உடைந்து தொங்கும் பல்புடன்
இன்னும் எத்தனை நாள் தான்
இந்த சைக்கிளை உருட்டுவது??
உள்ளேயும் இருள்
வெளியேயும் இருள்
இனி
வெளிச்சத்திற்கு சாத்தியமில்லை எனும் போது..
ஈர்ப்பு காரணிகள் அனைத்தும் இழந்து எடையற்று
பூமியிலிருந்து
பிய்த்தெறியப்பட்டு
வான் வெளியில்
இலக்கின்றி திரியும்
அற்பப்பொருளாகினேன்.
00
எப்போதும் எல்லாமும்
கைவிட்டபடிதான் உள்ளன.
என்னையே நான் இறுதியில்
கைவிட்டு விடுவேன் தான்..
சொற்ப பிடிமானங்கள்
இழுத்துச் செல்லும் வாழ்க்கை.
சோர்வுக்கு பின்னால் என்ன?
கேள்வி அம்புகளும்
தளர்ந்து வீழும்..
சக மனிதனின்
விழிப்பு நிலை வேறுபாடு
எது எதையோ
தூக்கி நிறுத்தும்.
காலப்புயல் ஒயும் வரை.
00
பாவனைக்குள்
முகிழ்த்தெடுத்த
முழு உடல்.
முடிவற்ற வெளி நீக்கி
சொந்தங்கள் சூழ
கூண்டினுள் பறவையென
அர்த்த பாவம் கொள்ளும்..
,
எல்லாவற்றின் மீதும்
எளிதாக படர்ந்துவிடுகிறது
சலிப்பின் நூலிழை படிமம்..
,
எப்போது முடியுமென்பது
நம் விழிப்பு நிலை சார்ந்தது..
வேறு எந்த அலகுகளாலும்
கணிக்க முடியாதது.
00
இரவில் புரள்கிறது உடல்.
அதிகாலையில் அடங்கும் சமயம்
விழித்துக்கொள்கிறது.
உயிரற்ற பொருட்களுடனான உரையாடல் தொடங்க
அவ்வப்போது உயிருள்ளவையும் வந்து போகின்றது..
00
தொலைதூர துயர ஓலத்துடன்
வருடிச் செல்லும் காற்றின் ஸ்பரிசம்..
அருவருப்பூட்டும் நிஜங்களுடன்
அன்றில் மலர்ந்த மலரின் மென்மை.
உந்தித் தள்ளி வெளிவந்ததினாலோ
உந்துதல் கூடவே ஒட்டிக் கொண்டது..
விதையை உந்தி வளர்கிறது மரம்..
மழலை உந்துதலில் மானுடம்..
வார்த்தை உந்தி பிறக்கும் கவிதை
எந்தவொன்றின் உந்துதலில்
சுழல்கிறது இப் பூமி?
00
அக சொறிதலில்
உதிர்ந்தமுத்துக்களை
சேர்த்து கட்டிய
மாலையிது..
,
தெரியாமல் கை பட்டு
வந்த அழைப்பை போல
கூடி கலையும் உறவுகள்..
00

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

