கீர்த்தி வாசன்
“டவுன்ஹாலுக்குப் போனா கப்பல் கூட கம்மி வெலையில வாங்கிப்போடலாம்…” கடலற்ற கோயமுத்தூருக்கு இது கொஞ்சம் மிகைதான். இருந்தாலும், ஏறத்தாழ, மனித ஜீவனத்திற்குத் தேவையான அனைத்தும் கோவை டவுன்ஹாலில் கிடைக்கும். வெரைட்டிஹால் ரோட்டில் கட்டில், பீரோ, டிவி, பேன் போன்ற சமாச்சாரங்கள். அதற்கடுத்து, சின்னசின்ன அச்சகங்கள் நிறைய தென்படும். அங்கு, மெய்பட்ட கனவுகள், பத்திரிக்கை கத்தைகளாக அடுக்கப்பட்டிருக்கும். அப்படியே சென்றால், ஒப்பணக்காரவீதி. பெரியதும் சிறியதுமாய் வீதி நிறைய துணிக்கடைகள் உண்டு, உடன்வந்தவர்கள் யாரேனும் காணோம் என்றால், துணிக்கடைக்குள் தேடவேண்டும், கையைபிடித்து உள்ளே இழுத்துப்போட்டிருப்பார்கள். அடுத்து சவுடம்மன் கோவில் வீதிக்குச் சென்று, பாத்திரங்கள் தோரணமாக தொங்கும் கடைகளில் பாத்திரங்கள், குத்துவிளக்கு என வாங்கலாம். எப்போதும் “வழி… வழி…” என சத்தமிட்டபடி, கைவண்டியில் பாரமேற்றிக்கொண்டு, இழுத்து செல்லும் கட்டுடல் மனிதர்களை அடிகடி எதிர்கொள்ள நேரும். ராஜவீதியில் நகைகடைகள் ஏராளம். காய்கறி, பழங்கள், பலசரக்கு, எண்ணெய், உலர்பழங்கள், நாட்டுமருந்து, பூஜைசாமான், என ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான சிறிய தெருக்களுண்டு. ஆனால், ஒரு தெருவில் மட்டும் பலவகை பொருட்கள் ஒருங்கக் கிடைக்கும். அதன் சாலையோரங்களில், வளையல், பொட்டு, அத்தர், சீப்பு, ஜடைவில்லை, பூச்சியுருண்டை, பாட்டில் மூடிகள், எங்கும் கிடைக்காத அற்புதமான விதவிதமாக மணம் வீசும் அத்தர்கள் என பலவும் ஒரே தெருவில் கிடைக்கும்.
அந்த கடையை நெருங்கும் போதே பிரியாணி வாசம், நுரையீரலை நிறைத்துவிடும். பசியிருக்கிறதோ, இல்லையோ சாப்பிட வைத்துவிடும் வசியமது. அத்தர் கடையிலிருந்து வரும் வாசத்தைக் கூட மங்க செய்துவிடும் அதன் மணம், அது, தன்னால் உங்களை அங்கே இழுத்து சென்றுவிடும். அங்கே சென்றதும், முதலில் தெரிவது, வலப்புறம், பொன்னிறத்தில் ஜொலிக்கும் எழுத்துக்களுடன், தன்னால் திறந்துமூடும் கண்ணாடி கதவுகள் கொண்ட “கத்தார் பிரியாணி” ஹோட்டல். கோவையின் அபிமான பிரியாணி என பெயரெடுத்து, முக்கிய இடங்களில் கிளைவிட்டு ஆலமரமாய் வளர்ந்திருக்கும் ஹோட்டல்களின் வேரது. எந்நேரமும் பத்துபேர் பெயர் கொடுத்துவிட்டு வாசலில் காத்து நிற்பார்கள். அப்படி நிற்கையில், எதிரிலிருக்கும் அந்த சின்னக் கடையை கவனிக்காமலிருக்க முடியாது. ஆட்களால் சூழப்பட்டு, ஒவ்வொருவராக ஒரு பிளாஸ்டிக் தட்டில் நிறைத்து தரப்படும், பிரியாணியை எடுத்துக் கொண்டு, நின்றபடியும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளின் மேல் சாய்ந்தபடியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். பாரம் தூக்குபவர்கள், வண்டி இழுப்பவர்கள், நீங்கள் வியாபாரம் செய்த கடைகளின் சீருடையணிந்த விற்பனையார்ளகள், கத்தார் பிரியாணியை டெலிவெரி செய்யும் முகவர்கள் என பல மனிதர்களைக் காணலாம். அவர்கள் எழும்புகடிப்பதைப் பார்த்து பெருமூச்சு விடும்போது தான் உணர்வீர்கள், உங்களை இழுத்த அந்த வாசம், அங்கிருந்து தான் வந்ததென. பெயரற்ற அந்த கடையின் பெயரை தேடினால், ஒரு சிலேட்டில் ரூ.5 என எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும். ஆம், இங்கு வெறும் ஐந்து தான். கத்தார் பிரியாணியில் ஒரு மட்டன் பிரியாணி நானூறு ரூபாய். இக்கதை அவ்விரண்டினைப் பற்றியது தான். அந்த கடைவீதி, ஒரு நதி பல இடங்கள் ஓடி, தனக்கு பிரியமான வெங்குச்சங்கற்களை தன் இருகரைகளிலும் சேர்த்து வைத்திருப்பதைப் போல, பல இடங்களிலிருந்து வந்த மனிதர்களை அதன் இரு ஓரங்களிலும் சேர்த்திருக்கிறது.
எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கமுக்கமாக விடிந்திருந்தது அன்றைய பொழுது. வழக்கமாக யூசுபுக்கு தண்ணீர் பிடித்து கொடுப்பவன், ஒன்று, இரண்டு என எண் குறிக்கப்பட்டு, மூடியிருந்த கதவுகளில், ஐந்தாவாது கதவை எடுத்துவைத்து, கதவுகளின் விரிசல் வரைந்த வெளிச்சக் கோடுகளை அகலமாக்கினான், யூசுப் இன்னும் எழுந்திருக்கவில்லை, அவருக்கு வயதாகிவிட்டதை உணர்த்தியது அந்த அசைவிலா உறக்கம். எதிரில், கத்தார் பிரியாணியில், கோழித்தோரணங்களை வாட்டிய, பெட்டி அடுப்பின் பிசுகுகளை கழுவிக்கொண்டிருந்தனர். கலர் குடங்களை மூன்று சக்கர சைக்கிளில் அடுக்கிக் கிளம்பினான். கடைவீதி, குளிக்க அடம்பிடிக்கும் ஜட்டிப்பிள்ளை போல, வேண்டாவெறுப்பாக சுத்தமாகிக் கொண்டிருந்தது. ஆத்துபாலத்தின் அடியில், கூனியாக வளைந்திருக்கும் யானைக்குழாயில் நீர் பிடித்துக்கொண்டு, ஜரிகை காயிதத்தால் குடங்களுக்கு மூடியிட்டான். யூசுபிடம் ஒரு குடத்திற்கு நான்கு ரூபாய் தான் கூலி வாங்குகிறான், மற்றவர்களிடம் பத்து. ஏற்றி கேட்டால், படிக்கிற பையனுக்கு எதுக்கு இவ்ளோ காசு என்பார், அவரின் உலகமே தனி, வாடிக்கையான கடைகளை மாற்றவே மாட்டார். வருடத்தில், ரம்ஜானுக்கு ஒருமுறை மட்டும் தான், சரஸ்வதி ஜவுளிக்கடலுக்கு சென்று, இரண்டு சட்டைகளும், லுங்கிகள் நான்கும் வாங்குவது, இவர் கேட்கும் விலைக்கு கைகுட்டை கூடத் தேராது. இதேப் போலத்தான் அந்த வீதியில் எல்லாக் கடைகளிலும், மிகவும் கம்மி விலைக்குத் தான் கேட்பார். புதிதானாவர்களுக்கு பைத்தியமா எனக்கூடத் தோன்றும், “தங்கராஜ கூப்புடு… அன்வர் இல்ல, நா அவன்கிட்டப் பேசிக்கரேன்” என செத்துப்போனவர்களை கேட்டு, பீதி கிளப்புவார். பழைய ஆட்களுக்கு, அது பழகிப் போய்விட்டது, கேட்கும் விலைக்கு கொடுத்து அனுப்பி விடுவார்கள். தொழுகைக்குகூட அதேத் தெருவில் இருக்கும் மசூதி தான், அந்த தெருவின் முடிவிலிருக்கும் ஆலமரம் போல, அவரும் அங்கேயே வேர்பிடித்துக் கொண்டார். இப்போது கடைவீதி, பள்ளிக்கு கிளம்பி நிற்கும் பிள்ளை போல, பளிச்சென ஆகியிருந்தது. கடைக்கு வந்து சேர்ந்தபோது, லுங்கியை மடித்துக் கட்டி, கையிடுக்கில் பீடிகட்டு படம் வரைந்த சரக்குப்பையை செறுகியபடி, “ஆறுகொடம் தண்ணி புடிக்க இவ்ளோ நேரமாடா ஒனக்கு” என தினமும் கேட்கும் யூசுப், இன்று அப்படி கேட்கவில்லை. இன்னும் இரண்டு கதவுகளை எடுத்து வைத்து, உள்ளே சென்றபோது அப்படியேதான் கிடந்தார்.
சற்று நேரத்தில் வெள்ளைநிற காரில் வந்த கத்தார் பிரியாணியின் முதலாளி காசிம்பாய், ஹோட்டலின் எதிரில் கூட்டம் சேர்ந்திருப்பதைக் கண்டு, செக்யூரிட்டியிடம் விசயத்தைக் கேட்டறிந்தார். எதுவும் நடக்காததைப் போல, தன் அறைக்குச் சென்று அமர்ந்து, காலை சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுக்க ட்ராயரைத் திறந்தார். மாத்திரைகளுடன், இரு மரகதம் பதித்த மோதிரம் மின்னியது, எடுத்து விரல் வரை கொண்டு சென்றவர், போடாமல், வைத்து மூடி விடிட்டார். மாத்திரைகளை, சோழியைப் போல குலுக்கிப்போட்டு ஒவ்வொன்றாக விழுங்கிய பின் கைநடுக்கம் கொஞ்சம் அடங்கிற்று. போனையெடுத்து தன் மூத்தமகனுக்கு கால் செய்தார், “ஹக்கீம் எங்கிருக்கப்பா, கொஞ்சம் இங்க வந்துட்டுப் போக முடியுமா…” பேசி முடித்தபின், மேனஜரை அழைத்தார். கண்ணாடி கேபின் கதவினை உள்ளே வந்து சலாம் வைத்த மேனஜரின், விரல்களில் குறிப்பேடு சிக்கியிருந்தது.
“கவனமா கேளு, இன்னிக்கு மதியம் கூட்டம் வருமப்பா, டபுளா ப்ளான் பண்ணிக்கோ என்ன…”
“சரிங்க பாய்.” என்றவனின் குரலில் சுருதியில்லை. இவனெல்லாம் ஒரு பெரியமனுசனா, எல்லாத்துக்குமே கணக்கு தானா… என எண்ணியபடி குறித்துக்கொண்டான்.
அவன் மூடி சென்ற கண்ணாடி கதவு, சிறகு போல அடித்துக் கொண்டது. அதன், பிரதிபலிப்பில் டேபிள் துடைத்துக்கொண்டிருந்த வடஇந்தியன், தோன்றித் தோன்றி மறைந்தான். மாத்திரைகளின் கிரக்கத்தில் கண்களை மூடி சாய்ந்த போது, அந்த பிம்பம் இளவயது யூசுப்பாக மாறியது.
கத்தாரில் பெரிய உணவத்தில் பத்து ஆண்டுகள் சமைத்து சம்பாதித்த பணத்தில் தான், கோவை திரும்பி, கத்தார் ஹோட்டலை ஆரம்பித்தார் காசிம். நல்ல சம்பளம் கொடுத்து, உடன் வேலை செய்த யூசுபையும் சேர்த்துக் கொண்டார். காசிம் அப்படியொன்றும் சும்மா தூக்கி கொடுத்து விடமாட்டார், நெருப்பில் வெந்து சேர்த்த பணம் அல்லவா. எல்லாவற்றிற்கும் அவரிடம் ஒரு கணக்குண்டு. யூசுப் நல்ல உழைப்பாளி. பாத்திரம் கழுவி கழுவி, கைத்தோல் கூட நைந்துவிட்டிருக்கும். சமைக்க ஆர்வமுண்டு, ஆனால், அங்கு யாரும் அவனை அனுமத்ததில்லை. காசிம் சமைப்பதை ஏக்கத்தோடுப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒருமுறை சமையல் கூடத்தில் யாருமில்லாத போது, கோழி வறுவலை கிளறிவிட சொன்னதிற்கே, கண்களில் நீர் வழிய நன்றி சொன்னவன். பெற்றவர்கள் இல்லை, நிக்காஹ் ஆகியிருக்கவில்லை, ஆகுமென்ற நம்பிக்கை கூட இல்லை. இந்த சம்பளத்தையே கடைசி வரை கொடுத்தாலும் அவன் சேர்த்துக் கேட்கப் போவதில்லை. என யூசுபின் சேர்க்கைக்கு பின் காசிமுக்குப் பல கணக்குகள் இருந்தது.
சில வருடங்களிலேயே தினமும் ஒரு ஆடு வெட்டும்படியாக நல்ல ஓட்டம். கோழிவறுவல், சில்லி சிக்கன், நெய்சுக்கா என அவர்களின் கைமணத்திற்கு கூட்டம் தேடி வர ஆரம்பித்தது, ஆனால், கத்தார் ஹோட்டலின் கதாநாயகன் அந்த பிரியாணி தான். கத்தார் ஹோட்டல், கத்தார் பிரியாணி என மாறிப்போகும் அளவிற்கு, புகழ் பரவிப்போனது. யூசுபின் கரண்டி, துணைப்பண்டங்கள் வரை தான் நீளும். பிரியாணி, எப்போதும் காசிம் மட்டும் தான் சமைப்பார், அதுவும் யாரும் பார்க்காத வண்ணம் தனி அறையில். உட்பொருட்களும், அளவுகளும், சமைக்கும் முறையும் அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
“டொங்க்… டொங்க்…” கண்ணாடி கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழித்தார் காசிம்பாய். வெளியில் ஹக்கீம் மாலையோடு நின்றுகொண்டிருந்தான். இருவரும் வெளியே வந்தனர். வெளியில் பந்தல் போடப் பட்டிருந்தது, சற்றுமுன் பார்த்த இடமா இது, என திகைக்கும் அளவு கூட்டம் கூடியிருந்தது. மூட்டை தூக்குவோர், வண்டி இழுப்பவர்கள், பாதையோர வியாபாரிகள் என டவுன்ஹாலின் அடி அடுக்கையே மொத்தமாக காணமுடிந்தது. யாரோ யூசுபின் உடலை கழுவியிருந்தார்கள். அத்தர் விற்கும் வயதான கரீம் வாப்பா, இருப்பதிலேயே சுகந்தமான அத்தரை யூசுபின் மீது தெளித்திருந்தார். சரஸ்வதி ஜவுளிகாரரின் கையில், யூசுபின் மீது சுற்றப்பட்ட பருத்தித்துணிக்கானப் பை இருந்தது. தெருமுக்கில் அம்மன் கோவில் முன் கடை வைத்திருக்கும் பூக்காரார், பூமாலைகளால் தள்ளு வண்டிக்கு நிரம்ப அலங்காரம் செய்துகொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த காசிமிற்கு கொஞ்சம் பொறாமையாகத் தானிருந்தது, இருந்தால் என்ன, தன் சாவுக்கு இதைவிட மக்கள் கூடுவார்கள், மகன்கள் இதைவிட நன்றாக நடத்திவிட மாட்டார்களா என்ன, எனச் சமாதானமானார். ஹக்கீம் கூலிங்கிளாஸை கழட்டி சட்டைப்பையில் வைத்துவிட்டு, தயங்கி நின்ற காசிம்பாயிடம்,
“ரோடே பிளாக்கு வாப்பா, கார முன்னாடியேப் போட்டுட்டே, என்னதான் இருந்தாலும் நம்ம மொதல் எம்ப்ளாயி இல்லயா, வாங்க போலாம்…” என்றான்.
கூட்டத்தில் நுழைந்தார் காசிம்பாய், தானாக வழி உருவானது. மீண்டும் தன் கர்வத்தை மீட்டுக்கொண்டு, ஒரு வெள்ளையானையைப் போல நடந்தார் அவர். யூசுபின் உடலருகே சக்கரம் போல வளைந்து அமர்ந்து குரான் ஓதிக்கொண்டிருந்தார் ஒரு மூத்தவர். அவரின் குரல், அம்புபோல அந்த வெள்ளையானையை துளைத்து சென்றது. இந்த ஒன்றுமில்லாதவனுக்கு யார் தொழுகை நடத்தப் போகிரார்கள், யாராவது இன்னொரு ஒன்றுமில்லாதவன் தான் என நினைத்திருந்தார். ஆனால் கோட்டைமேடே சலாம் வைக்கும் இவர் வந்து அமருவாரென கனவிலும் நினைக்கவில்லை, அவ்வளவு எளிதில் அவர் நல்லது கெட்டதில் பங்கெடுக்க மாட்டார். கத்தார் பிரியாணியின் புதிய கிளைதிறப்புக்கு நேரில் சென்று வலிய அழைத்தும் வராதவர், இந்த எளியவனின், இறுதி சடங்கில் அமர்ந்திருந்தார். குரான் ஓதியே வளைந்தவர் அந்த மூத்தவர், வேறு எதனாலும் முடியாது. கவனத்தை மாற்றி, பிரகாசித்துக் கொண்டிருந்த யூசுபின் முகத்தைப் பார்த்த கணத்தில், காசிமின் கைகள் நடுங்கின, கண்கள் நிறைந்து, வழிந்து இருட்டிக்கொண்டது.
அன்றும் இதுபோலத்தான். இருபது வருடங்கள் முன், நல்ல கூட்டம் வந்து சென்ற ரம்ஜான் தினமது, இரண்டு தேக்சாக்கள் முடிந்து, கடைசியாக இருந்த கொஞ்ச பிரியாணியையும் போட்டு முடித்து, ஓய்ந்து அமர்ந்த வேளையில், லேண்ட்லைன் போன் அடித்தது. எடுத்துப் பேசிய காசிமின் பேச்சில் மகிழ்ச்சி வழிந்தது. போனை வைத்து விட்டு, அல்லாவை தொழுதுகொண்டவன்.
“யூசுபே, யார் வராருன்னு தெரியுமா…” என்று ஒடினான்.
யூசுப் உட்பட வேலையாட்கள் கூட, காசிமின் இந்த உற்சாகத்தை கண்டு என்னவாக இருக்குமென அவனை நோக்கி வந்தனர்.
“மொதலாளி வராரு யூசுபே…”
பேந்த பேந்த முழித்தவனை உலுக்கி,
“நம்ம பழைய மொதலாளி சேக்குடா, கத்தார்லேர்ந்து குடும்பத்தோட வந்திருக்காராம், இன்னைக்கு இங்க இருபது பேரோட சாப்பிட வரராம், இன்னிக்கு மட்டும் அவர அசத்திட்டம் வையேன், கண்டிப்பா நம்ம ஹோட்டல்ல மொதலு போடுவாரு. யூசுபே நீயே போயி, மளார்னு நல்ல கறியா போட்டு வாங்கிட்டு வா, நேரமில்ல…”
உழைக்க காசிம் என்றும் அஞ்சியதில்லை, ஆனால் அன்று களைத்திருந்தான். இப்போதாவது பிரியாணி சமைக்க அழைப்பானா என, அருகில் சென்ற யூசுப்…
“நா வேணா துணைக்கு நிக்கவா…” என்றான்.
“கறிய மட்டும் பாத்து வாங்கி வா, மயிராண்டி பொழப்ப கெடுத்துருவானாட்ட…”
என துரத்திவிட்டு, பிரியாணி சமைக்கும் அறைக்குள் சென்று மூடிக்கொண்டான்.
“நாயிக வெறகு கூட வெட்டி வைக்க மாட்டானுக…”
எனத் திட்டியபடி வெட்டாமல் போடப்படிருந்த விறகினை தொடையில் அழுத்திய போது, தொம்மென முறிந்த விறகோடு விழுந்தான்.
சத்தம் கேட்டு உள்ளே வந்த வேலையாட்கள், காசிம் விழுந்து கிடப்பதைப் பார்த்து, முகத்தில் நீர் தெளித்து, வாயில் கொஞ்சம் சோடா ஊற்றிப் பார்த்தனர், ஒன்றும் பயனில்லை. ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுவிட்டனர். யூசுப் கறியோடு திரும்பி வந்தபோது, தகவல் சொல்லவென டேபிள் துடைக்கும் பையன் மட்டும் மிச்சமிருந்தான்.
“ஹோட்டல சாத்திட்டு நாமளும் போயிப் பாத்துட்டு வந்துருவோமா அண்ணா…”
பிரியாணி செய்யும் அறையையேப் பார்த்துக் கொண்டிருந்த யூசுப்,
“சில்லி போடுவியா…” எனக் கேட்டான் யூசுப்.
“நீங்க செய்யுரத பாத்து, வீட்ல செஞ்சிருக்கேன்…”
“இன்னொருத்தன் நம்மள நம்பி சாப்புடப்போரான், கடவுளுக்கு செய்யுரமாறி செய்யனும் புரியுதா…” என சொல்லிவிட்டு பிரியாணி செய்யும் அறைக்குள் புகுந்தான் யூசுப்.
சமையல் முடித்து, விறகுகளிடையே கிடந்த கரிய கரண்டியினால், கங்கினை அள்ளி, தேக்சாவின் மூடியின் மேல் இரைத்தபோது…
“வந்துடாங்க அண்ணா” எனக் குரல் வந்தது.
கைகள் நிறைய மோதிரம் அணிந்து, வெள்ளை குறுந்தாடி வைத்திருந்தவரும், குழந்தைகளும் பெரியவர்களுமாய் ஒரு இருபது பேர் நுழந்தனர். பத்து வருடம் அவரிடம் வேலை செய்ததனால், யூசுபிற்கு அவரை நன்கு அடையாளம் தெரிந்தது. ஆனால் அவருக்கு யூசுபை யாரென்றேத் தெரியவில்லை. இலை போட்டுக்கொண்டிருந்த யூசுபை அழைத்து,
“காசிம் இல்ல…”
“வந்துருவாருங்க…” என பதட்டத்தோடு சொன்னான்.
“சரி, கொண்டுவாங்க, எல்லோரும் பசில இருக்காங்க…”
பிரியாணியை தம்முடைத்து, ஒவ்வொரு இலையாக பரிமாரினார்கள். சாப்பிடுபவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் யூசுப். முதல் கவளத்தில் அவர்கள் குழம்பியதைப் போலத் தோன்றியது. ஒன்றிரண்டு கவளங்களுக்குப் பின், முகத்தில் மகிழ்சியைக் கண்டான். வேகம் கூட்டி அவர்கள் உண்பதைக் கண்டு, அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. முதல் முறையாக இறைவனின் கரங்கள் அவனைத் தீண்டுவதாய் தோன்றியது. காசிம் சிகிச்சைக்கிப் பின் திரும்ப வந்தபோது, மீண்டும் அவனுக்கு நெஞ்சடைத்துக் கொள்வதைப் போல இருந்தது. முதலாளி காசிமை அழைத்தது, காதிலேயே விழாததைப் போல, பரிமாரிக்கொண்டிருந்த யூசுபையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பிரமையை உடைக்க, அவர் இன்னும் சத்தமாக கத்த வேண்டியதாக இருந்தது.
“சலாமு அலைக்கும் முதலாளி…” வியர்த்தபடி வந்து நின்றான் காசிம்.
“என்ன இது காசிம்…” என்றவரின் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.
பயத்தில் நடுங்கிவிட்டான் காசிம், எல்லாம் முடிந்து விட்டது, இவர் கொடுக்கும் பணத்தில் ஹோட்டலை விரிவுபடுத்தாலாம், அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிடலாம், என எண்ணியதெல்லாம் வெறும் பகல் கனவாகிவிட்டது. கடைசிவரை இந்த சந்தில் கிடந்து சாகவேண்டுமா… என மனதில் கேள்விகள் ஓடின.
“சொல்லுப்பா என்ன பிரியாணி இது…” காசிம் கையபிடித்து அருகில் இழுத்துக் கேட்டார்.
“இல்ல முதலாளி, எல்லாம் அவன்தான்…” என யூசுபை நோக்கி கைகாட்டியதும், யூசுப் திக்கென முழித்தான்.
“என்ன அவன்தான்… அவன்தான் சொன்னான், நீ வீடு வரைக்கும் போயிருக்கனு, அதுக்காக இப்படியா…”
காசிமிற்கு யூசுபை பார்க்கவே எரிச்சாலாயிருந்தது. இப்படி அனைத்தையும் கெடுத்து விட்டானே. அவனை மிதிக்க வேண்டுமாய் கால்கள் துடித்தன. அவனுக்கும் அந்த மிதிக்கும் இடையில் நிற்பது முதலாளி மட்டுந்தான். அவர் போகட்டும் என நினைத்துக் கொண்டான்.
சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். முதலாளி காசிமை அருகில் அழைத்தார்.
“நல்லவேள, என் ஹோட்டல்ல நீங்க இதப்போல சமைக்கல, இப்படி சமச்சிருந்தா, இந்தியாவுக்கே திரும்பிருக்க முடியாது…”
காசிம் எச்சில் விழுங்கினான்.
“மேனஜர் வந்து பாப்பான், கான்ட்ராக்ட் சைன் பண்ணிடு…” என்றார். காசிமிற்கு விளங்கவில்லை. யூசுபையும், டேபிள் துடைக்கும் பையனையும் வரசொல்லி, ஆளுக்கு அம்பது ரூபாய் தந்தார். தன் ஆள்காட்டி விரலிலிருந்த மரகதம் பதித்த மோதிரத்தை கழட்டி காசிமிடம் கொடுத்துவிட்டு,
“இது உங்க பிரியாணிக்காக…” என்று சொல்லி காசிமின் விரலில் மாட்டிவிட்டு கிளம்பி சென்றார். அது அவனுக்கு பொருந்தாமல் துருத்திக் கொண்டு நின்றது. காசிமின் மனதில் அலைபோல மகிழ்ச்சி எழுந்தது. பணம் வரப் போகிரது, கடை பெரிதாகும், வீடு, கார் என இப்போதே அவனுக்கு எதிர்காலம் கண்முன் ஓடியது. சந்தோசத்தில் சிரித்துக் கொண்டிருந்த யூசுப், அவனுக்காக கொஞ்சம் பிரியாணி கொண்டுவந்து கொடுத்தான். அதை ஒருவாய் சாப்பிட்டதும், காசிமின் மகிழ்ச்சி, அலை வீழ்வதைப் போல வன்மத்தோடு கொட்டியது. தாடை கழன்றுவிடுவதைப் போல ஒரு அறை விழுந்தது யூசுபிற்கு. துருத்தி நின்ற மரகத மோதிரமும், அவனும், சிதறிப் போனார்கள். வலியை உணர்ந்ததும், அழ ஆரம்பித்தான் யூசுப்.
“திருட்டுநாயே, சாவு டா…”
என காசிம் கத்தியதில், தடுக்கவந்த பையன் கூட தயங்கி நின்றுவிட்டான். அடி வயிற்றில் ஒரு மிதி, யூசுப் கடித்து துப்பிய எலும்பு போல துள்ளி விழுந்தான்.
“ஏன்டா… அப்போ இத்தன நாளா, நா எப்புடி சமைக்கரேன்னு வேவு பாத்திருக்கயில்ல நீ, சமயம் பாத்து காத்திருந்து பசையிருக்கரவன் ஒருத்தன் வந்ததும் அவன்கிட்ட நா தான் சமச்சனு பேர் வாங்கி, எல்லாத்தையும் அடிச்சிட்டு போகலாம்னு பாத்திருக்க…”
“இல்ல காசிம், அல்லா சத்தியமா எனக்கு அந்தமாறி எண்ணமில்லப்பா…” எச்சில் ஒழுகும் வாயோடு கெஞ்சினான் யூசுப்.
“அப்பறம் எப்புடிடா திருட்டுநாயே, நா செய்யரமாறியே செஞ்சிருக்க, ருசி, நெரம், பக்குவம்னு எல்லாமே அப்படியே இருக்கேடா…” என்ற காசிமின் குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது.
“நான் அந்தமாறி செய்யலப்பா நம்பு, எனக்கு தோனுனமாறி தான் செஞ்சேன்…”
“எச்சித் தட்டு கழுவர கழுதய, சமைக்க வெச்சேன் பாத்தயா, என்ன செருப்பால அடிக்கனும், உன் திருட்டுபுத்தி உன்னவிட்டு போகுமா சொல்லு, மொதல்ல வெளிய போ டா நாயே…”
லுங்கியை சரி செய்து கொண்டு எழுந்த யூசுபை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல், பணத்தாள்களை அவன் மீது வீசி எறிந்தான் காசிம்.
“கணக்குக்கு மேலயே இருக்கு, பொறுக்கிட்டு ஓடிப்போயிரு, என் மூஞ்சிலயே முழிச்சிடாத, போ…”
எதுவும் எடுத்துக்கொள்ளாமல், விசும்பியபடி வெளியே சென்றான் யூசுப்.
“டேய் இருடா…”
கொஞ்சம் நம்பிக்கையோடு திரும்பியவனின் முகத்தில் வந்து விழுந்தது அந்த மரகத மோதிரம். அதையும் யூசுப் எடுக்கவில்லை.
இரண்டு மூன்று நாட்களில் திரும்பிவந்து தலைகுத்தி நிற்பான் என்று எதிர்பார்த்தான் காசிம். ஆனால் அப்படி நடக்கவில்லை, நாட்கள் செல்ல செல்ல, கிடைத்த பணத்தில் ஹோட்டலை பெரிதுபடுத்துவதிலும், புதுகிளைகள் தொடங்குவதிலும் மும்முரமாகி, யூசுப் எங்கோ மறைந்தே போனான். ஹோட்டலின் எதிரில், வெகுநாட்களாய் மூடிகிடந்த செட்டியார் எண்ணெய் கடையில் மாற்றம் தெரிந்தது. சுத்தம் செய்து, பிசகு போக சுரண்டி சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. கதவுகளுக்குக் கூட பச்சை நிற பெயின்ட் அடித்து, வரிசை எண்கள் குறித்தனர், வரிசை மாற்றி வைத்தால் மூடுவதற்குள் விடிந்துவிடும். அடுத்தநாள் மதியவேளை அந்தக் கடையில், கூட்டம் மொய்த்தது. கூட்டத்திற்கிடையில், ஒரு தேக்சாவையும் அதன் பின்னால் ஒரு வெள்ளை குல்லாவையும் கண்டதும், காசிமிற்கு பற்றிக்கொண்டு வந்தது. கடையை காலி செய்துவிடுவது போல சென்றவன், யூசுபை கண்டதும் திகைத்து நின்றான். முகத்தை பாராமல் தட்டில் பிரியாணியை பூசி நீட்டினான் யூசுப், அது வாங்கப்படாததால், இன்னொரு நீட்டிய கையில் கொடுத்தான் அப்போதும் முகத்தை பாராமலே. அவனருகில் ஒரு அலுமினிய சட்டி, அதில் சில நாணயங்கள், ஐந்து ரூபாய் நோட்டுக்கள், சாப்பிட்டு முடித்த ஒருவர், அப்போதுதான் புழக்கத்திற்கு வந்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை, சட்டியில் போட்டார். வாய்விட்டு சிரித்த காசிம்,
“நல்லா சாப்புடுங்க நாய்கறி பிரியாணி அஞ்சே ரூவா…” என தன் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டார். தன் கடையில் காத்திருந்தவர்களிடம்,
“இன்னிக்கு வெலவாசிக்கு பத்து ரூவா கூட இல்லாம, நல்ல பிரியாணி போடமுடியுமா சொல்லுங்க, அதுக்குமேல ஆளுக்கூலி, இடவாடக கரண்ட்டு, தண்ணீ எல்லா இருக்கில்லீங்களா…” என்றான்.
அப்போது கத்தார் ஹோட்டலில், பிரியாணி பதினைந்து ரூபாய். யூசுபின் பிரியாணி அஞ்சு ரூபாய், இரு புறமும் கூட்டமிருக்கத்தான் செய்தது. சிலர் கத்தார் பிரியாணியைவிட, அஞ்சு ரூபாய் பிரியாணியின் சுவை அதிகமென காசிமின் காதுபடவே பேசினர். உண்மையில் காசிம் பயந்தது அதற்குத் தான். ஒருமுறை ஆளைவிட்டு வாங்கிவர சொல்லி, சாப்பிட்டுப் பார்த்தான், அதன் பின் தான் கொஞ்சம் நிம்மதி வந்தது அவனுக்கு. அன்று ருசித்தது போல இல்லையது, அதன் ருசி வாழ்நாளில் மீண்டும் கிடைக்காதது. அன்று யூசுப் கையால் சாப்பிட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். யூசுப் செய்த பிரியாணி, அவன் செய்வதைப் போலவே இருப்பதாக கூறியது வெறும் சாக்கு, அதன் சுவை எதனுடனும் ஒப்பிடமுடியாதது. உண்மையில் அவனுக்கு அன்று யூசுப் மீது உண்டானது பொறாமையே, யூசுபை கொன்றுவிடும் அளவு பொறாமை, இவனுக்குப் போய் இறைவன் இப்படியொரு கைப்பக்குவத்தை கொடுத்துவிட்டானே என அங்கலாய்ப்பு. அதுதான் அவனை விரட்டியடிக்கச் செய்தது. இப்போது, அவனால் இந்த இரண்டில் எது சிறந்த பிரியாணியென தீர்மாணிக்க இயலவில்லை. வேறுயாரலும் முடியாது என்றே தோன்றியது. காசிமால் யூசுபின் கடையை நொடியில் காலி செய்துவிடமுடியும் ஆனால், அவன் அப்படி செய்யவில்லை, தன் கண்ணெதிரிலேயே யூசுப் அடைபட்டு கிடப்பது அவனுக்கு நிம்மதியை தந்தது. ஆனால், அந்த அலுமினிய சட்டியில் சில்லறை விழும் சத்தம், சதா காசிமின் காதை துளைத்துக்கொண்டே இருந்தது. கண்ணாடி சுவர் எழுப்பி தன்னைத்தானே பூட்டிக்கொண்டான். கத்தார் ஹோட்டல், கத்தார் பிரியாணி ஆனது, இரண்டு மூன்று என கிளைகள் முளைத்தன, விலையும் ஐம்பது, நூறு, இருநூறு என அதிகரித்தது. ஆனால் யூசுபின் கடையில் என்றும் ஐந்து தான். அஞ்சு ரூபாய் பிரியாணி எனப் பெயர் ஆணியடித்ததைப் போல நிலைத்துவிட்டது. காசிம்பாயிற்கு இரண்டு மகன்கள் பிறந்து ஆளாகினார்கள், யூசுப் நிக்காஹ் செய்து கொள்ளவில்லை. அந்த கடைத்தெரு அவரது உலகமென்றானது, அவனுக்கு அதைத்தாண்டி ஒன்றுமில்லை.
மயக்கம் தெளிந்து எழுந்தபோது தன் அறையில் இருந்தார் காசிம்பாய். எழுந்து கண்ணாடி சுவரின் திரையை விலக்கினார். எதிரில் இன்னும் கூட்டம் அதிகமாகிவிட்டிருந்தது. கையில் நரம்பூசி போட்டிருந்த இடத்தில் சுருக்கென வலித்தது. இன்னும் அவர் மகன் ஹக்கீம் வெளியில் தான் நின்றுகொண்டிருந்தான். அவருக்கு வீட்டிற்கு போய்விட வேண்டும் போல இருந்தது, மெதுவாக வெளியே வந்தார்.
“நா வீட்டுக்கு கிளம்பரேன் ஹக்கீம்… டிரைவர் எங்க…”
“கொஞ்சம் இருந்துட்டு போகலாமே வாப்பா, ஏன் ப்ரஷர் மாத்தர போடாம விட்டீங்க…” என ஒரு சேரை எடுத்துப் போட்டு அமர வைத்தான்.
“ட்ரைவர் எங்க, திருட்டுப்பய. செத்துட்டேனு விட்டுட்டுப் போயிட்டானா…”
“அங்கதான் இருக்கான் பாருங்க வாப்பா, வந்துடுவான்….” என எதிரில் கைகாட்டினான்.
“அங்க அவனுக்கு என்ன வேல, திங்கரது இங்க, வாலாட்ரது அங்கயா…”
“அவன் இங்க சாப்பிடரதில்ல வாப்பா, அங்கதான் சாப்புடரான்.”
அமைதியானார் காசிம்பாய்.
ஒலிபெருக்கியில் சன்னமான ஓடையின் சத்தம் போல கேட்டுக்கொண்டிருந்த குரலை நிறுத்தி கொஞ்சம் செறுமிக்கொண்டு பேச ஆரமித்தார் அந்த மூத்தவர்.
“யூசுப் எனக்கு நல்ல பழக்கம், என்னுடைய இளையவன் மாதிரி, அவன் என்னைக்கும் ஒரு கடங்காரனாய் சாகக்கூடாதுனு சொல்லுவான். ஆக, அவன் யாருக்காவது பாக்கி வைத்திருந்தால் வந்து எடுத்துகிட்டு, அவனை சீக்கிரம் வழியனுப்புங்க…”
அவர் கையசைத்ததும் யூசுபின் அலுமினியசட்டி கொண்டுவந்து வைக்கப்பட்டது.
காசிம்பாய் ஹக்கிமிடம் “இந்த சில்லர சட்டிலிருந்து தான் பாக்கியெல்லாம் எடுத்துக்கனுமா, அந்த பிச்சக்காரப் பய கண்டிப்பா கடங்காரனாத் தான் போப்போரான்.” என சிரிப்போடு முனகினார்.
“வாங்க சீக்கிரம் நேரமாச்சு, வாங்க அரிசிக்காரரே, மதியத் தொழுகைக்கு முன்ன முடிக்கனும்…” என அதட்டியபின் தான் அரிசிமண்டி நடராஜன் முன்வந்தார். சட்டியிலிருந்து கையளவு காசுகளை எடுத்துக் கொண்டு, மூன்று காசுகளை திரும்ப சட்டியில் விட்டார். வழக்கமாக மாத இறுதியில் கணக்கு முடித்துவிடுவார் யூசுப். ஒருவார பாக்கி தான் என்றாலும் இது மிகவும் குறைவு. மூத்தவர் குழம்பிப் போனார்.
“இவ்வளவு தானா, சரியா எடுக்கனும், இல்ல யூசுப் நிம்மதியாக மாட்டாரு, ஆமா, மூட்ட எவ்வளவுக்கு தரீங்க…”
“மத்தவுங்களுக்கு மூவாயிரத்து நானூறு, அய்யாவுக்கு இருனூத்து முப்பது…”
“இது என்ன கணக்கு…”
“பெரிய கணக்கு வழக்கெல்லாம் இல்லங்க, அவரு வெல ஏத்தல, பதிலுக்கு நானும் ஏத்தல அவ்வளவு தான்.” சில்லறைகளை துண்டில் முடிந்துகொண்டு நகர்ந்தார். அடுத்து மளிகை கடை சகாயம் வந்தார், அவரும் கையளவு எடுத்துக் கொண்டு, சரியாக இருக்கிறதென கூறி சென்றார். அடுத்து கறிக்கடை முஜீபின் மகன், அவரெடுத்தது போக முக்கால் சட்டி நாணயங்கள் மீதமிருந்தன.
“அவன் வரலயா, கணக்குபடி சரியாத்தான எடுக்கர…” மூத்தவர் நிமிர்ந்து கேட்டார்.
“வாப்பாக்கு மேலுக்கு முடியல அதான் வரல, வாப்பா தொடக்கத்துலேர்ந்து எப்போதும் இவருக்கு கிலோ எழுபதுக்குத் தான் தர்ரது. கேட்டா, வியாபாரம் செய்ய யூசுப் ஒன்னும் வியாபாரி இல்ல, அவரு அல்லாவோட சேவகர்ன்னு சொல்லுவாரு…”
“அதுசரி… அவன்கிட்ட சொல்லு, கோட்டமேடு ரஹீமும் அல்லாவுக்கு அப்பப்போ சேவை செய்யரவருதானாமா, அவருக்கும் கொஞ்சம் பாத்து செய்யுங்கனு…” என மூத்தவர் சொன்னதும் சுற்றியிருந்தவர்கள் மெலிதாக சிரித்துக்கொண்டனர்.
“அடுத்து இருக்கா… முடிச்சிரலாமா…” என சத்தமாகவே கேட்டார்.
வரலாமா வேண்டாமா எனத் தயக்கத்தோடு முன்வந்தான் தண்ணீர் பிடித்து தரும் பையன், சட்டியிலிருந்து நாணயங்களை பொறுக்கினான்.
“நீ எண்ண வேணாம், எஞ்சியது எல்லாமே உனக்குத்தான், எடுத்துக்கலாம்…”
அவன் புரியாமல் விழித்தான், அந்த பெரிய சட்டியில் முக்கால்வாசி மீதமிருந்தது, அது அவனுக்கு தரவேண்டியதை விட பலமடங்கு.
“யூசுப் சொல்லிருக்காருப்பா, உனக்குத்தான் எடுத்துக்கோ…”
“இவரப்போல இனி யாரிருக்கா…” கட்டவிழ்ந்தவன் போல அழ ஆரம்பித்தான் அவன். அந்த ஆற்றாமை அங்கிருந்த பலரையும் தொற்றிக்கொண்டது, மூத்தவர் உட்பட.
அடைத்துக்கொண்ட குரலை மீண்டும் செறுமிக்கொண்டு, குரானிலிருந்த வாசகத்தை பாடல் போல இழுத்துப் படித்தார்.
காசிம்பாயின் முகம் இருண்டுவிட்டிருந்தது. தன் இறப்புக்கு இதைவிட கூட்டம் கூடும் ஆனால், கடலென சுரந்து கிடக்கும் இந்த துக்கத்தின் ஒரு துளியைக்கூடக் கொணர இயலாது எனத்தோன்றியது. பொசுங்கிப்போயிந்த காசிம்பாயின் காதுகளில், அந்த குரானின் வாசகங்கள் நுழைந்தன அது 76:8-9. “அவர்கள், அவ்விறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாவின் திருமுகத்திற்காக. உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் நாடவில்லை.”
யூசுபை நல்லடக்கத்திற்கு எடுத்துச் சென்றார்கள். இன்னும் கூட்டம் அந்த ஆளற்ற சிறிய அறையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வற்றிப்போய்விட்ட நதியைப் போல கிடந்தது அந்த பத்துக்குப் பத்து அறை. அங்கிருந்த அணைவருக்கும், இனி கட்டுப்படி ஆகும்படியான இன்னொரு உணவகத்தை கண்டறியவேண்டும், இவரப்போல இனி யாரிருக்கா என்ற அவனது குரல், அசரிரீ போல கேட்டுக்கொண்டேயிருந்தது. எதற்கோ தயரானவர் போல எழுந்த காசிம்பாய்…
“ஹக்கீம், செஞ்சதுல பாதிய எடுத்துட்டு வந்து அங்க வெச்சு கொடுக்க சொல்லு, யூசுப நம்பி வந்த ஒருத்தரும் பசியோட போக கூடாது. நல்லா கேட்டுக்கோ, இன்னைக்கு சொல்றதுதா என்னைக்கும்.”
அவருக்கு இனி கணக்குகளைப் பற்றி கவலையில்லை. அந்த மோதிரம் தான் அவரை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
000

கீர்த்திவாசன்
நான் கோவையைச் சேர்ந்தவன். இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது பள்ளிக் காலத்தில் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் தொடங்கியது. ஆனந்த விகடனில் சில கவிதைகளும், சிறுகதைகளும், சொல்வனம் மற்றும் வாசகசாலை இணையதளங்களில் சிறுகதையும் வெளியாகி இருக்கின்றன.

