தலைமுறைப் பாய்ச்சல்

வெண்முரசு கதிரவன். அந்தக் கால அரசியல்வாதி.

“கறந்த பால் மடிபுகாது” – “வான்கோழி மயிலாகாது” என்றெல்லாம் பேசப்பட்ட அரசியல் களத்தில் வளர்ந்தவர்.

கரை வேட்டி, துண்டுடன் – முதலில் சைக்கிளிலும், பிறகு ஹேண்டில் பாரில் குஞ்சலம் தொங்கவிடப்பட்ட அதிரும் மோட்டார் பைக்கிலும், அடுத்து – முன்னால் கட்சிக்கொடி படபடக்கும் காரிலும் பயணித்து வளர்ந்தவர்.

பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை. என்றாலும் மேடைகளில் குதறாத தமிழில் பேச வல்லவர். அப்போதைய பாணியில் சில சொல்லாடல்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார். இரண்டு பெரிய கட்சிகளிலும் பொறுப்புகளில் இருந்தவர்.

இன்று, முன்னாள் பிரமுகர். அதிகம் வெளியில் தலைகாட்ட மாட்டார். மாலை நேர மதுஅமர்வில் தனது வயதொத்த நண்பர்களுடன் அந்தக் காலத்தில் தலைவர் சுற்றுப்பயண வேளைகளின் நெருக்கத்தை பெருமிதத்துடன் பகிர்ந்து மகிழ்வது வழக்கம்.

பேரன், புதிய கட்சியில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறான். எடுத்த எடுப்பிலேயே மாவட்டப் பொறுப்பு. கள அரசியலைவிட திறன்பேசி வழி அரசியல்தான் தூக்கலாக இருக்கிறது. கேட்டால் “உனக்கு, அரசியல் புரியாது தாத்தா” என்கிறான்.

தேர்தல் நாளை ஒட்டி, நண்பர்கள் புடைசூழ வீட்டுக்குள் நுழைந்தான். வந்தவர்கள், “ஹாய் அங்கிள்…” என்றார்கள். இவருக்கு எப்படி பதில் முகமன் செய்வது என்று தெரியவில்லை. சிரித்து வைத்தார். எல்லோரும் இவருக்குப் பின்னால் சூழ்ந்து நின்றவாறு, கையை ஒருமாதிரியாகக் காண்பிக்க, “ஸெல்ஃபி” எடுத்தார்கள். பேரன் மட்டும் குனிந்து காதில், தாத்தாவை ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் போடுமாறு சொல்லிவிட்டு, “அப்பாகிட்டேயும் சொல்லிட்டேன்… நம்ம வீட்ல எல்லோரும் அதான்….” என்றவாறு வேகமாக வெளியேறினான்.

அப்படியே போட்டார்கள். இவரும்தான்.

வெண்முரசு உள்ளிட்ட தொண்டர்களை அரசியல்படுத்த அன்றைய தலைவர்கள் தவறிவிட்டார்களோ….

காலம் எழுப்பிய கேள்வி உரிய பதிலின்றி சுருண்டு கிடக்கிறது.

*****

மயக்கம்

பாட்டியை மருத்துவமனையில் சேர்த்தாகிவிட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே – உற்றார் கைபேசியில் எதையோ பரபரப்புடன் தேடுவது போன்ற பாவனையுடன் சூழ்ந்திருந்தார்கள்.

“இந்த பாட்டிகூட வந்தது யாரு….” கேட்டுக்கொண்டே வேகமாக வார்டுக்குள் நுழைந்தார் அந்த ஷிப்டுக்கு பொறுப்பு டாக்டர்.

ஒருவரை ஒருவர் பார்த்து சைகை காட்ட, கடைசியில் யார் அழைத்து வந்தாரோ அவரே உள்ளே சென்றார்.

அமரச் சொல்லிவிட்டு, பாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டது எப்படி, விழுந்தது எப்போது, முன்வியாதி, பயன்படுத்தும் மாத்திரைகள் உள்பட பல விவரங்களை நேர்காணலுக்கு வந்த மாணவனிடம் கேட்பது போல கேட்டறிந்தார் டாக்டர்.

“இப்ப என்ன கொடுக்கணுமோ… அந்த மெடிசின் கொடுத்திருக்கு… சில டெஸ்டெல்லாம் எடுக்கணும்… அதைப் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்” என்றாவாறு எழுந்து கொண்டார்.

அடுத்த ஷிப்ட் டாக்டர் வந்தார். இதே விவரங்களை கேட்டறிந்தார். மகன் மீண்டும் சொன்னான்.

“மயக்கம் வந்து விழுந்தாங்களா…. விழுந்த பிறகு மயக்கம் வந்ததா…?” டாக்டர் கேட்டார். மகன் யோசித்தான்.

“இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு… நீங்க சொல்றத வச்சுதான் நாங்க ட்ரீட்மென்ட் தரமுடியும்…” மூக்கின் முனையில் காய்ந்திருந்த அழுக்கை கையால் உதிர்த்துப் போட்டவாறே கேட்டார்.

மகனுக்குள் படபடப்பு ஏறியது. நடந்ததைச் சொன்னான்.

“டெஸ்ட் ரிசல்ட்டை பார்த்துட்டு சொல்றோம்…” டாக்டர் தலையை ஆட்ட மகன் வெளியே வந்தான். சற்றே வியர்த்திருந்தது.

இரண்டு மணி நேரம் கடந்தது. இரவு சுற்று பெரிய டாக்டர் வந்தார். ஷிப்ட் டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டுகளை முன்னும் பின்னும் திருப்பி, திருப்பி தீவிரமாக பார்ப்பது போல பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்தார்.

எதிரே எதுவும் பிடிபடாமல் கலங்கிய மனத்துடன் நின்றிருந்த மகனிடம் கேட்டார்.

“பாட்டிக்கு அடிக்கடி மயக்கம் வருமா… இதுக்கு முன்னாடி எப்போ வந்துச்சு… இன்னிக்கு மயக்கம் வரும் முன்னாலே சாப்பிட்டிருந்தாங்களா… மயக்கம் வந்து விழும்போது தலையில் அடிபட்டதா சொல்றீங்க… ஷார்ப்பான எது மேலேயும் தலை இடிச்சுதா… அல்லது தரையிலே விழுந்ததுல இரத்தம் வந்ததா…” டாக்டர் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.

மகனுக்குள் மீண்டும் படபடப்பு எகிறியது. மயக்கம் வருவது போலிருந்தது. டாக்டரை ஒருமாதிரியாக பார்த்தான். பக்கத்திலிருந்த இளைய மகன், அண்ணனின் தோளைப் பிடித்தவாறு, “அவரு 9 மணி மாத்திரை போடணும், டாக்டர்” என்றான்.

சற்றே முகம் சுருக்கிய டாக்டர், “உங்க ஃபேமிலியின் மெடிக்கல் ஹிஸ்டரி எனக்கு தெரியணும். அப்பத்தான் புரொசீட் பண்ண முடியும்…” என்றவாறு அடுத்த படுக்கை நோக்கி நகர்ந்தார்.

தம்பியின் கைத்தாங்கலில், தலைசுற்ற வெளியே வந்த அண்ணனிடம், “சார், இன்ஸூரன்ஸா, கேஷா…. இன்ஷூரன்ஸ்னா உடனே டீடெய்ல்ஸ் வேணும். அது கிளியர் ஆகி வந்தாதான் எல்லாம் நடக்கும்….” என்றார்.

பெரிய மகன், இளைய மகனை கைகாட்ட, நான் வந்து சொல்றேன் என்பதாக மருத்துவமனை ஊழியனிடம் அவன் சைகையில் சொன்னான்.

ஆக்ஸிஜன் மாஸ்க் வழியாக பாட்டி சுவாசித்துக் கொண்டிருந்தாள். எப்போது வரும் என்று சொல்ல முடியாத, கண்ணுக்கு தெரியாத பில் ஏறிக்கொண்டிருந்தது.

*****

ஜென் ஸி Blast

மோகனரங்கன் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பல்லாண்டுகளாகிவிட்டது.

வழக்கத்தைவிட இன்று “வாக்கிங்” வேகமாகச் சென்றார். ஏழரைக்குள் திரும்ப வேண்டும். அதற்குப் பிறகு பேரனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு காத்திருக்கிறது.

பின்னால் ஏதோ “சதக்” என்ற சப்தம் கேட்டது. தன்னுணர்வில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார்.

ஒரே பைக்கில் மூன்று வளரிளம் பருவத்தினர். ஜென் ஸி என்று சொன்னால் “டக்”குன்னு புரியும். அது ஈ.வி. வாகனம். டூ வீலருக்கு உரிய சப்தம் இல்லை. அவர்கள் ஹார்னும் அடிக்கவில்லை.

மோகனரங்கத்தின் இரண்டு கால்களுக்கிடையில் முன் சக்கரம் நுழையும் தருவாயில், அதாவது அவரது மர்ம உறுப்புக்கு நேர் கீழ் – பிரேக் போட்டிருக்கிறார்கள். ஈரமண்ணில் சக்கரம் சுழன்று வண்டி நின்றிருக்கிறது.

சற்றும் குற்ற உணர்வின்றி, ஏதோ படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்தது போல, வெடிச் சிரிப்புடன் – மூவரும் வண்டியில் உட்கார்ந்தவாறே பின்வாங்கி சீறிப் பாய்ந்தார்கள்.

இப்பொதெல்லாம் மோகனரங்கன் இப்படியான ஆபத்துகளில் அடிக்கடி சிக்கி மீள்கிறார்.

சைக்கிளில் டபுள்ஸ் போனதை அந்தக் கால காவலர்கள் வழிமறித்துப் பிடித்ததைப் பார்த்திருக்கிறார், மோகனரங்கன். இப்போது டூவீலரில் மூன்று பேர் பயணம் செய்யலாம் என்ற விதி வந்திருக்கிறது போலும். தனக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.

அடுத்த நொடியில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே நடக்க வேண்டியிருக்கிறது.

மிச்ச காலம் பற்றிய கவலையுடன், யோசித்துக்கொண்ட நடந்தார்.

கிட்டத்தட்ட சாலையின் நடுவில் நான்கைந்து பைக்குகளை விட்டுவிட்டு சப்தமாக பேசிக் கொண்டிருந்த ஜென் ஸி “புரோ”க்களில் ஒருவன், திடீரென்று தனது வண்டியில் ஏறி, ஓரமாகச் செல்லும் மோகனரங்கத்தின் நடைவழிப் பாதையை மறித்து, வளைந்து திரும்பிச் சென்றான். சற்றும் இதை எதிர்பாரக்காத அவர், தற்காத்துக்கொள்ள, சார்லி சாப்ளின் போல கண்ணிமைக்கும் வேகத்தில் உடலைப் பின்சாய்த்து, மீண்டும் நிலைகொண்டார்.

பக்கவாட்டில் படுத்திருந்த ஒரு நாய் எழுந்து இரண்டடி முன்வந்து, மோகனரங்கன் அருகே குலைத்தது. அது பைக்கில் சீறிப் பாய்ந்தவனுக்கான குலைப்பு என்று புரிந்துகொண்டார். இப்படி, வாயில்லா ஜீவன்களின் உணர்வுகளைக்கூட உண்மைக்கு நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் முயற்சியுடன், நடக்கிறார் மோகனரங்கன்.

ஆனால், சாலையில் நடக்கும் சக மனிதர்களை ஜென் ஸி தலைமுறை உயிரினமாகவேனும் கருதுகிறதா?

தெரியவில்லை.

***

1

வேறு ஏதோ வெறுப்பில்

கண்ணில் பட்ட

பாதி மடித்தவாறு கிடந்த

தாளைக் கசக்கி

குப்பைத் தொட்டியில் எறிந்தான்

எறிந்த போது

கையில் ஏதோ தட்டுப்பட்டது

போல உணர்வு

குப்பையைக் கிளறி

அந்த தாளை எடுத்தான்

படபடப்புடன் பிரித்துப் பார்த்தான்

துருப்பிடித்த பழைய ஸ்குரூ

இப்படித்தான்

பயனில்லாத பொருட்களுக்கிடையே

பரபரப்புடன்

வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

சில வேளைகளில்

அந்த ஸ்குரூவே

நாமாக இருக்கலாம்

எறிவது

நமக்கு நெருக்கமான

கரங்களாகக்கூட இருக்கலாம்

துருப் பிடிக்காமல்

வாழப் பழகுங்கள்

இருந்தாலும்கூட

மடித்துவிடக்கூடும்.

2

,

நிலாவில்

கல்லா மண்ணா

விளையாடியவன்

பூமியில்

கூராங்கல் குத்தி

காலில் காயம் பட்டு

நடக்க முடியாமல்

கிடக்கிறான்…

இப்படிச் சொன்னால்

யாருக்கேனும் புரியுமா?

புரிந்தாலும் நம்புவார்களா?

ஆனால்

இப்படித்தான்

வரலாற்றை

முற்றிலும் திரித்து அல்லது

முறுக்கித் திரித்து

பலவாறாகச் சொல்கிறார்கள்

பலவேளைகளில்….

பிறகு

அதுவே நமது

அதிகாரப்பூர்வ வரலாறாக

சீரமைக்கப்படுகிறது.

3

,

கூட்டம் அதிகம்

வரிசை

மெதுவாக நகர்ந்தது

கடைசியில் நின்ற மனிதர்

டிக்கெட் கவுண்ட்டரை

நெருங்கினார்

முதல் காட்சி பாரத்துவிட்டு

வெளியேறியவர்கள்

யூடியூப் கேமிராக்களுக்கு

முகம் காட்டி

உதட்டைப் பிதுக்கியதை

காத்திருந்த நேரத்தில்

பார்த்துவிட்டார்

கவுண்ட்டருக்குள்ளிருந்து

நெக்ஸ்ட் என்று குரல் வந்தது

டிக்கெட்டை

வாங்க வேண்டிய மனிதர்

வாங்காமலேயே திரும்பி நடந்தார்.

இவ்வாறு

பலர் மீண்டதாக

தகவலறிந்த வட்டாரங்கள்

செய்தி.

4

,

ஆவியில் வேகவைத்த உணவு

உடலுக்கு ஒன்றும் செய்யாது

என்கிறார்கள்

ஆவியே வேகவைத்தது என்றால்….

உடலே இல்லாது போகலாம்

ஆவிகள் சூழ்ந்த உலகம்

சூதானமாக

சாப்பிடுங்கள்.

5

,

மருத்துவமனையில்

பணியாற்றுபவர்கள்

மகிழ்ச்சியாக இருக்கக்கூடாதா?

தாராளமாக இருக்கலாம்

கண்கள் மட்டும் தெரிய

இதர பாகங்கள்

மருத்துவ உபகரணIங்களால்

பின்னப்பட்டு

உயிருக்குப் போராடும்

மனிதனுக்கு அருகே

வார இறுதி காதல் திட்டத்தை

மெல்லப் பேசுங்கள்.

காதுக்கும் தோளுக்கும் இடையில்

கைபேசியை செருகியவாறு

குலுங்கச் சிரித்தபடி

ஊசியில் மருந்தேற்றி

முனையின் கூர் நோக்காதீர்கள்

அது போதும்

நோயாளி

விடை பெறுவதற்கு.

6

வாய்க்கு

நமநமவென இருக்கிறது

என்கிறார்

கடித்துப் பழக்கப்பட்டது

கேட்கத்தானே செய்யும்.

7

,

அவரே

கேள்வியை எழுப்பி

அவரே

பதிலளிக்கிறார்

அவருக்குள்

எண்ணற்ற கேள்விகள்

எழுத எழுத

கேள்விகள்

மறையும் என்பார்கள்

இவருக்குள் குவிகிறது

மலை

மலை போல.

*****

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *