-புன்னகை பூ ஜெயக்குமார்
காலை நான்கு மணி.
சென்னை இன்னும் முழுமையாக விழித்திருக்கவில்லை. ஆனால் அந்த நகரம் ஒருபோதும் முழுதாகத் தூங்குவதில்லை. தெருக்களில் பேருந்துகள் இன்னும் குறைவாக இருக்கலாம். ரயில் நிலையங்களில் சிலர் மட்டுமே காத்திருக்கலாம். ஆனால் திருமண மண்டபங்களின் சமையலறைகளில், பெரிய ஹோட்டல்களின் பின்புற அடுப்பறைகளில், மாணவர் விடுதிகளின் சமையல்கூடங்களில், ஏற்கெனவே ஒரு பகல் பிறந்துவிட்டிருக்கும். அங்கே சூரியன் உதிப்பதில்லை; அடுப்புதான் உதிக்கிறது.
அந்த அடுப்பின் முன் நின்றிருந்தான் அரவிந்த்.
வயது இருபது. அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழியல் மூன்றாம் ஆண்டு. அவன் விரல்களில் நூல்களின் மை படிந்திருக்க வேண்டிய பருவம் அது. ஆனால் அவன் விரல்களில் ஒட்டியிருந்தது வெங்காயத்தின் காரமும், பூண்டின் வாசனையும், எண்ணெயின் பிசுபிசுப்பும்.
“அட அரவிந்தா… வெங்காயத்தை நறுக்குறதுக்குக் கூட இவ்வளவு நேரமா?” என்று சமையல்காரர் முத்து சத்தமிட்டார்.
அரவிந்த் தலைநிமிர்ந்து சிரித்தான்.
“கண்ணு கொஞ்சம் எரியுது சார்.”
“வெங்காயத்தாலதான். வாழ்க்கையால இல்லை.”
முத்து சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தை, அரவிந்தின் நெஞ்சுக்குள் எங்கோ சென்று அமர்ந்தது. உண்மையில் எது கண்ணை எரிக்கிறது? வெங்காயமா? இல்லையென்றால், தன் வயதில் தன் தோள்களில் விழுந்த வாழ்க்கையின் பாரமா?
அவன் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர். மாதந்தோறும் வரும் ஓய்வூதியம், மாதத்தின் முதல் வாரத்திலேயே மூச்சு முட்டிவிடும். தாய் நீரிழிவு நோயால் சோர்ந்து கிடப்பார். மருந்துச் செலவு தனி. வாடகை தனி. பள்ளிக்குச் செல்லும் தங்கையின் கட்டணம் தனி. வீட்டில் ஒவ்வொரு நாளும் சமைக்கப்படும் உணவைவிட, கணக்குகள்தான் அதிகமாகக் கொதித்தன.
வேலை தேடினான்.
கால் சென்டரில் ஆங்கிலம் கேட்டார்கள். தடுமாறினான்.
டெலிவரி வேலைக்கு இருசக்கர வாகனம் வேண்டும் என்றார்கள். அவனிடம் இருந்தது பழைய சைக்கிள்.
இறுதியில் அவனுக்குக் கிடைத்தது — சமையல் உதவியாளர் வேலை.
முதல் நாள் முத்து கேட்டார்.
“படிச்சவனா?”
“ஆமாம் சார்.”
“அப்போ இந்த வேலையில எவ்வளவு நாள் இருப்பே?”
அப்போது பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கேள்விக்கான பதில் அவனிடமே இல்லை. தினமும் அவன் மனசாட்சியே அதையே கேட்டுக்கொண்டிருந்தது.
காலை ஏழு மணிக்கு வேலை முடியும். குளிக்க நேரமில்லாமல் முகம் கழுவி, சட்டையை மாற்றிக்கொண்டு நேராகக் கல்லூரி.
வகுப்பறையில் அவன் உட்கார்ந்தவுடன், சில நண்பர்கள் மூக்கைச் சுருக்குவார்கள்.
“டா… சமையல் வாசனை அடிக்குதே.”
அவன் சிரித்துவிடுவான்.
ஆனால் அந்தச் சிரிப்பு, முகத்தில் மட்டுமே பிறக்கும். உள்ளுக்குள் அது அழுகையாகவே இருந்தது.
மதிய இடைவேளையில் கல்லூரி மரத்தடியில் தனியாக அமர்ந்திருந்தான் அரவிந்த்.
அவன் நண்பன் கார்த்திக் அருகில் வந்து உட்கார்ந்தான்.
“டா… இப்பல்லாம் எங்களோட சேர்ந்து சிரிக்கவே மாட்டேங்கிறே. என்னாச்சு?”
அரவிந்த் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.
“ஒண்ணுமில்லடா…”
“பொய் சொல்லாதே. உன் கண்ணு சொல்லுது. இரவெல்லாம் தூங்கலையா?”
அரவிந்த் மெதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.
“தூக்கம் வருதுடா… ஆனா தூங்குறதுக்கு முன்னாடி கணக்கு வருது.”
