மாதம் ஒரு சிங்கபூர் புத்தகம்-8

மாயா மது உதயா – நினைவுகளின் பேரசைவுகள்

தயாஜி

“எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு; எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு…”

கவிஞர் வாலியின் வரிகளில் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. முழு பாடலும் வேறொன்றைப் பாடினாலும் இந்த வரிகள் சுமந்திருக்கும் செய்தி முக்கியமானது அதன் முரண் கவனிக்க வேண்டியது. வெளிப்பார்வைக்கு ரொம்பவும் சிறியதாக இருப்பது அதனுள் சுமந்திருக்கும் சங்கதி ரொம்பவும் பெரியதாக இருக்கும்.

திருக்குறள் முதல் ஆத்திச்சூடி முதல் பலவேறுபட்ட இலக்கிய வடிவங்கள் சிறியதாக இருந்தாலும் அதன் அர்த்தம் பெரியதாக இருக்கும். அதோடில்லாமல் அவற்றில் சில; காலச் சூழலுக்கு எற்ப நாம் வாழும் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அதன் பொருள் தரும் அர்த்தமும் மாறி கொண்டே வருவதை நாம் கவனிக்கலாம்.

அப்பாவின் சிறு கண்ணசைப்பில் பல காரணங்களைப் பிள்ளைகள் புறிந்து கொள்ளலாம். “ச்சீ…” என்ற ஒற்றைச் சொல்லால் பிரிந்து போன குடும்பங்கள் உண்டு. ஒரு சொல் அது சொல்லப்படும் போது அதன் சூழலும் அதைச் சொல்லும் தோரணையும் அதைக் கேட்கும் மனிதனின் மனநிலையும் அச்சிறு சொல்லை மாபெரும் சுனாமியாக்கிவிடுகின்றது.

ஒரு வைரக்கல்லில் மறைந்திருக்கும் பல கோடி பணம் போல. நண்பனாய் இருக்கும் துரோகியின் புன்னகை கொடுக்கும் வலி போல என சொல்லிக் கொண்டே போகலாம். ஆக மொத்தத்தில் இலக்கியத்தில் சின்னதாய் இருக்கும் எதுவும் சின்னதாகவே இருப்பது அல்ல.

இன்றைய மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம், எட்டாவது தொடரில் பாண்டித்துரை எழுதிய ‘மாயா மது உதயா’ என்னும் குறுங்கவிதைகள் தொகுப்பு.

குறுங்கவிதைகள் என்றதும் ‘அட ஹைக்கூவா..?’ என ஆசுவாசப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இரண்டுமே வெவ்வேறு வகையைச் சார்ந்தது.

ஹைக்கூ; கறாரான இலக்கிய வடிவம். தன்னகத்தே இலக்கண வரையறைகளைக் கொண்ட ஒரு வடிவம் இது. அதன் அடிப்படை கூறுகளில்  ஒன்று மூன்று வரிகளில் எழுதுவது. ஆனால் எழுதிய வாக்கியங்களை மூன்று வரிகளாகப் பிரித்து அடுக்கி அதுதான் ஹைக்கூ என சொல்லிக்கொள்வதெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது என தெரியவில்லை. குறைந்தபட்சம் பரவலாக அவாசிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்ட  ஹைக்கூக்களையாவது வாசித்து புரிந்து கொண்டு எழுத முயற்சிக்கலாம்.

அதற்கு முற்றிலும் வேறான ஒரு வடிவமாக குறுங்கவிதைகளைச் சொல்லலாம். ஆனால் அதற்கு ஹைக்கூவைப் போன்ற வடிவ வரையறைகளோ அடுக்குகளின் எண்ணிக்கைகளோ இல்லை. ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு முறையில் குறுங்கவிதைகளை எழுதி வருகின்றார்கள். இன்னும் சிலர் அதென்ன குறுங்கவிதை? கவிதை என்று சொன்னால் மட்டும் போதாதா எனவும் கேட்டு வைக்கிறார்கள்.

