– ஜெயபால் பழனியாண்டி
ராட்சத மிருகமொன்று தன் அகலமான வாயைத் பிளப்பதுபோன்று லாரியின் பின்கதவு திறக்கப்பட்டு எம்சேண்ட் மணல் கொட்டப்பட்டுக் கொண்டிருந்தது. மணல் கொட்டி முடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் தெருவில் திரியும் நாய்களுக்கு மூக்கு வியர்த்துவிடும்போல. எப்படியாவது அவ்விடத்தை நோக்கி வந்துவிடுகின்றன. கொட்டப்பட்ட மணலில் சருக்கிவிளையாடுவதும், படுத்து உறங்குவதுமாக நாய்களின் சேட்டைகள் அரங்கேறத் தொடங்கின. தன் முன்னங்கால்களால் குழி தோண்டி முகத்தை அதனுள் நுழைத்துக் கொண்டிருந்தது ஒரு நாய்… மற்றொரு நாயோ தனது பின்னங்கால்கள் இரண்டையும் ஒருசேர பயன்படுத்தி மணலை சாலைகளை நோக்கி பரப்பியவாறு உதைத்துத் தள்ளிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நாய் மணல் மேட்டின் உச்சியில் ஏறிக்கொண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறிவிட்ட மிதப்பில் “ஊ… ஊவென்று ஊளைவிட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியே கடந்து செல்லும் நபர்கள் நாய்களின் சேட்டைகளைக் கண்டு கடிந்துகொண்டாலும் அதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை அந்த நாய்கள்.
ஒரு இருமூன்று தினங்களாகவே கீச்சாவிற்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன் உடம்பினைக் குழைப்பதும், மண்ணில் புரண்டு தனது நான்கு கால்களைக் குவித்துக்கொண்டு ஏதோ மன்றாடுவதுபோல் நடந்து கொள்கிறது. கீச்சா என்ன சொல்ல வருகிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. அவனுடைய வாகனத்தைக் கண்டால் உடனடியாக வந்து வாலை ஆட்டும் கீச்சாவிற்கு பிரட்டோ.. பிஸ்கட்டோ இடுவது வழக்கம். அதனை உண்ட மறுகணம் எங்குசென்று மறைந்துகொள்ளும் என்று தெரியாது. பசி எடுத்தால் எப்படியும் அந்தத்தெருவில் இருப்போர் எப்படியாவது அதன் பசியைப் போக்கிவிடுவார்கள். கீச்சாவை மீறி புதிய ஆட்கள் யாரும் அந்த தெருவில் உள்ளே நுழைந்துவிட முடியாது.
ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக திரியும் கீச்சாவின் இன்றைய செய்கை சற்று விசி்த்திரமாக இருந்தது அவனுக்கு.. பசிக்குத்தான் இப்படி நடந்துகொள்கிறது என நினைத்து சாப்பாடு வைத்தாலும் அதனை உண்பதில் அது எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.. “நமக்கே ஆயிரம் வேலைகிடக்கு இதுல இந்த நாய்க்கு என்ன பிரச்சனை இருக்கப்போகின்றது. அப்படியே இருந்தாலும் தெருவில் சுற்றும் நாய்தானே! அதன்மேல் நமக்கு ஏன் இவ்வளவு அக்கறை..” அவன் அதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் கீச்சா அவனிடம் ஏதோ சொல்ல நினைக்கின்றது.
அவனால் என்ன செய்ய முடியும். அவன் சாதாரண மனிதப்பிறவியாயிற்றே! விலங்குகளின் பாஷையைப் புரிந்துகொள்ளுவதற்கு அவன் ஒன்னும் அந்த பாடத்தில் பி.எச்.டி முடித்திருக்கவில்லையே! அப்படியிருந்தும் இந்த கீச்சாவின் செயல் அவனை ஏனோ உறுத்துகின்றது.
“நீங்கள் பார்த்திருக்க வேண்டும் கீச்சாவின் செய்கையை.. ஒரு குழந்தை வந்து மன்றாடுவது போன்று அவனைக் கண்ட மறுகணம் மன்றாடிக்கொண்டேயிருக்கின்றது. அந்த மரமண்டை அதற்குப் பசிக்கிறது என்றே நினைத்து பிஸ்கட்டை வாரிவழங்கிக் கொண்டிருக்கின்றது. சாப்பிடாமல் திரும்பிச்செல்லும் கீச்சாவின் மீது கோபத்தையும் வீசியிறைக்கின்றது அந்த மரமண்டை..”
அந்நேரத்தில் கீச்சாவின் மனநிலையோ..
“ஐய்யோ! இவனுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உணராமல், இவன் என்மேல் அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறானே! இந்த அன்பின் காரணமாகவே.. என்னைக் கடக்கும் எத்தனையோ நபர்களைத் தவிர்த்து இவனிடம் வந்து மன்றாடிக்கொண்டிருக்கின்றேன்.” இப்படி உழன்றுகொண்டிருந்தது.
பதில் கிடைக்காத அவனிடம் திரும்ப திரும்ப முறையிட்டுக் கொண்டிருக்கின்றது அந்த கருப்பு நிற பிராணி..
*** *** ***
அந்தத் தெருவில் இப்பொழுதுதான் ஒரு சில புதிய வீடுகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. கருவேல மரங்களை அழித்து வீட்டுமனைகள் போடப்பட்டிருந்த அந்த இடம் பார்த்தவுடனே வாடிக்ககையாளர்களைக் கவரும் வண்ணமாக காட்சியளித்தது.
“அந்த காலத்துல இதெல்லாம் பருத்திக்காடு.. இதெல்லாம் எங்கூட்டு நெலந்தான்.. இப்பப்பாரு ஊருபட்ட ரேட்டுக்கு போகுது.. யாரு கண்டா இப்படியெல்லாம் நடக்கும்முணு..” ஆடு மேய்க்கும் பெரியவரின் புலம்பலையும் அவ்வப்போது காதுகொடுத்து கேட்கமுடியும்..
அந்தத் தெருவிற்கு வரும் பாதையின் முந்தைய தெருவில் பழைய வீட்டுமனைகள் போடப்பட்டு ஆண்டுகள் பல கடந்திருந்தன. ஒரு சில இடங்களைத் தவிர்த்து குறிப்பிடும்படியான வீடுகள் ஏற்கனவே ஆகியிருந்தன. அந்தத் தெருவில் நீண்ட நாட்களுக்கு முன்பு நிலம் வாங்கியவர்களோ.. இந்தப் புதிய தெருவில் வீடுகள் உடனடியாக ஆவதைக் கண்டு தாங்களும் வீடுகளைக் கட்ட ஆரம்பித்தனர்.
அங்குதான் முதன் முதலாக அந்த ஐந்தறிவு ஜீவியைப் பார்க்க முடிந்தது. புதிதாக எழுப்பப்பட்ட கட்டிடம் இன்னும் முழுமையடையவில்லை. கொரோனா காலகட்டம் ஆதலால் வேலை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டின் முகப்பில் போர்டிகோ பகுதியில் ஐந்தாறு குட்டிகளை ஈன்று சாவகாசமாகப் படுத்துக்கொண்டிருந்த கீச்சாவைப் பார்ப்பதற்கு குழந்தைகள் ஆர்வம் காட்டினர்.
அப்போது அதன் பெயர் கீச்சா இல்லை. கு. அழகிரிசாமி குறிப்பிடுவது போன்று அது வெறும் நாய். எப்பொழுதெல்லாம் புதுவீட்டு மனைகள் வேலை ஆரம்பமாகின்றதோ அங்கு வந்து தனது புதுக்குடித்தனத்தை வைத்துக்கொள்வதே அதன் வேலை..
கீச்சா ஒரு பெண் நாய்.. இருந்தாலும் குழந்தைகள் அதற்கு கீச்சா என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கிவிட்டனர். மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக கீச்சா தனது குடித்தனத்தை அந்தப் புதுத்தெருவிலே நிரந்தரமாக்கிக்கொண்டது. கீச்சாவிற்கு குட்டிகளை ஈனுவதில் நாள் மாதம் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ஆடி மாதமாக இருந்தால் என்ன? புரட்டாசி மாதமாக இருந்தால் என்ன? குட்டிகளை வதவதவென்று பெற்றுத் தெருவில் திரியவிடுவதே வாடிக்கையாக வைத்திருந்தது. கீச்சா ஈனும் ஆண் குட்டிகள் எப்படியாவது தப்பிப்பிழைத்துவிடும். யாரோ ஒருவர் ஆண் குட்டிகளை அடையாளம் கண்டு தூக்கிச் சென்றுவிடுவர். பெண் குட்டிகளின் நிலையோ அந்தோ பரிதாபம். அவைகள் அந்தத் தெருவிலேயே அங்குமிங்கும் சுற்றி அலைவதைப் பார்க்கமுடியும்.
தெருவில் சுற்றி வரும் பல நாய்கள் கீச்சாவின் வாரிசாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு முறையும் குட்டிகளைப் பிரசவிக்கும் பொழுதும் புதுமனைகளின் பக்கம் கீச்சாவின் முனகல் சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்போதும் கண்ணிற்கு முன் வந்து வாலை ஆட்டும் கீச்சாவை சில தினங்களாக காணவில்லையென்று யோசித்தாலே போதும்.. குட்டிகளை ஈன்றுள்ள செய்தி அந்தத் தெருவில் வசிக்கும் குழந்தைகளின் வாயிலாக காதில் வந்து சேரும்.
இந்த முறை எத்தனை குட்டி, அதில் செவலைக் குட்டிகள் எத்தனை, கருப்பு குட்டிகள் எத்தனை, இரு வண்ணத்தில் எத்தனைக் குட்டிகள் என அனைத்திற்கும் சிஐடி வேலை பார்ப்பது இந்தப் பொடிசுகளின் வேலை. அதோடு மட்டுமில்லாமல் அவைகளுக்கு புதுப்புது பெயர்களை வைப்பதும் அவர்களின் வேலையாகத்தான் இருக்கும்.
*** *** ***
ஆடி மாதத்தின் பெருங்காற்றைக் கடந்து மழை தொடங்கியிருந்த காலம். காலியாக கிடந்த வீட்டு மனைகளில் தண்ணீர் குளமாக நிரம்பிக்கிடந்தன. தவளைகள் சத்தம் இரவில் தூக்கத்தைத் தின்று தொலைத்துக்கொண்டிருந்தது. கதவைத் தாழிட்டும் தவளைகளின் பெருத்த சத்தம் பெரும் எரிச்சலை உண்டாக்கியது.
எப்படா மழைகாலம் முடிந்து நீர் வற்றி இயல்புநிலை திரும்பும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனிடம்.. அருகில் இருந்த மகள் “அப்பா கீச்சா.. தேவி அம்மா வீட்டுகிட்டதான் குட்டிபோட்டுருக்கான்.. மழையில நனைவான்.. குட்டிங்களாம் பாவம்பா..” என்றாள்.
“ஆமா.. உங்க கீச்சாவுக்கு வேற வேலையே கிடையாது. இதே பொழப்பு.. நாம என்ன பண்ண முடியும்.. மழை விடட்டும். காலையில போய்ப் பாக்கலாம்..” என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.
காலை விடிந்ததும் அவன் கண்ட காட்சி மனத்திற்கு சற்று ஆறுதலைத் தந்தது. கீச்சாவும் அதன் குட்டிகளும் மழையில் நனையாமல் இருக்க அட்டைப்பெட்டிகளை வைத்து பாதுகாப்பு செய்திருந்தாள் தேவி அம்மா.. இது நடந்து ஓரிரு தினங்களுக்குப் பிறகுதான் கீச்சா அவனிடம் இப்படி நடந்து கொள்கிறது.
நாய்கள் குட்டிகளை ஈனும்பொழுது அதற்கு பயங்கரமாக பசியெடுக்கும். தான் ஈன்ற இரண்டு மூன்று குட்டிகளை அதுவே உண்டுவிடுமென்று சிறுவயதில் கேள்விப்பட்டுள்ளான். அப்படி பசி அதிகமாகிப் போய்தான் கீச்சா இப்படி நடந்துகொள்கிறதோ? ஒன்றும் விளங்கவில்லையே!
அன்று சனிக்கிழமை. விடுமுறை தினம்.. தொலைக்காட்சியில் மூழ்கிப்போயிருந்த அவனை அவசர அவசரமாக அழைத்தாள் அவனின் மனைவி..
“ஏங்க.. ஏங்க.. இங்க சீக்கிரம் வாங்க..”
“ஏன் என்னாச்சு..”
“கீச்சாவுட குட்டி அங்க சாக்கடையில விழுந்துருச்சாமா.. தேவி அம்மா உன்ன கூப்புடுறாங்க பாரு.. போய் என்னானுதான் பாரு..” என்று அவள் உரைக்க..
வீட்டின் முன் வளர்ந்துகிடந்த எலுமிச்சம் செடியின் அருகில் நின்றிருந்த தேவி அம்மா.. “தம்பி.. அன்னைக்கு மழை பேஞ்சதுல அதுல ஒரு குட்டி தவறி சாக்கடையில விழுந்துருச்சு போல.. செத்துபோச்சு.. எடுக்கபோனா இந்த கீச்சா எல்லோரையும் கடிக்க வரான்.. கொஞ்சம் வந்து பாருங்க தம்பி..”
தேவி அம்மா குறிப்பிட்ட இடத்தில் கீச்சாவின் குட்டி இறந்து இரு மூன்று தினங்கள் ஆகியிருந்தன. அதனை எடுக்க சென்ற யாரையும் கீச்சா நெருங்கவிடவில்லை.
“ஐய்யா.. மழையில என் குட்டி தவறி சாக்கடையில விழுந்துட்டான். தயவுசெய்து வந்து காப்பாத்துய்யா.. காப்பாத்துய்யா..” என்ற மன்றாடலே கீச்சாவன் மொழியாக இருந்திருக்கின்றது. இது புரியாத அவனுக்கு இப்பொழுது புரிந்து என்ன செய்ய.. குட்டி இறந்துவிட்டது. கீச்சா அழைத்த நேரத்தில் சென்றிருந்தாலும் அவனால் காப்பாற்றியிருக்க முடியுமா.. தெரியவில்லை.. விடிய விடிய பெய்த மழையில் குட்டியின் உயிர் எப்போது போனதோ! அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
குட்டியின் பக்கம் யாரையும் நெருங்கவிடாத கீச்சா.. அவனைப் பார்த்ததும் ஏதோ தன்னுடைய மொழியில் பேசிவிட்டு எம்சேண்ட் குவிக்கப்பட்ட பகுதியில் போய் படுத்துக்கொண்டது. கையில் ஒரு சிமெண்ட் சாக்கையும் மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு குட்டி கிடக்கும் இடத்திற்குச் சென்றான். மண்வெட்டியால் இறந்துகிடந்த குட்டியை மெல்ல லாவகமாக தூக்கி சிமெண்ட் பையில் வைத்து ஒருவாறாக சுருட்டினான். தெருவின் ஒரு மூலையில் பயன்பாடற்ற காலியிடத்தில் புதைக்கலாம் என்று முடிவுசெய்து மண்ணைத் தோண்டி குட்டியைப் புதைத்துவிட்டு திரும்பினான். இறந்த குட்டியை சாக்கடையில் இருந்து எடுப்பது தொடங்கி அதற்கான இறுதி அத்தியாயம் எழுதும் வரை கீச்சா அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. கீச்சாவின் மனம் மெல்ல ஆசுவாசம் கொள்வதை அவனால் உணரமுடிந்தது. அந்த நன்றி கடனிற்காக நெடுநாளைக்கு அவனோடு நட்பு பாராட்டியிருந்த கீச்சா உண்மையில் ஓர் அற்புத பிராணிதான்…
*** *** ***
கீச்சாவிற்கு இ்ப்போது வயதாகி விட்டது. ரோமங்கள் ஆங்காங்கே உதிரத்தொடங்கியிருந்தன. நடையில் தளர்ச்சி.. கண்ணின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தொடங்கியிருந்தது. கீச்சா தனது வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணத் தொடங்கியிருந்ததை அதன் உடலும் அதன் நடவடிக்கையும் வெளிப்படுத்தியது.
பல சந்ததிகளை உருவாக்கிவிட்டு தெரு முழுக்க தனது வாரிசுகளைப் பெருக்கிவிட்ட கீச்சா. கொஞ்ச நாட்களாகவே அவனை எதிர்கொள்வதைத் தவிர்த்து வந்தது. அவனை மட்டுமல்ல அந்த தெருவில் வசிக்கும் அத்தனை மனிதர்களிடமிருந்தும் தன்னை விலக்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.
அன்று ஏரிகரையில் கருவேலை மரங்கள் நிறைந்த பாதையில் நிலவை மட்டும் தன் துணைக்கு அழைத்துகொண்டு தளர்நடையோடு மெல்ல நகரத்தொடங்கியிருந்தது. பழகிய மனிதர்களிடமிருந்து விலகி பார்வைக்கு அப்பாற்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்த கீச்சாவின் வாழ்நாளில் எத்தனையோ முகங்கள்.. எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்தார்கள்..
கீச்சாவைக் குறித்து அவன் கேள்விப்பட்ட செய்தி உண்மைதானா? அப்படி நடத்திருக்கவே நிறைய வாய்ப்புகள் இருக்கு.. அதனை உறுதிசெய்யும் வதையில் தான் அவனுடைய நண்பர் பாலுவின் பதில் இருந்தது.
“கீச்சாவுக்கு ஆயுசு அவ்ளோதானுங்க.. பத்து பதினாறு வருசம் ஆச்சு. ஏரிகரைப் பக்கத்துல செத்துகிடந்ததா சொன்னாங்க..”
“அடடா.. நானும் கேள்விப்பட்டேன் இந்தமாதிரினு.. ரொம்பநாள் நம்ம தெருவிலேயே சுத்திட்டுக்கெடந்துச்சா.. அதான்..” என்று கீச்சா மீதான தனது கரிசனத்தைப் பகிர்ந்துகொண்டான்.
“என்ன… ஒவ்வொரு நாயிங்களும் ஒவ்வொரு மாதிரி.. பாவங்க.. அதுங்க என்ன செய்யும்.. ஏதோ நாம போடுற சாப்பாட சாப்புட்டு அதுங்க படுத்துகிடக்கு.. போகுற எடத்துக்கெல்லாம் பின்னாடியே வால ஆட்டிக்கிட்டு வருதுங்க.. நம்ம தெருக்கும் ஒரு பாதுகாப்புதானே!.. நமக்கு எந்த தொந்தரவு இல்ல பாருங்க.. பாருங்க இந்த ஜெர்ரி.. கீச்சா விட்டுபோன இடத்தை இவன் புடிச்சுகிட்டான்.. எல்லாம் உசுருதானுங்க..”
“ஆமாமா.. நிஜந்தான். எல்லாம் உசுருதான். உசுருல என்ன பாகுபாடு. நீங்க சொல்றது சரிதான்..”
மெல்ல இருள தொடங்கியிருந்த வானம். காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது கூரை மீதிருந்த தகரம். கண்ணாடியில் பளிச்சென்ற மின்னல். இடியின் கணீர் கணீரென்ற ஓசை. ஒரு பெருமழைக்கான அறிகுறி. வழக்கம்போல் காற்று.. வானை எப்படியோ போக்குக்காட்டி மழையை திசைமாற்றிக்கொண்டு சென்றுவிட்டது..
இப்பொழுது வானில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.. ஜெர்ரி மட்டும் தெருவின் முச்சந்தியைப் பார்த்து நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருக்க… குவித்து வைக்கப்பட்டிருந்த எம்சேண்ட் மெதுமெதுவாக இரவின் நிழலை உள்வாங்கிக் கொண்டிருந்தது..
00


