வாசிப்பு என்பது அடிப்படையில் திட்டமிடல்தான். எதை வாசிக்கின்றோம். எதற்காக வாசிக்கின்றோம். ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு திட்டமிடலும் முன் ஏற்பாடுகளும் முக்கியம். என் வாசிக்கத் தொடங்கிய வயதில் இருந்து கிடைத்ததையெல்லாம் வாசித்தேன். அதன் பின் பிடித்த எழுத்தாளர்களைத் தேடி வாசித்தேன். பிடித்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். பின் எனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அந்த வகைமையைச் சார்ந்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
வாசிப்பின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கிறது என்றால் கிடைக்கிற எல்லாவற்றையும் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. அதே சமயத்தில் முக்கியமான ஆக்கங்களை வாசித்துவிட வேண்டும் என்கிற ஆவலாகவும் இருக்கிறது. அப்படி புத்தகங்களைட் தேர்வு செய்வதற்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கூடுதலாய் மெனக்கெடவேண்டியுள்ளது.
அப்படியொரு மெனக்கெடலில் ஒன்றுதான் மாதம் ஒரு நாவலை வாசிக்க வேண்டும் என்கிற திட்டமிடல். பக்கங்கள் பற்றிய பயம் இல்லாமல்; ஒவ்வொரு மாதமும் ஒரு நாவல் என வாசித்து வருகின்றேன். ஆனால் 100 பக்கங்களில் இருந்து 500 பக்கங்களில் உள்ள நாவல்களையே இப்போதுவரையில் வாசித்திருக்கின்றேன்.
அந்த வகையில் இவ்வருடம் நான் வாசித்த பத்தாவது நாவல் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் சமீபத்திய நாவல்.
தலேஜு; இது அவரது இரண்டாவது நாவலும் கூட. இவரது முதல் நாவல் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ இவரது 21வது வயதில் வெளிவந்தது. இந்த நாவலுக்கு தஞ்சை பல்கலைக்கழகத்தின் ‘கரிகாற்சோழன்’ என்கிற உயரிய விருது கிடைத்தது. இவ்விருதை பெற்ற முதல் மலேசிய இளம் எழுத்தாளர் இவர்தான்.
இதுவரை இருவதற்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கின்றார். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மலேசிய சிறுவர் இலக்கியத்திற்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. மலேசிய இலக்கிய உலகில் சிறுவர் இலக்கியத்திற்கு இவரது எழுத்துகளும் இவரது முன்னெடுப்புகளும் கூடுதல் பிரகாசத்தைக் கொடுத்திருக்கிறது.
தலேஜு நாவலை வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள். இந்நாவல் 333 பக்கங்கள் கொண்டது. இந்த நாவலுக்கு ‘சிறந்த நாவல் 2026’ என்ற இலக்கிய விருது கிடைத்தது. 11-ம் ஆண்டு படைப்பு சங்கமம் விருது விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
தேர்ந்த சிறுகதை ஆசிரியரான கே.பாலமுருகனின் இந்த நாவலில் பல அத்தியாயங்களும் காட்சிகளும் சிறுகதைக்கான வடிவத்தோடே வந்திருக்கிறது. அதிலும் எளிய மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் மொழியையும் இயல்பாக சொல்லியிருக்கின்றார்.

தனது காதலியைத் தேடி நாயகன் சாரா என்னும் சரவணன் புறப்படுகின்றான். அவன் அந்தக் காதலியைச் சந்தித்தானா? அவள் வாழ்வில் வந்த பெண்கள் அவனுக்கான பயணத்திற்கு எப்படியாக ஒரு காரணியாக அமைந்தார்கள் என்பதுதான் இந்த தலேஜு நாவல்.