நீள் கவிதைகள் இருப்பது போல குறுங்கவிதைகளும் இருக்கலாம்தானே என சொன்னாலும் அவர்கள் மனம் சமாதானம் ஆவதில்லை.

குறுங்கவிதைகளை வாசிக்கின்றவர்கள் அதன் வாசிப்பு அனுபவத்திற்கு முழு சுதந்திரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இதை அப்படியே குறுங்கதைகளுக்கும் நம்மா சொல்ல முடியும். அந்த இரு வடிவங்களும் அதனை வாசிக்கின்ற வாசகர்களை அதனை எழுதிய எழுத்தாளரோடு அதனை எழுதிய கவிஞரோடு பக்கத்தில் அமர்ந்து சேர்ந்து பயணிக்க வைக்கின்றது ஆனால் அவர்கள் தொடும் எல்லை என்பதுதான் இருவருக்கும் வெவ்வேறாக இருக்கின்றது. சில சமயங்களில் எழுதியவரின் எல்லையை விடவும் வாசித்தவர்களின் எல்லை அதிக தூரத்தில் இருக்கிறது.

இம்மாத புத்தகத்திற்கு செல்வதற்கு முன்பாக அதன் ஆசிரியர் குறித்த சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.

இயற்பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்தவர் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.

2006-ஆம் ஆண்டு முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகின்றார்.  ‘அவநிதாவின் சொல்’ மற்றும்  ‘மாயா மது உதயா’ எனும் இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இலக்கிய ஈடுபாடு கொண்டதோடு நில்லாமல் குறும்படம் மீது உள்ள ஆர்வம் கொண்டு தனது நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்.

     தனது இலக்கிய நண்பர்களுடன் இணைந்து ‘பிரம்மா’ என்ற கவிதைத் தொகுப்பையும் ‘நாம்’, ‘தனி’ என்ற தனிச்சுற்று இலக்கிய இதழ்களையும் வெளியிட்டுள்ளார். கவிஞர் அய்யப்பமாதவன் இயக்கி ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்த ‘தனி’ குறும்படத்தை அறிவுநிதியுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

2008-ம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் நடத்திய தங்கமுனை விருதிற்கான கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கின்றார்.

‘மாயா மது உதயா’ கவிஞரின் இரன்டாவது கவிதைத் தொகுப்பு. 2017-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. முகப்போவியத்தையும் உள்ளோவியங்களையும் ஓவியர் துரை எழிலன் வரைந்துள்ளார். எழுத்தாளர் எம்.கே.குமார் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ளார். இக்கவிதைத் தொகுப்பில் மொத்தம் 125 குறுங்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மதுவுக்கு 55 கவிதைகளையும் மாயாவிற்கு 8 கவிதைகளையும் உதயாவிற்கு 64 கவிதைகளையும் கவிஞர் எழுதியுள்ளார். எழுதியுள்ளார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களோடு உரையாடியுள்ளார் என்றே சொல்லவேண்டியுள்ளது.

மாயா மது உதயா; யார் இவர்கள்? கவிஞருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருந்தும் இல்லையா? அவர்களோடு கவிஞர் உரையாட வேண்டிய அவசியம் என்ன? இத்தனைக்கும் மேலாக இவர்கள் பெண்களா ஆண்களா? ஒரு முறை ஆணின் குரலாக ஒலிக்கும் கவிதைகள் இன்னொரு முறை பெண்ணின் குரலாக எப்படி மாறிவிடுகிறது என்கிற பல கேள்விகளோடுதான் இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.

காதல் கொடுக்கும் பிரமையையும் அது கொடுக்கும் பேரானந்தத்தையும் இந்தக் கவிதைகளில் நம்மால் உணர முடியும். இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் எனக்கு ரொம்பவுமே பிடித்த என்னை அலைக்கழித்த என்னை எனது கடந்த காலங்களுக்கு அழைத்துச் சென்ற கவிதைகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முழு கவிதைகள் குறித்து எழுத எண்ணம் என்னை உந்தி தள்ளினாலும் கொஞ்சம் கட்டுப்பாடோடு இதனை எழுதுகிறேன். ஏனெனில் இந்த ‘மாயா மது உதயா’ உங்களுடன் செய்திருக்கும் உரையாடலுக்கு நீங்களும் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

‘மது

உனக்கு அழத்தெரியும்

அழுதுவிட்டாய்’

என்ற கவிதைதான் தொகுப்பின் முதல் கவிதை. மதுவிற்கு அழத்தெரிகிறது என்பது கவிதையில் வெளிப்படையாக தெரிந்தாலும் தன்னால் அழ முடியாத ஒருவன் சோகம் இன்னொரு பக்கத்தில் இருப்பதையும் நாம் உணரலாம்.

காதலில் அது கொடுக்கும் வலி எதுவுமே வலியாக தெரியாது. ஆனால் ஒருநாள் அந்தக் காதல் நம்மைவிட்டு விலகும் நேரம் அதுநாள் வரை முகம் காட்டாத இருந்த வலி ஒவ்வொன்றும் அதன் வேதனையைக் காட்டத் தொடங்குகிறது. அது விலகிச் செல்லும் காதலைக் கடந்து நம்மை வேறெங்கோ கடத்திச் செல்கிறது. அப்படியான ஒரு சிந்தனையைத் தூண்டிவிடுகிறது இந்தக் கவிதை;

மது

பூனைக்குட்டியின் பிரியமாகத்தான் நினைத்திருந்தேன்

நகக்கீரல்கள் ரணமாகாதவரை

முன்முடிவுகள் காதலில் மட்டுமல்ல எல்லா காலத்திலுமே சிக்கலானவைதான். அப்படியான முன் முடிவு ஒன்றுடன் தன் காதலனைச் சந்திக்க வருகின்றாள் ஒருத்தி;

மது

உன்முன் எழுதி வைக்கப்பட்ட

உரையாடல்களை

கடகடவென படித்து விட்டாய்

முடிந்து விட்டது

உன்னைப் பொருத்தவரை

இருவரின் உரையாடலாக பரிணமிக்க வேண்டியது ஒருவரை பொருத்தவரை முடிந்து விட்டிருப்பது காதலில் துயரம்தானே.

முன்முடிவு போலவே எந்த முடிவுமே எடுக்கா ஒரு நிலையும் காதலில் துயர் மிகுந்ததுதான். அதுவும் இருவரில் ஒருவரே அதைச் சுமப்பதென்பது வலி மிகுந்ததுதானே.

மது

யோசிப்பதற்கான அவகாசம் உன்னிடமில்லை

என்னிடம் தந்து

யோசிக்க வைக்கிறாய்

ஒரு குழந்தைமையின் சுகவீனம்

அந்த இரவை கடந்து போகிறேன்

குழந்தையின் சுகவீனம் போன கிடக்கிறது அந்த காதலனின் இரவு. அவனின் தூக்கமின்மை அவனை துன்புறுத்துவதோடு நம்மையுமே துன்புறுத்துகிறது அது அப்படியே இருக்குமா அல்லது மாறுமா என்பது யாருக்கு தெரியும்.

மது

மழைக்காலத்திற்கு ஒதுங்கிய தும்பி ஒன்று

ஜன்னல் சட்டத்தில் வந்தமர்கிறது

தொடும் தூரத்தில் இருக்கும் தும்பியை

ஜன்ன சட்டத்திற்கு இந்தப்பக்கமிருந்து பார்த்துக்

கொண்டிருக்கிறேன்

தோடாமல் இருப்பது துயரமில்லை. ஆமால் தொடும் தூரத்தில் இருந்தும் தொடாமல் இருப்பதும் தொட முடியாமல் இருப்பதும் வலிதானே. அதிலும் வெறுமனே நடக்கும் எல்லாவற்றுக்கும் ஒரு பார்வையாளனாக ஆகிவிட்ட மனிதனின் துயரைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா.

ஏறக்குறைய இதே துயரை இன்னொரு கவிதையிலும் சொல்கிறார் இப்படி:

மது

தீரா பொழுதொன்றில்

மீண்டெழும் ஞாபகங்களில்

சாலையோர மனிதர்களுள் ஒருத்தியாய்

நீயும் கடந்து செல்கிறாய்.

காதல் எப்போதும் மாயங்கள் நிறைந்தது பிரமையும் பிரேமையும் கலந்துதானே காதலர்களில் அன்றாடம். அப்படியொரு ஆனந்த  குழப்பமாய் ஒலிக்கிறது இந்தக் கவிதை;

மது

அதிகாலையில் அழைத்தாய்

இது கனவென்றாய்

கனவொன்றில் அழைத்தாய்

அதிகாலையில் விழித்துக்கொண்டேன்.

இயல்பாகவே காதலில் ஆண்களை விட பெண்களுக்கு சிக்கல்கள் அதிகம்; அதிலும் அவர்களின் குடும்பத்திலிருந்தே அது தொடங்கும். தனக்காக வாழாமல் பிறருக்கா வாழும் துர்பாக்கியம் பெண்களுக்கே வாய்த்தாலும் அதன்  வேதனையில் ஆண்களுக்குமே பங்குண்டு என சொல்லும் கவிதை. அவள் பிறருக்காகவே வாழ்கிறாள். அவளுக்காகவும் அவள் வாழவில்லை; காதலுக்காகவும் அவள் வாழவைல்லை. ஆனால் ஏதோ ஒரு மூலையில் காதல் வாழ்ந்து கொண்டுதானே இருக்கும் அவள் உயிருள்ளவரை.

மது

பிறருக்காக வாழ்தல் என்கிறாய்

மெத்தச் சரி என்றேன்

பிறருக்காகவே வாழ்கிறாய்.

காதல் எப்போதும் விசித்திரங்கள் கொண்டது. கண்ணால் பார்த்தே வசியம் செய்வது போல காதல் கேட்டே அந்த வலியை உள்வாங்க முடிகிறது போலும்,

மது

வலிக்கின்றது என்கிறாய்

புலம்பினாய்

அழுதாய்

அமைதியாக கேட்டுக் கொண்டேன்

வலிக்கிறது.

காதல் தெய்வீகமானதுதான் என்றாலும் அதனுள் அதற்கே உரிய பலவீனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தித்திப்பின் எல்லை எதுவாக இருக்கும் என யோசிக்க வைக்கிறது இந்தக் கவிதை,

மது

உனதான பேரன்பின்

கரைந்து போகிறேன்

களைத்து போகிறேன்.

அவள் காட்டும் பேரன்பின் அவன் கரைந்து போவதோடு நிற்கவில்லை; அது அவனை களைத்து போக வைக்கிறது என்பதுதான் காதலர்கள் புரிந்து கொள்ளவேண்டிய பலவீனம்.

அதே போல; நீ மாறவேண்டாம் நான் ஏற்றுக் கொள்கிறேன் எல்லாவற்றையும் சுமந்தும் கொள்கிறேன் என சொல்லும் கவிதை அடுத்து,

மது

இதுதான்

உன் அன்பென்றால்

இருந்துவிட்டுப்போகிறேன்

இதுவாகவே.

இப்படியான பல கவிதைகளை மதுவிற்காக கொடுத்த கவிஞர் அடுத்ததாக மாயாவை நோக்கி வருகின்றார்.

மாயா

அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

என்று நம்மை அந்த மாயாவை தேட வைக்கின்றார் கவிஞர். உதயாவிற்கு பேசியதைவிடவும் மாயாவுடன் அதிக காதல் கொண்டு பேசுகின்றார். கவிஞர் இங்கு பேசுவதோடு நிற்கவில்லை என்பதுதான் அதற்கான பொருள் போல.

மாயா

நீ

தர மறுத்த

அந்த முத்தத்தில்தான்

நான் இருக்கிறேன்.

அவனை அவனிடமே கொடுத்துவிடேன் மாயா என காதலனுக்காக நம்மையும் கேட்கவைக்கிறார்.

மாயா

முத்தங்களால் தொடங்கிய பொழுதை

முத்தங்களால் முடித்து வைக்கிறாய்.

காதலன் கேட்டதை மாயா கொடுத்துவிட்ட திருப்தி நமக்கும் கிடைத்துவிடுகின்றது.

மாயா

ஒரு முறைதான் அந்த முத்தம்

பிறகு வேறு.

காதலன் கேட்கும் அந்த வேறொன்று இன்னொரு முத்தமாக இருக்காது என்றே யோசிக்க வைக்கிறது.

மாயா

சிறு முத்தம்

பொரும் காதல்

இந்த நான்கு கவிதைகளுமே ஆண் குரலிலும் ஒலிக்கிறது பெண் குரலிலும் ஒலிக்கிறது. வாசிக்கின்றவர்களைப் பொருத்து குரல் மாற்றி அழைக்கிறது கவிதை.

காதலனும் காதலியும் ஒருவரையொருவர் மாறி மாறி பற்றிக்கொள்ளும் கவிதைகளை அடுத்தடுத்ததாகப் பார்க்கலாம்.

மாயா

மலர்தலைச் சொல்லித்தருகிறாய்

இன்னுமிறுகப் பற்றிக்கொண்டு.

*******

மாயா

என்னசெய்வாய்

இன்னுமிருகப் பற்றிக்கொள்வேன்.

இப்படியாக காதலனையும் காதலியையும் இணைத்து வைத்த கவிதைகளில் சிலவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உதயாவிற்கான உரையாடலுக்கு செல்லத் தயாராகுங்கள். கவிஞர் அங்கு நடத்தியிருக்கும் விளையாட்டுகளைப் பார்ப்போம்.

     எதிர்ப்பார்த்தது போல் இல்லை. கவிஞரின் ‘உதயாவிற்கான’ உரையாடல்கள் பெரும்பாலும் இழப்பையும் இழந்த வலியையும் சொல்லிச் செல்கிறது.

     உதயா

      ரோஜா செடிகளை பதியம் செய்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது

ஞாபகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய

உடல் சுமக்கும் வலியைவிட மனதால் சுமக்கும் வலி மோசமானது. அதிலும் ஒரு சமயம் இரம்மியமாக தோன்றிய நினவுகளே இன்று வேதனையாக மிஞ்சி நின்றால் என்ன செய்ய. அதிலிருந்து மீண்டெழவும் அவளிடமே அவன் கேட்க வேண்டியதாய் உள்ளது.

உதயா

இந்த நினைவலையிலிருந்து மீண்டெழ வேண்டும்.

என கேட்கும் கவிஞரின் வலி, நினைவுகளை தன்னை சிக்க  வைத்த வலைகளாகப் பார்க்கும் போது புரிகிறது.

உதயா

நாம் அவர்களாக வேண்டாமே

என ஒரு கவிதையில் சொல்கிறார். கவிஞர் மாற விரும்பாதவர்கள் யாராக இருந்திருக்க கூடும் என்கிற சந்தேகத்தைவிட உதயாவிடம் இப்படியொரு வேண்டுகோலை வைப்பதன் காரணத்தையே மனம் தேடி அலைகிறது.

உதயா

கருணையோடு பேசச்சொன்னாய்

பேசிக்கொண்டிருக்கிறேன்

என்றொரு கவிதை. இதுவரை தன் கண்டிறாத உணர்வொன்றை தன் மீது காட்டிய காதலியை, அதே வடிவமாய் ஆராதிக்க ஆயுத்தமாகும் பக்தனின் குரல் அல்லவா இது.

இழப்பது பிரிவதும் இயல்பாக ஆகிவிடாது. ஆனால் அதனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனம் வாய்க்கப்பெறுவது அவ்வளவு எளிதா என்ன. அந்த வலியையும் கவிஞரால் இயல்பாகச் சொல்ல முடிகிறது.

உதயா

நீ விட்டுச்சென்ற புன்னகைகளால் நிரம்பியது இந்த உலகம்.

*******

உதயா

நீ இல்லாத உலகம்

நிழற்படங்களால் நிரம்பியிருக்கிறது

என்னும் கவிதையில் நிழற்படங்களைக் கொண்டு நிஜங்களை ஏற்று கொண்ட ஒருவனின் ஏக்கம் தெரிகிறது.

உதயா

இன்னும் பக்குவப்படுத்து

கல்லாவதற்கான காலநிலை இருக்கிறது

என்னும் கவிஞர் காதலனின் குரலாக மட்டுமல்ல காதலியின் குரலாகவும் ஒலிக்கவே செய்கின்றார்.

காதலர்களின் கையறு நிலையை தன் கவிதையில் சொல்ல முனைகிறார் கவிஞர்.

உதயா

நிகழ்வன போக்கில் நானும்.

தன்னை மீறிய சூழலில் சதியாய் நடப்பது நடக்கட்டும் என காலத்தின் போக்கில் அடித்துச்செல்ல தன்னைத்தானே தயார் செய்யும் குரல் அல்லவா இது.

காதல் நமது இயல்பில் இருந்து நம்மை மாற்றிவிடுகிறது. ஆணோ பெண்ணோ காதல் வந்த பின்னே அவர்கள் அவர்களாக்க எப்போதுமே இருக்க முடியவில்லை. ஆனால் அது அவர்களுக்கு தெரியாமல் நடப்பதில்லை போல;

உதயா

உனக்கு தெரிந்த நான் மட்டும் தான் இப்படி

என்னும் கவிதையில் அவனுக்கோ அவளுக்கோ தெரியாத ஒரு ஆள் தன்னுள்ளே இருப்பது தனக்கு தெரிந்திருப்பதைக் காட்டுகிறது.

இப்படி காதலின் பல்வேறு நிலைகளில் இருந்து இந்தக் குறுங்கவிதைகளை வாசித்து உணர்ந்து கொள்ள முடிகிறது. சில கவிதைகள் வெறும் வார்த்தைகளாகத் தோன்றினாலும் இத்தொகுப்பில் வாசிக்கும் போது அதனுள்ளும் கவித்துவத்தை மனம் தேடி  கண்டடைய முயல்கிறது.

யார் இந்த மாயா? யார் இந்த மது? யார் இந்த உதயா? என்ற கேள்விகளின் ஊடே வாசித்து முடித்த இந்தக் கவிதைத் தொகுப்பின் வழி நாம் சந்தித்த மாயாக்களையும் நாம் கொண்டாடிய மதுக்களையும் நம்மால் மறக்க முடியாத உதயாக்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார் கவிஞர்.

சிங்கை எழுத்தாளர் பாண்டித்துரையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மாயா மது உதயா’ குறுங்கவிதைகள் தொகுப்பு குறித்து இன்றைய மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் தெரிந்து கொண்டோம்.

நான் இரசித்து வாசித்த கவிதைகள் போலவே நீங்கள் இரசிக்க வேண்டும் என்பதற்காக பல கவிதைகளைக் குறித்து எழுதாமல் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு இந்தத் தொடரை எழுதியுள்ளேன். நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கான தருணங்களை இக்கவிதைகள் மீளுருவாக்கம் செய்யும் என நம்புகின்றேன்.

மீண்டும் அடுத்த மாதம் மேலுமொரு சிங்கப்பூர் புத்தகத்தோடு உங்களைச் சந்திக்க வருகின்றேன்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *