-கமலா முரளி
மழைக்காலம் வந்துவிட்டது. நேற்று முதல் நல்ல மழை.
முல்லைக் குடியிருப்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒரு அவசரக்கூட்டம் போட்டார்கள்.
ராஜுவையும் அழைத்துக் கொண்டு கீழ் தளத்துக்கு வந்தார் தேவன்.
வண்டிகள் நிறுத்துமிடத்தில் ஐந்தாறு பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
“அப்பா, நானும் இவங்களோட விளையாடிகிட்டு இருக்கேன்”, ராஜு.
“பிள்ளைங்களா, மழை தூறிக்கிட்டு இருக்கு. யாரும் நனைஞ்சிடாம விளையாடுங்க”
“சரிங்க அங்கிள்” என்றாள் சுஷ்மா.
சுஷ்மா நல்ல சுட்டிகையான பெண்.
“வாவ், சுஷ்மா, நீ இருக்கியா, அப்ப கவலை இல்ல. இப்பல்லாம் ஏதேதோ ஜூரம் வருது. எல்லோரையும் கொஞ்சம் பாத்துக்கோ” என்றார் தேவன்.
ஹேமாவும் அவள் அம்மாவும் வந்தனர். ஹேமா குழந்தைகளுடன் விளையாட வந்தாள்.
“பார்க்கிங் பகுதி. மழையில நனைய மாட்டிங்க. ஆனா அங்கங்க தண்ணி தேங்கி நிக்கிது. பசங்க வழுக்கி விழாம இருக்கணுமே” என்றார்.
“நா பாத்துக்கிறேன் ஆன்ட்டி” என்றாள் சுஷ்மா அசத்தலான தன்னம்பிக்கையுடன்.
உண்மையிலேயே சுஷ்மாவுக்கு அப்படி ஒரு ஆளுமையும் இருந்தது. அவளும் சிறு பெண் தான். இருந்தாலும் எல்லாக் குழந்தைகளையும் அரவணைத்து வழி நடத்துவாள்.
மழையில் நனையாமல்… ஓடியாடி வழுக்கி விழுந்திடாமல்… ஒரு விளையாட்டு ! சுஷ்மா யோசித்தாள்.
“ஆங்… ஃப்ரெண்ட்ஸ், நாம ’ட்ரோச்சா ட்ரொச்சா’ விளையாடலாமா?” என சுஷ்மா சொன்னாள்.
“ட்ரோச்சா ட்ரோச்சா… கேள்விப்பட்டதே இல்லயே…”
”ஆமா, சூப்பரா இருக்கும். அதுக்கு முன்னால யார்கிட்ட இங்க வாட்ச் இருக்கு?”
“என்கிட்ட இருக்கு சுஷ்” ஹேமா சொன்னாள்.
“சரி, யாராச்சும் ஒரு நோட்டும் பென்சிலும் கொண்டு வாங்க”
“நா ஏற்கனவே எடுத்து வந்திருக்கேன்”, என்றான் ராஜூ.
”எல்லோரும் கவனமா கேளுங்க. இதோ இந்த தூண் இருக்குல்ல.” என்று சொல்லி விட்டு, கையில் இருந்த சாக்பீஸால் தூணைச் சுற்றி கீழ்ப்பக்கத்தில் ஒரு கோடு போட்டாள்.
“இப்போ, இந்தக் கோடு தான் கீழ் எல்லை. ரெண்டு கையாலும் இந்த இடத்தில தூணைக் கட்டிப் பிடிக்கணும்.”
“ஹூம், இது ஒரு விளையாட்டா?”
”ஆமா, கேளுங்க. தூணிலேருந்து கை விலகாம, கைகளை மேல நகர்த்தி கிட்டே போகணும். கைய டக்குன்னு தூக்கி மேல வைக்கக் கூடாது. அந்த பில்லர் அங்க வளையுதே அதான் மேல் எல்லை.”
“நோட்டு எதுக்கு சுஷ்மா?” ராஜூ.
“அது வந்து டைம் நோட் பண்ணி வைக்க. பேர் எழுதி எவ்வளவு நேரத்தில அந்த மேல் எல்லைக்குப் போறாங்கன்னு எழுதணும்”.
ராஜு கையை ஒழுங்காக நகர்த்துகிறார்களா எனப் பார்ப்பதற்கும் ஹேமா நேரத்தைப் பார்த்துக் குறிக்கவும் நியமிக்கப்பட்டார்கள்.
“சரி, ஃப்ரெண்ட்ஸ், இன்னொரு முக்கியமான விதி… கையை மெல்ல நகர்த்தும் போது ட்ரோச்சா…ட்ரோச்சா அப்படின்னு சொல்லிகிட்டே இருக்கணும், ஒகே வா?” எனச் சொன்னாள் சுஷ்மா.
எல்லோரும் ‘ட்ரோச்சா ட்ரோச்சா’ என்று கத்தினார்கள்.
விளையாட்டு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
கையைத் தூக்கி மேலே வைப்பது, ட்ரோச்சா ட்ரோச்சா என சொல்லாமல் இருப்பது, மேல் எல்லை வரை போக முடியாமல் தவிப்பது என சவாலாகவே இருந்தது புது விளையாட்டு.
கூட்டம் முடிந்து பெரியவர்கள் வெளியே வந்தனர்.
’ட்ரோச்சா ட்ரோச்சா’ கடைசி சுற்று பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது.
வளாகமே ‘ட்ரோச்சா ட்ரோச்சா” என எதிரொலித்தது.
“இது என்ன விளையாட்டு சுஷ்மா? உன் கண்டுபிடிப்பா?”
“சும்மா… ஒரு ஐடியா தான் அங்கிள். ஆனா…நான் ஒரு கேள்வி கேக்கலாமா?”
“சொல்லும்மா”
“மழைக்காலத்தில எங்களுக்காக என்ன திட்டமிட்டு இருக்கீங்க?”
எல்லாப் பெரியவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நிறைய புத்தகங்களும் சிறார் இதழ்களும் வேணும்”
“போர்ட் கேம்ஸ் வேணும்”
“நிச்சயமா. எல்லாம் வாங்குவோம்”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இந்த ட்ரோச்சா விளையாட்டு போதும்” என ராஜு சொல்ல, அனைவரும் ‘ட்ரோச்சா ட்ரோச்சா’ எனக் கத்தினார்கள்.
00

கமலா முரளி பற்றி….
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின், கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் ’தினசரி.காம் இணையதள நாளேடு, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, கொக்கரக்கோ மின்னிதழ், மலர்வனம், மங்கையர்மலர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
குறிப்பாக, இவரது சிறார் சிறுகதைகள் மற்றும் பாடல்கள், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர்வனம், கோகுலம், இந்து தமிழ் திசை மாயாபஜார், தினமலர் மாணவர் பதிப்பு ‘பட்டம்’, தினமணி குழந்தைகள் உலகம், நடுகல் இணைய இதழ், அமெரிக்கா டெல்லஸ் நகர் மின்னிதழ் ஆனந்தசந்திரிக்கை, ‘இயல்’ சிறார் மின்னிதழ், ‘குட்டி’ சிறார் மாத இதழ் ஆகிய இதழ்களில் வெளிவருகின்றன.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதை 2024 போட்டியில் ஆறுதல் பரிசு வென்றுள்ளார்.
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல்கள், “கிளியக்காவின் பாட்டு” மற்றும் “சின்ன மீனின் பெரிய உலகம்” ஆகியவை லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ ஆண்டு (2024) பெற்றுள்ளார்.
மின்னஞ்சல் : kamalamurali63@gmail.com

