1. கண்ணார் அமுதம்:

,

கன்னம், புஜம் என

ஒவ்வொரு சதைகளிலும்

ஸ்தனம் தேடி

தவிக்கிறது குழந்தை

,

முலைக்கண்ணில் குழந்தை

உதடு குவிப்பதே முத்தம்

,

அதற்கு நிகராகாது

எனக்கு நீயோ

உனக்கு நானோ

இட்டுக்கொள்ளும் முத்தங்கள்

,

கோபுரக் கலசமோ

கோமுகமோ

படைப்பின் பூரணம்

ஸ்தனங்கள்

,

எந்தப் பாற்கடலை

பாப்பா கடைந்தாள்?

பாலூட்டி முடித்ததும்

அவள் உதடுகளில்

ஒட்டியிருக்கும் மிச்சத்தை

தயிர் என்று தாய் துடைக்க.

,

2. மஞ்சு:

,

நான் என்ன நிறம் என்று

என்னிடம் நீ கேட்டால்

வெள்ளை என்று சொல்ல

மனது ஒப்பவில்லை

எப்போது கேட்டாலும்

மஞ்சள் என்கிறேன்

,

என் தேவி மேனி மஞ்சள்

நான் தேடி ஆடும் ஊஞ்சல்

என்கிறார் கண்ணதாசன்

,

மற்ற மஞ்சள் எல்லாம்

பிடிக்கும் என்பதால்

கஸ்தூரி மஞ்சள் பூசுகிறாய்

,

மஞ்சள் பிடிக்காமல் போகலாம்

மருதாணி சிவக்காமல் போகாது

,

மஞ்சளும் இஞ்சிக்குடும்பம்

இஞ்சிய இடையிலும்

கொஞ்சுகிறது மஞ்சள்

,

மஞ்சள் வெயில்

மஞ்சு மழை என்பது

பல வண்ண மஞ்ஞை.

,

3. மதர்:

,

சிறைபனி உடைந்த

சேயரி மழைக்கண்

ஆய்மலர் மழைக்கண்

தெண்பனி உறைப்பவும்

என்றேன்

,

மழைக்கு

கண்கள் இருக்கிறதா

என்கிறாய்?

,

இல்லை

கண்களால்

கண்ணீர் மழை

செய்ய முடியும்

என்றேன்

,

மதர்க்கும் உன் இமைகள்

மழைக்கண்களின் மேகங்கள்.

,

4. மொழித்தேன்:

,

தீபச்சுடர் அசையும்

மாடக்குழி

உன் தொண்டைக்குழி

,

உன் குரல்வளை

அசைவது போல்

சுடர் அசையும்

ஒளி போல்

பேச்சு இசையும்

,

குரல்வளை

ஆதாமின் ஆப்பிள்

அங்கு தரும் முத்தம்

விலக்கப்பட்டது அல்ல

துலக்கப்பட்ட உன் குரலுக்கு

பரிசாக அளிக்கப்பட்டது

,

மிடறு மிடறாய் பருகலாம்

ஆனால் நீயோ

மிடறு மிடறாய்

சுடரும் சுடராய் பேசுகிறாய்.

,

5. மிழலை:

,

குழந்தை மொழி என்று

ஒன்று உண்டு

அதையெல்லாம்

குழந்தையை அவள் வைத்திருக்கும்போது மட்டுமே

அறிய முடியும்

,

மற்ற நேரங்களில்

அது வெறும் நாய்

குழந்தையோடு

இருக்கும்போது மட்டும்

தோ தோ குட்டி

,

உவா என்றால் நிலா

புவா என்றால் சாப்பாடு

உவாவும் புவாவும்

நிலாச்சோறு

,

உம்மா என்றால்

முத்தம் மட்டும் அல்ல

உணவையும் முத்தத்தையும்

ஊட்டும் அம்மாவும் உம்மாதான்.

,

6. ஆழி சூழ் உலகு:

,

கடலை முகந்து

விளையாடும் வானம்

,

மேகம் என்பது

முகவை அல்ல

முகந்த பின்பு

பொங்கும் உவகை

,

மழையைப் பிடித்து

விளையாடும் கடல்

,

அலை என்பது

ஆரவாரம் அல்ல

கால காலமாய் பிடித்தும்

நிறையாத ஏக்கம்.

00

மு.ஆறுமுகவிக்னேஷ், Pharm D., (Doctor of pharmacy).

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி சொந்த ஊர். மருந்தியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். காற்றுவெளி, நுட்பம், வாசகசாலை, திறவுகோல், கொலுசு, ஆனந்த விகடன், ஆவநாழி, போன்ற இணைய மற்றும் அச்சு இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. தற்போது சொந்த ஊரில் மருத்துவ துணி (surgical dressings and bandage) உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் இலக்கிய ஆர்வம் மிகுதியாக உண்டு. தொடர்ந்து தமிழ் இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *