மொழி பெயர்ப்பு சிறுகதை : மலையாளம்
மூலம் : பி.சுரேந்ரன்
ஆங்கிலம் : எலிசி ஜாஸ்சார்யா தாராமங்கலம் [Elsy Zachariah Taramangalam]
தமிழில் : தி.இரா.மீனா
மலையிலிருந்து சவரக் கத்தியுடன் ஒரு போதும் பங்காரப்பா திரும்பி வர மாட்டான். வந்தவனின் தலையை மழித்த பிறகு, இந்த சவரக் கத்தியைக் கோயில் குளத்தில் விட்டெறிந்து விட வேண்டும். ஒவ்வொரு இழை முடியின் வழியாகவும் பாவங்களை எல்லாம் தன்னிடம் ஈர்த்துக் கொண்டு, அந்த சவரக் கத்தி நேரடியாகப் புனிதக் குளத்தின் ஆழத்திற்குச் செல்லட்டும்.
இல்லை, இது நாவிதனின் கத்தியல்ல.
தன் தோள் பைக்குள் எல்லாச் சாமான்களையும் வைத்துக் கொள்வதற்கு முன்னால், பங்காரப்பா அந்தக் கத்தியை, மீண்டும் கையில் எடுத்துப் பார்த்து விட்டு ”இது, உன் கடைசி வேலையாக இருக்கட்டும்.” என்று சொன்னான்.
அளவிட முடியாத ஆழத்திலிருந்து திடீரென ஓர் அழுகை,“தயவு செய்து என் தலைமுடியை மழிக்க வேண்டாம். நம் மல்லிகைப் பந்தல் பூக்களால்
நிறைந்திருக்கிறது. மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டு
நான் தீர்த்தஹள்ளி கண்காட்சிக்குப் போக விரும்புகிறேன்.”
சவரக் கத்தி ஒரு தடவை அதிர்ந்து, அவன் பெரு விரல் நுனியை ஆழம் பார்க்கிறது. அந்தக் காயம் எரிச்சலூட்டுகிறது. அவனது நினைவில் கனவென்னும் மூன்றாம் ஜன்னல் திறக்கிறது. அது ஒரு கிராமச் சாலை.
அந்தச் சாலையில் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிற அலங்கரிக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் ஒரு மாப்பிள்ளையும், பெண்ணும். சாலையின் இரு மருங்கிலும் சூரியகாந்திப் பூக்கள் நிறைந்த வயல்கள். மஞ்சள் வெளிச்ச நிலம். மாட்டின் முதுகில் சாட்டையடி பட்ட சத்தம் கேட்டுக் கண் முழிக்கும் மாப்பிள்ளை சூரியகாந்திப் பூச் சூழலை உணர்கிறான். மாட்டு வண்டியிலேறிய பொழுதில் ஒரு திரை அவன் கண்களை மறைத்திருந்தது. மணப்பெண்ணின் புடவை மறைக்கத் தவறி விட்ட அந்த அழகான கூந்தல் அவனை ஈர்த்திருந்தது.
அவள் தலையிலிருந்த முக்காட்டைக் காற்று விலக்கிய போது…. கருமையான மலைகளின் உச்சியில் திடீரென உருவாகும் வெண் மேகங்களை அவனுக்கு நினைவூட்டும் வகையில் மல்லிகைப் பூக்கள் வெளிப்பட்டன.
அவள் தலையை அலங்கரிக்க எத்தனை பூக்கள் தேவை என்று அவன் சூரியகாந்திப் பூக்களிடம் கேட்டான். மஞ்சள் பூமி எந்த பதிலும் சொல்லாமல், மேலும் கீழும் ஆடியது. தன் படபடப்பை அவைகளிடம் இருந்து மறைத்துக் கொண்டான்.
“கரஞ்சிக் குளத்தைச் சுற்றி மல்லிகைச் செடிகளை வளர்க்க வேண்டும்” என்று முதலிரவில் அவள் காதில் முணுமுணுத்தான். வெட்கம் விலகி அவனுடன் பழக்கப்பட்ட அந்தத் தருணத்தில் தன் கூந்தலால் அவன் முகத்தை மறைத்து, அவனை மூச்சுத் திணறச் செய்தாள்.