நாயகன் சரவணனின் வாழ்வில் அவன் மனதிற்கு நெருக்கமாக இருந்த பெண்களான அவனது அம்மா, கலையரசி, காமினி, கமாரியா போன்ற நான்கு பெண்களும் நாவல் முழுக்கவும் நாயகனின் நினைவுகளிலே அதிகம் வருகிறார்கள். இவர்கள் நாயகன் கண் முன் வரும் போதெல்லாம் வாசகர்களுக்கு பயத்தையும் நடுக்கத்தையுமே கொடுத்து செல்கிறார்கள்.
கோவிட் பெருந்தொற்றால் இறந்த பின்னும் மகனை எப்படியாவது ஆறுதல் படுத்தும் அம்மா, அவனை எப்படியாவது சாகடித்து தன்னுடன் அழைத்துக்கொள்ள நினைக்கும் காமினி, எங்கே இருக்கிறாள் என தெரியாமலேயே தன் கண்களுக்கு தெரியும் கமாரியா போன்றவர்களுக்கு மத்தியில் இருக்கிறாளா இல்லையா என தெரியாத: பெயரைத் தவிர மற்ற விபரங்கள் எதுவும் பிடிபடாத கலையரசியை தேடி போகும் சரவணனின் மனக்குழப்பமும் அதை அவன் எதிர்க் கொள்ளும் விதமும் இந்நாவலை வாசிக்கின்ற நமக்குமே அவன் தான் தேடியதை அடைய வேண்டும் என்கிற ஆசை வந்துவிடுகிறது.
எழுத்தாளரின் முதல் நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலின் கதைகளின் ஊடே சில மானுஷ்ய சம்பவங்களை இணைத்திருப்பார். பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயத்தில் முடிவிலும் அங்கு அடுத்த என்ன நடக்கும் என வாசகர்களை அவசரப்படுத்தியது. ஆனால் அதுவெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல நாவல் அடுத்தடுத்த காட்சிகளுக்கு சென்றிருக்கும். மீண்டும் ஒரு முறை அதனை வாசிக்கும் போது அந்த சூழலில் அப்படியாக தெரிந்திருக்க கூடும் என்பது புரிந்தது. அதோடு அந்த நாவல் தோட்ட வாழ்க்கை பின்னணியைக் கொண்டிருந்ததால் அந்தக் கதைக் களத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அதனை பயன்படுத்தியிருப்பார் ஆசிரியர். அதே சமயம் இந்தக் கதைகளில் அப்படி அதிகமான அமானுஷ்ய சம்பவங்களையும் பயம் காட்டும் காட்சியமைப்புகளையுமே ஆசிரியர் பயன்படுத்தியிருப்பார். தொடக்கத்தில் வாசிக்க ஒருவித அச்சத்தை கொடுத்தாலும் திரும்பத்திரும்ப அதுவே வருவது நமக்கு சலிப்பை கொடுக்கின்றது. “வாம்மா காமினி இப்போ என்ன பண்ண போறா தலையைத் திருப்ப போறியா இல்ல தலைகீழ நிக்க போறியா..?” என கேட்கும் அளவிற்கு ஆகிவிடுகிறது.
நாயகனின் மனப்பிறழ்வைச் சொல்வதற்குதான் அந்தக் காட்சியமைப்புகள் வந்திருக்கிறது என்றாலும் அதன் தீவிரத்தை இன்னும் அதிகமாக கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் வலிமை சேர்க்கும் வகையிலும் ஆசிரியர் சொல்லியிருக்கலாம்.
இந்தக் கதைக்குள் தலேஜு என்னும் நேபால் தெய்வம் எப்படி வந்தது? அதிலும் தலைப்பிலேயே அப்படியான பெயரை வைக்கும் அளவிற்கு அந்த தலேஜு தேவி இந்த நாவலில் முக்கியமா என்றால்; இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்த தேவியின் பெயரை தலைப்பில் இருந்து மட்டுமல்ல நாவலில் இருந்து தனியே எடுத்தாலும் நாவலின் மையத்திற்கு சிக்கல் இல்லையோ என்று தோன்றும் அளவிற்கு ரொம்பவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறாள்.
விக்கிப்பீடியாவில் சொல்லியிருக்கும் தலேஜுவின் கதையையே திரும்பவும் நாவலில் கமாரியா சொல்வதைத் தவிர பெரிய முக்கியத்துவம் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. அதோடு தலேஜுவால் நாவலில் வருவதாய்த் தோன்றும் கமாரியா இன்னும் ஆழமாக அவளின் கடந்த காலத்தை சொல்வதன் மூலம் நாயகனின் வாழ்விலும் மாற்றங்கள் நடக்கவோ அவன் அவனது வாழ்வை புரிந்து கொள்ளவோ செய்திருக்கலாம். நாயகன் கமாரியாவை ஏன் சந்திக்கின்றான். கமாரியா மூலம் தலேஜு தேவி பற்றி ஏன் அறிந்து கொள்கிறான். அந்த அறிதல் அவனது வாழ்வில் கொன்டு வரும் செய்தி என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புகள் வரக்கூடிய இடம் நாவலில் இருந்தாலும் வாசித்து முடிக்கையில் கொஞ்சம் ஏமாற்றம்தான் எஞ்சியது. ஆனால் நாவலில் முடிவும் தலேஜு தேவியின் புராணத்தில் சொல்லப்படும் முடிவும் நாவலின் முடிவும் ஏறக்குறைய ஒரே சாயலில் சொல்ல முயற்சி செய்திருக்கின்றார் ஆசிரியர். ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கான எந்த முன்னேற்பாடும் நாவலில் இல்லை.
இந்த நாவல் வெளிவருவதற்கு முன்பாக எழுத்தாளர் அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ என்னும் நாவலும் எழுத்தாளர் ம.நவீனின் ‘தாரா’ என்னும் நாவலும் வெளி வந்திருந்தது. இரண்டு நாவலிலுமே வெளிநாட்டு தொழிலாளர்கள், வேறு மண்ணில் இருந்து இங்கு வந்து சேரும் தொன்ம தேவதைகளும் தெய்வங்களும் அமானுஷ்ய தன்மைகளும் இருந்தன. அதிலும் குறிப்பாக ‘தாரா’ நாவல் நேபாளத்தில் இருக்கும் தாரா தேவியையே மையமிட்டிருந்தது. அதில் தாரா தேவி பற்றி காட்சிகள் ஒவ்வொன்றும் நாம் வணங்கும் தெய்வமே இறங்கி வருவது போல அமைந்திருக்கும். தாரா தேவியைப் பார்த்து “நீ இருக்கியா இல்லையா.. வந்து காப்பாத்த மாட்டியா?” என் வாசகர்கள் கேட்கும் அளவிற்கு இருந்தது. இரு நாவல்களையும் வாசித்துவிட்டேன்.
அதற்கிடையில் இந்தத் ‘தலேஜு’ நாவலில் விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த இரு நாவல்கள் போல அசல் தன்மையில் இந்த நாவலும் இருக்கக்கூடும் என்கிற ஆவல் எனக்கு அதிகமே இருந்தது. ஆனால் இந்த நாவல் அப்படியான அனுபவத்தை எனக்கு கொடுக்கவில்லை. அதோடு அந்த இரு நாவல்களின் பாதிப்புமே இந்த நாவலில் இருப்பதாக தோன்றியது. நீங்கள் மாறுபடக்கூடும்.
குடும்பச் சூழலாக இருக்கட்டும், பள்ளிக்கூட வாழ்க்கையாக இருக்கட்டும், தனிமை தரும் பயமாக இருக்கட்டும், அந்தக் கால வீடியே கேசட் கடையும் அது நடத்தப்பட்ட விதமும் என பல அத்தியாயங்கள் சிறுகதைகள் போல நம் மனதில் தனித்தனியே தேங்கி நின்றுவிடுகிறது.
கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தையும் ஒரு பகுதியாக இந்த நாவலில் வாசிக்க முடிகிறது. அந்த இக்கட்டான சூழலையும் அது கொடுக்கும் மன உளைச்சல், திடீர் மரணங்கள் என மீண்டும் அந்த காலக்கட்டத்தை நம் கண்முன் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.
ஆனால் அவற்றை அவர் சொன்ன விதத்தில் தீவிரத்தன்மை இல்லை. கோவிட் எனும் பெருந்தொற்று நம்மை வீட்டில் அடக்கி மட்டுமா உட்கார வைத்தது. நமது சுதந்திரம் , நமது வேலை, நமது உணவு, நமது உறவு என நாலா பக்கமும் அது கொடுத்த சிக்கலையும் ஏற்படுத்திய இழப்புகளையும் இன்னும் கூட ஆழமாக நாவலில் ஆசிரியர் பதிவு செய்திருக்கலாம்.
இந்த நாவலை நாளை வாசிக்கும் வாசகனுக்கு, கோவிட் காலக்கட்டத்து சிக்கலில் வாழ்ந்தவர்களின் நிகரனுபம் கிடைக்காது. இதுதான் கோவிட்டா! இதற்காகவா இப்படி அலட்டிக் கொண்டார்கள்? என்றுதான் அவர்களுக்கு கேட்க தோன்றும். அதிலும் இயல்பாகவே தனியாய் இருக்கும் நாயகன் ஊரடங்கு சட்டத்தில் வீட்டிலேயே தனித்திருப்பது எப்படி மனஉளைச்சலாக மாறியிருக்கும். ஒருவேளை எல்லோரிடமும் சகஜாமாக பழகி தனிமையை விரும்பாத ஒருவனுக்கு வேண்டுமென்றால் தனிமை கொடுமையாக அமைந்திருக்கும். அது இந்தக் கதாப்பாத்திரத்தையே சரியாக வடிவமைக்காத சிக்கலைக் காட்டுகிறது.

அதே சமயம் அன்றைய சூழலில் தன் தாயைக் கூட பார்க்க முடியாமல் அடுத்து என்ன நடக்கும் என யோசிக்கவே முடியாத சூழலில் தனிமையில் சிக்கியவனின் மனநிலையையும் அதன் பிறழ்வையும் ஆசிரியர் ஓரளவிற்கேனும் நம்பும்படியாக சொல்லியிருக்கிறார். முன்னமே கோவிட் ஊரடங்கில் நாம் சிக்கியிருக்கின்றோம் என்பது நமது புரிதலுக்கு ஒரு காரணம்தான். ஆனால் இலக்கியத்திற்கு தேவையான நிகரனுபவம் இதில் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான். எல்லோருக்கும் தெரிந்த ஒன்றையே எழுத்தாளனும் தனது பல பக்கங்களில் சொல்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது. அதையே திரும்ப எழுதுவதற்கு எதற்கு புனைவை கையில் எடுக்க வேண்டும். பத்திரிகை செய்தி போதாதா?
நாவலின் முடிவில்; தலேஜு என்னும் தாய் தெய்வம் நாயகனை ஆசிர்வதித்ததா இல்லையா என்பதை வாசகர்களுக்கு விட்டுவிட்டு ஆசிரியர் தப்பித்துக் கொண்டார் என்றுதான் தோன்றுகிறது.
நாம் ஒரு தெய்வத்தைப் பற்றி கேள்விபட்டு பெரும் சிரமத்தில் மலை மேல் ஏறுகின்றேன். அந்த சிரமத்திற்கும் ஆபத்திற்கும் பிறகு மலையில் உச்சியை நாம் அடைகின்றேன். அங்கு ஒரு சிறு கல் இருந்து அதுதான் அந்த தெய்வம்!, என சொன்னாலும் நம்மால் வணங்க முடியும். ஆனால் அங்கு ஒன்றும் இல்லாமல்; இதோ இந்த இயற்கைதான் கடவுள் நீங்கள் வணங்க வேண்டும் என சொன்னால் நமக்கு கோவம் வராதா?
