்ணில் விருப்பம் இல்லை என்பதால் அந்தப் பெயரைச் சொல்லமாட்டார். எனது சான்றிதழ் பேரையும் அவர் ஏனோ கூப்பிடுவதில்லை. கல்யாணம் ஆனது முதல் அவருக்கு நான் கண்ணம்மாதான்.
என்னவர் எத்தனையோ முறை சொல்லியும் ஏனோ என் மனம் அவரைப் போய் பார்ப்பதைப் பற்றி யோசிக்கவேயில்லை.
மீண்டும் மீண்டும் அக்காக்களிடம் இருந்து போன். தம்பியும் இரண்டு முறை போன் செய்தான்.
அப்பாவுக்கு ரொம்ப முடியலை என்று சொன்னதும் ‘நீ போய் பார்க்கிறதுதான் சரி… அவங்க பண்ணுனதுக்கு அனுபவிச்சிட்டாங்க. கடைசி நேரத்துல போய் பார்க்காமல் அவங்க செஞ்சதையே நாமளும் அவங்களுக்குச் செய்யணுமா…? அப்ப அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்…? அவர் படிக்காத மனிதர், தன் ஏமாற்றத்தை உன்னிடத்தில் காட்டிவிட்டார். இறங்கிப் போக அவரின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. அதுக்காக நாமும் அதையே திருப்பிக் கொடுக்க வேண்டுமா என்ன…? அவர் சுமந்ததை இறக்கி வைக்கவே முடியாம காலத்தை ஓட்டிட்டார்ன்னு நாம நினைச்சிக்கிட்டா இந்த வெறுப்பும் கரைந்து போயிரும். உனக்குப் பாசம் காட்டியவர்களின் இறுதிக் காலத்தில நீ எப்படி நடந்து கொண்டாயோ அப்படியே இவரிடம் நடந்து கொள்வதில் நாம் குறைந்து போய் விடமாட்டோம். நாம கண்டிப்பாகப் போகணும்’ என்றார் என்னவர். அவர் அப்படித்தான் அவருக்குத் துரோகமே செய்தவர் என்றாலும் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லாம் மறந்து அவர்களோடு நெருங்கிவிடுவார். இதெப்படி என்றால், ‘இனிமே பிறக்கவா போறோம். நல்லது கெட்டது எல்லாம் நிறைஞ்சதுதானே மனுசன். கடந்து போவோம்’ எனச் சிரிப்பார்.
நீண்ட யோசனைக்குப் பின் அப்பாவைப் பார்க்கப் போனோம். நாங்கள் வரும் விபரம் அக்காக்களுக்கும் சொல்லி இருந்ததால் எல்லாரும் வந்திருந்தார்கள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் இடப்புறம் இருக்கும் அறையில் அப்பா இருந்தார்… இல்லையில்லை அவரைக் கிடத்தியிருந்தார்கள். ஆம் அவரால் எழ முடியாது, தம்பி மனைவிதான் பார்த்தாள்.
எனக்கு அந்த அறைக்குள் போக விருப்பமில்லை என்பதே உண்மை. எல்லாருடைய வற்புறுத்தலின் காரணமாகவே உள்ளே போனேன். அறை முழுவதும் அவரின் வாசம், வாசம் என்பதைவிட கிடையாய் கிடக்கும் ஒரு மனிதனின் உடம்பில் இருந்து வரும் ஒருவித நாற்றம் காற்றில் நிறைந்திருந்தது.
அருகில் போனேன்.
பெரியக்காதான் ‘அப்பா தங்கச்சி போதும் பொண்ணு வந்திருக்கா’ என்றாள். அவரைப் பொறுத்தவரை நான் போதும் பொண்ணுதானே. என் பெயரெல்லாம் அவருக்கு பிடிக்கவே பிடிக்காத, அவர் வாயில் வராத பெயர்தானே.
நான் பேசாமல் நின்றேன்.
அப்பாவின் மூடிய கண்ணுக்குள் விழி கிழக்கு மேற்காக அலைவது தெரிந்தது. மூச்சு கொஞ்சம் வேகவேகமாக வெளியேறியது. உதடு துடித்தது.
‘ஏய் யோசிக்காத… அவர் கையைப் பிடி… அப்பான்னு சொல்லு…’ என்றாள் சின்ன அக்கா, என்னிடம் எந்த உணர்வும் இல்லை.
‘இப்பவும் நீ பழசயெல்லாம் யோசிக்காதடி… அவரு கையைப் புடி’ என்றான் தம்பி.
‘இங்கேரு கண்ணம்மா… அவர் கண்கள் அலைவதைப் பார்… அப்பான்னு சொல்லு… உள்ளத்தில் இருந்து வரலைன்னாலும் உதட்டளவில் சொல்லு போதும்’ எனக் கணவர் தோள் அணைத்தார்.
நீண்ட யோசனைக்குப் பின் தொண்டையில் அழுத்திய வலியின் காரணமாக, கண்ணில் நீர் கோர்க்க, அவரின்… அப்பாவின் கையை மெல்லப் பிடித்தேன்.
‘இந்தக் கைகளைப் பிடித்து நடக்க எவ்வளவு ஆசைப்பட்டேன். அவரின் இறுதிக் காலத்தில் விருப்பமின்றி பிடிக்க வேண்டியதாகி விட்டதே’ என நினைத்தபோது என்னை அறியாமல் கண்ணீர் வெளியானது.
உயிர் வலியால் உதடு துடிக்க, அவரின் கையை அழுத்திப் பிடித்தேன்.
‘அப்பா போதும் பொண்ணு உங்களத்தான் பாக்க வந்திருக்கா?’ என இரண்டாவது அக்கா அவர் காதில் சத்தமாய் சொன்னாள்.
நான் என் பிடியை இன்னும் இறுக்கினேன்.
என்னவரும் என் தோள் மீதான பிடியை ஆதரவாய்… நான் கூட இருக்கிறேன் என்பதாய் அழுத்தமாக்கினார்.
அப்பாவின் மூடிய கண்ணுக்குள் விழிகள் தவித்துக் கொண்டிருந்தன. கண்ணில் இருந்து கண்ணீர் மெல்ல இறங்கியது.
வாய் திறந்து மெல்ல, வறண்டிருந்த உதடுகளை நாவால் தடவி ‘தே… தே…வி…’ என்றார்.
000

பரிவை சே.குமார்
இதுவரை எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார், அறுகு, மாதரசி என்ற சிறுகதைத் தொகுப்புகளும்; வேரும் விழுதுகளும், திருவிழா, காளையன், சாக்காடு, மருள், உன்மத்தம், கறுப்பி என்ற நாவல்களும்; உள்ளூர் இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன. எதிர்சேவை சிறுகதைத் தொகுப்புக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் வட்டார வழக்குக்கான பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். விண்மீன் மின்னிதழில் ஆசிரியராகவும் இருக்கிறார்.