கிராமமே ஆச்சர்யப்படும் வகையில் அவள் தன் கூந்தலைப் பராமரித்த போது, அவனும் அவள் கூந்தலைக் காதலிக்கத் தொடங்கினான்.
விவசாயத்திற்குத் தனக்குத் தேவையான பொருட்களை நகரத்திலிருந்து வாங்கி வரும் போது அவளுக்குத் தேவையான சீப்புகள் வாங்கி வந்தான். தினமும் தலைக்கு எண்ணெய் தடவிச், சீவி, பூக்களை வைத்துக் கொண்டு தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். குளித்து முடித்துக் கூந்தலை உலர்த்துவதற்காக அவள் வெயிலில் நின்ற போது, அலை அலையான கூந்தல் காற்றில் ஆடிய விதம் வயல்களில் விளைந்திருந்த தினைக் கதிர்களாகத் தெரிந்தது.
அந்த யானைகள் எப்போது வந்து வயலை மிதித்தன?
ஆரஞ்சு வண்ணப் பூங்கொத்தை ஏந்திய வலிமையான ஒரு கை மூன்றாவது ஜன்னல் வழியாக நீள்வதையும், அவளது தலை முடியிலிருந்து பாம்புகள் வருவதையும் பார்த்துப், பயந்து அவன் கண் விழித்தான். என்னவென்று அறியத், தன் வாயிலிருந்து கட்டை விரலை எடுத்துப் பார்க்க, அதில் இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
என் ரத்தத்தை நான் எவ்வளவு குடித்திருப்பேன்? கடவுளே.. காயத்தின் மேல் வைக்க மூலிகைகளைத் தேடினான்.
அன்றிரவு மிகக் கொடுமையானது. மொட்டையடித்துக் கொள்ள வேண்டிய மனிதர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அவர்களை அவன் திகைப்போடு பார்க்க, ஒருவர் சவரக் கத்தியை அவனிடம் நீட்டுகிறார்.”நான் முடி திருத்துபவன் இல்லை” முனகலாகச் சொல்கிறான்.
கூட்டம் சிரிக்க, எங்கிருந்தோ ஒரு கட்டளை பிறக்கிறது:” இன்று முதல் இந்த வேலை உன்னுடையது. எப்போதும் நீ இந்த மலையில்தான் இருக்க வேண்டும். இந்தக் கத்தியைக் கீழே வைக்க உனக்கு அனுமதியில்லை. நீ உன் வேலையை ஆரம்பிக்கலாம்.”
முதல் தலையை மழித்து முடித்து , அவன் இரண்டாவது தலையை மழிக்கத் தொடங்கும் போது, முதல் தலையில் புதிய முடிகள் முளைத்து விடுகின்றன.
மீண்டும் கூட்டத்தினரின் ஏளனச் சிரிப்பும், நரகத்திலிருந்து ஒரு சாபமும் கேட்கின்றன;“ நாவிதனே, நீ ஒரு நாளிலும் மலையிலிருந்து கீழிறங்க முடியாது.”
“நான் நாவிதனில்லை. ஒரு விவசாயி. நான் என் நிலத்திற்குப் போக விரும்புகிறேன்.”
சில இரவுப் பறவைகள் புளிய மரத்தில் உட்கார்ந்து கொண்டு விடியல் ஒலி எழுப்புவதைக் கேட்டு, அதை ஒரு கனவு என்று உணர்கிறான். ஜன்னலின் வழியாக சிறிது வெளிச்சம் கசிகிறது. அந்தத் தெளிவற்ற கனவு அவனைக் கலங்க அடிக்கிறது. மலை உச்சி எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து விடும் என்ற முடிவில் எழுந்து சீத்தம்மாவை எழுப்புகிறான். வீரம்பாடிக்குப் போகும் முதல் பஸ்சை பிடித்து, வெயில் சுட்டெரிக்கத் தொடங்கும் முன்பே மலையுச்சியைச் சேரந்து விட வேண்டும் என்பது அவன் திட்டம்.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பஸ் நிலையத்துக்குப் போன போது, அவர்களுக்காகவே காத்திருப்பது போல பஸ் நின்றிருந்தது. பஸ்சில் வெகு சிலரே இருந்தார்கள். மலையுச்சிக்குப் போகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று அவன் சுற்று முற்றிலும் பார்த்தான். ஆனால் யாருமில்லை. சீத்தம்மா அவனருகில் உட்காராமல் முன் சீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தாள். அவளது சிவந்த முகம் அவனை வேதனைப் படுத்தியது. பஸ் நகரத் தொடங்கியவுடன் அவளது தலைமுடி சீட்டுகளுக்கு இடையே நுழைந்து தரையைத் தொட்டது. அவள் தலைமுடி தன் காலில் பட்டதும், பாம்பு கடித்து விட்டது போலக் குதித்தான். அவள் தலை முடியைப் பார்க்கவே பயந்தான். பின்னாலிருக்கிற இன்னொரு சீட்டிற்கு மாறி ஜன்னலைத் திறந்தான். பனியால் மூடப்பட்டிருந்த வயல்களைப் பார்த்த போது, நாவிதனின் கத்தி நடப்புலகின் முடிகளைக் கட்டுப்பாடின்றி அலசுகிறது. அந்தக் கத்தி தொற்றான உச்சந்தலையில் உரசுகிற போது, புண், சீழ் மற்றும் ரத்தத்தால் மூடப்பட்ட வெட்டிய முடிகள் அவன் மீது சரிந்து விழுகின்றன.
இது பாவியின் புனிதப் பயணம்.. பாவம் தீண்டியிருக்காத மண்ணில் தலைமுடியைக் காணிக்கையாக்கிய பிறகு, அங்கு சிறு தானியங்களை விதைக்க வேண்டும். கொடிகள் படர்ந்த ஒரு குடிலில் குளிர்ந்த படுக்கையில் அவன் கிடந்தான். தன் மனதைப் பாதித்திருந்த பாவத்தை நினைத்து அவன் கலங்கினான். சீத்தம்மா இப்போது அவனுக்குச் சொந்தமானவளில்லை. தீட்டுப்பட்ட ஒரு தெய்வச் சிலை அவள். அது தூய்மைப் படுத்தப்படும் வரை அவளுடைய பூசாரியின் மனதில் அவள் வழிபாடு கூடாது. வெறும் தலைமுடியைக் காணிக்கையாக்குவதால் மட்டும் தன் பாவங்கள் எல்லாம் கரைந்து விடும் என்பதான குருட்டு நம்பிக்கையில் அவன் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.
படேலின் மகன் சீத்தம்மாவின் கூந்தலில் பூ வைப்பதை மட்டுமே பங்காரப்பா பார்த்திருந்தான். வலுக்கட்டாயமாகத் தன் தலையில் பூ வைத்து விட்டு ஓடி விட்டானென்று அவள் சொன்னாள். “நான் அவனைத் தடுக்கவில்லை. நான் எந்தப் பாவமும் செய்யவில்லை. தயவுசெய்து என் தலைமுடியை மழிக்க வேண்டாம்” என்று அவள் கதறினாள். அவன் கனவிலும் கூட அந்தக் கதறல் வந்தது. அவள் பாவத்தின் ஆழத்தை அவனால் அளவிட முடிந்தது. ஓர் அந்நியன் அவளது கூந்தலைத் தொட்டு விட்டால், அதை மழிப்பதன் மூலம் அவள் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளமுடியும்; புனிதக் குளத்தில் நீராடி தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம். இனி ஒரு போதும் அவள் கூந்தல் யாரையும் தூண்டாது. வீட்டுத் தோட்டத்தில் உள்ள மல்லிகைச் செடிகளை அடியோடு அப்புறப் படுத்தி விட வேண்டும்.
பஸ் வீரம்பாடியைப் போய்ச் சேர்ந்த போது சூரியன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். மலை முழுவதுமாகத் தெரிந்தது. அங்கிருந்து மலைக்குப் போகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். தனியாகத்தான் போக வேண்டும். மலையேறுவது சிரமமானது. பேசுவதற்கு உடன் ஒருவரிருந்தால் சிரமம் தெரியாது.
பாவம் செய்தவருடன் மலையேறும் போது, மனம் துன்பம் தவிர வேறெதையும் உணர்வதில்லை. பஸ்சிலிருந்து இறங்கிய சீத்தம்மா விம்மிக் கொண்டே நடந்தாள். வழி நெடுக சத்தமாகவும், கசப்பாகவும் வாக்குவாதங்கள்..மலைப் பகுதியை அடைந்த போது,” இந்தப் புனித பூமியை உன் கண்ணீரால் நனைக்க வேண்டாம்.” என்று சொன்னான்.
குடத்தில் தண்ணீர் இல்லை என்பது அவனுக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. செங்குத்தான படிகளைக் கடந்த பிறகு மலை உச்சியில்தான் தண்ணீர் கிடைக்கும்.
ஏழு நதிகளில் ஒன்றின் புனித நீர் அங்கெங்கோ இருக்கிறதென்று அவனுக்குத் தெரிந்திருந்ததால் “நீ இங்கேயே இரு. நான் போய் நல்ல தண்ணீர் எடுத்து வருகிறேன்.” சொல்லி விட்டு இரண்டாகப் பிரிந்த பாதையில் செடிகளினூடே தண்ணீரைத் தேடிப் போனான்
அவன் தண்ணீருடன் திரும்பி வந்த போதும் அவள் அழுது கொண்டிருந்தாள்; அந்த அழுகை அடர்ந்த காட்டின் ஆழத்திலிருந்து எதிரொலித்தது. காட்டின் ஓலம் அவனுக்கு அச்சம் தந்தது. அவனைப் பார்த்ததும் சீத்தம்மா காலில் விழுந்தாள்.
“நான் மலையேற விரும்பவில்லை. நான் எந்தப் பாவமும் செய்யவில்லை. நீங்கள் என்னைக் கொன்று இந்தக் காட்டிற்குள்ளேயே வீசி விடுங்கள். ஆனால் என் தலைமுடியை மழித்து விடாதீர்கள்.”
இப்போது அவன் முழுவதுமாக மாறி விட்டான். பலி கொடுக்கப் போகிற ஆட்டை வெட்டத் தயாரான பூசாரியைப் போலக் கையில் அரிவாளுடன் தயாராக நின்றான்.
ஒரு மரக்கிளையை அவன் முறித்த போது, அது அவள் முதுகில் வந்து விழுந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு காகம் பூசைப் பொருட்களின் மேல் உட்கார்ந்தது. கத்திரிக் கோலையும், கத்தியையும் அவன் எடுத்த போது, அவளுடைய சோர்வுற்ற கண்கள் அவனை வெறித்தன.
“மாலைப் பொழுது வருவதற்குள் நாம் மலையை விட்டு இறங்கி விட வேண்டும்.” என்றான் பங்காரப்பா.
குளத்தின் அருகேயிருந்த ஒரு கல்லில் தலையைக் குனிந்தபடி அவள் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குக் கீழேயிருந்த புனித நீர் ஒரு கண்ணாடியைப் போல இருந்தது. கத்திரிக்கோல் அசைய, குளத்து நீர் அலைகளாகச் சிதறியது. அவள் கண்களை மூடிக் கொண்டு பற்களால் உதடுகளைக் கடிக்க ரத்தம் கசிந்தது.
வரண்ட நிலங்கள் உழப்படுவதையும், பிளக்கும் மண்ணிலிருந்து மண்டை ஓடுகளும், எலும்புகளும் வெளிப்படுவதையும் பார்த்தாள். காற்று மரங்களை ஊடுருவிச் செல்ல, காளைகள் பதட்டமாக ஓட, நிலங்கள் பெருவெள்ளத்தில் மூழ்கின.
அவனது கைகளில் நடுக்கமேதுமில்லை. அந்த நேரத்தில் அவனுக்கு எதுவும் நினைவிலில்லை. சூரியகாந்திப் பூக்கள் எரிவது போலத் தெரிந்த வயல்வெளிகளுக்கு நடுவில் போன வண்டியோ, மல்லிகைத் தோட்டங்களோ அவன் கண்ணில் படவேயில்லை. அவளின் குளிர்ச்சியான கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, களைப்புடன் தூங்கிய அந்த வெம்மையான இரவு கூட அவன் நினைவிலில்லை. இப்போது, அவன் பயிரிடுவதற்கு முன்பு நிலத்தைச் சுத்தம் செய்யும் ஒரு விவசாயி மட்டும்தான்.
கத்திரிக்கோல் வேலை முடிந்த பிறகு, கத்தியை அவள் தலையில் வைத்தான். கத்தி நகர்ந்து, உச்சந்தலையில் பிறை வடிவத்தை உருவாக்கியது. பின்னர் அது முழு நிலவாக விரிய, பாவங்கள் தீர்ந்து போனதாக அவன் நினைத்தான்.
கத்தியின் அசைவு இறுக்கமான போது, அவன் ஆனந்தமாக உணர்ந்தான். சரணாகதியின் போது தன் வலிமையை இழப்பதான ஓர் உணர்வு அவனுக்குள் வர, கத்தியைக் குளத்திலெறிந்து விட்டு தன்னை மறந்து உட்கார்ந்திருந்தான்.
குளத்தின் கரையில் அவள் தொண்டை வரள உட்கார்ந்திருந்த போது, படிகம் போன்ற நீர் அவளை ஈர்த்தது. ஆனால் இப்போது, தாகம் மறைந்து போயிருந்தது.
நீர்க் கண்ணாடியில் அவள் தன் தலையைப் பார்த்தாள். அது வெள்ளை மலராக மாறிக், குளத்தின் பரப்பளவிற்கு ஈடானதாக இருந்தது. அந்த வெண்மை கரைந்து ,சூனியமாக மாறிய போது, நீரின் ஆழத்தில் அவளுக்கு நீல வானம் தெரிந்தது. உற்றுப் பார்த்த போது, வானத்தில் ஒரு வெள்ளைக் காகம்… அது இரண்டு, நான்கு, ஐந்து… எனப் பெருகி வானத்தை நிறைக்க, ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தோடு அவள் குளத்திலிறங்கினாள்.
அம்மா..தேவி.. .வேதனையுடன் கத்தினாள். புனிதகுளம் பிளக்க, அதனுள்ளிருந்து மரகதப் படிகள் தெரிந்தன.
எல்லாம் முடிந்த போது, நீர்ப்பரப்பில் சிறிய அலை கூட எழவில்லை. முழங்கால்களினிடையே தலை சாய்ந்திருக்க பங்காரப்பா தன்னை மறந்து கிடந்தான். மோதுவது போன்ற ஏதோ ஒரு சப்தம் கேட்டு அவன் எழுந்த போது, குளத்தின் கண்ணாடிப் பரப்பு சிதறியது. உயரத்தில் ஒரு வெள்ளைக் காக்கை ஓலமிட்ட படி வானத்தில் பறந்தது.
00
நன்றி :
Under The Wild Skies , An Anthology of Malayalam Short Stories,
National Book Trust, India Editor K.Sachidanandan
பின் நவீனத்துவ எழுத்தாளரான பி.சுரேந்தரன் சிறுகதை, நாவலாசிரியர் ,
கட்டுரையாளர். விமர்சகர் , சமூக ஆர்வலர் என்ற பன்முகம் கொண்டவர்.
ஜலசந்தி, ராஷ்டிரிய கதைகள், சைனீஸ் மார்கெட், மாயபுராணம்,
காவேரியின் புருஷன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள்
இவரின் படைப்பு வரிசையில் அடங்குபவை. மாத்ருபூமி விருது,
வி.பி. வகுமார் விருது, எஸ்.பி. டி, விருது, பத்மராஜன் விருது உள்ளிட்ட
பல விருதுகள் பெற்றவர்.
00