“என்ன கணக்கு?”
“வீட்டு வாடகை… அம்மா மருந்து… தங்கச்சி கட்டணம்… நாளைக்கு பஸ்க்காசு… இவ்வளவும் மனசுல சுத்திக்கிட்டே இருக்கும். சில நேரம் நான் படிக்கிறேனா… இல்ல வாழ்க்கையோட போராடுறேனான்னு கூட புரியல.”
கார்த்திக் எதுவும் பேசவில்லை.
அரவிந்த் தொடர்ந்தான்.
“காலையில அடுப்புக்கு முன்னாடி நிக்கும்போது, புகையால கண்ணு எரியுது. கல்லூரிக்கு வந்ததும் சில பேரு அந்த வாசனையைப் பார்த்து முகம் சுளிக்கிறாங்க. நான் வேலை செய்றதுக்காக இல்லடா… நான் ஏழையா இருக்கிறதுக்குத்தான் வெட்கப்பட வைக்கிறாங்க.”
அவன் குரல் உடைந்தது.
“சில நேரம் ரொம்ப சோர்வா இருக்கு டா… ஒருநாளாவது கவலையே இல்லாம முழுசா தூங்கணும்னு தோணுது. ஆனா வீட்டுல என்னை நம்பி மூணு பேரு இருக்காங்க. அதனால அழுகையைக் கூட ஒத்திவைக்க வேண்டியிருக்கு.”
கார்த்திக் மெதுவாக அவன் தோளில் கை வைத்தான்.
“நீ ஒருத்தன் இல்லடா…”
அரவிந்த் கண்களைத் துடைத்துக்கொண்டு மெதுவாகச் சொன்னான்.
“தெரியும்டா… ஆனா சில பாரங்களை யாராலும் தூக்கிக் கொடுக்க முடியாது. நாமதான் சுமக்கணும்.”
அந்த இருவருக்கும் இடையில் சில நிமிடங்கள் மௌனம் மட்டுமே இருந்தது. சில சமயங்களில் ஆறுதல் வார்த்தைகளால் வருவதில்லை; அருகில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு நண்பனால்தான் வருகிறது.
ஒருநாள் தமிழ் பேராசிரியர் ரேணுகா அவனை அழைத்தார்.
“அரவிந்த், நீ எப்போதும் சோர்வாக இருக்கிறாய். ஏதாவது வேலைக்குப் போகிறாயா?”
அவன் சிறிது நேரம் அமைதியாக நின்றான்.
“ஆமாம் மேடம்.”
“ஏன் சொல்லவில்லை?”
அவன் மெதுவாகப் பதிலளித்தான்.
“சொன்னா என்ன மாறப்போகுது மேடம்? படிக்கிறதுதான் முக்கியம்.”
ரேணுகா அவனை நீண்ட நேரம் பார்த்தார். அந்தப் பார்வையில் பரிதாபம் இல்லை. இரக்கம் இல்லை. அதைவிட உயர்ந்த ஒன்று இருந்தது—மரியாதை.
“நீ எழுதுற கட்டுரைகள் படிச்சிருக்கேன். உன்னால பெரிய எழுத்தாளன் ஆக முடியும்.”
அந்த ஒரு வாக்கியம், அவன் வாழ்க்கையில் யாரும் கொடுக்காத ஒரு அங்கீகாரம்.
மனிதனுக்கு சில நேரங்களில் பணம் தேவைப்படாது; ஒரு நம்பிக்கை போதும்.
அதன்பிறகு அவன் இரவுகளில் வேலை முடிந்து வீடு திரும்பியதும் எழுதத் தொடங்கினான். அடுப்பின் அருகே நின்ற மனிதர்களைப் பற்றி. வியர்வைக்கு மணம் இருப்பதைப் பற்றி. ஏழ்மை மனிதனின் கண்ணியத்தைத் திருட முடியாது என்பதைப் பற்றி.
கல்லூரி இலக்கியச் சங்கத்தில் “அடுப்பு” என்ற தனது சிறுகதையை வாசித்தான்.
அந்தக் கதையின் நாயகன் தினமும் மற்றவர்களுக்காகச் சமைக்கிறான். ஆனால் அவன் வீட்டில் பசியை மட்டுமல்ல, நம்பிக்கையையும் சமைக்கிறான்.
கதை முடிந்ததும் சில நொடிகள் அமைதி.
பிறகு எழுந்த கைத்தட்டல், அரவிந்தின் உள்ளத்தில் பல ஆண்டுகளாக மூடியிருந்த கதவைத் திறந்தது.
சில நாட்களில் அந்தக் கதையின் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.
மறுநாள் வேலைக்கு வந்தபோது முத்து சிரித்தபடி கேட்டார்.
“என்னடா… கதை எழுத்தாளராம் நீ?”
அரவிந்த் திகைத்தான்.
“எப்படிச் சார்?”
“வாட்சப்புல பார்த்தேன். நல்லா எழுதியிருக்க.”
அந்தச் சிறிய பாராட்டு, அவன் இதுவரை வாங்கிய எந்தச் சம்பளத்தையும் விட பெரியதாக இருந்தது.
வாழ்க்கை மனிதனை உயர்த்தும் முன், இன்னொரு முறை சோதிக்காமல் விடாது.
ஒரு திருமண வீட்டில் கடுமையான அவசரம். கொதித்த பாத்திரத்தை கவனிக்காமல் பிடித்தான். உள்ளங்கை வெந்து சிவந்தது.
வலியால் கண்கள் கலங்கின.
ஆனால் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தை:
“இன்றைய சம்பளம்…”
முத்து அவனை நிறுத்திவிட்டார்.
“மருத்துவமனைக்குப் போ. நாளைக்கு வர வேண்டாம்.”
“சார்… சம்பளம் குறையிடும்.”
முத்து அவன் தோளில் கை வைத்தார்.
“நீ எனக்குப் வேலைக்காரன் இல்லடா. வாழ்க்கையோட சண்டை போடுற ஒரு பையன்.”
அந்த நொடியில்தான் அரவிந்த் உணர்ந்தான்.
தொழிலுக்கு அவமானம் கிடையாது.
அவமானம் என்பது உழைப்பை இழிவாகப் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.
சில வாரங்களுக்குப் பிறகு கல்லூரி ஆண்டு விழா.
“சிறந்த மாணவர் கட்டுரை விருது — அரவிந்த்.”
மேடைக்கு நடந்துசென்றான்.
கைத்தட்டல்களின் நடுவே நின்றபோது, அவன் உள்ளங்கையின் எரிப்புக் காயம் இன்னும் முழுமையாக ஆறவில்லை. ஆனால் மனத்தின் காயங்கள் ஆறத் தொடங்கியிருந்தன.
விருதை வாங்கியபோது அவன் கண்முன் தோன்றியது—தந்தையின் சோர்ந்த முகம். மருந்தை மறைக்க சிரிக்கும் தாய். கட்டண ரசீதைப் பார்த்து அமைதியாக நிற்கும் தங்கை.
அந்த விருது அவனுக்காக அல்ல.
அவர்களுக்காக.
அன்று இரவு வேலை முடிந்ததும் அவன் முத்துவிடம் சொன்னான்.
“சார்… அடுத்த வருடம் எம்.ஏ. படிக்கணும்.”
முத்து சிரித்தார்.
“படி. அடுப்புக்கு ஆள் கிடைக்கும். ஆனா கனவுக்கு மாற்று கிடையாது.”
சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சொன்னார்.
“ஒருநாள் பெரிய எழுத்தாளன் ஆனாலும், இந்த அடுப்பை மறந்துடாதே.”
“ஏன் சார்?”
“ஏன்னா… உனக்கு முதலில் வாழ்க்கையைப் படிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியன் இதுதான்.”
அந்த இரவு அரவிந்த் வீட்டுக்கு நடந்தே சென்றான்.
சென்னையின் தெருவிளக்குகள் மஞ்சள் நிற நினைவுகளைப் போல ஒளிர்ந்தன.
அவன் உடலில் இன்னும் சமையலறையின் புகை இருந்தது.
ஆனால் அவன் உள்ளத்தில் வார்த்தைகள் பூத்துக்கொண்டிருந்தன.
வாழ்க்கை அவனை அடுப்பின் முன் நிறுத்தியது.
ஆனால் அந்தத் தீ அவனைச் சாம்பலாக்கவில்லை.
உருக்கி வடிவமைத்தது.
ஒருநாள் அவன் எழுதும் கதைகளில், அடுப்பு என்பது வெறும் சமையல் சாதனம் அல்ல.
அது உழைக்கும் மனிதனின் மௌன இதயம்.
ஒரு குடும்பத்தின் மூச்சுக் காற்று.
கனவுகளை உயிரோடு வைத்திருக்கும் ஒரு நெருப்பு.
அந்த நெருப்பைத் தாங்கியவன்—
அரவிந்த்—
வெறும் சமையல் உதவியாளர் அல்ல.
வாழ்க்கை என்ற மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில், நெருப்பையே பாடமாகக் கற்றுக்கொண்ட ஒரு எழுத்தாளன்.
000

புன்னகை பூ ஜெயக்குமார் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பிரபல கவிஞர் மற்றும் நவீன கவிதை எழுத்தாளர் ஆவார்.
· இவர் முக்கியமாக ஹைக்கூ மற்றும் தன் வாழ்வியல் பார்வைகளை வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதி வருகிறார்.
· இவரின் கவிதைகள் காட்சி வடிவங்களாகவும், எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் அமைகின்றன.
· நின்றிருந்த மழை (ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு, 2024)
· தொழிற்சாலை மேகங்கள் (கவிதைத் தொகுப்பு, 2025)
· மீச்சிறு காலம்
· அஞ்சலக்கா
கருப்புராயர் (குறுநாவல்)