கொஞ்சம் யோசிப்போம். அவர்கள் சொல்வது சரிதான். அந்த மலை உச்சியில் இருப்பது இயற்கை அன்னையாகத்தான் இருக்கிறது. அது நமக்கு அவ்வாறு தெரியாமல் போவதற்கு எது அல்லது யார் காரணம். நமக்கு யார் அதனை புரிய வைக்க வேண்டும். அவர்கள்தானே. மலைமேல் ஏறும்போது அந்தப் பயணத்தில் நாம் பார்க்காத, பார்த்தும் நாம் புரிந்து கொள்ளாத இயற்கை அன்னையையா மலை உச்சியில் சென்று அந்த வெட்டவெளியில் நம்மால் தரிசிக்க முடியும்.
அந்த வகையில் இந்த நாவலின் முடிவு எனக்கு ஏமாற்றத்தைதான் கொடுத்து என ஒரு வாசகனாக வருத்தத்துடன் சொல்கிறேன்.
தலேஜு தேவியின் கதை போல அந்த புராணத்தில் உள்ளது போல; அரசருடன் தலேசஜு தெய்வம் பகடை விளையாடுகிறாள். அதனை அந்த அரசன் தனது மனைவியை இரகசியமாகப் பார்க்க வைக்கிறார். அதை கவனிக்கும் தலேஜு தேவி தன் இரகசியம் உடைக்கப்படுவதாய்ப் பார்த்து தனக்கு துரோகம் நிகழ்ந்துள்ளாய் நினைத்து அந்த அரசனுக்கு சாபம் கொடுக்கின்றாள். இனி ஒரு போதும் மனித உருவில் உனக்கு நான் தெரியமாட்டேன் என்னும் சாபம் இன்று வரையும் தொடர்வதாய்ச் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்.
ஒருவேளை எழுத்தாளர், நாவலில் வரும் கலையரசி மனித உருவில் இனி வரப்போவதில்லை என சொல்லவருவதாக நினைத்தாலும் அதற்கான சாத்தியத்தையும் அவரே இல்லாமல் ஆக்குகின்றார். குறிப்பாக நாவலில் நாயகன் கலையரசியைத் தேடிப் போகின்றான். அந்த நேரத்தில் காமினி என்ற இன்னொரு பெண் அவனிடம் சொல்வது அவன் காதுகளுக்கு கேட்கிறது.
“சாரா! இதுவரைக்கும் என்னை யாருமே காதலிச்சது இல்லை தெரியுமா?” என்பது காமினி சொன்னது. ஆனால் நாவலில் முடிவில் காமினி சொன்ன வார்த்தை மீண்டும் வருவது நாவலில் கவித்துவமாக வரவேண்டிய முடிவை குழப்பமாக்கி அந்தரத்தில் விட்டுவிட்டது.
ஒருவேளை அது வாசக இடைவெளி அதனை வாசகன் அவன் வாசிப்பில் இருந்து நிரப்பி கொள்ளலாம் என்றாலும் அதற்கான சாத்தியமும் நாவலில் இல்லை. இயல்பாக வரவேண்டிய காட்சிகளும் சம்பவங்களும் வழிந்து பல இடங்களில் இருந்து நாவலில் நம்மை நுழைய விடாமல் தடுக்கிறது. திரும்ப திரும்ப ஒரே பக்கத்திற்கு சிக்குண்டதாய் நாமும் நினைக்க தொடங்கிவிடுவோம்.
நாவல் என்பது ஒரு கட்டிடமாக வைத்து கொண்டால்; அதில் ஒவ்வொரு மாடியும் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ற அதனை தாங்கி பிடிக்க வேண்டிய அடித்தளம் ரொம்பவும் அவசியம். அப்படியாக இந்த நாவல் ரொம்பவும் அவசியமாக இருக்க வேண்டிய அடித்தளத்தைவிடவும் அதிகம் அவசியமற்ற மேலோட்டமான கதாப்பாத்திரங்கள் வரத்தான் செய்கிறன.
அதிலும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரமாக வரவேண்டிய காமினியை அரைகுறையாக ஆசிரியர் எழுதிவிட்டது அவளுக்கு நியாயம் செய்யாமல் விட்டது போல ஆகிவிட்டது.
நாயகனின் முன் அடிக்கடி தொன்றும் காமினி; செத்துவிட்டாள் என முதல் காட்சியிலேயா நமக்கு தெரிகிறது. அதிலும் அவள் நாயகன் சாராவை சாவடிக்கவே விரும்புகிறாள் அவனை இம்சிக்கிறாள். அவளது மரணத்திற்கு நாயகன் தான் ஏதோ ஒரு காரணம் என்கிற எண்ணத்தை நமக்கு கொடுக்கின்றார் ஆசிரியர். ஆனால் காமினியோ நாயகன் செராஸ் நகரில் இருக்கும் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். இப்படி தற்கொலை செய்வதற்காகவா வாசகனை பாடாய்ப் படுத்தினாய் காமினி என அவளைத் திட்டதான் தோன்றியது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். அடிப்படையில் தனது பதின்ம வயது காதலியை நாயகன் தேடி செல்வதுதான் நாவலின் மையம். அந்த பயணமும் அது கொடுக்கும் அனுபவமும் அவனுடைய நினைவுகளும் வாசிக்க சுவாரஸ்யமா இருந்தாலும்; இவ்வளவு சிரமப்பட்டு கலையரசியைச் சென்று பார்க்க வேண்டிய காதலின் அவசியம் நாவலில் இல்லை. பள்ளிக்கூட வாழ்க்கையில் பலருக்கும் வரக்கூடிய ‘பப்பி லவ்’ மாதிரியான ஒரு குருட்டுத்தனமான ஈர்ப்பு இந்த நாவலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்திவிட்டது.
தனது அம்மாவிற்கு ஒரு கை நீளமாக இருப்பது போல நாயகி கலையரசிக்கும் இருப்பது ஒருவகையில் ஈர்ப்பிற்கு காரணம் என்றாலும் அதற்கு இணையாக அல்லது அதையும் தாண்டி நாயகனின் தேடலுக்கு ஆசிரியர் நியாயம் செய்யவில்லை என்றே சொல்ல தோன்றுகிறது. ஆட்டோகிராப் சேரன் நினைவிற்கு வருகின்றார். ஆனால் அவரது ஆரம்பப்பள்ளி காதலியைப் பார்ப்பதற்கான காரணம் அதில் எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு நான் ரொம்பவும் எதிர்ப்பார்த்து வாசித்த நாவல்களில் ஒன்று ‘தலேஜு’ என் வாசிப்பில் சில குறைகள் எனக்கு தெரிந்தாலும், வாசகர்கள் நிச்சயம் வாசித்து விடவேண்டிய நாவல் இது. கே.பாலமுருகனின் கதை சொல்லும் விதமும் அந்தக் கதையை அவர் நகர்த்துவதற்கு பயன்படுத்தும் மொழியும் நம்மை அதற்குள் இழுத்து கொள்ளும். அது ஒரு வகையில் மாயாஜாலம்தான்.
அதோடு இந்நாவல் முழுக்க நாயகனின் பார்வையில் இருந்தே சொல்லப்படுகின்றது. அது அவனது மொழி. பயம் பதற்றம் கலந்த மொழி. குழப்பங்கள் நிறைந்த மொழி. நடப்பதெல்லாம் கனவா நிஜமா என பிரித்து பார்க்க தெரியாதவனின் மொழி.
இந்த நாவலில் அவரது வழக்கமான மாயாஜாலம் முழுமையாய் நிகழாமல் போனது வருத்தம்தான்.
அதே சமயம் ‘2026ம் ஆண்டின் சிறந்த நாவல்’ என்ற விருது வாங்கிய நாவல் இது. விருது கொடுத்தவர்களிடம் எதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது என்று கேட்க தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய சூழலில் படைப்புகளுக்கு கிடைக்கும் விருதுகளும் அங்கிகாரங்களும் அந்தப் படைப்பை விரைவாக வாசகனை நோக்கி கொண்டு செல்கிறது. அப்படி வாசகனிடம் விரைந்து சென்று சேரும் படைப்புகள் மீது நாம் என்ன மரியாதை வைத்திருக்கின்றோம் அந்தப் படைப்பை எப்படி மதிப்பிட்டுள்ளோம் என்பதை வாசகன் கேள்வியாக நம் முன் வைப்பதற்கு அதிக காலம் எடுக்காது.
அவ்வாறே இந்த நாவல் விருது பெற காரணமா இருந்த அம்சங்களை நீங்கள் பொதுவில் சொல்வதன் மூலம் பல எழுத்தாளர்களுக்கு பயனாக அது அமையும். ஏற்கனவே கொடுக்கப்படும் பல விருதுகள் அதற்கான மரியாதையை ஆங்காங்கே இழந்து கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆகவே படைப்புகளுக்கு விருது கொடுக்கின்றவர்கள் அதனை ஒரு நாள் விழாவாக மாற்றாமல், இலக்கிய உலகிற்கு நன்மை செய்யும் வகையில் குறைந்த பட்சம் தாங்கள் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் படைப்புகளையொட்டிய கட்டுரைகளையோ அது சார்ந்த விமர்சன அரங்கையே வைப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை.
அப்படி எந்தவித கட்டுரைகளும் விமர்சனங்களும் உரையாடல்களும் இல்லாமல் ஒரு நாள் கொண்டாட்டமாக பத்திரிகை செய்தியாக தங்கள் அமைப்புகளின் இயந்தரத்தனமான் செயல்களாக மாறி அங்கிகரிக்கப்படும் படைப்புகளும் கொடுக்கப்படும் விருதுகளும் வாசகர்களுக்கு துரோகம் செய்வதாகவே பிற்காலத்தில் அறியப்படுவதற்கு சாத்தியம் உண்டு.
“இதையா பாராட்டினீங்க… இதற்கா விருது கொடுத்தீங்க…?” என ஓர் அமைப்பையோ ஒரு குழுவையோ ஒரு வாசகன் கேள்வி கேட்பது இதுநாள்வரை அவர்கள் செய்துவந்த எல்லாவற்றையுமே கேள்வி கேட்பதாக மாறிவிடக்கூடும்.
இவ்வளவுக்கு மத்தியில் மீண்டும் சொல்கிறேன் ஒரு வாசகனாக தலேஜு நாவல் எனக்கு கொடுத்த வாசக அனுபவத்தை உங்களோடு எந்தவித ஒழிவுமறைவு இன்றையும் பகிர்ந்துள்ளேன். நீங்களும் வாசியுங்கள். உங்கள் அனுபவத்தை பகிருங்கள். எனக்கு கிடைக்காத ஏதோ ஒன்று உங்களுக்கு கிடைத்துள்ளதாய் நீங்கள் நம்பினால் அதனை எழுதுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஓர் இலக்கிய படைப்பை வாசகர்கள் தொடர்ந்து வாசிப்பதும் உரையாடுவதும்தான் அந்தப் படைப்பிற்கு கொடுக்கப்படும் உண்மையான விருதும் அங்கிகாரமும் என்பதை இந்தவார கட்டுரையின் நிறைவு வரியாக வைக்கின்றேன்.
மீண்டும் அடுத்த மாதம் இந்த ஆண்டின் நிறைவான ‘மாதம் ஒரு மலேசிய புத்தகத்தில்’ என்ன புத்தகம் வருகிறது என்ற எதிர்ப்பார்ப்புடன் விடைபெறுகிறேன்
00

எழுத்தாளர் தயாஜி.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

