1 .

நீ தேவையில்லை.

உன்னுடைய பிம்பம்தான் முக்கியம்.

நீ உனக்குள் என்னவாக வேண்டுமானாலும் இருந்துகொள்.

எங்களுக்குள் நீ எவ்வாறு பதிந்திருக்கிறாயோ அதை நீ புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

உன்னுடைய புறச் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

உன் முகத்திற்குப் பின்னால் நீ இருக்கிறாயா என்பது இனி ஒரு கேள்வியல்ல .

நாங்கள் உன்னைப் பார்க்கிறோம்.

நீயோ எங்களுக்குள் பதிந்திருக்கும் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

ஒரு நாள் நீ மறைந்துபோகலாம்.

ஆனால் உன் பிம்பம் எங்களை விட்டுப் போகாது.

அதற்கு உன் அனுமதி தேவையில்லை.

2

இந்த அணையா விளக்கை அணைத்துச் செல்லும் கைகள் உள்ளவரை

இரவு முடிவடைவதில்லை.

வெளியின் சாட்சியாக மாறி உள்ளுக்குள் தற்கொலை நடந்தேறுகிறது.

யாருக்கும் எதுவும் தெரிவதில்லை.

விளக்கு எரிகிறது.

வீடு இருக்கிறது.

கதவுகள் திறக்கப்படுகின்றன. மூடப்படுகின்றன.

அன்றாடம் எல்லாம் இயல்பாகவே நடந்துகொண்டிருக்கிறது.

உள்ளே மட்டும் ஒவ்வொரு நாளும் ஒருவன் தன்னிடமிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறான்.

அணையாத விளக்கின் கீழ் இருள் தனது முகத்தை மாற்றிக்கொள்கிறது.

 3

இசை அதன் தொடக்கத்திலேயே மெய்மையிலிருந்து விலகிவிடுகிறது.

குறைந்த கால அளவே உடைய ஒரு கற்பனை உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைக்கிறது.

புதிர் என்னவென்றால்

அந்த உலகத்தில் நிஜ மனிதர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

நேற்று இறந்தவன் இன்று பாடுகிறான்.

பிரிந்துபோனவள் மீண்டும் அருகில் அமர்கிறாள்.

இசை முடிகிறது.

யாரும் எங்கும் போகவில்லை.

விழிப்பு துடைத்தழித்துவிடுகிறது கனவின் விசும்பல்களை.

எழுதாத பலகையென வாழ்க்கை ஒளிர்கிறது.

அதில் எதையும் எழுதலாம்.

எதையும் அழித்துவிடலாம்.

எந்தப் பாடும் தேவையில்லை.

கவிதைப் பாடு உட்பட.

மௌனம் மட்டும் தனது இசையை நிறுத்துவதில்லை.

4

தொலைந்து போன அருவம்.

வரலாறு தனது பழைய முகத்தை மறைத்துக்கொள்கிறது.

உன் முத்தம் பதிந்த இடம் நாள்பட்ட தழும்பாய் அருவருப்பாக மாறிவிட்டது.

உன் சீழ் பிடித்த சுண்டுவிரல் இனி ஒருபோதும் தேவையில்லை.

உன்னை இறக்கிவிட்ட பின்புதான் என் படகு லகுவாகப் பயணிக்கத் தொடங்கியது.

கரை இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது.

ஆனால் இப்போது

என் படகில் நதியின் சத்தத்தைத் தவிர வேறெந்தக் குரலும் இல்லை.

5

நாளைய உரையாடல்கள் இன்று மிக அருகில் கேட்கின்றன.

இந்தத் திரைக்குப் பின்னால் என்ன உள்ளது?

நாம் காண்பது நிகழ்காலமா?

ஏற்கெனவே நடந்துமுடிந்த ஒன்றின் மீள்பதிவா?

வயதேறாத சாபத்துடன் தெய்வ சிசுக்கள்.

அவர்களுக்குக் கடந்தகாலம் இல்லை.

எதிர்காலம் ஏற்கெனவே அவர்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது.

அவர்கள் திரைக்குள் பிறக்கிறார்கள்.

திரைக்குள் வளர்கிறார்கள்.

திரைக்குள்ளேயே தங்கள் முகங்களைத் தேடுகிறார்கள்.

திரை விலகும்போது அங்கே யாருமில்லை.

எஞ்சியிருப்பது அவர்களுடைய குரல்கள்.

நாளைய உரையாடல்கள் இன்னும் மிக அருகில் கேட்கின்றன.

00

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *