சொகுசான அசௌகரியங்கள்.
ஏளனப் பார்வைகள் ஒதுக்கி கடந்து வந்து சேர்ந்த வீட்டில் சோகம் சுற்றிப் படர்ந்திருந்தது.
அதன் ஆணிவேரில் ஆதரவு சொட்டுக்கள் காணாத வாடல் கூரை எங்கும் கொடிகளாக காய்ந்து படர்ந்திருந்தது.
முன்பொரு காலத்தில் வித வித வாசனையில் வீதிகள் முழுவதும் பரவிய வாடையில் அசௌகரியக் கோவம் அனைவரையும் ஆட்கொண்டது.
வம்பதெற்கென்று பொழப்பிற்குள் வாழ்வைத் தேடி மூழ்கியவர்கள்தான் இன்று புது அவதாரம் எடுக்கிறார்கள்.
இனிமேல் இந்த வீதியில் இடுப்பு தரிசனம் கிடைக்காத இளசுகள் அதிகாரப் பயத்திற்கு அஞ்ச வேண்டியதில்லை.
சாளரத்தில் எட்டிப் பிடித்து ஏங்கிப்பார்க்கும் கண்களில் சொற்பக் கவலைகள் வானத்துப் பறவைகளோடு வட்டமடித்தது.
யாருக்குத் தெரியும் அதன் கனவுகள் சிதைந்து நூலைப் போல சேலையென அந்த வீதியில் ஆசை ஈக்கள் அசௌகரியம் கொள்ள வைக்காதுபோகுமெனும் உத்திரவாதம் இல்லை இந்த சத்தியவான்கள் நிறைந்த உலகில்.
***
கொடுங்கூற்றெனும் அனிச்சைகள்.
காந்தியின் நல்லிரவுக் கனவு இருக்கட்டும்.
நண்பகலில் எங்காவது
கற்புகள்
காவு வாங்கப்படுவது
நின்றபாடில்லை
நூற்றாண்டை நெருங்கிடும்போதும்.
ஏஐ குடிக்கும் இரத்தத்தில்
எலும்புக்கூடாகிறார்கள்
இளைஞர்கள்
அறிவுகள் மிகைத்தும்.
நாய்களைப் பற்றிச்
சொன்னால்
எந்தப் பக்கமிருந்து
எந்த நாய்க் குரைக்குமென
அனுமானிக்க முடியவில்லை
இப்பொழுது.
தேர்தல் கூட்டணியில்
கொள்கைகள்
கொட்டிக் கிடக்கிறது
மனமெங்கும்
அலுப்பாக.
வீதியில்
கிடக்கும்
தோழமையின்
ஸ்டேட்டஷிற்கு
லைக்குகள்
நிறைகிறது
வீட்டிற்கு
மாற முடியாத
தெருவோரத்
துயரமாக.
சிறு நகரங்களிலும்
சிருங்காரிக்கிறது
அடுக்கடுக்காக
மாடிகள்
அதைக் கட்டிய
அன்றாடங்காய்சிகளின்
அவல நிலைகள்
மாறாமல்.
நரைக் கூடிக்
கிழப்பருவமெய்துகிறது
பாரதி
நெஞ்சு பொறுக்காத
வேதனையில்.
நல்ல வேலைத்
தப்பித்தேன்
பாரதி
உன்னைப்போல்
நோவாமல்.
ஆம்…
மீசை
துடிக்குமென
நான்
வைக்கவே இல்லை.
***
பிகு:
பாரதியின் நினைவு நாளில் எழுதியது
********
தாகித்தலையும் நிராசைகள்.
தீரப் போகும்
நம்பிக்கை
மிடறுகளில்
தவிக்கிறது
எதிர்பார்ப்புகள்.
கிடைக்கும்
ஆற்றுப்படுதல்கள்
நோய் தொற்று
அச்சத்தில்
துணுக்குற
வைக்கிறது
திருப்திகளற்று.
ஏந்திய கைகளில்
ஜீவனற்ற வலி
ஆகாரமாய்
ஆதி நீருக்கு
தேடி அலைகிறது
பதன பானங்களைச் சுவைத்து.
காட்டாற்று போக்கை
கட்டுக்குள்
வைக்காத துயரம்
காய்ந்து கிடக்கிறது
வறண்ட மனதில்
வாழ்க்கையைத் தேடி.
நீயின்றி அமையாத கணமும்
நீரின்றி இல்லாத
யாவும்
தகிக்கிறது
மரணச் சொட்டுக்களில்
ஆவியாகி.
***
பிரிவின் பேசாத வலிகள்.
அன்றாடங்களில் போகும்
இடங்களில் எல்லாம்
உன் பிரசன்னத்தை
எதைக் கொண்டும்
தடுக்க இயலவில்லை.
நேற்றையின் நினைவுகளை
மீட்டுவதால்
தடுமாறுகிறது தருணங்கள்
சேதங்களை அணுக்கமாக்கி.
அழைப்பின்
கைபேசி சிணுக்கலில்
பாடும் ராகம்
பொய்யாக ஒலிக்கிறது
உன்
புரியாமையின்
இப்பிரிவில்
கானல் நீரின் சுவை
கண்டதாக மீட்டி.
***
மீளுருவின் அசைப்புகள்.
சட்டெனத் தூங்கப் பண்ண புறத்தின் அனுசரனைகள் தேவையற்ற பொழுதில் எப்பொழுதாவது ஊர்கிறது கம்பளிப் பூச்சி.
அதன் அசௌகரியம் தூக்கத்தை மென்றபடி இருக்கிறது.
துப்பி விட மன்றாடிய அலுப்பில் தொண்டைக்குள் சிக்கியத் துவர்ப்பு துயரைக் கூட்டுகிறது.
வஞ்சிக்கப்பட்ட ரணமகற்றி வாழ்வைச் சீராக்க எத்தனை தூரமென்பதை அறிய முடியவில்லை.
காற்றுடன் கலந்து வரும் நினைவூட்டி கவனத்தை திருப்பி அவ்வப்பொழுது நிலை தடுமாறவிட்டு படபடக்கவிடுகிறது.
நிதானித்த இனிப்பில் வாழ்க்கையொன்றும் கசப்பில்லைதான் பொங்கி வழியும் மன்னிப்பில் பூரித்துப்பழகியதால்.
***
மேப்பரைத் தேடும் சமவெளி.
ஒரு நல்ல புரிதலுக்குள் உருளும்
விழிப்பை விழுங்கிவிடுகிறது
அறியாமை
பாரிய சரடில் சிக்குமாறு.
தேவையின் பொருட்டான அசௌகரித்தில்
உயிர்த்துக்கிடக்கும்
கற்பிதங்களுக்கு
வேத முலாம் பூசப்படுவதை வேடிக்கை தான் பார்க்க முடிகிறது
தன் நலம் மிகைப்பதால்.
ஆட்டு மந்தைக்குள்
அகப்படாது தப்பிய ஆடு
மேய்ப்பரைத் தேடுகிறது
வானம் வசப்பட
ஈனக் குரலில் கத்தி.
***

